Tuesday 26 June 2012

நன்றியின் கதகதப்பு

ஹைதிராபாத் எக்ஸ்பிரஸ்ஸில் இரவு 11.55 க்கு முழிப்பு வருகிறது. எழுந்து பார்த்தால் குண்டூர் வந்திருக்கிறது.(15 நிமிசம் நிக்கும்).

மனைவி குழந்தை நல்ல தூக்கம். சரி என்று அப்பர் பெர்த்திலிருந்து கீழிலிறங்கி (ரொம்ப கஸ்டபட்டேன். கதவு இருப்பதால் ஏணி இல்லை) டாய்லெட் போய்விட்டு வந்து படுக்க போனால், குண்டூரில் ஏறின பெண் தன் பெட்சீட்டை தேடிக்கொண்டிருந்தார்.

நான் உதவ நினைத்தேன்.வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

போய் படுத்து கொண்டேன்.மேலிருந்து கவனிக்கிறேன்.

அவர் திணருகிறார்.தலையணை இல்லை, கம்பளி இல்லை. இரண்டு வெள்ளை போர்வை மட்டுமே இருக்கிறது.

நல்ல குளிர். என்னால் தூங்க முடியவில்லை.(நல்லவன் இல்லையா ?).

இறங்கி வந்து அவரை உட்காரச்சொல்லி , ஒவ்வொருவராய் தேடினேன்.

மிடில் பெர்த்காரர் ரெண்டு கம்பெளி வைத்திருக்கிறார். பிடிங்கி கொடுத்தாயிற்று.

சைடு அப்பர் பெண் இரண்டு தலையணை (எந்த குற்ற உணர்வும் இல்லாமல்) வைத்திருக்கிறார்.அவர் கணவனை எழுப்பி “ரெக்குவஸ்ட் ஃபார் பில்லோ” போட, அவர் வேண்டா வெறுப்பாக எடுத்து கொடுத்தார்.

இப்போதுக்கு பெண்ணுக்கு மகிழ்ச்சி.

மூக்குத்தி அணிந்து,உயரமாய்,ஆரோக்யமாய் ”டிப்பிக்கல் தெலுகு அம்மாயி”.

அவர் சொன்ன நன்றி குளிருக்கு இதமாய் இருந்தது. மனைவியும் பார்க்கவில்லை என்று தெரிந்த போது இன்னும் இதமாய் இருந்தது.நன்றாய் தூங்கினேன்.

No comments:

Post a Comment