Thursday, 21 June 2012

கதைபோல ஒன்று - 9

அவ்வளவு அழகாக சில பேரைத்தான் விஜய் தன் 22 வயது வரையில் பார்த்திருக்கிறான்.

29 சி யில் பெசண்ட் நகர் பஸ்ஸ்டாண்டில் கூட்டம் அடித்து பிடுத்து ஏற, விஜய் பக்கத்தில் உள்ளவர் திடீரென எழுந்து போக, அதில் அவள் உட்கார்ந்தாள்.

மகிழ்ச்சி கொள்ளவில்லை.

இருபத்தியிரண்டு வயதில் புனிதம் வெர்ஸ்ஸ் இச்சை பிரச்சனையே இல்லை . இச்சை மட்டும் உலகின் உண்மையான அடிநாதம்.புனிதங்களே உலகில் இல்லை.

இதோ காலையில் எழுகிறோம். மூச்சு இருக்கிறதா ? இருக்கிறது . அப்புறம் என்ன ? வாழ வேண்டியதுதானே. எதிர் வரும் பெண்ணை பார்க்க வேண்டியதுதானே. பேண்டஸியில் உலவ வேண்டியதுதானே.ஜெயிலுக்குள் போகாமல்,அடுத்தவனை தொந்தரவு செய்யாமல் என்னெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து விட வேண்டியதுதானே.

கடவுளை தப்பி தவறி கூட கும்பிடுவதில்லை.( எனர்ஜி வேஸ்ட்).

வெள்ளை புடவையில் இருந்தாள். ஒரு 35வயது இருக்குமா ? பொட்டில்லை. நீண்ட மூக்கு. இடது பக்கம் மாதிரியே வலது பக்க முகம். நளினமென்றால் ஒரு தளிர் போல இருந்தாள்.

புன்முறுவல் பூத்தான். பதிலுக்கு பூத்தாள்.

“நீங்க பிரம்மகுமாரி சங்கமா “ ஆரம்பித்தான்.

“இல்ல. ஏன் கேக்குறீங்க”

“இல்ல.சும்மா கேட்டேன்”

“ஒஹ். நான் இயேசுவ கும்பிடறவள்”

“ஹல்லேலூயாவா”

“ஆமா!பெந்தெகோஸ்தே”

”அப்ப உங்க ஹேண்ட் பேக்குல நிறைய “மனம் திரும்பும் பிரிண்ட் அவுட்” வெச்சிருப்பீங்களே .ஆமா நீங்க எந்த ஸ்டாப்பில் இறங்கனும்”

நன்றாக சிரித்தாள்.விஜய்க்கு அவன் ஜோக் அவளை புண்படுத்தவில்லை என்ற நிம்மதி. இருவரும் சிரித்தார்கள்.

”நா பெரம்பூர் இறங்கனும்”

கையில புக்கும் இல்ல. பஸ் போறதுக்கு 1.30 மணி நேரம் ஆகும். பேசிக்கிட்டே போயிர வேண்டியதுதான்.

“நானும் பெரம்பூர்தான்”

அப்படியே பேச்சு போயிற்று. அவளுக்கு 6 மொழி தெரியும் என்று சொன்னாள். எனக்கும் கொஞ்சம் பைபிள் தெரியும் என்று அவன் சொன்னான்.

“ஆயக்காரனை போல் ஜெபிக்காதே ! உன் அறை வீட்டை
பூட்டிக்கொண்டு ஜெபி “ என்பதை சொல்லும் போது வியந்தாள்.

பத்து நிமிடத்தில் நெருங்கிய நண்பர்களாய் விட்டனர்.

விஜய் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை கேட்டான்.

“நீங்க எப்படி கிறிஸ்டினா ஆனீங்க”

”நான் தமிழ்நாடு கிடையாதுங்க.மும்பை அவுட்சைடு.அப்பா வியாபாரி.

எங்க ஊர் சாய்பாபா கோயில்ல அப்பாக்குதான் முதல் மரியாதை.வசதிதான். எனக்கு ஒரு தம்பி ஒரு தங்கை.எனக்கு அலையன்ஸ் பாத்தாங்க.ரெண்டு வருசமா எதுவும் அமையல .

அப்பாவுக்கு வேற திடீர் வியாபார நஸ்டம்.ஜோசியம் பாக்குறார். ஜோசியர் எனக்கு திருமணம் நடக்க கூடாதென்றும், நடந்தால் குடும்பத்துல் எல்லோருக்கும் ஆபத்துன்னுட்டார்.

அப்பா முதல்ல அத மதிக்கல. எனக்கு பையன் பார்த்துகிட்டே இருந்தார்.

எப்போ தம்பி பைக் ஆக்ஸிடண்டுல மாட்டி உயிருக்கு போராடி ரெண்டு மாசம் பெட்ல கிடந்தானோ, அப்பா ஜோசியத்த நம்ப ஆரம்பிச்சுட்டார்.
என் கல்யாணத்த பத்தி பேசுறதே இல்ல.

ஒரு வருசம் கழிச்சு , அதிர்ச்சியான விசயம் கேள்விபட்டேன். தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.சண்டை போட்டேன்.

குமறினேன்.

அன்னைக்கு நைட்டு அப்பா ,50,000 ரூபா கொடுத்து, அப்பாவின் நண்பர் சென்னையில, இருக்கிறதாகவும். அவரு வீட்ல போய் ஏதாவது கம்பூட்டர் கோர்ஸ் படிச்சுட்டு அங்கேயே ஒரு வேலை தேடிக்க சொல்லி சொன்னார்.

சென்னையில் வந்து இறங்கினா, ரெயில்வே ஸ்டேசனுக்கு ஒருத்தர் கூட வரல. அப்போ ரெயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்து ஒரு அழுகை அழுதேன் பாருங்க.கத்தி கதறி எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு அழுதேன்.அதுதான் என் கடைசி அழுக வாழ்க்கையில.

எப்படியோ டேலி படிச்ச உடன என் எம்.காம் படிப்புக்கு நல்ல வேளை கிடைச்சது. ஹாஸ்டல் எடுத்து வெளியே தங்கினேன்.

அப்பத்தான் என் ஹஸ்பண்ட் ஆபீஸ்ல புதுசா சேர்ந்தார். நானும் அவரும் பழக ஆரம்பிச்சோம். சர்சுக்கு கூட்டிட்டு போவார்.என்னய ஒரு நாளும் மதம் மாறுன்னு அவரு சொன்னதே கிடையாது. அதுதான் எனக்கு பிடிச்சிருந்தது.

உனக்கு ஒன்னு காட்டுறேன். அது அழகா இருந்தா பிடிச்சிருந்தா ஏத்துக்கன்னு சொன்ன பக்குவம்தான் என்ன கிறிஸ்தவத்துக்கு மாத்திச்சி.இப்ப சந்தோசமா இருக்கேன்.நான் என் குடும்பம் இயேசு கிறிஸ்து. “

“பசங்க இருக்காங்களா”

“ஆமா . ஒரு பொண்ணு, ஒரு பையன்”

இப்போது பஸ் ஓட்டேரி வந்திருந்தது.

அவன் அமைதியாய் இருந்தான். ” என் அத்தை கூட ரெண்டு பேரு கன்வெர்ட் ஆகியிருக்காங்க “ என்றான்.

அவள் சிரித்தாள்.

“நிம்மதியா உயிர் வாழுறது முக்கியம். அத எந்த மதம் கொடுத்தாலும் ஒ.கேதான்”

’ஆம்’ என்பது போல தலையசைத்தாள்.

பெரம்பூர் வந்தது. கையசைத்து விடைபெற்றோம்.

கொளத்தூர் போக மற்றொரு பஸ்ஸில் ஏறும் போது, ”பெண் என்பவள் அல்வா போன்றோ! லட்டு பொன்றோ ஒரு பண்டம் கிடையாது.உணர்வுள்ள சக உயிர்” என்பது போன்ற புனிதங்கள் முதல் முறையாக முளைவிட்டிருந்தன. 

2 comments: