Thursday 21 June 2012

கதை போல ஒன்று - 3

எனக்கு தெரிந்து, தன்னம்பிக்கை அதிகம் உள்ள தோழி அவள்தான்.என்னை ஒரு ”டுபுக்கு” மாதிரியே டிரீட் செய்வாள்.

நானும் அவளும் விமானத்தில் போகும் போது இமிகிரெசன் ஃபார்ம் பூர்த்தி செய்வதை கூட அவளே செய்து தருவாள். எனக்கு செய்ய தெரியாதாம்.

அமெரிக்கா போன புதிதில், நான் ஹோம் சிக்கில் புலம்பும் போது , ”ஏங்க, இப்படி பொலம்புறீங்க.சரியான பொலப்பமா இருக்கீங்களே என்பார்.

சனி ஞாயிறு ஆனால் ஜெர்க்கினும் வாட்டர் பாட்டிலுமாய் என் வீட்டு முன்னர் ஆஜராகிவிடுவாள்.”வா ! பேக்கர்ஸ்ஃபீல்டை சுத்தி பார்க்கலாம் என்பாள்.

Bakersfield, Los angels பக்கத்தில் உள்ள சிறுநகரம். அங்குதான் நாங்கள் மூன்று மாதம் இருந்தோம்.நடந்தே சுத்துவோம். ஐ போனில் மேப்பை பார்த்து பார்த்து கூட்டிபோவாள். இரண்டு மணி நேரமெல்லாம் நடந்திருக்கிறோம். ஆனால் பாருங்கள் சரியாக வீட்டுக்கும் அழைத்து வந்து விடுவாள்.

நாங்கள் எல்லோரும் சமைத்து கிடக்கும் போது, சமையலை பத்தி நினைக்கவே மாட்டாள். பிரட்டும் ஆப்பிளும் போதும்.

எல்லாம் தாண்டி நல்லவள். அவள் டாமினேசன் எல்லாத்தையும் ரசிக்கும் பக்குவத்தை வளர்த்து கொண்டிருந்தேன். ஆனால் என்னுடன் வந்த மற்ற பசங்களுக்கு அவளை பிடிக்கவில்லை.

பிரச்சனை வந்தது.

அதில் கம்பெனியில் வைத்து ஒரு நண்பன் தோழியை சரமாரியாக திட்டி விட்டான். கத்து என்றால் அப்படி ஒரு கத்து கத்திவிட்டான்.

அமெரிக்கர்களுக்கு சத்தமே பிடிக்காது. அவர்கள் அந்த சத்ததை கேட்டு குழுமிவிட. அவமானத்தில் குறுகிபோய் விட்டாள். நண்பனும் ஒரு ஈ.கோ ராமசாமிதான்.

மறுநாள் சனிக்கிழமை காலை அவள் வீட்டுக்கு போக, பொரிந்து தள்ளினாள்.”நான் அவன் மேல் கம்பிளைண்ட் கொடுக்க போகிறேன் “ என்றாள். ”நான் கம்பிளைண்ட் கொடுத்தால் கொடு. ஆனால் ”நான்” நீயாக இருந்தால் அதை செய்ய மாட்டேன் என்றேன்.

அவள் முகத்தை பார்க்கிறேன் “கண்ணீர் திரையிட்டிருந்தது” ஆச்சர்யம். இவள் அழுவாள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாதே !.

அவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்து விட்டேன்.

இப்போது அழுகை வெடிப்பாக கதறலாக வெளிப்பட்டது. பாவமாக ஆகிவிட்டது. எப்படி தேற்றுவது என்பதே தெரியவில்லை. அப்புறம் எப்படியோ சரியாகி நார்மலானாள்.அவளுக்காக வருந்தினேன்.

ஆனாலும் பாருங்கள்! அய்யாயிரம் வருடம் ஆணாதிக்கமோ இல்லை யாருமே மனித உணர்வுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்ற கண்டுபிடிப்போ ,தெரியவில்லை, ”தன்னம்பிக்கை தோழி” அழுதது பற்றி ஒரு குரூர சந்தோசம் ஏற்படத்தான் செய்தது...

ஆண்கள்தானே !

No comments:

Post a Comment