Thursday, 21 June 2012

கதை போல ஒன்று - 4

ஹைதிராபாத்தில், மியாபூர் ஏரியாவில் திருட்டு ஜாஸ்தி என்று முதலிலேயே அலுவலக நண்பர்கள் சொன்னார்கள்.

ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.

வந்து ஒரு மாதத்தில், பக்கத்து வீட்டில் ஆ.. ஊ என்று ஒரே சத்தம். இருபது வயது பையனை, கேட்டில் கட்டி வைத்து அடித்து கொண்டிருந்தனர்.

அடின்னா அடி மரண அடி. ஒருவர் நெஞ்சை மட்டும் தாக்குகிறார்.இன்னொருவர் கன்னத்தை பளிச் பளிசென்று அடித்து கொண்டிருக்கிறார்.

விசயமென்றால் எங்கெல்லாம் TOLET போர்டு பார்க்கிறார்களோ அங்கெல்லாம் போக வேண்டியது. வீட்டில் தனியா பெண்கள் இருந்தால், அவர்களை அடித்தோ, கொன்றோ விட்டு கொள்ளையடிப்பது.

வீட்டில் ஆள் இல்லையென்றால் திருடுவது.

அப்படி வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் பூட்டை உடைக்க மூன்று பேர் முயல, வீட்டுக்கார அம்மா கோயிலுக்கு போய்விட்டு வர , சத்தம் போட , இரண்டு பேர் ஓடி விட்டனர். ஒருவன் மாட்டி அடிவாங்குகிறான்.

ஆனால் மாட்டினவன் கல்லுளிமங்கந்தான் .அவன் சொல்கிறான் “அண்ணா.நேணு Indecent காதுன்னா! decent அண்ணா “! கூட்டம் அந்த கடுப்பிலும் வாய்விட்டு சிரித்தது.அடியின் வீரியம் கூடிற்று.பயமாயிருந்தது.

குறிப்பிட்ட சமயத்தில் தண்ணி, தண்ணின்னு கதற ஆரம்பித்தான். கூட்டம் கண்டு கொள்ளவில்லை. தண்ணி தண்ணி என நரி மாதிரி ஊளையிடுவது யார் மனதையும் கரைக்கவில்லை.

திடீரென்று கூட்டத்தை பிளந்து அந்த வீட்டுகாரம்மா, கையில் செம்போடு வந்தார்.
அடித்தவர் எல்லாத்தையும் ஆவேசமாய் நிறுத்தி அவனுக்கு தண்ணி கொடுத்தார்.

அவன் மடக்மடக்கென்று குடித்து செம்பை நீட்ட. அவனை பார்த்து அந்தம்மா குரல் தழுதழுக்க பெரிதாக நீளமாக ஏதோ பேசி அருகில் உள்ள கல்லில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.அம்பது வயது பெண் அடிவயிற்றிலிருந்து எக்கி அழுவது உருக்கிற்று.

எனக்கு தெலுகு தெரியாது. ஆயினும் அவர் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.அவர் பேசியதாக நான் புரிந்து கொண்டது.

“ எனக்கே ஆயிரம் குடும்ப பிரச்சனை. மனசு கஸ்டத்துக்கு கோயிலுக்கு போறேன். ஏன் நீ இப்படி வந்து எனக்கு கஸ்டத்த கொடுக்கிற.!நீ அடி வாங்கும் போது எனக்கு வரும் பதட்டமும் கஸ்டமும் யம்மா “ (அழுகை).

அந்தம்மாவை அவர் கணவன் கஸ்டபட்டு தேத்தி வீட்டுக்குள் கொண்டு போனார்.

கூட்டம் மறுபடியும் அடியை தொடங்கி இருந்தது....

No comments:

Post a Comment