Thursday, 21 June 2012

கதை போல ஒன்று - 12

கோணலான மனிதர்களை பற்றி படிக்கும்போது ஏற்படும் சுவாரஸ்யம், பழகும் போதில்லை.அவர்களின் ஒவ்வொரு வசனங்களும், பார்வைகளும் அறுத்துதான் விடுகின்றன.

எனக்கு கைலாசம் கோணலாகத்தான் தெரிந்தார்.

எல்.ஐ.சி யிலிருந்து டிவிஎஸ் செல்லும்போது இடப்பக்கமாக பிரியும் பட்டுல்லாஸ் சாலையில் இருக்கும், மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆறுமாதம் அப்பரண்டீஸாக பணிபுரிய வேண்டிய நிலை. 

என் வொர்க்ஸ் மேனேஜர், “ரேடியேட்டர் செக்ஸனில்” வேலை செய்யும்படியும் , பின்னர் கியர் பாக்ஸ், பியுல் பம்ப் , இஞ்சின் செக்ஸனுக்கு மாற்றப்படுவேன் என்றார்.

கைலாசம்தான் ரேடியேட்டர் செக்ஸனின் ஒரே தொழிலாளி. முதல் பார்வையிலேயே வெறுத்தார்.

ரேடியேட்டர் இஞ்சினை குளிர வைக்கும் சாதனமென்றும், அதில் ஓட்டை இருந்தால் நீர் வெளியேறி, இஞ்சின் ”சீஸ்” ஆகக்கூட வாய்ப்பிருக்கிறதென்றும் எல்லோருக்கும் தெரியும்.

அந்த ரேடியேட்டர் ஓட்டையை அடைப்பதுதான் கைலாசத்தின் வேலை.நான் அவர் அஸிஸ்டண்ட் .

முதலில் ரிப்பேருக்கு வரும் ரேடியேட்டரை பிரக்ஷ் வைத்து துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும்.
“டேய் தம்பி, நல்லா தொடப்பா. என்ன சமஞ்ச பொண்ண தொடுறது மாதிரி மொல்லமா தொடுற. நல்லா சுத்தமா தொட” எட்டூருக்கு கத்துவார்.

பின்னர் ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வந்து ரேடியேட்டரில் ஊத்த வேண்டும். ஊத்தும்போது கைதவறாமல் ரேடியட்டரின் வாயில் மட்டுமே ஊத்த வேண்டும். அமர்ந்தபடியே கைலாசம் ரேடியட்டரை பிடித்திருப்பார் .தப்பி தவறி ரேடியேட்டரின் பாடியில் தண்ணீர் பட்டால். “ஏம்பா! மத்தியானம் ஓசில சோறு துண்றல .மயினர் மாதிரி பாக்குற! தண்ணி ஒழுங்கா ஊத்த தெரியாதா “ !.

ஒரு தடவை ரேடியேட்டரின் மற்ற இடத்தில் தண்ணீர் படப்போகிறதே என்று கையை அவசரமாக அசைக்க அது கைலாசத்தின் மேல் பட்டது.

அப்போது வொர்க்ஸ் மேனேஜர் அங்கு வர “ ஊத்து நல்லா ஊத்து என் தலவழியே ஊத்து. உன்ன மாதிரி தத்திகள வெச்சுகிட்டு எப்படிப்பா வேலை செய்றது. சார். இவரு எனக்கு வேணாம் சார்.! சரியில்லை வேறு ஆள் குடுங்க !.

வொர்க்ஸ் மேனேஜர் பார்வை பார்த்தார். நான் கெஞ்ச ஆரம்பித்தேன் “ சார் சார் இனிமே ஒழுங்கா வேலை பாக்குறேன் சார்.

உடனே வொர்க்ஸ் மேனேஜர் டைம் கிப்பரை கூப்பிட்டார். ”இந்த பையன் ஒழுங்கா வேலை செய்ஞசா அட்டெண்டன்ஸ் போடு . இல்லன்னா போடாத. அவன் எப்படி அப்ரண்டிஸ் சர்டிபிக்கேட் வாங்குறான்னு பாக்குறேன்.”

அன்றிலிருந்து என்னை கைலாசம் அடிமையாக வைத்திருந்தார். அவருக்கு பாக்கு, பான் பராக், சிகரெட் எல்லாம் வாங்கிவர வேண்டும்.

ரேடியேட்டருக்கு பெயிண்ட் அடிக்கும் வேலையை எனக்கு கொடுத்தார். நான் அடிக்கும்போது சரியா அடிக்கலைன்னு ரேடியேட்டரை ஓங்கி உதைத்தார். பெயிண்ட என் சட்டையெல்லாம் தெரித்தது.ஒன்றும் பேச முடியாது எல்லோரும் ஒரு அணி.

அடிக்கடி லீவ் போட ஆரம்பித்தேன். அவர் பேசும் வார்த்தைகள் திரும்ப திரும்ப மனதை குடைய ஆரம்பித்தன.( ஏம்பா ! மூனு மணிக்கு டீ காபி குடிக்கலன்னா செத்திருவியா). கைலாசத்தை எப்படி எதிர்த்து பேசுவேன் என்று யாருமில்லாமல் தனியே கையை முகத்தை மாற்றி பேசும் அளவுக்கு மன்ரீதியான பாதிப்பு ஏற்பட்டது.

நான் கைலாசத்தை எதிர்க்கும் முன்னரே, எலக்டிரிக்கல் பிரிவில் உள்ள ஒரு பெண்ணை பார்த்து ஏடாகூடாமாய் பேச ( உனக்கெல்லாம் எப்பத்தான் கல்யாணம். நீயும் சொல்லிகிட்டுத்தான் இருக்க ஐஞ்சி வருசமா! பேசாம கல்யாணம் பண்ணாமலே இருந்த்திரு ) கைலாசம் வசமாக மாட்டினார்.

அவரை எல்லோரும் பிடித்து கொண்டனர். வொர்க்ஸ் மேனஜருக்கு வேறு வழியில்லை. தண்டனை டிப்போவான தாம்பரம் டிப்போவுக்கு மாற்றபட்டார் கைலாசம்.

கைலாசத்தின் முகத்தை பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. கடைசியாக டிப்போவை விட்டு போகும்போது யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை.

அவர் பொருட்களை , டூல்களை எடுத்து வைக்க யாரும் வரவில்லை.எல்லாம் அவரே செய்தார். அவரே அவர் செல்ஃபை கூண்டு வேனுக்குள் ஏற்றினார்.

யாரிடமும் சொல்லவில்லை . என்னிடம் மட்டும் திரும்பி “ இன்னாப்பா தம்பி பாப்போம்” என்று போனார்.

தாம்பரம் டிப்போவில் கைலாசத்தின் கையில் மாட்டப்போகும் முகம் தெரியாத அப்பரண்டீசுக்காக வருந்தினேன்.... 

No comments:

Post a Comment