Friday 29 June 2012

கதை போல ஒன்று - 21

பத்தாம் வகுப்பு ஒழுங்காய் படித்திருந்தால் 
வீட்டு வேலை செய்ய அம்மா அனுப்பியிருக்க மாட்டாள் என்று சித்தி காலையில் திட்டினாள்.

மல்லேஸ்வரிக்கு என்னவோ அப்பா முதலிலேயே சம்பளத்தை கணக்கு பண்ணித்தான், அம்மாவுடன் கூடி தன்னை பெற்றது போலிருந்த்து.

ஜார்ஜ் சார் வீட்டுக்கு காலை ஆறு மணிக்குள்ளாக போய் வாசல் பெருக்கி தொளிக்க வேண்டும்.

அப்புறம் மோகன் சார் வீட்டில் பாத்திரம் தேய்த்து , வீடு பெருக்கி துடைக்க வேண்டும். எட்டு மணிக்குள்ளாக செய்ய வேண்டும். மோகன் சார், வசுந்துரா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போவதால் அந்த பாடு.

ஒன்பது மணிக்கு ஜனப்பிரியா அக்காவும் தோழிகளும் இருக்கும் அறையை பெருக்கி துடைத்து , துணி துவைக்க வேண்டும்.

பத்தரை மணிகெல்லாம் சுதா மாமி தேடிக்கொண்டிருப்பாள்.

குழந்தை அசிங்கம் பண்ணிய எல்லா துணிகளையும் கசக்க வேண்டும்.கடைக்கு போக வேண்டும். மத்தியானம் சாப்பிட்டு. மறுபடி எல்லார் வீட்டு வாசலையும் பெருக்கி தொளித்து இரவு ஏழு மணியாகும் போவதற்கு.

இன்று காலையில் ”ஜார்ஜ் சார்” இளநீர் குடித்து கொண்டிருக்க, மல்லேஸ்வரியை பார்த்ததும், இரக்கபட்டதற்கு, முந்தின நாள் ஞாயிற்றுகிழமை கூட்டத்தில் பாதிரியார், ”அன்பின் மகத்துவத்தை” போதித்ததும் காரணம்.

வேலை செய்யும் பெண்ணிடத்தும் கூட தனக்கு இரக்கமிருக்கிறது, மனதார நம்பிய அவர் ,மல்லேஸ்வரியை பெரிய இளநீர் ஒன்றை குடிக்க வைத்து விட்டார்.

மல்லேஸ்வரிக்கு கொஞ்சம் இருந்தாலும் உடனே சிறுநீர் போய்விட வேண்டும்.

அது மாதிரியே பழகிவிட்டாள்.வீட்டில் அக்கா மட்டும் என்பதால், பின் பக்க பப்பாளி மரத்தடியிலேயே போய்விடுவது சிறு வயதில் இருந்தே பழகிய பழக்கமாய் இருந்தது.

காலையில் வீட்டில் ”போய்விட்டு” வந்தால் ஆறு மணிக்கு ஒரு காப்பி கிடைக்கும். எட்டு மணிக்கு ஒரு காப்பியும், டிபனும் கிடைக்கும். நடுவில் வேலை பளு தாங்காமல் தண்ணி வேறு குடிப்பாள்.

ஆனால் யார் வீட்டிலும் பாத்ரூம் போக முடியாது. போகக்கூடாதென்றல்லாம் மல்லேஸ்வரியிடம் யாரும் சொல்லவில்லை.

ஆனால் அது அவர்கள் பார்வை, நடை உடையிலேயே தெரிந்து விடும். மல்லேஸ்வரிக்கும் பயம். பாத்ரூம் எல்லாம் பளிங்கு மாதிரி இருக்கிறது இதை எப்படி ”அவளால்” அசிங்கபடுத்த முடியும் என்று சொல்லிகொள்வாள்.

பத்தரை மணிக்கு சுதா மாமி வீட்டின் பின்பக்கத்தில் உள்ள பழைய கக்கூஸில் போய் கொள்வதற்கு , தான் கொடுத்த உரிமையையே சுதா மாமி பெரிய புரட்சி என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

ரொம்ப முட்டினால் எட்டு மணி வேலை முடிந்த்தது வீட்டிற்கு வந்து போவாள். அரை மணி நேரம் அடுத்த வேலைக்கு லேட் ஆகம். திட்டு விழும்.

மல்லேஸ்வரிக்கு அடிவயிறு கனத்தது. சிறுநீர் கழிக்கும் உந்துதல் அதிகாமாய் இருந்தது.
உணர்வின் வீரியம் முள்ளாய் குத்தியது.தலைசுத்தியது.வேறு எதாவது நினைத்தோ வேலை செய்தோ சிறுநீர் உணர்வை அடக்க பார்க்கிறாள். முடியவில்லை.

அழுகை வருகிறது. எஜமானி அம்மாக்களிடம் கேட்கலாம் என்றாலும் பயம்.

சுதா மாமி வீட்டின் பழைய கக்கூஸிற்க்கும் போகமுடியாது. ஜார்ஜ் சார் வீட்டில் திட்டுவார்கள்.

வீட்டின் வலது பக்கம் நெல்லி மரத்தை பார்க்கிறாள்.

போய்விடலாமா இங்கேயே யோசிக்கிறாள். யாராவது பார்த்துவிட்டால் ?. சுத்தி முத்தி பார்க்கிறாள்.

யாருமில்லை.

ஜார்ஜ் சார் குளிக்கும் சத்தம் கேட்கிறது. அம்மா உள்ளே சமையல் செய்கிறார்.மறுபடியும் சுத்தி பார்க்கிறாள்.

அடிவயிறு குத்தி ,தலை சுத்த , சட்டென்று நெல்லி மரத்தின் அடியில் ஆசுவாசபடுத்த, ”மனதின் சிந்தனை” நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்று எல்லாமுமே அந்த நிம்மதியில் அடங்க, மேலிருந்த்து தன்னை, ஜார்ஜ் சார் மகன் மொபைலில் படம் பிடித்து கொண்டிருக்கிறான் என்று தெரியாமலும், ஐந்து நிமிடத்தில் அது “My house maid hot- 100 % real" என்ற பெயரில் நெட்டில் வருமென்பதை அறியாமலும் போய்கொண்டிருந்தாள் மல்லேஸ்வரி.

No comments:

Post a Comment