Thursday, 21 June 2012

கதை போல ஒன்று -17

நீங்க தமிழா ?

’ஆமா எப்படி கண்டுபிடிச்சீங்க!

’சென்னை போறதுக்கு வெயிட் பண்றீங்களா?

’ஆமா எப்படி கண்டுபிடிச்சீங்க !

’எதுக்கு கையில வெள்ள பேப்பர வெச்சுகிட்டு ஒவ்வொரு பஸ்ஸா ஒடி ஒடி பாக்குறீங்க?

”இல்ல, நிறைய கேசினினி பஸ் வருது, அதுல எது சென்னைன்னு தெரியல.”

”அட என்ன பாஸ் நீங்க, அந்த டிக்கட்ட கொடுங்க.”

கொடுத்தேன்.

”இதோ பாருங்க இந்த சைடுல வி182 ன்னு நம்பர் இருக்கு பாருங்க, அங்க பஸ்ல கண்ணாடியில் அந்த நம்பர் இருக்கும்.அதுல ஏறுனா போதும். நானும் உங்க பஸ்தான் பாஸ்”

“ஓஹ். சாரி. நான் கவனிக்கல. எனக்கு தெரியாது.”

சின்ன சின்ன விசயங்களில் உசாராய் இருக்கனும்கிற விழிப்புணர்வோட இருந்தாலும் தப்பு நடந்திருது. உலக விசயத்துல இன்னும் பிராக்டிக்கலா இருக்கனும்ன்னு நினைத்து கொண்டேன்.

அந்த கல்லூரி மாணவன் (பேரு மதிவாணனாம்) கேசினினி பஸ் ஆபீஸுக்கு போன் போட்டான்(ர்). பஸ் வர அரை மணி நேரம் ஆகுமென்று பதில் வர,
“பாஸ், பக்கத்துல ஹெரிட்டேஜ் பிரஸ் சூப்பர் மார்கெட்டல கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியிருக்கு, போய்ட்டு வரேன்”

”சரி”

அவர் போன சிறிது நேரத்தில், இரவு சாப்பாடு நெஞ்சுக்குள்ளேயே அடைத்தாற் போன்ற உணர்வு,குமட்டலின் அறிகுறியில் தெரிய, ஒரு ஃபேண்டா குடித்தால் தேவலாம் போல இருக்க, மணியை பார்த்தேன்.

சரியாக பதினைந்து நிமிடம் இருக்கிறது. சரி. ஒடிப்போய் வாங்கலாம் என்று ஓட,மதிவாணன் அப்போதுதான் பொருள் வாங்கி வெளியே வருகிறார்.

”என்ன பாஸ். அப்பவே என் கூட வந்திருக்கலாம்ல்ல.”

”இல்ல , இப்பதான் தேவபட்டது” என்று ஒடுகின்றேன்.

குமட்டல் அதிகமாகிவிடும் போல இருந்தது. ஆரஞ்சு நிற ஃபேண்டா ஒளிர சட்டென்று கையில் எடுத்து கவுண்டரில் நின்றால் நல்ல கூட்டம்.

நான் நின்ற கவுண்டரில் மூன்றாவது ஆளாக நான்.

முதல் ஆள் பில் முடிக்கவே மூன்று நிமிசம் ஆகிவிட்டது.

அடுத்த ஆள் தள்ளுவண்டி நிறைய பழங்களும், பால் பாக்கெட்டும், சோனா மசூரி அரிசியிம் வைத்திருக்கிறார். அவருக்கு பில் போட்டால் ப்த்து நிமிடம் ஆகும். எனக்கு இருப்பதோ ஏழு நிமிடம்தான்.

அந்த சுருட்டை முடி ஐயாவிடம் தெளிவான ஆங்கிலத்தில்” ஐயா! எனக்கு இன்னும் ஏழு நிமிடத்தில் பஸ்ஸை பிடித்தாக வேண்டும். தயவு செய்து இந்த ஃபேண்டா பாட்டிலை மட்டும் பில் போட அனுமதிப்பீர்களா!” என்றேன்.

கேள்வியை கேட்க தொடங்கும் போதே அவர் மூஞ்சியை சுழித்து, “ ஸாரி எல்லோருக்கும்தான் அவசரம். எனக்கும் அவசரம். என்னால உங்களுக்கு உதவ முடியாது” என்று வள்ளென்று சொல்லி அவர் பில்லை தொடங்கி விட்டார்.

மற்ற கவுண்டர்களிலும் கூட்டம் அதிகம்.

அந்த ஐயா கொடுத்த “வள் எபெக்ட்” வேற எரிச்சலூட்ட, இயலாமையில் ஃபேண்டா பாட்டிலை கடையிலேயே வைத்து விட்டு வெளியே பஸ்ஸை பிடிக்க ஓட, மதிவாணன் நிற்கிறார்.

”என்னாச்சு பாஸ்”

நான் நடந்ததை சொல்ல, அந்த பில்லுக்கு வழிவிடாதவரை திட்டுகிறார்,பச்சை பச்சையாக திட்டுகிறார்.

என்னால மதிவாணன் மாதிரி திட்டமுடியவில்லை.

இதே மாதிரியான் வசனத்தை “அவசரமான காரியம்” செய்வதற்காக சீக்கிரம் பில் போடனும்ன்னு” கெஞ்சிய ஒருத்தரிடம் நானே பேசிய ஞாபகம். எப்போன்னுதான் சொல்ல முடியல. ஆனா சொல்லியிருக்கேன்.

குமட்டல் வந்தது.

No comments:

Post a Comment