Thursday 21 June 2012

கதை போல ஒன்று -11

19 வயதில் நாகப்பன் சார் நட்பு கிடைத்தது.

நானும் பார்த்தசாரதியும் போட்டி போட்டு அவர் அன்பை பெறுவதில் முனைப்பாக இருந்தோம்.
குழந்தைகள் இல்லாததால், எங்களை பிள்ளைகளாக பாவித்தார் என்பது போன்ற அன்பு.

என்னிடம் அவருக்கு பிடிக்காத ஒரே விசயம் என்னெவென்றால் லஞ்ச் சமயத்தில் “விக்டர்” சாரிடம்
கம்யூனிசம் கற்க போவேன்.

விக்டர் சார் பேசுவது புரியாது என்றாலும் அது என்றாவது நம் மூளை திசுக்களை தட்டிவிடாதா என்ற நப்பாசை.

மதிப்பு கூட்டுதல், உபரி மதிப்பு, உலகமயமாக்கல், பண்டத்தின் மீதான ஏற்ற மதிப்பு என்று ஆழமாக பேசுவார்.

ஒன்றிரண்டு பேர் ரொம்பவும் அமைதியாக யோக நிலையில் கேட்டு கொண்டிருப்பார்கள்.

ஒருநாள்,’நாகப்பன் சார்’புதிதாக ஒரு கோரிக்கையோடு வந்தார். எங்களால் அதை மறுக்க முடியவில்லை.

அன்று மாலையே அண்ணா நகரிலுள்ள அந்த பக்தி மைத்துக்கு கூட்டி சென்றார்.

எங்களை அறிமுக படுத்தி “தம்பிங்களுக்கு தியானம் கத்துகிறதுக்கு ரொம்ப ஆசை” என்றார். நான் பார்த்தசாரதியை பார்த்தேன்.ஆர்வமாய்த்தான் இருக்கிற மாதிரியான முகபாவம்.

அந்தம்மா சொன்னார்கள் ஏழு நாள் ’கவுன்சிலிங் அல்லது வகுப்பு’ அது முடித்த பிறகுதான் தியானம் என்று.

மறுநாள் முதல் வகுப்பு எடுக்க அழகிலும் அழகாக ஒரு இளம்பெண் வந்தார். 25 வயதுதான் இருக்கும்.நார்த் இண்டியன் அக்செண்ட்.
அசந்து விட்டேன்.

வாழ்க்கை என்றால் என்ன என்று ஆரம்பித்து பலதும் சொன்னார்.ஒரு வயதான பெரியவரின் போடோவை காட்டி இவர்தான் பிரம்மாவின் மறுஅவதாரம் என்று சொல்ல கடுப்பானேன்.

மறுபிறவி உண்டு என்று சொல்ல, “வால்காவில் இருந்து கங்கை வரை” புக்கை எடுத்து காட்டி மறுபிறவியே மக்களை குழப்பி விட மன்னர்கள் கண்டுபிடித்த சூழ்ச்சி என்று வாதாட , என் டீச்சர் கடுப்பாகி நாகப்பன் சாரிடம் கம்ப்ளேயின் செய்ய, நாகப்பன் சார் பரிவுடன் என் தலையை கோதி அட்வைஸ் செய்ய, அவருக்காக மிச்சம் ஆறு நாளும் வகுப்பு சென்றேன்.

போகும் போதே ஹோட்டலில் சாப்பாடு வாங்கித்தருவார்.மசால் தோசை சாப்பிட்டு எப்படி வகுப்பு கவனிப்பது .

தூக்கமாய் வரும்.தூங்கி வழிவதை பார்த்து ஒருநாள் டீ எல்லாம் கொடுத்தார்கள், பக்திமைய்ய விதிகளை சிறிது தளர்த்தி.

கடைசி கடைசியாக தியான அறைக்கு கூட்டி சென்றார்கள்.நாகப்பன் எங்கள் தலையில் கைவைத்து பிரார்த்தித்து அனுப்பினார்.

பிரம்மாவின் மறுபிறவி தாத்தா போட்டோ பெரிதாக ஒளிர்ந்தது.அறையில் தியான ஆசனத்தில் அமர்ந்தோம்.

எல்லோரும் கண்ணை மூடி ரிலாக்ஸா இருக்கனும்ங்கிற இறுக்கத்தில் இருக்க, சரியாக அம்பத்தி அய்ந்தாவது செகண்ட் முதுகு வலிக்க ஆரம்பித்தது.

என்ன செய்ய? யாரும் எந்திரிக்கவும் மாட்டேங்கிறார்கள்.அப்படியே அசைந்து அசைந்து சுவற்றில் சாய்ந்து நடிக்க ஆரம்பித்தேன்.

அது முடிந்ததும் டென்சனாகி விட்டது.

நாகப்பன் வெளியே நின்றிருந்தார். அவரிடம் ”கண் கலங்க” எனக்கு தியானம் பிடிக்கவில்லை என்றும். அவரின் அன்பையும் மீற முடியவில்லை என்றும் , என்னை விட்டு விடுங்கள் என்றும் சொன்னேன்.

ரோஜா படத்தின் கிளைமேக்ஸ்ஸில் ”அரவிந்த் சாமியின் உயிர்” தீவிரவாத தலைவனிடம் இருக்க, அவர் அரவிந்த சாமியை ’போ’ என்று சொல்வாரே அது மாதிரி நாகப்பன் சாரும் என்னை கூர்ந்து பார்த்துவிட்டு “ சரி போ தம்பி “ என்று சொன்னார்.

வெளியே 46 B பஸ் வர, சட்டென்று ஓடிப்போய் அதில் ஏறி விட்டேன், பார்த்தசாரதியிடம் சொல்லாமலேயே.

மறுநாள் விக்டர் சாரிடம் பேசும் ஆர்வம் பல மடங்கு அதிகமாய் இருந்தது. 

No comments:

Post a Comment