Thursday 21 June 2012

கதை போல ஒன்று -15

“அதப்படி பேச்சியம்மனுக்கு கிடா வெட்டாம கொடை” என்று புலம்பியபடியே இருந்தார் செல்லதுரை மாமா

ஊருக்கு வெளிய இருக்கிறது சுடல மாட சாமி . ஊருக்கு உள்ள இருக்கிறது பெருமாள் கோவிலும், பேச்சியம்மன் கோவிலும்.

சுடல மாட சாமி கோவிலில் வருசா வருசம் “மூன்று கெடா “வெட்டுவார்கள்.கோவில் கொடை விடிய விடிய நடக்கும். யாரும் தூங்க கூடாது, தூங்கினால் தெய்வ குத்தம் என்று சொல்வார்கள்.

சாமியாடுபவர் படு ஆவேசமாக “சுடலை மாட” உடையை உடுத்தி ஆடுவார்.அரிவாளை விசுக் விசுக்கென்று வீசும் போது பயம் வரும்.

எல்லோரும் கோவில் வேலை செய்ய வேண்டும் எழுவது வயதானாலும் , தாத்தாவும் வேலை செய்வார்.

சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும். “ எல இங்க வா ! எல்லா பழத்தையும் பிச்சி பிச்சி இந்த பிளா பெட்டியில் வரிசையா போடு ! ன்னு துவைச்சுருவார்.

அதுல செல்லத்துரை மாமாதான் விழுந்து விழுந்து வேலை செய்வார். சாமி மேல அப்படி ஒரு பக்தி. அவரு சும்மா இருந்தே பார்க்க முடியாது. தாத்தாவிடமும் அப்பாவிடமும் அப்படி ஒரு பணிவை கொட்டுவார்.

கிடா கறி வெட்டுவார். மசாலா இடிப்பார், கறி கிண்டுவார், அரிசி அளப்பார், கொதிக்கிற சோத்தை பெட்டியில வைச்சு பிரசாதம் கொடுப்பார். பெட்டின்னு ஒரு முன்னூறு நானூறு பெட்டியில வைக்கனும்.

வேலையில சலிப்பே இருக்காது. தவறாமல் சாமியிடம் குறி கேட்பார். சாமி! சாமி !சாமி! என்று பித்த நிலையிலேயே அலைவார்.

ஊருக்கு உள்ளே இருக்கும் பெருமாளும் பேச்சியம்மனுன் இரண்டு கருவறையில், ஒரே கோவிலில் வீற்றிருபார்கள். இதில் பேச்சியம்மன் கோவக்கார அம்மனாதலால், அதற்கு வருடா வருடம் கோவிலிருந்து கொஞ்சம் தள்ளி “கிடா” வெட்டி படைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

பின்னர் சிறுதெய்வங்களில் ஊடுருவும் “வைதீக” கருத்துகளால், பெருமாள் கோவில் முன்பு எப்படி கிடா வெட்டுவது என்று சிலர் சொல்ல, ”அதப்படி, நம்ம ஊரு பெருமாள் அதெல்லாம் குத்தம் சொல்லமாட்டார். நாம அப்படித்தான்”என்று சிலர் சொல்ல.

சரி. இரண்டு பேருக்கும் வேண்டாம் , ஒரு வருசம் கிடா வெட்டி கொடை , மறு வருடம், கிடா வெட்டாமல் கொடை என்று முடிவாயிற்று. கிடா வெட்டாத கொடையை “பால் கொடை” என்று அழைத்தோம்.

அப்புறம் எங்க ஊர் மக்கள் இன்னும் வைதீகத்துக்கு போக, எப்போதுமே கிடா வெட்ட கூடாது,பெருமாள் சாமி கோயில் முன்பு, என்று முடிவெடுத்தனர். இதற்கு முக்கிய காரணமாக அப்பாவும், பால்துரை பெரிப்பாவும் இருந்தார்கள்.

ஆனால் செல்லதுரை மாமாவுக்கு உடன் பாடில்லை. “அதப்படி பேச்சியம்மனுக்கு கிடா வெட்டாம கொடை ”என்று புலம்பியபடியே இருந்தார்.

அந்த வருடம் பெருமாள் கோவில் கொடை முடிந்தது, எல்லோரும் அவரரவர் ஊருக்கு போன பிறகு , செல்லதுரை மாமா, கிடாவை பெருமாள் கோவில் முன்பு வெட்டி நேர்ச்சை செய்த்து விட்டார் என்ற செய்தி கேட்டு அப்பாவும் தாத்தாவும் அவசரமாய் ஊருக்கு போக நானும் தொத்தி கொண்டேன்.

இப்போ எல்லோரும் கூடி இருக்கின்றனர். செல்லதுரை மாமா நின்று கொண்டிருக்கிறார். செல்லதுரை மாமாவை அடி பிடியென இளசுகள் திட்டுகின்றனர்.

அப்பா செல்லதுரை மாமாவின் சட்டையை பிடித்து “ ”யல நீ பெரிய சட்டம்பியோ!, உனக்கு ரொம்ப தெரியுமோன்னு” அடிக்க பாய்ந்தார்.

தாத்தா சண்டையை விலக்கி , “எடே, என்னடே பண்ணுறியே ! வெட்டிகிட்டு செத்துருவிய போலருக்குடே, இந்த கோவில் எங்கப்பா காலத்துல, யார் எந்த ஊர்ல யாவாராம், தொழிலு செய்ஞ்சாலும், வருசா வருசம் ஊருக்கு வந்து போனும்ங்கிறதுக்காக கட்டினதுதாண்டே !

”மொதல்ல ஊருக்குல்ல ஒண்னாயிருங்கல.”
பேச்சியம்மன், சுடல, பெருமாள் எல்லாம் அப்புறம்தான். எவனாவது அடி புடின்னா கோவில நானே இடிச்சிருவேன் புரியுதா !

எல! நடராசா நம்ம செல்லதுரை எப்படி ’சாமி சாமி’ன்னு இருப்பான்னு எல்லொருக்கும் தெரியுந்தானல.புதுசா ரூல்ஸ்கள போட்டா மொதல்ல அப்படி இப்படி மீறத்தாம்ல செய்வானுங்க.அதுக்குன்னு செல்லதுரய அடிப்பியா. நல்லா பெத்தேம்ல உன்ன.”

இப்போ செல்லதுரை மாமா கலங்கி நிற்க.

தாத்தா மாமாவை கூப்பிட்டார்

“ செல்லத்த்ர இங்க வா.”

அமைதி.

“ஏம்ல இப்படி பண்றீஙக, ஒரு ரூல்ஸ் பெரியாளுக கொண்டுவந்தா அத மதிக்க பழகுங்குல , மத்தத பொறவு பாக்கலாம் . எனக்காக தனிபட்ட மொறையில கேட்கிறேன் எனிமே இப்படி பண்ணாத என்னடே !

சரி அவ்வளவுதான் எல்லாரும் போங்கல “ என்றார்.

கூட்டம் கலைந்தது.

அன்று நானும் தாத்தாவும் வீட்டில் சாப்பிடாமல் “செல்லதுரை மாமா” வீட்டில் பருப்பு குழம்பும், முறுக்குவத்தலும் சாப்பிடோம்.

அடுத்த வருடம் ,செல்லதுரை மாமா சர்க்கரை பொங்கலுக்கான வேலையை ”சாமி சாமி” ன்னு செய்ய ’பெருமாள் சாமி’ முழுவதும் வைதீகமாகிவிட்டார்.

No comments:

Post a Comment