Thursday, 21 June 2012

கதை போல ஒன்று - 1

பாடியில் உள்ள பிரேக் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆறுமாதம் அப்பரண்டிஸா வேலை பார்த்தேன்.

என் சூப்பர்வைஸர் 56 வயது ஆள். பெயர் ராஜகோபால்.

என்னிடம் கேட்ட முதல் கேள்வி “நீங்க ஐயரா “

“இல்ல சார்.நீங்க ஐயரா” உரைப்பா பதில் கேள்வி கேட்டேன்.

பதில் சொல்லாமல் “உங்க ஆள்கள் கூட இப்ப நிறைய படிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல” என்றார்.

எரிச்சலாய் வந்தது. பதில் சொல்லாமல் சிரித்தேன்.

என்னடா இது! அடுத்த ஆறு மாசம் காலிதான் நாம என்று நினைத்தேன்.

ஆனால் நடந்தது வேறு. அற்புதமான ஆளாய் இருந்தார் ராஜகோபால். ஒல்லியியாய் கொஞ்சம் சோனியாய் இருப்பார். நிறைய சொல்லி தருவார்.

எங்கள் இருவருக்கும் சுஜாதா நாவல்கள் பிடிக்கும். குறுகிய நாட்களில் நெருங்கி விட்டோம் . கம்பெனிக்குள் காதலர்கள் மாதிரி சுற்றி கொண்டிருப்போம்.

ஜாதியை வைத்து கிண்டல் செய்து கொள்வோம்.

“சார்.உங்களுக்கு இந்த ஜாதி அபிமானம் மட்டுமில்லாட்டா,இன்னும் உங்கள பிடிச்சிருக்கும் ”என்பேன்.

சிரிப்பார்.

“ஏன் விஜய் உங்களுக்கு கிடையாதா ? எப்ப பார்த்தாலும் மளிகை கடை பத்தி பேசுறது கூட ஜாதி அபிமானம்தான் . இப்போ விஜய் ! உங்க வீட்டுக்குத்தான் ஒருத்தன் வந்து கக்கூஸ் கழுவுறான். அவன உடன குளிக்க சொல்லிட்டு உங்க பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிட சொன்னால் நீங்க சாப்பிடுவீங்களா?” என்று கூசாமல் சொல்வார்.

அது ஒண்ணும் தான் அவர் மேல் கொதிப்பா வரும்.

தனி மனித அளவில் அவர் ஒரு ஜெம்.”விஜய் இங்க வாங்க கொஞ்சம் என்ஜினிரிங்கா யோசிக்க கத்துக்கோங்க.இது மாதிரி சின்ன பொருளுக்கெல்லாம் சாம்பிள் இன்ஸ்பெக்சன் ரிப்போர்ட்ட உடன ரிலீஸ் பண்ணுங்க என்பார்.

”இன்னைக்கு எத்தன ரிப்போர்ட் எடுத்தீஙக. மூணா. ஆ! சூப்பர். அசத்துறீங்க. எப்படியும் ஆறு மாசத்துலு 100 போட்டிரனும்” என்பார்.

100 வது ரிப்போர்ட் எடுத்து முடிக்கும் போது அதை பெரிய அளவில் விளம்பர படுத்தி குஸி ஏற்படுத்தினார்.

குறிப்பிட்ட சமயத்தில், ராஜகோபால் சார்கிட்ட பேசாமல் ஒருநாள் கூட இருக்க முடியாதுங்கிற நிலைமைக்கு வந்துட்டேன். அவர் பாடி லாங்குவேஜ் என்னோடதாயிட்டது.

கம்பெனியை பொறுத்தவரை ’ராஜகோபால் சார்’பெரிய திறமைசாலியில்லை.பிராக்டிகலா ஓண்ணும் தெரியாதுன்னு எல்லோராலும் கிண்டல் செய்ய படுபவர்.

டிவிசன் மேனஜர் (40 வயது .ஐ. ஐ . டியில் படித்த கொடுக்கு) ராஜகோபாலை அவமானபடுத்டுவதே தன் பொழுதுபோக்காக கொண்டவர். “இங்க வாய்யா என்பார்.”

ராஜகோபால் பேசிகொண்டிருக்கும் போதே “சும்மா கத வுடாதீங்க. கொஞ்சம் வாய மூடுறீங்களா !” என்பார்.

ஒரு தடவை பூனேயில் இருந்து சென்னைக்கு பஸ்ஸிலே அனுப்பி விட்டனர். “ஏன் சார் 56 வயசு ஆகுது டிரயின் அல்லது பிளைட் கேக்கவேண்டியதுதான் “என்று கேட்டால் சிரித்து டாபிக் மாற்றுவார்.அவர் பட்ட அவமானத்தை பற்றி கேட்டால் பிடியே கொடுக்க மாட்டார்.

ஒருதமுறை, அவருக்கு வீட்டில் இருந்து ஏதோ அர்ஜெண்ட் போன்.”என்னது ? எப்போ ? என்று பதட்டமாக கேட்டு கொண்டிருக்கும் போது டிவிசன் மேனெஜர் (ஐ. ஐ . டி மயிராண்டி) வந்தார்.

ராஜகோபால் டிவிசன் மேனேஜரை அங்கீகரித்து விட்டு,போனில் பதட்டமாக பேசி கொண்டிருக்கும் போதே ,தன் திருக்கையால், போனை கட் பண்ணி விட்டார் டிவிசன் மேனேஜர் .

மேனேஜர் என்றாலே திமிரா இருக்கனும்ன்னு ”டிவிசன்”எந்த புத்தகத்துல படிசாரோ தெரியல.

ராஜாகோபால் சாரின் கோபத்தை ஒரு செகண்ட் பார்தேன். ஆனால் அதை அப்படியே விழுங்கி விட்டு டிவிசன் மேனஜர் சொல்வதை கேட்டு தலையாட்ட ஆரம்பித்தார்.

ராஜகோபால் அடைந்த துக்கத்தை,அவமானத்தை மறக்கவே முடியல. ராஜகோபால் சாரின் கலங்கிய கண்கள் மனசை பிசைந்தது.

இரண்டு நாள் கழித்து அவர் தனியா மாட்டினார் ஒரு மரத்தடியில். வெடித்தேன்.
”ஏன் சார் எல்லோரும் இப்படி இன்ஸ்ல்ட் பண்றாங்க. பாத்துகிட்டு சும்மா இருக்கீங்க!ஒரு செல்ஃப் பிரஸ்டீஜ் வேண்டாம்!எனக்கு கஸ்டமாயிருக்கு சார்” என்று ஐந்து நிமிடம் பொரிந்தேன்.

முதலில் சிரித்து மழுப்பியவர் அப்புறம் முகம் சிவந்து சொன்னார் ...

“விஜய், என் கையில எப்பவும் ஒரு மண்வெட்டி வெச்சுருப்பேன் விஜய்.
புரியுதா !. அபீஸ் முடிஞ்சதும் ரோடு முனைல அந்த மண்வெட்டியால வெட்டுவேன்.
ஆழமா வெட்டுவேன்.
உள்ள என்ன இருக்கும் தெரியுமா? “என்னோட சுயமரியாதை. காலையில ஆபீஸ் வரதுக்கு முன்னாடி புதைச்சு வெச்சது.
அத எடுத்து போட்டுகிட்டுதான் வீடு போவேன்.
என் குடும்ப நிலமை அப்படி” என்று சொல்லி உள்ளங்கையால் தன் நெற்றியில் அவேசமாய் அடித்தார் .
கலங்கி நின்றேன்.

இப்போதும் ,ஆபீஸுக்கு போகும்போது மண்வெட்டி எடுக்கும்போது, ராஜகோபால் சாரின் கோடிட்ட நெற்றிமுகத்தின் ஞாபகம் வருகிறது.///

1 comment:

  1. நாட்டில் நிறைய பேர் எப்படி கோபம் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று புரிந்தது.... Sorry I used to tease them for not getting angry... I feel bad now...

    ReplyDelete