Showing posts with label கதை போல ஒன்று.... Show all posts
Showing posts with label கதை போல ஒன்று.... Show all posts

Thursday, 27 June 2013

கதை போல ஒன்று - 96


லேபர் வார்டின் வெளியே அவளின் கரிய நிற செருப்பு கிடந்தது.
அவளே அங்கிருந்து என்னைப் பார்த்தது மாதிரி இருந்தது.

தங்கையிடம் இருந்து ஐந்து நிமிடம் முன்தான் போன் வந்தது. “நீங்க சிசேரியன் எல்லாம் பயப்படாதீங்க. கரெக்ட பண்ணிரெண்டு நிமிசம்தான்.ஆபிரேசனை முடிச்சிருவாங்க”

என்னுடன் யாருமில்லை அந்த கணத்தில்.நான் மட்டும்.தவிப்பு என்னை அலைகழித்தது.

வெளியே வந்து எட்டிப்பார்த்தேன்.”நாகாத்தம்மன்” கோயில் தெரிந்தது.வேண்ட மனது வரவில்லை.

ஆனால் தம்பி நினைவுக்கு வந்தான்.தம்பியின் காதல் நினைவுக்கு வந்தது.

”கிறிஸ்டின் பொண்ண கல்யாணம் பண்றதெல்லாம் நம்ம வீட்ல செட் ஆகுமாம்மா.அவன் அது மாதிரி செஞ்சா நான் குடும்பத்த விட்டு போயிருவேன் இவள கூட்டிக்கிட்டு.அப்புறம் எனக்கு யாரும் வேண்டாம்”.

அம்மா அழுது கமறிய குரலில் சொன்னார்.” அதுக்கு என்னடா பண்ண முடியும்.விரும்பிட்டான்.அந்த பொண்ணும் வீட்ல ஒரே பொண்ணு.என்ன செய்ய முடியும். எனக்கும் ஒருமாதிரிதான் இருக்கு.என்ன பண்ண முடியும்”

“யம்மா அந்தப் பொண்ணு சர்சுக்கு போகும்.அவனுக்கு பிறக்கிற குழந்தை எப்படி வளரும்.குழப்பமாத்தானே. லவ் எல்லாம் பெரிய விசயம் இல்லம்மா ரெண்டு மாசம் பிரிஞ்சிருந்தா எல்லாம் மறந்துரும்.”

......

“இப்ப என்ன இவன் கிறிஸ்டினா மாறுனுமாமா”

‘ஆமா அவுங்க மதத்தில பற்றா இருப்பாங்கல்லா.மதம் மாறி ஞானஸ்தானம் வேற வாங்குமுமாம்லா”

“ஆர்சியா பெந்தகொஸ்தேவா புரொட்டஸ்டண்டா ம்மா”

“ஆர்சிதான் பொட்டெல்லாம் வெச்சிக்கிலாம்.சட்டுன்னு தெரியாது.இப்பவே டெய்லி காலையில பத்து நாள் கிளாஸுக்கு போறான் சர்ச்சுக்கு’

‘எந்த சர்ச்சுக்கு’

‘பெரம்பூர் சர்ச்சுக்கு’

‘ஏம்மா இந்த நாய்க்கு புத்தி இப்படி போகுது.ஒழுங்காத்தான இருந்துச்சு நம்ம குடும்பம்.யாராவது இப்படி ஒரு காரியத்த செய்ஞ்சோமா”

அம்மா அமைதி காத்தாள்.

ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.அமைதியாக இருந்த குடும்பத்தில் தம்பி குழப்பம் ஏற்படுத்துவதாகவே நினைத்து கொண்டேன். வெறிபிடித்து போய் கத்தினேன்.

‘இந்த பன்னி இது மாதிரி செய்வான்னா, ரெண்டாம் கிளாஸ்ல கிட்னியெல்லாம் இன்ஃபெக்ட் ஆகி, முகமெல்லாம் வீங்கி சாகக்கிடந்தானே கோபாலபிள்ளை ஆஸ்பிட்டல்ல அப்பவே சாகட்டும்ன்னு விட்டிருக்கலாம்” என்றேன்.

அம்மா என்னைப் பார்த்தாள்.”வேணாம் வேணாம் என்ன விட்று.என்னால இந்தப் பேச்சக் கேக்க முடியாது’ என்று அழுதுகொண்டே சோபாவில் சாய்ந்தாள்.என்னை கும்பிட்டாள்.

நான் ஆபீஸுக்கு போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் அண்ணனிடம் இருந்து போன்.

“விஜய் அம்மா மனச கண்டதையும் பேசிக்கஸ்டப்படுத்தாத,நீ இன்னும் கொஞ்ச மாசத்துல அப்பா ஆகப்போற.வைஃப் பிரக்ண்டா இருக்கும் போது சந்தோசமா இருக்கனும்.எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.தயவு செய்து அம்மாகிட்ட போய் “அவன் செத்திருக்கலாம் இவன் செத்திருக்கலாம்ன்னு பேசாத. அம்மா அழுறத போன்ல கேட்டாலே எனக்கு ஒண்ணும் ஒட மாட்டேங்குது”

லேபர் வார்டில் இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தார்.நான் எழுந்தேன்.ஒன்றுமே சொல்லாமல் மறுபடி உள்ளே போனார்.

அதிலிருந்து தம்பியின் காதல் திருமண விவகாரத்தில் நான் தலையிடவில்லை.

என்னைப் பொறுத்தவரை தம்பியே இல்லை என்று நினைத்து வாழ ஆரம்பித்தேன்.

மனைவியிடம் ‘அண்ணி’ என்று பேசுவான்.என்னிடம் பேச வருவான்.பதிலுக்கு பேசுவதில்லை.உறவு இல்லையென்றால் இல்லைதான்.அதை மறக்க அடுத்த கட்ட வேலையை தொடக்கி விடுவது வழக்கம்.

ஆனால் இப்போது மனைவியின் பிரசவம் உள்ளே நடக்க நினைத்து பார்த்தால், ‘ஏன் அப்படியெல்லாம் கீழ்தரமாக நடந்துகொண்டேன்.

படித்த புத்தகத்தின் பக்குவம் என்னுள் இறங்கவே இல்லையே.

ஆண் பெண்ணை காதலிக்கிறான்.இதற்குள் ஏசுவையும் முருகனையும் போட்டு ஏன் குழப்பிக்கொண்டேன்.

இருக்கட்டுமே கிறிஸ்தவர்கள் கொஞ்சம் மத அபிமானம் உள்ளவர்களாகவே இருக்கட்டுமே.தம்பி மதம் மாறட்டுமே.அதனால் என்ன வந்து போச்சு.? என்ன கலாச்சாரம் குழப்பம் வந்துவிடும்.சம்பிரதாயம்தான் கலாச்சாரமா?

அல்லது அது இன்னும் வேறான பொருளா?

இப்போது தம்பி என்ன செய்கிறான்.கல்யாணம் முடிந்து மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்.எதாவது கெட்டு போய்விட்டானா?

ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது.

ஆவேசத்தின் மொழிகளுக்கு இங்கிதம் கிடையாது.இரக்கமும் கிடையாது.

வாழ்க்கையின் நெருக்கடி மனதில் உள்ள அழுக்கை காட்டிக் கொடுத்துவிடுகிறது.

அறிவு ,கற்றது ,உணர்ந்தது, நண்பனின் கதை அடுத்தவன் கதை எல்லாம் கேட்டு நெகிழ்ந்தது அனைத்தும் தனக்கு தனக்கு என்று வரும் போது பொய்யாகிவிடுகிறது.

தனக்கு ஒரு இக்கட்டு என்று வரும் போது, மனதில் உள்ள ஒநாய் விழித்து கடித்து குதறுகிறது.

அம்மாவாய் இருந்தால் என்ன ? அப்பாவாய் இருந்தால் என்ன? அப்போது உள்ளே இருக்கு வளர்ந்த சூழ்நிலை சார்ந்த மதவெறியும் அருவருப்பும் சூழ்ந்து கொள்கிறது.

பதினைந்து நிமிடம் முடிந்ததும், அந்த அழகான வெண்மையான பப்ளி இளம் டாக்டர் துணியில் வைத்து ஒரு குழந்தையை எடுத்து வருகிறார்.

ஆம் அது என் குழந்தைதான்.என்னுள் இருக்கும் பகுதிதான் அவன்/அவள்.கிட்டே பரபரப்பாய் ஒடிப்போகிறேன்.

டாக்டர் முந்திச்சொல்கிறார்.

“பாப்பா பொறந்துக்குங்க.கங்கிராட்ஸ்”

‘வெயிட் ஒகேவா டாக்டர்’

‘இரண்டே முக்கால்.ஒகேதான்’

ரோஸ் நிற போட்டபிள் பேபி பெட்டில் சின்ன பூவாய் படுத்திருக்கிறாள் என் மகள். இதோ என் மகள்தான்.

உடம்பெல்லாம் நடுங்குகிறது.

உள்ளே இருந்து சுரப்பது என்னது.இதுதான் உண்மையான பாசமா? இதுவரை நான் கொண்ட எல்லா உலக அன்புகளும் போலிகள் என்று பட்டவர்த்தனமாய் தோண்றியது.

மிச்ச காலத்திற்கெல்லாம் இந்த குழந்தையின் அடிமையாய் நான் இருப்பேன் என்று தோண்றியது.

கிட்டே சென்று கையில் எடுத்தேன்.பார்த்துக்கொண்டே இருந்தேன்.

“இந்த பன்னி இது மாதிரி செய்வான்னா, ரெண்டாம் கிளாஸ்ல கிட்னியெல்லாம் இன்ஃபெக்ட் ஆகி, முகமெல்லாம் வீங்கி சாகக்கிடந்தானே கோபாலபிள்ளை ஆஸ்பிட்டல்ல அப்பவே சாகட்டும்ன்னு விட்டிருக்கலாம்”

நான் அம்மாவிடம் சொன்ன வாக்கியங்கள் நினைவுக்கு வந்தது.

தம்பியும் இதுமாதிரிதான் சிறுகுழந்தையாய் இருபத்தியாறு வருடங்கள் முன் அப்பா கையில் இருந்திருப்பான் என்று தோண்றியது.

இதோ இதுமாதிரிதான் இளசாக தோலெல்லாம் மென்மையாக இதே குழந்தையாகத்தான் இருந்திருப்பான்.நான் அடையும் இதே உணர்வைத்தான் அம்மாவும் அடைந்திருப்பாள்.

அம்மா அன்று சோபாவில் மயக்க நிலையில் விழுந்து சாய்ந்து அழுது கமறியது எனக்குள் இறங்கியது.

கவலையும் மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்து உடலே கரைந்து பரவசமாய் இருந்தது. என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை.

பிள்ளையின் வாயில் சுரந்த எச்சிலை எடுத்து நக்கினேன்.அவளைப்பார்த்து சிரித்தேன்.டாக்டருக்கு நன்றி சொன்னேன்.

அம்மாவை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

Tuesday, 18 June 2013

கதை போல ஒன்று - 100


லூர்து,தலையணைக்குள் முகத்தை புதைத்து கொண்டு இயேசுவே இயேசுவே இயேசுவே என்று இயேசுவையே துதித்து கொண்டிருந்தாள்.

கிளாஸ் டீச்சராகி அந்த முறைதான் ஸ்டூடண்ஸுக்கு முதன் முதலாக ‘புராகிரஸ் ரிப்போர்ட்’ வழங்கப்போகிறாள். ஆனால் அவளுடைய பதட்டத்திற்கு காரணம் அதுவல்ல.

லூர்து ஹோலிக்கிராஸில் பி.ஏ ஹிஸ்டரி முடித்ததும், பிரைமரி ஸ்கூல் ஹிஸ்டரி டீச்சராக வேலை கிடைத்தற்கு காரணம் தான் எந்த ஞாயிறையும் விடாமல் சர்ச்சுக்கு போனதுதான் என்று நம்பினாள்.

அவளுடைய ஒடிசலான உடலுக்கு கூட சேலை பொருந்தி டீச்சருக்குள்ள கம்பீரத்தை கொடுக்கும் காட்சியை கண்ணாடியில் முதன் முதலாய் பார்க்கும் போதே ‘நல்ல டீச்சராய்’ வேலைக்கு சேர்கிறேன். அதே அளவு நேர்மையை ரிட்டயர்ட் ஆகும் வரை கடைபிடிப்பேன் என்று மானசீகமாய் சபதம் எடுத்துக் கொண்டாள்.

லீவே எடுக்காமல் வருடம் முழுவதும் வந்ததால், சேர்ந்து முதல் வருடம் முடியும் போதே ஐந்தாம் வகுப்பு பி செக்சனுக்கு கிளாஸ் டீச்சராக பெட்டினா மேரி சிஸ்டர் நியமித்தார்.

பெட்டினா மேரி சிஸ்டர் வயதெல்லாம் கணக்கில்லை.திறமைதான் முக்கியம் என்று “சர்ச் சபை” ஏற்பாடு செய்திருந்த ”ஸ்பெசல் மேனேஜ்மெண்ட் டிரனிங்கில்” கேட்டு கேட்டு, அதை செயல்படுத்த லூர்த்தின் பதவி உயர்வை உறுதியாக்கினார்.

அவர் லூர்த்திடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் “லூர்து எனக்கு நீ உண்மையான அன்பை நேர்மையை கொடுக்க வேண்டும்.நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனசாட்சி நம்பவேண்டும்” என்று.

லூர்து சிஸ்டரின் வளையல் இல்லாத மெல்லிய கைகளைப் அன்பாய் பிடித்து தன் சத்தியத்தை உறுதி செய்தாள்.

ஜூன் மாதம் மன்திலி டெஸ்டுக்காக சோசியல் சயின்ஸ் பரிட்சை வைக்க வேண்டும்.

மற்ற எல்லா பாட பரிட்சைகளும் வைத்து முடித்து கிளாஸ் டீச்சரான லூத்துவிடம் மார்க் லிஸ்டை கொடுத்து விட்டார்கள் சக டீச்சர்கள்.

சோசியல் சயின்ஸ் மட்டும் லூர்த்து இன்னும் வைக்கவில்லை. அவள் மாணவர்க்ளை திரும்ப திரும்ப நன்றாக கற்க செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

முதன் முறையாக பெட்டினா மேரி சிஸ்டரின் ரூமில் உள்ள உலக உருண்டையை தன் வகுப்பிற்கு எடுத்து வந்து அவள் பாடம் சொல்லிகொடுப்பதை மற்ற ஆசிரியர்கள் பொறாமையுடனும், பெட்டினா மேரி பெருமிதத்தோடும் பார்த்து கொண்டிருந்தார்.

இப்படி சோசியல் சயின்ஸ் பரிட்சையை பிந்தி பிந்தி ஒரு வெள்ளிக்கிழமை வைத்தாள்.

அந்த பள்ளியில் மன்திலி டெஸ்டுகளை நோட்டில்தான் எழுத வேண்டும்.பேப்பரில் எழுதக்கூடாது. நோட்டில் எழுதி மிஸ்ஸிடம் கொடுத்து விட வேண்டும்.

பரிட்சை முடிந்ததும் நோட்டுகளை எல்லாம் வாங்கி வைத்து விட்டு பெட்டினா மேரி சிஸ்டரிடம் தகவல் சொன்னாள்.

“தென் வாட் லூர்து மோளே! திங்கள் புராகிரஸ் ரிப்போர்ட் கொடுத்தரலாமே”

“திங்களா சிஸ்டர்”

“சனி ஞாயிறு லீவு.இந்த மன்திலி டெஸ்ட் நோட்ட வீட்டுக்கு எடுத்து போயிட்டு திருத்து.மார்க் எண்டர் போடு. டோட்டல் போட்டு புராகிரஸ் ரிப்போர்ட் கொடுத்திரு”

’சரி சிஸ்டர்’

‘முத தடவையா புராகிரஸ் ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணப்போற. கங்கிராட்ஸ் லூர்து.”

வெள்ளி இரவே நோட்டை கடகடவென திருத்தினாள். திருத்தி முடித்தால் நாற்பத்தி இரண்டு நோட்டுக்கு பதிலாக நாற்பத்தி ஒன்றுதான் இருக்கிறது.எப்படி குறையும்? குழம்பினாள்.

அட்டென்டண்ஸ் ரெஜிஸ்டரை எடுத்துப் பார்த்தாள்.யாருமே லீவ் இல்லை. ஆனால் எப்படி குறைகிறது. தங்கையின் துணையுடன் ஒவ்வொன்றாக சோதித்தாள்.

சோதித்தில் விஜயபாஸ்கர் என்பவனின் நோட்டைக் காணவில்லை.

வெள்ளி இரவு நரகமாய் போயிற்று. சனிக்கிழமையும் லூர்துவுக்கு ஒன்றுமே ஒடவில்லை. நோட்டைத்தொலைத்து விட்டோமே என்ற கவலை.

இதற்கு பதிலாக திங்கள் இன்னொரு பரிட்சையை வைக்க வேண்டுமென்றால் திங்களே புராகிரஸ் கார்டை கேட்கும் பெட்டினா மேரி சிஸ்டரிடம் என்ன சொல்ல.

அழுகை வந்தது, தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

லூர்து மிஸ் அழுதுகொண்டிருக்கும் போது விஜய் சட்டையில்லாமல், ஊக்குகள் இல்லாத டிரவுசரை மடித்துக்கட்டி ஆனந்தமாக பட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

திடீரென்று பட்டத்தை இன்னும் கொஞ்சம் உயரமாக ஏற்றும் ஆசை வந்தது . வீட்டிற்குள் ஒடிவந்து தன் பையில் வைத்திருக்கும் பட்ட நூலை எடுக்க வந்தவன் , தன்னுடைய ஹிஸ்டரி மன்திலி டெஸ்ட் நோட்டைக் கண்டான்.

கையில் எடுத்துப்பார்த்தான். பரிட்சை எழுதிவிட்டு மிஸ்ஸிடம் கொடுக்க வேண்டும். கொடுக்க மறந்து பையில் வைத்து கொண்டுவந்திருந்தான். பயத்தில் தலைவலித்தது.

லூர்து அழுதுகொண்டே இருந்தாள்.அப்பா விசாரித்தார்.அம்மா விசாரித்தார்.சமாதானப்படுத்தினார்கள்.

ஆனாலும் அழுகையை விடவில்லை.” யம்மா ஏம்மா மொத மொதல்ல புராகிரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்போறேன் இப்படி பண்ணிட்டாரே ஆண்டவர்” என்று அழுது அழுது கடவுள் மேல் கோபம் கொண்டாள்.

“இனிமே ஞாயிறு சர்சுக்கு போகவே மாட்டேன்மா” என்று சபதம் எடுத்தாள்.

லூர்து சபதம் எடுக்கும் போது விஜய் திருச்செந்தூர் முருகன் படம் முன்னே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தான்.”முருகா எப்படியாவது என்ன இந்த இதுல இருந்து காப்பாத்து, வேணுமின்னே பண்ணல, தெரியாம பண்ணிட்டேன்.நா வேணா ஒம் சரவண பவ ஃபை ஹண்டிரட் டைம்ஸ் எழுதிர்றேன் முருகா”

ஞாயிறு காலை எழுந்த லூர்து என்னதான் சர்ச்சுக்கு போகக்கூடாதென்று நினைத்தாலும் அவளையறியாமல் குளித்து உடுத்து போனாள் ஆண்டவரை துதிக்க.

ஞாயிறு காலை எழுந்த விஜய்க்கு அந்த ஐடியா தோண்றியது.லூர்து மிஸ்ஸின் வீட்டுக்கு போனால் என்ன? லூர்து மிஸ்ஸின் வீடு இருக்கும் சந்தின் பெயர் தெரியும்.அங்கே போய் விசாரித்தால் என்ன?

முயற்சிப்போம். மன்திலி டெஸ்ட் நோட்டை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் விளையாடப்போவதாக சொல்லிவிட்டு அதிமிக்கேல் சந்துக்குப் நடந்தான்.

சர்ச்சில் லூர்த்து இயேசுவிடம் கதறிக்கொண்டே இருந்தாள்.வீடு திரும்பும் போது டிரவுசர் சட்டையுடன் ஒரு பையன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

“என்னடா”

”மிஸ் நான் உங்க கிளாஸ்ல படிக்கிறேன்.விஜயபாஸ்கர்”

“உள்ள வா.என்ன விசயம்”

ஹாலில் அவனை உட்காரச்சொன்னார்.விஜய் நோட்டை எடுத்து லூர்துவிடம் கொடுத்தான்.

லூர்துவிற்கு சந்தோசம். தான் தொலைக்கவில்லை. இப்போது நோட்டே கையில் கிடைத்துவிட்டது. தன் பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிட்டது என்று நினைக்கும் போது அவளுக்கு அந்த கவலை வந்தது.

இவன் வீட்டிற்கு நோட்டை எடுத்து எதாவது பார்த்து எழுதியிருந்தால்

“ஏண்டா நோட்ட எடுத்துட்டுப்போன”

விஜய் சேரைவிட்டு எழுந்து அழ ஆரம்பித்தான்.

“தெரியாம எடுத்து பேக்ல வைச்சுட்டேன் மிஸ்.”

”வீட்ல போய் பாத்து எழுதினியா”

”ச சத்தியமா இல்ல மிஸ்”

நோட்டைப்பிரித்தாள்.

”சொல்லு வாட் இஸ் லேட்டியூட்?

சரியாக பதிலைச்சொன்னான். இன்னும் இரண்டு மூன்று கேள்விகள் மிகச்சரியாக பதில் சொன்னான்.

நேர்மை என்றும் தைரியத்தை கொடுக்க கூடியது. சத்தியத்தின் கம்பீரம் எவரையும் ஈர்க்கவே செய்யும்.
சத்தியம் நிம்மதியானது. நேர்மைக்குள் இருப்பவனக்கு சட்டதிட்டம் பற்றிய கவலையில்லை. தார்மீகம் பலம் கொடுக்கும் சக்தி காண்டாமிருக பலம்.

“ம்ம்ம் நம்புறேன்.இனிமே இப்படி செய்யகூடாது”

“சரி மிஸ்”

“காலையில சாபிட்டியா சாப்பிடுறியா”

‘...... “

ஆப்பமும் குருமாவும் சாப்பிட்டான்.

“இத ஸ்கூல்ல யார்கிட்டயாவது சொல்லுவியா விஜய்”

”சொல்லமாட்டேன்”

”தேங்ஸ்டா”

விஜய் லூர்துமிஸ்ஸைப் பிரிந்து வரும்போது சூரியன் அழகாயிருந்தது, மரங்களின் பச்சை அழகாயிருந்தது. மூச்சை ஆனந்தமாய் இழுத்து விட முடிந்தது, நடக்கவே முடியவில்லை மகிழ்ச்சியில் கிரிக்கட் பேட்டை எடுத்துக்கொண்டு வெறித்தனமாக ஒடினான்.

ஒடிக்கொண்டிருக்கொண்டிருக்கும் போது “தேங்ஸ் முருகா... முருகாஆ தேங்க்ஸ் ” என்று மனதுக்குள் கூவிக்கொண்டிருக்கும் போது

லூர்து தன்னுடைய பிரச்சனையை தீர்த்து வைத்ததற்காக இயேசுவுக்கு தனிஜெபம் மூலம் நன்றி சொல்லி கொண்டிருந்தாள்.

Sunday, 16 June 2013

கதை போல ஒன்று - 99


கணேசின் சட்டையில் ஒன்றிரண்டு ரத்தத்துளிகள் ஓட்டியிருந்ததை கவனித்தேன்.

காலை ஏழு மணிக்கு கதவைத்தட்டின கணேசைப் பார்த்து பயந்து போன என் முகம் பார்த்து “மச்சி இந்தப்பரிட்சை முடியிரவரைக்கும் உன் வீட்ல தங்கி எழுதிகிறேண்டா” என்றான்.

என்னால் ஒன்றுமே சொல்ல முடியாத நிலமை.

அம்மா காபி கொடுத்தார்கள்.யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.மாடியில் உள்ள என் ரூமிற்கு கூட்டிப்போகும் போதுதான் கவனித்தேன் அவன் சட்டையின் நுனியில் இருக்கும் ரத்தத்துளிகளை.

“மச்சி என்னடா சட்டையில பிளட்டு”

வாயைக் கொஞ்சம் கோணலாக வைத்துக்கொண்டு ஆனால் அழாமல்
“அப்பா அம்மாவ அடிக்கிறாருடா.காதுல அடிச்சி அம்மாவுக்கு காது கிழிஞ்சி ரத்தம் சட்டையில”

“சரியான சைக்கோ மச்சி உங்கப்பா”

“அவரப்பத்தி பேசாத மச்சி எனக்கு டிப்ளோமோ கடைசி செமஸ்டர்ல மிச்ச மூணு பரிட்சையும் முக்கியம்.அத எங்க வீட்ல இருந்து எழுத முடியாது. ஒருவாரம் உன் வீட்ல தங்கியிருந்து எழுதிட்டு போலாம்ன்னு இருக்கேன்”

“எனக்கொண்ணும் இல்லடா தங்கி எழுது.எனக்கென்ன தங்கச்சி அக்காவா இருக்காங்க. நீ தங்கு மச்சி”

கணேசின் அப்பா தமிழாசிரியர் மட்டுமல்ல,தன்னை சுற்றியுள்ளவர்களை துன்புறுத்துபவரும் கூட.முதல் மனைவி இறந்துவிட்டதால் கணேசின் அம்மாவை இரண்டாம்தாரமாக கல்யாணம் செய்துகொண்டவர்.

முதல் தாரத்துக்கு பிறந்த பையன் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் இவரைப்பிடிக்காமல் வீட்டை விட்டு ஒடிவிட்டான்.அவனை தேடவே இல்லை என்பது பற்றி கவலைப்படக் கூட யாருமில்லை. 

ஆனால் கணேஷ் இதைச்சொல்லி வருத்தப்படுவான். 

கணேசின் அம்மாவை எடுத்ததெற்கெல்லாம் அடிப்பார்.குடித்தாலே வீட்டில் அன்று ஒ ஒ என்று அழுகைச்சத்தம் கேட்கும்.

அவர் சைக்கிளை கணேசன் தினமும் துடைக்க வேண்டும்.சைக்கிளை தெருவில் எல்லோரும் பார்க்க நிறுத்தி வைப்பார்.கணேசன் துடைக்க துடைக்க “இப்படி துடைகனும் அப்படி துடைக்கனும் “ என்று சத்தமாக தலையில் தட்டிக்கொண்டே இருப்பாராம்.

கணேசனின் சித்தி வீட்டுக்கு வரும் போது தப்பாய் நடந்தார்.

லெட்ரினுக்கு போய்விட்டு தண்ணீர் சரியாய் ஊற்றாமல் அதை கணேசனும் அவன் அண்ணனும்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பாராம்.

கணேசன் அம்மா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அங்கு தட்டைப்பிடிங்கி “போதும் நீ ஒசிச் சோறு சாப்பிட்டது “ என்று சொல்லி அடித்தாராம்.

“என்னப் பிடிக்கலன்னா வீட்ட விட்டு மூணுபேரும் போயிரலாம்.நா இப்படித்தான் இருப்பேன்” என்பார்
.
அம்மா அழுதுகொண்டே இருப்பார்.அவருக்கு ஒரே ஆறுதல் அவர் இரண்டு பிள்ளைகள். 

இந்த கஸ்டத்திலும் தனக்கு பெண்பிள்ளைகளைக்கொடுக்காத கடவுள் மேல் மரியாதையும் பக்தியும் உண்டு.

தன்னுடைய பேரழகே கணவனின் எல்லா கோபத்திற்கும் காரணம் என்று நம்பிக்கையை வளர்த்து முடிந்த மட்டும் தன் அழகை மறைத்துக் கொண்டு வாழ முயற்சிப்பவர்.

கணேக்ஷ் தினமும் அப்பாவைப் பற்றிப்புலம்புவான். 

“திருத்த டிரைப் பண்ணு. இல்லன்னா டிப்ளமோ முடிக்கிற வரைக்கும் பொறுமையா இரு.படிச்சி வேலைக்கு போயிட்டன்னா அம்மாவ கூப்பிட்டு தனியா வந்திரலாம் மச்சி”

“இல்ல மச்சி எங்கம்மா அப்பாவ விட்டு வரமாட்டாங்க.அவங்களுக்கு அப்பாவ பிடிக்கும்,.என்ன அடிச்சாலும் அவரப்பிடிக்கும்.அவர் ஏதோ போட்டு மயக்கி வெச்சிருக்காருடா”

“ம்ம்ம்”

”ஒருதடவ மச்சி எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ நான் சிக்த் படிச்சிட்டுருந்தேன். பாத்ரூம்ல அம்மா நிக்குறாங்க, அவுங்க கால் வலியே ரத்தம் போகுது.ப்ளீடிங் ஆயிட்டுருக்குது.அம்மா உடம்பு நடுங்கிகிட்டே இருக்காங்க. நானும் அண்ணனும்தான் வெந்நீ வெச்சி கொடுத்தோம்.ஆனா அப்பா அப்படியே பேப்பர் படிச்சிட்டே இருந்தார்.அம்மா வழக்கம் போல அரைமணி நேரம் பிறகு அவருக்கு சூடா இட்லியும் தக்காளிச்சட்னியும் வெச்சிக்குடுத்தாங்க.” இப்படி நிறைய சொல்லலாம் மச்சி.

கணேசன் அடிக்கடி வீட்டிற்கு வருவான், இரவு பேசத்தொடங்கினால் விடிய விடிய பேசுவோம். காலை பஸ்ஸைபிடித்து தன் வீட்டுக்கு போவான்.

அவனுக்கு கிடைக்கும் மனவிடுதலையில் என் பங்கு முக்கியமானது ஆக ஆக எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.

அவன் என்னிடம் வைப்பது அன்பு.நான் அவனிடம் வைப்பது பொதுவானது. எல்லோரிடமும் நான் இப்படித்தான் பழகுவேன்.

ஆனாலும் அதைத்தாண்டி கணேசின் அப்பாவித்தனம் பல இடங்களில் என்னை ஈர்த்தது.

மூன்று பரிட்சையும் அந்த ரத்ததுளிகள் பட்ட சட்டையை இரவு துவைத்து காயவைத்தே எழுதினான்.உள்ளாடை மட்டும் கொண்டுவந்திருந்தபடியால் தப்பித்தான்.வேறு சட்டை கொடுத்தால் வேண்டாம் என்று மறுத்தான். ரொம்ப தன்மானம் பார்த்தான்.

மூன்றாவது பரிட்சை எழுதியதும், மிக ஆனந்தமாய் வீடுவந்து சேர்ந்தோம்.

கணேசன் மிக நன்றாய் எழுதியிருப்பதாக சொல்லி சிரித்தான்.

” இன்னைக்கு வீட்டுக்கு போயிரு மச்சி அம்மா உன்னத்தேடிகிட்டே இருப்பாங்கல்ல “என்று சொன்னேன்.

“ஆமா மச்சி பாக்கனும் பாக்கனும்” என்று சொல்லிய விதத்தைப் பார்த்தால் அன்று இரவு மொட்டை மாடி சந்திப்புக்கு விரும்புவதைப்போல் தெரிந்தது.

இரவு உணவுக்குப் பிறகு மொட்டை மாடியில் சேரைப்போட்டேன். பேசிக்கொண்டே இருந்தோம்,

“மச்சி என்னடா அன்னைக்கு திடீர்ன்னு வீட்டுக்கு வந்த, வீட்ல பிரச்சனைன்னு”

“பரிட்சைக்கு முந்தின நாள் நைட்டுடா. நான் படிச்சிட்டிருக்கும் போது. புர்க்கா போட்டுட்டு ஒரு பொம்பள வந்துச்சி வீட்டுக்கு.கையில் ஒரு நாலுவயசு பொண்ணு. 

நா என்ன வேணுமின்னு கேட்டேன்.உங்கப்பா இருக்காரான்னு கேட்டுச்சி. அப்பா தூங்கிட்டிருந்தார்.அதுக்குள்ள அம்மா வந்துட்டுடாங்க. விசாரிச்சா.அந்த பொம்பளய அப்பா வெச்சிகிட்டுயிருக்காராம்.

இரண்டு மாசமா காசும் கொடுக்கலையாம் அந்தப்பக்கம் போகவே இல்லையாம். இதக்கேட்டா அம்மாவுக்கு எப்படி இருக்கும் மச்சி. 

எனக்கு எப்படி இருக்கும்.அம்மா தலைசுத்தி தரையில உட்காந்துட்டுடாங்க.அப்பா சத்தம் கேட்டு வெளிய வந்தார். அந்த புர்க்கா போட்ட பொம்ளையப் பார்த்து அசால்டா, எது இங்க வந்த போ நா வரேன்னு சொல்றார்.”

“அதிர்ச்சியா இருக்குடா உங்கப்பா நெனச்சாலே”

“நா ஏய்யா இப்படி பண்றன்னு அப்பாவ கத்தினேன். அப்பா என்ன அடிச்சார்.அண்ணன் வழக்கம் போல ஒண்ணும் பேசல.ஆனா அப்பா என்ன ரொம்ப அடிச்சிட்டாருடா.”

சட்டையை கழற்றி காண்பித்தான்.கைத்தடம் பதிந்த ரத்த உறைவுகள்.

”கோவத்துல அழுதுகிட்டே பாட்டிவீடு பெரம்பூர்ல இருக்குல்ல.
அங்க போயிட்டேன்.பாட்டிவீட்ல எல்லாரும் அழுதாங்க மச்சி.

ஒரு அத்தை மட்டும் “கணேசு இதெல்லாம் உங்கம்மா அவளா இழுத்துகிட்டது.அவளுக்கு வரன் வரும் போது,விழுப்புரத்துல இருந்து ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வரனும், உங்கப்பா வரனும் வந்துச்சி.

உங்கப்பாவ கல்யாணம் பண்ணினா இரண்டாம் தாரமா போகனும்.ஆனா அந்த விழுப்புரம் வரனுக்கு மொதத்தாரம்தான். 

ஆனா உம் அம்மா என்ன செஞ்சா தெரியுமா. உன் அப்பன் போட்டோவ பாத்துகிட்டு நான் கட்டினா இவனத்தான் கட்டுவேன்னு கல்யாணம் செஞ்சுகிட்டா. யாராவது இரண்டாம் தாரம்ன்னு தெரிஞ்சி போவாங்களா கணேசு.ஒடம்பு அழகு உன் அம்மாவுக்கு அவ்ளோ முக்கியம். நீ பெரிய பையன் தான தெரிஞ்சிக்க”

மவுனமாய் இருந்தேன்.

“தெரிஞ்சே இரண்டாம் தாராமா ஏண்டா அந்த நாயி போச்சு.பொம்பளையா அவ.சனியண்டா”

”பாட்டி வீட்ல இருந்துதான் என் வீட்டுக்கு வந்தியா கணேசு”

“இல்ல மச்சி அம்மா இரண்ட்டாம் தாரமா போனத அவகிட்டவே கேக்கனும்ன்னு கோவத்துல மறுபடி எங்க வீட்ல போய் கேட்டுட்டு அழுதுட்டு வாரேண்டா.மனுசியா அவ. பீடைடா”

நிலா அமைதியாக நாங்கள் பேசுவதையெல்லாம் கேட்காமல் பொறுமையாக குளிர்ச்சியை பாய்ச்சிக்கொண்டிருந்தது பின்னரவில்.

இருவருமே அமைதிதாக இருந்தோம்.மவுனம் மவுனம் மவுனம்...

திடீரென்று எனக்கு அது தோண்றியது.

“நாய பன்னி அப்போ உன் சட்டையில இருக்கிற ரத்தக்கறை”

கணேக்ஷ் திடுக்கிட்டு சட்டென்று நெஞ்சைபிடித்து கொண்டு சத்தமாய் அழுதான்.

“மச்சி நா தான் மச்சி அம்மாகிட்ட ஏண்டி இரண்டாம் தாராம போன போனன்னு கேட்டு காதுவாக்குல அடிச்சிட்டேன்.அம்மா என் மேல சாய்ஞ்சா .அந்த ரத்தம்தான் மச்சி என் சட்டையில.அண்ணந்தான் நீ பரிட்சை எழுதிட்டு வான்னு என்ன வீட்ட விட்டு அனுப்பிட்டான்.மச்சி அம்மாவ பாக்கவே ஒருமாதிரியா இருக்குடா. காலையில நீயும் வாடா வீட்டுக்கு. ஒரு ஆவேசத்துல அம்மாவ அடிச்சிட்டேண்டா.இனிமே அடிக்க மாட்டேண்டா “ என்று கதறினான்.

நடுங்கினேன்.

கணேசின் சத்தம் அக்கம் பக்கம் கேட்க கூடாதென்பதற்காக “சத்தமா அழாத மச்சி” என்றேன்.

Saturday, 15 June 2013

கதை போல ஒன்று - 98


வாழ்ந்து கெட்டவர்களை பேசச்செய்யும்படியான கேள்விகளை தொடுப்பதின் குரூரமான நுணுக்கத்தை அறிந்திருந்தேன்.

அப்படி என்னிடம் மாட்டியவர் ரெட்டியார் .ரெட்டியார் மாமா என்றழைப்பேன்.

செட்டிக்குளம் ஜங்சனில் மிகப்பெரிய ஹோட்டலை வைத்திருந்தவர்.

அக்கம்பக்கத்தில் அவரை ’மொல்லாளி’ என்ற வார்த்தையால் மட்டுமே அழைப்பார்கள்.தென்தமிழகத்தில் இருக்கும் தெலுகு பேசும் கிராமத்தில் இருந்து வந்து நாகர்கோவிலில் முன்னேறியவர்.

சிறுவனாய் இருக்கையில் ரெட்டியார் மாமா கடைக்கு போனால் “டேய்” என்றொரு கம்பீரக்குரலைக் கொடுப்பார்.அந்த ’டேய்’ யின் அதிகாரம் சுருட்டிவிடும் மனதை.ஒரு தலைவனின் “டேய்” அது.

அப்பாவுடன் மரியாதையாய் பேசுவார்.அப்பா ‘மொதலாளி’ என்று பேசிக்கொண்டிருக்கும் போது, அப்பாவை மிக உரிமையாக நீ வா போ என்று பேசுவார்.

சில சமயம் அப்பாவின் முதுகில் தட்டுவார்.அப்பாவின் முதுகில் யாராவது தட்டி அப்போதுதான் நான் பார்க்கிறேன்.

வாழ்ந்தவர்கள் கெடுவதும் உலகில் ஒரு தேற்றமாகத்தானே நிகழ்கிறது.

ரெட்டியாரின் ஹோட்டல் தனக்குதான் சொந்தம் என்று அவருடைய பங்காளி கோர்ட்டில் கேஸ் போட்டார்.

ரெட்டியாரின் கம்பீரம் தன்மானம் இன்னும் அவருக்கு அவரே வளர்த்துவிட்டதும், சமூகம் கொடுத்த பிம்பங்கள் எல்லாம் சேர்ந்து பங்காளியுடனான சமரசத்தை எதிர்த்தது.

ரெட்டியார் நிறைய செலவழித்து வாதாடினார்.வீட்டை விற்றார்.ஹோட்டல் பக்கத்தில் அதில் கால்வாசி இருக்கும் சிறிய ஹோட்டலை வைத்தார். ஏனோ அது சரியாக போகவில்லை.

அப்போதுதான் அவர் அப்பாவுடன் நிறைய பேச ஆரம்பித்தார்.இரவு பத்து மணிக்கு கடை அடைக்கும்போது வந்துவிடுவார்.பேச்சு புலம்பல் புலம்பல். வீட்டில் போய் தூங்க காத்திருக்கும்போது அவருடன் அப்பா பேசிக்கொண்டிருப்பது ஆத்திரத்தை கொடுக்கும்.

சின்ன ஹோட்டலும் நஸ்டமாகியதும்,பஜ்ஜிக்கடைப் போட்டார்.

‘மொல்லாளி’ என்று அவரிடம் பேசிவயர்கள் எல்லா “யோவ் ரெட்டியாரே” என்றார்கள்.ஆனால் அப்பா ‘மொல்லாளி’ என்ற பதத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை.

ரெட்டியார் மாமா எழுந்து நின்றால் அப்பா எழுந்தே நிற்பார்.அப்படி பஜ்ஜிக்கடையில் ரெட்டியார் மாமா தனியாக இருக்கும் போதுதான் நானும் அடிக்கடிப் போவேன்.அவரிடம் சூட்சமமான கேள்விகளை சொல்லி புலம்ப வைப்பேன்.

“பழைய ஹோட்டல்ல உங்களுக்கு கீழ வேல பாத்தவங்கள்ளெல்லாம் இப்ப என்ன பண்றாங்க மாமா” என்று கேட்டுவிட்டு அப்பாவியாய் அவர் முகத்தைப் பார்ப்பேன்.

“விஜி. அது பெரிய கதைடா” என்று ஆரம்பித்து எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.மேலோட்டமாக அதைப்பார்த்து வருத்தப்படுவது போல காண்பித்தாலும்,ஏனோ அவர் கஸ்டத்தை கேட்பது எனக்கு பிடித்திருந்தது.

சில சமயம் அவருடைய பாலியல் உணர்வு சார்ந்த கேள்விகளை கேட்பேன்.அதற்கு மட்டும் பதில் சொல்லமாட்டார்.எனக்கு அது சவாலாய் இருந்தது.

பஜ்ஜிக்கடையும் சரியாய் போகததால் ரெட்டியார் கடையை மூடிவிட்டு வீட்டில் படுத்து தூங்க ஆரம்பித்தார்.அவர் மனைவி அவரை திட்டுவதாகவும் சில சமயம் அடிப்பாதாகவும் ஜங்சனில் பேசிக்கொண்டார்கள்.

ஒரு மாதம் கழித்து அப்பாவிடம் வந்து “நடராஜா நான் உன் கடையிலேயே நா சம்பளத்துக்கு இருந்துக்கிறேன்ப்பா.வேணான்னு சொல்லிராத” என்று கேட்டாராம்.

அப்பாவால் ஒன்றுமே சொல்ல முடியாமல் சரி என்று சொன்னாராம்.

திடீரென்று ரெட்டியார் மாமா இப்படி இறங்கிவந்தது வருத்தமாய் இருந்தது.கடையில் பொட்டலம் போட ஆரம்பித்தார்.

தேவையில்லாமல் சிரிக்க ஆரம்பித்தார்.

நான் பழைய மாதிரி அவரிடம் பேசுவதை குறைத்து கொண்டிர்ருந்தேன்.அனால் அவர் என்னிடம் பேசுவார். அவர் கண்களை தவிர்ப்பேன்.ஆனாலும் அவர் பேசிக்கொண்டிருப்பார்.

எங்களுக்கு டீ காபி கூட அவரே போய் வாங்கி வர ஆரம்பித்தார்.அப்பா மொல்லாளி என்றே கூப்பிட்டார்.

சில சமயம் அப்பா கடையில் இல்லாத சமயத்தில் மிக அதிகமாய் சிரித்து பேச ஆரம்பிப்பார்.அதற்கு அர்த்தம் இன்னொரு டீ வேண்டும் என்பதுதான்.

ரேசன் கடையில் அன்று சாமான் வாங்க அதிகப் பணம் தேவைப்பட்டால் அனறு முழுவதும் அப்பா சொன்னதற்கெல்லாம் சிரித்து இரவில் பணம் வாங்கிப்போவார்.

கொஞ்சம் கொஞ்சமாக ரெட்டியாரின் பழைய பெருமைகள் மறைந்து விட்டன. அதுகளை பற்றி யாருமே பேசுவதில்லை. அவர் கூட பேசுவதில்லை. அப்பா ‘மொல்லாளி’ என்று கூப்பிடும் பதம் மட்டுமே, பழைய மீட்க கடினமான பெருமைக்கு சாட்சியாய் இருந்தது.

அன்று அப்பாவிடம் கடைக்கு வரும் ”தோசை அம்மச்சி” கோபமாக பேசிக்கொண்டிருந்த போது நான் கடை உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

’தோசை அம்மச்சி’ புன்னைநகரில் சின்ன தோசைக்கடை வைத்து நடத்தும் கேரள பின் புலத்தை சேர்ந்தவர்.வயது நாற்பது இருக்கும்.

“அண்ணாச்சி பாத்தியளா இந்த ரெட்டியார் பண்ணியத”

“என்ன மொல்லாளி ஏசுனாரா உங்கள” இது அப்பா.

“அட ஏசுனா என்ன அண்ணாச்சி .எத்தன நாள் எனக்கு அவர் கடையில தோச சும்மா சாப்பிட கொடுத்திருப்பார்.ஏசல அண்ணாச்சி”

”ம்ம்ம்”

”முந்தா நேத்து என் பிளவுஸ் கொஞ்சம் கிழிஞ்சிருந்துச்சி. கஸ்டமண்ணாச்சி. அதச் சொன்னார் கிழிஞ்சிருக்குன்னு. நான் சேலையால மறைச்சேன். படக்குன்னு ரெண்டுபேரும் கன்னியாகுமரி போகலாம்மான்னு கேட்டார் அண்ணாச்சி”

அப்பா கொஞ்சம் ஆடிப்போனார்.

“உண்மையா சொல்றிய”

“மானத்த கேட்டாருன்னு வெப்ராளத்துல சொல்றேன்.உண்மையான்னு கேக்கிறிய பாத்தியளா.பாண்டிக்காரர்ல்லா நீங்க, சுயநலம் இருக்கத்தானே செய்யும்”

“அம்மச்சி நீங்க சொல்றது மட்டும் பொய்ன்னு தெரிஞ்சுது உங்கள கடப்பக்கம் காணவிடமாட்டேன்”

“நடுக்காட்டு இயக்கியம்மன் சத்தியமண்ணாச்சி’ போய்விட்டார்.

அரைமணி நேரம் பிறகு ரெட்டியார் மாமா சைக்கிளில் கடைக்கு வந்தார்.அப்பா கடைக்குள் வந்ததும் கேட்டார் “மொல்லாளி தோசை அம்மச்சிக்கிட்ட எதாவது தப்பா பேசினியளா”

மவுனம்.

“சொல்லுங்க மொல்லாளி.ஆமான்னா அமா.இல்லன்னா இல்ல”

“ஆமா நடராஜா தெரி... “

“நீருல்லாம ஒரு ஆளாவே.அதுவே மூணு பொம்ளபிள்ளையில வெச்சிகிட்டு தோசச்சுட்டு விக்கிது.அதுகிட்ட போய் படுக்க வான்னு கூப்பிட்டீராக்கும்”

ரெட்டியார் கடையை விட்டு இறங்கி சைக்கிளைப்பிடித்து கொண்டிருந்தார்.

அப்பா முதன் முதலாக அவரை ‘மொல்லாளி’ பதத்தை விட்டு மாற்றிப்பேசுவதை அவரால் தாங்க முடியவில்ல.

சைக்கிளில் சீட்டை பிடித்து கொண்டு கண்களை மூடுகிறார்.கண்ணீர் வந்தாற்போலத்தான் இருந்தது.

மெல்ல அப்பாகிட்ட வந்தார்.
“நடராஜா கடைய விட்டு அனுப்பிராத நடராஜ.செத்துருவேன்.”

“என்ன வேய் கண்ணக்கசக்குதீரு.இனிமே இப்படி நடந்தா பாத்துகிடும்.போரும் கடைக்குள்ள.வேலசெய்யும்”

ரெட்டியார் மாமா கடைக்குள் போய்விட்டார்.

இரண்டுமாதம் பிறகு கடையை விட்டு நின்று விட்டார்.அப்பா சிரித்தபடியே அனுப்பி வைத்தார்.

நாகர்கோவிலை விட்டு அஞ்சுகிராமத்தில் ஹோட்டல் போட்டிருப்பதாக சொன்னார்கள்.கடைக்கு வருவார்.அப்பாவை அஞ்சுகிராமத்துக்கு அழைத்து கொண்டே இருபபார்.

பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னால் நானும் அப்பாவும் அவருடைய புதிய ஹோட்டலுக்கு போயிருந்தோம்.

பெரியதாய் இல்லாவிட்டாலும் வியாபாரம் இருந்தது. ரெட்டியார் மாமா கலகலப்பாய் இருந்தார். எனக்கு குலாப் ஜாமூன் தந்தார்.பின் என்னையும் அப்பாவை பஸ் ஏத்திவிட வந்தார்.என் தோளில் கைப்போட்டுகொண்டபடியே.

“நடராஜா உன் கடைய விட்டு எப்போ நின்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா”

”இல்லையே மொதலாளி”

“அந்த தோசை அம்மச்சி வந்து சொல்லிட்டு போனப்புறம் , நீ என்ன கண்டமானிக்கு திட்ன. எனக்கு அவகிட்ட சபலம்.அதான் அப்படி பேசிட்டேன்.ஆனா அன்னையில இருந்து என்ன நீ மொல்லாளின்னு கூப்பிடுறதே இல்ல. ஞாபகம் இருக்கா”

“இல்லையே மொல்லாளி”

“ஆமா நடராஜா உனக்கு தெரியாமலே நீ என்ன மரியாதையா கூப்பிடல. அதுக்கப்புறம் தோச அம்மச்சிகிட்ட நான் மன்னிப்பு கேட்டதும், அது நம்ம கடைக்கு வந்த பிறகு கூட நீ என்ன ரெட்டியார்ன்னு கூப்பிட்ட.என்னால அத தாங்க முடியல நடராஜா”

“அதனாலத்தான் கடைய விட்டு போனீங்களாக்ளோ”

“இல்ல நடராஜா ஒருநாள் நைட்டு உன்ன அறியாமலே நீ என்ன மொல்லாளின்னு கூப்பிட்ட.அன்னைக்கு ராத்திரி முழூசும் சந்தோசத்துல தூங்கவே முடியல. பரவாயில்லையே இவன் நம்மள மன்னிச்சிட்டானேன்னு”

“ம்ம்ம்”

”அடுத்த நாள் காலையில தோணுச்சி செத்தா சாவோம், இவன் கொடுத்த மரியாதையோட அப்படி பிரிஞ்சிருவோம்.அப்பதான் நல்லதுன்னு உன் கிட்ட இருந்து வந்துதான், அவ நகையை வெச்சி இந்த ஹோட்டல ஆரம்பிச்சேன்.நீ அன்னைக்கு என்ன அப்படி கூப்பிடலன்ன செத்துருப்பேன் நடராஜா”

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.பஸ் வந்ததும் ஏறினோம்.

மொல்லாளி எங்களைப்பார்த்து மகிழ்ச்சியாய் கையசைத்தார்.

Tuesday, 11 June 2013

கதை போல ஒன்று - 97


கிறிஸ்த்து ஏன் இப்படியான மனிதர்களை தனக்கு பணி செய்ய படைத்திருக்கிறார்?

அவருடைய அங்கியின் வெண்மை மனதில் இல்லையே?

இரண்டு கைகளையும் பின்பக்கமாக கட்டி அவர் நடந்து செல்ல வேண்டும்.

நானும் அப்பாவும் அவரை கெஞ்சிகொண்டே பின் செல்ல வேண்டும்.அதிலும் அப்பா இருக்கிறாரே குரல் நடுங்க கெஞ்சுவதைப் பார்த்தால் யாருக்கும் மனம் கரையும்.

ஆனால் ஃபாதர் பர்பனபஸுக்கு மனம் கரையவில்லை.

காரட் உருளைக்கிழங்கு சாப்பிடும் வெண் பன்றிக்கறியைத் தான் ஃபாதர் சாப்பிடுவார் என்று கண்ணன் சொல்லியிருக்கிறான்.

நாகர்கோவிலில் சிறந்த கிறிஸ்த்தவ பள்ளியான அதில் சேர கிறிஸ்த்தவனாய் இருப்பதுதான் முதல் தகுதி என்று பூடகமாய் எனக்கு தெரிந்திருந்தாலும், அதில் படிக்க ஆசைப்பட்டேன்.

அப்பாவும் ஆசைப்பட்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை முதல் ஐந்து இடங்களில் இருப்பேன்.இரண்டு மூன்று பரிசுகள் வேறு வாங்கியிருக்கிறேன்.

ஆறாம் வகுப்பு வேறு பள்ளிக்கு மாறியே ஆகவேண்டும். ஃபாதர் பர்னபஸ் எண்டிரண்ஸ் எக்சாம் வைத்திருந்தார். எல்லாமே மிக எளிதான் கணித ஆங்கில கேள்விகள். நன்றாகவே எழுதினேன்.ஆனால் தேர்வானவர்கள் வரிசையில் என் பெயர் இல்லை.

என்னை விட சுமாராக படிப்பவருக்கெல்லம் இடம் கிடைத்திருக்கிறது.எனக்கில்லை.

ஃபாதர் பர்பஸிடம் கேட்டோம். ரூம் உள்ளே கூட்டிச்சென்றவர்
“உங்க பையன் மேத்ஸ்ல இருபத்தியைஞ்சிக்கு நாலு மார்க் வாங்கியிருக்கான்.இங்கிலீஸ்ல ஆறு மார்க்தான் வாங்கியிருக்கான்” அதான் சீட் இல்லை. வேற ஸ்கூல் பாத்துக்கோங்க என்றார்.

அப்பா பதில் பேசவில்லை. காரணம், எனக்கு அப்பாவுக்கு ஃபாதர் பர்னபஸ் மூவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

எழுந்து வந்து விட்டோம்.

லிஸ்டில் கண்ணனின் பெயர் இருந்தது.கண்ணன் எப்போதாவது பாஸாகும் நண்பன். அவனுக்கு எப்படி கிடைத்தது என்று அந்த துக்கத்திலும் தெரிந்து கொள்ள ஆர்வம்.

ஸ்கூலுக்கு வந்து கொண்டிருந்த கண்ணனிடம் கேட்டேன்.

” அது எங்கய்யா ஸ்கூல் கட்டிட மேஸ்திரில்லா. அத வெச்சு ஃபாதர் கிட்ட சீட் வாங்கிட்டாருல மக்கா”.

‘ஒஹோ ஃபாதர் ஃபர்பஸ்! வெண்பன்றி கறி சாப்பிடுபவரே! வெள்ளை அங்கியை தினமும் துவைத்து போடுபவரே! பைபிளின் வார்த்தைகளை படித்து மனப்பாடம் செய்து சர்ச்சில் கடவுளுக்கும், கடவுளை நம்பின மக்களுக்கும் ஒப்புவித்து அப்பம் கொடுப்பவரே! இதுதானா உங்கள் ஞாயம். பள்ளியில் படிக்க ஞானஸ்தானம் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிட மேஸ்த்திரி ஆகியிருக்க வேண்டும் இல்லையா” என்று குமறினேன்.

ஆனால் அப்பா நம்பிக்கை இழக்கவில்லை. ஃபாதர் காலையில் வரும் போது கெஞ்சிக்கொண்டே பின்னால் போவார்.

அடுத்து எப்பவாது ஃபாதர் வரும் போதும் பின்னாலே போவார்.

ஃபாதர் ஃபாதர் என்று இரந்து கொண்டே இருப்பார்.அப்படி போகும் போது ஃபாதர் ஃபாதர் என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.

பரிதாபம் வரும்.

இரண்டு மாதங்கள் முன் கடைக்கு வந்த  வெள்ளாளர் ஒருவர், அப்பாவை நீ வா போ என்று ஒருமையில் பேசி கன்னத்தில் வாங்கியது நினைவுக்கு வந்தது.

கண்கள் சிவப்பேற “ இந்த ஊர் கார நாடாக்கமாரு மாதிரி நினைச்சியோ. நான் பாண்டிக்காரன்ல. வார்த்தைல மரியாதை இருக்கட்டும்” என்று சொல்லும் போதே அவருக்கு கன்னத்தில் அடிவிழுந்தது.

இவ்வளவு கம்பீரமாக நினைத்து வைத்திருந்த அப்பா, இப்போது பிச்சை எடுக்கும் பதத்தில் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

வீட்டில் வயதுக்கு வந்து கல்யாணமாகாத எழுபதுகளை சேர்ந்த பெண் அடையும், ’பாரமாக இருக்கிறோம்’ என்ற குற்ற உணர்வை நான் அடைந்தேன்.

இரவெல்லாம் தூக்கம் வராது. அப்பாவுக்கு பாரமாக இருக்கிறோம். நம்மால்தான் அப்பாவுக்கு அவமானம். நம்மால் தான் அப்பா கெஞ்சுகிறார். இப்படியே செத்துவிட்டால் என்ன? அப்பாவுக்கு தொல்லையே இல்லை.ஃபாதர் பர்னபஸுக்கு கூட காலையில் எங்கள் முகத்தில் விழிக்க வேண்டாம்.

முடிவில் ஃபாதர் எங்களை தன்னுடைய அறைக்கு கூப்பிட்டார்.

’தண்ணி குடிக்கிறீங்களா’

‘இல்ல வேணாம் ஃபாதர்’

‘சரி எதுக்கு டெய்லி ஸ்கூலுக்கு வந்து இப்படி கெஞ்ச்சிரீங்க’

‘இல்ல ஃபாதர் இது ரொம்ப நல்ல ஸ்கூலுன்னு தெரியும் அதான்’

‘அட என் நெலமைய புரிஞ்சிக்கப்பா. இங்க இனிமே அட்மிசன் போட்டா என்கிட்ட கேள்வி வரும்ப்பா.ஒண்ணு செய். இந்த வருசத்த விட்று.அடுத்த வருசம் செவந்த் ஸ்டாண்டர்ட்ல பார்க்கலாம் என்ன இப்ப போங்க’

அப்பா தொண்டையை செருமிக்கொண்டார் குரலைத் தாழ்த்தி ‘ ஃபாதர் முதல் ரெண்டு பசங்களுக்கு இங்க சீட் கிடைக்கல.இப்ப மூணாவது பையனுக்காவது இங்க சீட் கிடைச்சா நல்லது ஃபாதர்’.

‘எனக்கு புரியுது.ஆனா என்னால முடியாது.அடுத்த வருசம் வாப்பா பையன கூட்டிட்டு’

தோல்வியோடு வெளியே வந்தோம்.

அதோடு அந்த் அத்தியாயம் முடிந்தது என்று நினைத்துக்கொண்டால் முடியவில்லை.

மறுபடியும் மறுநாள் காலையிலில் அப்பா என்னை கூட்டி வந்து விட்டார்.

’ஏம்பா இப்படி கெஞ்சுறீங்க.அசிங்கமா இருக்குப்பா’

‘படிப்புக்காக யார் கால்யும் விழலாம் விஜய்’

அப்படியே ஒருவாரம் போயிற்று.

அன்று காலை ஃபாதரின் காலை உணவு சுவையில்லையோ என்னவோ சட்டென்று அப்பாவிடம் திரும்பி “என்னப்பா அதான் சீட் இல்லன்னு சொல்லிட்டேன்ல.அசிங்கமா இல்ல இப்படி டெய்லி வந்து தொந்தரவு பண்றதுக்கு” என்று சொல்லி அப்பாவின் முகம் சுருங்கியதைப் பார்த்தவுடன் ஆவேசம் வந்தது எனக்கு.

வராண்டாவில் இருந்து தாவிக்குதித்து ஒட ஆரம்பித்தேன்.

ஒட்டமென்றால் வெறியான ஒட்டம்.

அப்பா என்னை துரத்துகிறார்.ஆனாலும் என்னை பிடிக்க முடியவில்லை.

ஃபாதரை விட்டு விலகி ஃபுட்பால் கிரவுண்டில் என்னை அப்பா பிடித்து கொண்டதை ஃபாதர் பார்ப்பது எனக்கு தெரிந்தது.

அழுகை வெடித்தது.என்னை பிடித்த அப்பாவை அடித்தேன்.

என் சட்டையை கிழிக்க முயற்சித்தேன்.

என்னவெல்லாமோ பேசினேன்.

எங்கெல்லாமோ கேட்டு பழகிய கெட்டவார்த்தை அன்று வாயில் வெடித்தது.

”அந்த ஃபாதர் குன்னயா ( ஆணுறுப்பு) வெட்டுவேம்பா. தயளி புண்டாமவன் கிறிஸ்டினுக்கு மட்டும்தான் சீட் கொடுப்பானோ. இருவது நாளு வந்து கெஞ்சிட்டே இருக்கோம்.இவனெல்லாம் என்னத இயேசுவ கும்பிடுறானாம். சர்ச்சுல நடக்குற மாஸுக்கு வர  பழம் கேக்கு எல்லாம் தின்னு கொழுத்த பன்னிப்பா அவன்.பரதேசி கூதிமவன்.எனக்கு இந்த ஸ்கூல்ல சீட் வேண்டாம்பா.சத்தியமா வேண்டாம்.இனிமே இங்க வரவேண்டாம்”

நான்தான் பேசினேனா அல்லது சர்ப்பமாய் வந்து ஏவாளிடம் கனி உண்ணச் சொல்லிய சாத்தான்தான் பேசினானா என்று தெரியாது.ஆனால் தொடர்ச்சியாக குச்சியால் ஒருவனை அடித்துகொண்டிருந்தால் அவன் அப்படித்தான் பேசுவான் என்று தோண்றியது.

அப்பா என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.கொஞ்சம் அவர் கண்கள் கலங்கினாற் போல இருந்தது.

சட்டென்று என்னை நோக்கித் திரும்பியவர் “சரி வா இந்த ஸ்கூல் வேண்டாம் ”என்று இழுத்துப்போனவர் நூறு மீட்டர் தாண்டியதும்.

“உலகம் அப்படித்தான் இருக்கும். உனக்கு இது மொத தடவைன்னொ ஒடன கோவம் வருது. இன்னும் போகப் போகப்பாரு இப்படித்தான் இருக்கும். நீ கவனிச்சிப்பாரு அந்த ஃபாதர் நினைச்சிருந்தா கேட்டுக்கு வெளியே நம்ம வர முடியாம பண்ணியிருக்கலாம்.வாட்ச்மேன விட்டு நம்மள உள்ள வரமுடியாம செய்திருக்கலாம்.ஆனா அப்படி செய்யல. வராண்டா வரை நம்மள அலோ பண்ணியிருக்கார்.உனக்கு உன் சீட்டு மட்டும்தான் கவலை.அவருக்கு அது மாதிரி எவ்வளவு பிரச்சனையோ.நம்மள மாதிரி ஜாதிக்காரங்க எல்லாம் படிச்சிருக்கோம்ன்னாலே அது அவுங்களாலத்தான். அவங்க இல்லாட்டி நாம் இன்னும் கோவணம் பாய்ச்சிகிட்டு பனமரம் ஏறிகிட்டுத்தான் இருந்திருப்போம் .இன்னும் நிறைய இருக்கு “

“நீங்க என்ன சொன்னாலும்ப்பா நான் வரமாட்டேன் இனிமே இந்த ஸ்கூலுக்கு”

‘நாளைக்கு ஒருநாள் மட்டும் போவோம்.அவர் முடியாதுன்னுடாருன்னா விட்றுவோம்’

மறுநாள் காலை நாங்கள் ஃபாதர் பர்பனப்ஸுக்காக காத்திருந்தோம். வரவே இல்லை. மதிய வாக்கில்தான், ஃபாதர் தன் ரூமுக்கு காலையிலே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. கொஞ்ச நேரம் பிறகு எங்களை உள்ளே வரச்சொன்னார்.உட்காரச்சொன்னார்.

“வாப்பா. காலையிலேயே உங்கள வரச்சொல்லிருப்பேன்.எனக்கு கொஞ்ச சுகர் அதிகமாயிட்டதால அப்படியே சேர்ல படுத்து கிடந்தேன்”

“உங்களுக்கு சுகர் இருக்கா ஃபாதர்” அப்பா பணிவோடு கேட்டார்.

“இருபத்தியட்டு வயசுலே ஆரம்பிச்சிட்டுப்பா.ரொம்ப கஸ்டம் அதோட. அத விடு. பையனுக்கு ஒரு சீட் இருக்கு. அட்மிசன் வாங்கிக்க.”

பின் என்னைப்பார்த்து ‘நல்லா படிக்கனும். டிசிப்ளினா இருக்கனும்” என்று சொல்லி ஒரு சீட்டில் எழுதி என்னிடம் கொடுத்து

‘போங்க அபீஸ்ல போய் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு கிளாஸ்ல போய் பையன உட்கார வைங்க’

எழுந்தோம்.

‘இருப்பா’ என்று சொல்லி ஃபாதர் ஃபர்னபஸ் என்னை நெருங்கி தலையில் கைவைத்து சின்ன ஜெபமாய் வாயில் முணுமுணுத்து அனுப்பினார்.

வராண்டாவில் நடக்க நடக்க இனி எப்படி அப்பாவின் முகத்தை பார்க்க போகிறோம் என்கிற வெட்கம் வந்தது.

Monday, 27 May 2013

கதை போல ஒன்று - 95



அந்த பிரவுசிங் செண்டரில் ஜெராக்ஸ் கொடுத்துவிட்டு மனதிற்குள்ளாக ஒரு பொம்மையை செய்து கொண்டிருந்தேன்.

”ஒரு பிளாட் வாங்கிரனும்.எங்கயாவது வாங்கிட்டு நிம்மதியா இ.எம்.ஐ கொடுக்கிற அளவுக்கு வந்திரனும்.மீரா கல்யாணத்துக்கு நகை இருக்கே.அதோட சேத்து சம்பாதிச்சிர மாட்டோமா.கடவுள்தான் கண் வைக்கனும்.” அந்த பிரார்த்தனை பொம்மையை செய்து முடித்ததும் அதை தூக்கி ரசித்தேன்.எளிமையான பொம்மை.அழகான பொம்மை.யார் வாழ்க்கையையும் கெடுக்காத பொம்மை.எனக்கே எனக்கான பொம்மை.

ஜெராக்ஸை வாங்கி பணம் செலுத்தி திரும்பும் போது கைகளை பற்றிய மற்றொரு கைகளின் சொந்தக்காரரை நோக்கினேன்.

“சார் எனக்கு நெட்டு தெரியாது.அப்ளிக்கேசன் ஒண்ணு அர்ஜென்டா போடனும்.உதவி பண்ணுங்க”

அவனை பார்க்க பொல்லாதவன் மாதிரி தெரியவில்லை. ஆனா வயது குறைவு.இருத்திரண்டு இருக்கலாம்.கிராமத்தை கடக்காத உடையும் தலையும் அவனை நம்ப வைத்தன.

“நெட்டு தெரியாதா”

“ஆமா சார்.ஒ.என்.ஜி.சி ல ஒரு அப்ளிகேசன் ஆன்லைன்ல
போடனும்.எனக்கு இண்டர்நெட் சரியா தெரியாது.உதவி செய்ங்க”

“உன் ஐடி கார்ட காட்டு” காட்டினான்.

சரி என்று அவனை கூட்டி நெட்டில் உட்கார்ந்தேன்.

“உன் பேரு கங்காதரனா”

“ஆமா”

ஒ.என்.ஜி.சி வெப்சைட்டுக்குள் போனேன்.

வயசு. இருபது.
அப்பா பேரு.செல்வகுமார்

’ம்ம்ம்...அப்பா என்ன பண்றாரு.’

’அப்பா தவறிட்டாரு.’

’எந்த ஊரு.’

’ஆரணி பக்கத்துல தேவிகாபுரம்.’

’அப்பா இல்லாம எப்படி.’

’ஊர்ல கொஞ்சம் நிலம் உண்டு சார்.அத லீசுக்கு விட்டுருவோம்.சொந்த வீடு. குடிசைதான்.அப்படியே சமாளிச்சிருவோம்.’

ஃபார்மை நிரப்பினேன்.

’என்ன படிச்சிருக்க’

’டிப்ளமோ எலக்கிடிரிக்கல் இன்ஜினீரிங்’

’இத யாரு உனக்கு படிக்க சொல்லி சொன்னா.’

’யாருமே சொல்ல நானா படிச்சேன்.’

’ஃபீஸெல்லாம்.’

’வீட்ல நகை ஒண்ணு ரெண்டு இருந்துச்சு அதவெச்சி படிக்க வைச்சாங்க.’

ஃபார்மை நிரப்பி வந்தவன். அவனை நோக்கி திரும்பி “கங்காதரன் நல்லா பாத்துதான் இதுக்கு அப்ளை பண்றீங்களா.இதுக்கு மகாராஸ்டிராவுல உள்ளவங்க மட்டும்தான் அப்ளை பண்ண முடியும்.இதப் பாருங்க அங்க எதாவது எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிஞ்சிருக்கனுமாம்”

கங்காதரன் சோகமாகி விட்டான்.

“நான் இத ரொம்ப எதிர்பார்த்தேன் சார்”

“அட இதில்லனா வேற ஒண்ணு ஃபீல் பண்ணாத.இப்ப உனக்கு வேலை இருக்கா”

“ஏன் கேக்குறீங்க”

“சாப்பிடலாம்.எனக்கு பசிக்குது கம்பெனி கொடு”

கொஞ்சம் தயக்கத்தோடு சிரித்தான்.

“இஸ்டமிருந்தா வா.அல்லது போடே” என்றேன்.

வந்தான். ஆர்டரை கொடுத்து விட்டு.

“இப்ப என்ன வேல பாக்குற.”

“இப்ப எலக்டிரிசீயனா இருக்கேன்”

”எவ்ளோ சம்பளம்”

“ஏழாயிரம்”

“அது பத்துமா”

“பத்தாது,அது இல்லாம தனியா இன்னொருதருக்கு அஸிஸ்டண்டா போவேன்.அதுல கொஞ்சம் கிடைக்கும்”

”வீட்ல எத்தன பேரு.

அக்கா, நானு,தம்பி,தங்கச்சி”

“அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா”

“இனிமேதான் சார் பார்க்கனும்.பாத்துக்கிட்டே இருக்கோம்.அதான் கொஞ்சம் அதிகமா சம்பாதிக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்,”

“பணத்தாலத்தான் அக்கா கல்யாணம் நிக்குதா”

“அப்படி மட்டும் சொல்ல முடியாது.அக்கா கொஞ்சம் கிந்தி கிந்தி நடப்பா.கால் கொஞ்சம் வளைஞ்சிருக்கும்”

“பொம்ள பிள்ளைக்கு கஸ்டம்தான்.உனக்கு இருபதுதான ஆகுது.அக்காவுக்கும் கல்யாணத்துக்கு டைம் இருக்குல்ல.மேக்சிமம் டிரை பண்ணு”.

கங்காதரன் அசட்டு சிரிப்பு சிரித்தான். ”எனக்கும் அக்காவுக்கும் எட்டு வயசு வித்தியாசம்.அதுக்கப்புறம் அடுத்தடுத்து தம்பி தங்கச்சி.அக்காவுக்கு பொறுப்பு ஜாஸ்தி.அவதான் எல்லாத்தையும் கவனிச்சிப்பா”

“ஆமா மூத்தது பொண்ணா இருந்துட்டாலே வேலை இருக்கும்தான்.எங்க வீட்ல கூட எங்க அம்மாவுக்கு அஞ்சு தம்பி அஞ்சு தங்கச்சி.பொறுப்பு ஜாஸ்தி.இப்போ வீட்ட உங்க அக்காவும் அம்மாவும் பாத்துகிறாங்களா”

“அம்மாவுக்கு முடியாது சார்.அவங்களால பாத்துக்க முடியாது”

“ஏன் வயசானதாலையா”

“இல்ல அவுங்களுக்கு கண்ணு தெரியாது”

அமைதி.

“ம்ம்ம். என்னாச்சி கண்ணு மங்கலா தெரியுமா”

“இல்ல தங்கச்சிக்கு ரெண்டு வயசா இருக்கும் போது அப்பா குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தார்.அம்மாவ போட்டு அடிச்சார் எப்பவும் அடிக்கிறாப்ல.வலி தாங்கமுடியாம அம்மா பதிலுக்கு அடிச்சா.அப்பாவுக்கு வெறி வந்துட்டு.அம்மாவ பிடிச்சி சுவத்துல வேகமா மோதிட்டாரு.பின் தலையில்ல அதுல அடி. ரத்தமே இல்ல. ஆனா பின் பக்கம் வீங்கி போயிடுச்சி.முதல்ல தைல எண்ணய் தேச்சிட்டோம். ஆனா மறுநாள் அம்மவுக்கு வாந்தி,மயக்கம். டாக்டர்கிட்ட போனா செக்கப் பண்ணி ஸ்கேன் பண்ண சொல்லிட்டாரு”

”ஐயோ அப்புறம்”

“ஸ்கேன் பண்ணதுல ஏதோ கட்டி கட்டிடுச்சாம்.கண்ணுக்கு போற மூளை நரம்புல”

“ஆப்டிக் நெர்வஸா”

“ஆமா அதுல ஏதோ பிரச்சனையாம்.இப்போ தலையில இருக்கிற கட்டிய எடுக்காட்டி உயிர் போயிடுமாம்.அப்படி எடுத்தா அந்த நரம்பில பாதிப்பு வந்து கண்ணு தெரியாம போயிடுமாம்”

இறுக்கம் வந்தது. கங்காதரன் தொடர்ந்தான்.

“உயிரா கண்ணா அப்படின்னு ஆயீட்டது சார்.டாக்டர் உடனடியா ஆப்பிரேசன் பண்ணச்சொன்னார்.அம்மா என்னக்கொன்னுடுங்கன்னு கதறுராங்க.அவங்கள சமாதானப்படுத்தி ஆப்பிரேசன் தியேட்டருக்குள்ள அனுப்பி வெச்சோம்.வாழ்க்கையில என்னால அத மறக்கவே முடியாது.யாரோ நெஞ்ச பிடிச்சி பிசைஞ்சு பிசைஞ்சு விட்டாப்போல இருந்துச்சி”.

பலவருடம் பிறகு அதைக் கேட்ட மூன்றாம் மனிதனான எனக்கே முடியவில்லை.

பட்டுபுடவைக் கடையில் கடைக்காரன் ஒவ்வொரு புடவையாய் எடுத்து விரித்து காட்டி பிடித்ததை எடுத்துக்கொள்ளச் சொல்வதுபோல ஏன் இந்த கடவுள் வாழ்க்கையை அது மாதிரி விரித்து போட்டு “அடேய் மனுக்ஷா புடிச்சத எடுத்துக்கோ” என்ற சொல்ல மாட்டேன் என்கிறார்.

இவ்வளவு கொடூரம் ஏன் இவன் வாழ்க்கையில்.இருபது வயதில் இதையெல்லாம் சுமந்து கொண்டு எப்படி இவன் தூங்குவான்.தலை வெடிக்கும் போல் இருந்தது.

இவனுடைய பிரார்த்தனை எப்படியாக இருக்கும். அது எவ்வளவு வீரியமுள்ளதாக இருக்கும்.அவன் பிரார்த்த்னை பொம்மை பக்கத்தில் வைக்க கூட தகுதியில்லாத என்னுடைய “பிளாட் வாங்கும் பிரார்த்தனை பொம்மை” மீது ஆயாசம் வந்தது. இயலாமையின் எரிச்சல்.

“ம்ம்ம் கேக்கவே முடியல கங்கா.எப்பத்தான் சமாதானமானாங்க”

“ஒருவாரத்துல சமாதானமாயிட்டாங்க சார்.ஆனா”

“ஆனா”

“இந்த மார்கழி மாசம் வந்தது பாருங்க அந்த முதல் நாளுதான் அம்மா ஒப்பாரி மாதிரி வெச்சி வெடிச்சி வெடிச்சி அழுதாங்க.ஏன்னா அவுங்க நல்லா  பெரிய பெரிய கலர் கோலமா போடுவாங்க. அது ஒண்ணுதான் அவுங்களுக்கு வாழ்க்கையில பிடிச்சதே”

சொல்லிவிட்டு கங்காதரன் வெறும் சிரிப்பை சிரித்தான்.

அழுகையையே சிரிப்பாக்கி வெளிப்படுத்தும் கலையை கடவுள்தான் கங்காதரனுக்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.

Saturday, 25 May 2013

கதை போல ஒன்று - 94


கெமிஸ்டிரி லேபில், சார் இல்லாத போது செல்வா கேட்டான்.

விஜய் நீங்க பிளஸ்டூவா?

இந்தகேள்வி என்னை பயமுறுத்தும் அளவுக்கு வேறெதுவும் பயமுறுத்தாது.

அதை உணர பிளஸ் டூ படித்து விட்டு பாலிடெக்னிக் முதலாண்டில் இருந்து படிக்க வேண்டும்.வயதில் சிறியவர்களோடு படிப்பதில் வரும் தாழ்வு மனப்பான்மையை அனுபவித்தாலே புரியும்.

என்னை பிளஸ் டூவென்றே சொல்லிக்கொள்ள மாட்டேன்.முடியை மிக ஒட்டிவெட்டியிருப்பேன்.தாடி மழிக்கவே சோம்பி ஒத்திப்போடும் நான் தினமும் க்ஷேவ் செய்வேன்.

சின்னப்பசங்க கூட அதிக வெச்சுக்க கூடாதென்று பேச்சை குறைத்தேன்.வகுப்பில் இருக்கும் போது அமைதியிலும் அமைதி.முடிந்ததும் யாரிடமும் பேசுவதில்லை.வேக வேகமாக பஸ்ஸைப் பிடித்து வீடு போய் சேர்வேன்.

ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.அந்தப்படிப்பை படிப்பேன். அதற்கிடையில் யார் நட்பும் வேண்டாம் எனக்கு. இந்த பொடிபசங்ககிட்ட பேசுறதுக்கா இங்க சேர்ந்தோம். சே... நம்ம கூட படிச்சவன் எல்லாம் அண்ணா யுனிவர்சிட்டி,இன்ஜினியரிங் காலேஜ்,மெடிக்கல் காலேஜ்ன்னு படிக்கிறான்கள்.நான் மட்டும் ஏன் மாட்டிக்கொண்டேன்.

நல்ல மார்க் வரவில்லையென்றால் மனிதனுக்கு இவ்வளவு அவமானமா வரும்.

துக்கம்தான் வாழ்க்கையாக இருந்தது.அழுகை முட்டும்.

சில சமயம் மாலை வேளையில் மெரினா பீச்சில் இறங்கி கடலைப்பார்த்து நெடுநேரம் அமர்ந்திருப்பேன்.நோட்டை எடுத்து எதாவது எழுதுவேன்.எழுத்து பூராவும் துக்கத்தை தூக்கி நிறுத்தி இருக்கும்.

பல சமயம் அழுவேன்.கண்களில் கண்ணீர் கசியும்.துடைக்க துடைக்க கடல் ஊத்து போல திடமாய் கசியும் கண்ணீரின் ஈரமே எனக்கு ஒரு குரூர ரசனையாகிவிட்டது என்று கூட சொல்லலாம்.

எப்படி படித்து முடிக்க போகிறேன் இந்த கோர்ஸை. அதுவும் மூன்றரை ஆண்டுகள். இப்படியே இந்த கடலில் குதித்து விடலாமா? முடியாது தைரியம் கிடையாது.அமமா அழுவாள்.

”உனக்கு எப்படி நான் பிளஸ் டூன்னு தெரிஞ்சது.”

”இல்ல அன்னைக்கு பசங்க பேசிக்கிட்டாங்க.”

”நீங்கன்னு சொல்லாத நீன்னே சொல்லு.பப்ளிக்கா மரியாதையா கூப்பிடாத ஃப்ளீஸ் ஒகேவா.

”அது வரமாட்டேங்குது விஜய்.”

அவனைப்பார்த்தேன் பார்க்கும் போதெல்லாம் அவன் ஒரே சட்டையை போட்ட மாதிரிதான் இருக்கிறது.பிரிந்து பிரிந்து பிசிறு தொங்கும் அட்டை பெல்டை போட்டிருந்தான்.தலையில் சின்ன பரட்டைத்தனம் தெரிந்தது.

“எனக்கு இந்த சால்ட் டெஸ்ட் சொல்லித்தாங்க... சாரி சொல்லித்தா விஜய்”

“சுத்தமா ஒண்ணும் புரியமாட்டேங்குது.நான் படிச்சது சைதாப்பேட்டை கார்பிரேசன் ஸ்கூல்ல.இங்க இங்கிலீக்ஷ்ல கெமிஸ்டிரி எல்லாம் படிக்க சுத்தம். ரொம்ப கஸ்டபடுறேன். இந்த சால்ட் எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீங்க. எனக்கு கண்ணக்கட்டி விட்டாப்போல இருக்கு”

பார்க்க பாவமாய் இருந்தது.

என்னுடைய சால்டை எளிதாய் கண்டுபிடித்துவிட்டேன்.அவன் கையில் இருந்தது கலர்லெஸ் சால்ட். ஆளுக்கொரு சால்டை கொடுத்து கண்டுபிடிக்க சொல்லி போய்விட்டார் சார்.பயிற்சியாம்.

“இதப்பாரு செல்வா இப்ப கேல்சியம் நைடிராட் வெச்சிக்க, இதுல பேசிக் ராடிக்கிள்.அசிடிக் ராடிக்கிள்ன்னு இரண்டு இருக்கு அது தெரியுமா”

“தெரியாது”

“கேல்சியம்தான் பேசிக் ராடிக்கிள்.நைட்டிரேட்தான் அசிடிக் ரேடிக்கிள்.”

“இந்த ரெண்டையும் தனிதனியா கண்டுபிடிச்சி.அதுதான் அந்த சால்ட் அப்படிங்கிறதுக்குள்ள டெஸ்டை நீ செய்யனும்.”

”புத்தகத்தை புரட்டினேன்.இதப் பாத்தியா இதுல போட்டிருக்கிறது எல்லாத்தையும் படிக்கனும் முதல்ல”

அவன் பார்த்தான். “படிச்சிரலாம்” என்றான்.

”நாம ஈசியா கண்டுபிடிக்கிறதுக்கு வழியிருக்கு.உனக்கு குடுத்திருக்கிற சால்ட எடுத்துக்க”

அவன் டெஸ்ட் டியூபில் சால்டை எடுத்துக்கொண்டான்.

“இப்ப இதுக்குள்ள சல்ஃபூரிக் ஆசிட்ட கொஞ்சமா விடு, டைலூய்ட்தான்”

அவன் சல்ஃபூரிக் ஆசிட்டை விட்டான். ஒன்றுமே நடக்கவில்லை.

“இப்ப பாத்தியா இதுல இருந்து புசுபுசுன்னு பொகை வந்து மூக்குள்ள துளைச்சுதுன்னா அது குளோரைடு.ஆனா இதுல எதுவுமே வரல.அப்ப சல்ஃபேட் அல்லது நைட்டிரேட்டா இருக்கலாம். நமக்கு ஒரே ஒரு நைட்டிரேட்தான் இருக்கு. அதனால சல்பேட்டுக்குள்ள டெஸ்ட செய்திரலாம். இப்ப பேரியம் குளோரைட உள்ள ஊத்து.”

ஆர்வமாய் ஊத்தினான்.

“பாத்தியா கீழ வெள்ள கலர்ல பொடியா நிக்கு பாரு. உன்னோட சால்ட் வந்து இப்ப சல்ஃபேட்டு”

பரவசத்தால் என் முதுகை பிடித்து கொண்டான்.

“இரு இப்ப பேஸிக்க் ராடிக்களையும் டெஸ்ட் செய்திரலாம்.இன்னும் கொஞ்சம் சால்டைய எடுத்து அதுக்குள்ள சோடியம் ஹைடிராக்சைட விடு”

“அது நீலக்கலரைக்காட்டிற்று”

“உனக்கு லக்கு செல்வா.இப்படி நீலக்கலர் காட்டினா அது மெக்னீசியம் சால்டு. நீ கண்டு பிடிச்ச சால்டு பேரு மெக்னீசியம் சல்பேட்”

இப்படி சொன்னது செல்வா என்ற செல்வகுமார் துள்ளிக்குதித்தான்.கைகளை வைத்து வெற்றிக்குறி காண்பித்தான். “சூப்பர் விஜய் சூப்பர் விஜய். எனக்கு ஈசிய புரிய வெச்சுட்ட,இனிமே நான் புக்க படிச்சா புரிஞ்சிரும். இவ்வளவு நாள் இத படிக்க முடியாம எவ்வளவு டென்சனா இருக்கும் தெரியுமா? என்னால உன்ன மறக்கவே முடியாது”

எப்போதும் என் பையில் இருக்கும் கிழிந்து நைந்த “மரப்பசு” புத்தகத்தை ஒருநாள் காணவில்லை.மறுநாள் செல்வா அதை தைத்து ஒட்டி பைண்டு செய்து கொடுத்தான்.அவன் கைகளை பிடிக்கும் போது வழிந்தோடும் நட்பில் கரைய ஆரம்பித்தேன்.திரும்ப திரும்ப வற்புறுத்தியதால் அவன் வீட்டிற்கு சென்றேன்.

சைதாப்பேட்டை பாலத்தில் அடியில் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் குடிசைகளில் ஒரு குடிசைதான் அவனிருக்கும் வீடு.வீட்டில் ஸ்டீல் சேரில் அமர்ந்து வீட்டைப்பார்க்கும் போது செல்வாவின் வறுமை படீரென்று அடித்தது. சமைலறை ஹால் பெட்ரூம் எல்லாம் ஒரே அறை.ஒருவர் இருமினால் எல்லோரும் துன்புறும் இடவசதியின்மை.கொசு.நிரந்தரமாய் சுருண்டு சுருண்டு வீசும் நாற்றம்.

செல்வாவின் அமமா மிரிண்டா வாங்கிக்கொடுத்தார்.அதிகம் பேசவில்லை.

போகும் போது ஒன்றே ஒன்று சொன்னார் “ எங்களுக்கும் தெக்குபக்கம்தான் தம்பி. செல்வா நல்லா படிப்பாம்.உன்னப்பத்தி அடிக்கடி பேசுவான். நீ இல்லன்னா அவன் இந்தப்படிப்ப விட்டுட்டு ஐ.டி.ஐ சேர்ந்திருப்பானாம். கொஞ்சம் சந்தேகம் இருந்த சிரமம் பாக்காம சொல்லிகுடு”

அதைக்கேட்டு வெளியே நடந்து வரும்போது இனிமேல் மெரினா பீச்சில் உட்கார்ந்து கடலைப்பார்த்து விக்கி விக்கி அழமாட்டேன் என்று தீர்மானமாய் தோண்றியது.

சீனிக்கட்டி கரைந்தே விட்டது....

Wednesday, 22 May 2013

கதை போல ஒன்று - 93



”தயவு செய்து என்ன விட்டுட்டு நீங்க மட்டும் போங்கடா.எனக்கு நரசிம்மர பாக்க வேணாம். நான் கிறிஸ்டினா மாறப்போறேன்” என்று சொல்லும் போது, அந்த ஆயிரத்தி ஐநூறு படிக்கட்டில், எழுநூறாவது படிக்கட்டில் படுத்திருந்தேன்.

ராஜனும் கார்த்திக்கும் என்னை முறைத்தார்கள்.

”மச்சி நான் என் ஆளு பிறந்தநாளுக்கு சாமிக்கும்பிட வந்திருக்கேண்டா.கும்பிட்டு பிரசாதம் கொடுத்து ஸீனப்போடனும் நீ வா “என்றான் ராஜன்.

கார்த்திக் என்னைக்காட்டி
”இவன் என்னடா சுத்த ஸ்டாமினாவே இல்ல.நாளைக்கு கல்யாணம் முடிஞ்சி எப்படி வேலை செய்வ.மவனே விடாம வொர்க் அவுட் பண்ண வேண்டியிருக்கும்.இப்படி கிடந்தன்னா உம்பொண்டாட்டி பக்கத்து வீட்டுக்காரனோட எஸ்கேப்பாயிருவா”

“டேய் இது கோயில்டா”

“ஏன் எனக்கு தெரியாதா கோயில்ன்னு.சரி இவன எப்படி மிச்ச படி ஏற வைக்கிறது.எப்ப லட்சுமிநரசிம்மர கும்பிட வைக்கிறது.கழுத்துறுக்காண்டா”

சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை பார்க்க நானும்தான் ஆசையாகதான் வந்தேன்.

ஆனால் இந்த படிக்கட்டுக்களைதான் ஏறி மாளவில்லை.இருநூறாவது படிக்கட்டில் கொஞ்சமாய் தெரிந்த வலி, ஏற ஏற கால் கடுப்பாகி, மூச்சிரைத்து, அறுநூறாவது படியில் கால்கள் தள்ளாடி எழுநூறாவது படியில் நெட்டாங்கிடையாக படுத்து விட்டேன்.அதற்கு மேல் ஒற்றை அடி என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. கார்த்திக்கும் ராஜனும் கவலையோடு என்னை பார்த்து இருந்தார்கள்.

கார்த்திக் என் பின்மண்டையை அவன் நெஞ்சில் தூக்கி வைத்து பச்சபுள்ளைக்கு தண்ணீர் கொடுப்பது போல கொடுத்தான்.

“என்ன மச்சி தலைக்கு க்ஷாம்புவே போட மாட்டியா.இவ்வளவு எண்ணய்யா இருக்கு.கொய்யால என் சட்ட பூரா எண்ணய பாரு”

அந்த மயக்கத்திலும் நான் சிரித்தேன்.ராஜன் பக்கத்தில் வந்து தன் பையிலுள்ள  குளுக்கோஸ் பாக்கெட்டை உடைத்து  அப்படியே என் வாயில் தட்டினான்.

அதை அவுக் அவுக்கென்று தின்னும் போதே கேட்டேன்.

“மச்சி ஸ்பூன் கொண்டு வரல”

“ஸ்பூன் உங்க ஆயா கொண்டு வருவாடா. கடுப்பேத்தாத எந்திரிச்சி வாயேண்டா”

“முடியலடா.வேணுமின்னா வராம இருக்கிறேன்.நடக்க முடியல. இரு பத்து நிமிசம் நில்லு. போகலாம்.

அப்போது எங்களை கடந்து போன வயதானவரிடம் நிறைய தடி மரப் பிரம்புகள் இருந்தன.

“தம்பி பாதி தூரம் வந்துட்டீங்க.உங்க கையில கம்பே இல்ல”

“கம்பு எதுக்குண்ணே” என்றேன்.

”இன்னும் மேல ஏற ஏற நிறை குரங்குளா இருக்கும். இத வைச்சிருந்தாதான் பயந்து பக்கத்துல வராது”

“சரி இது எவ்ளோ” என்றேன்.

மூன்று கம்பு ”பதினைச்சி ரூவாய்”.

வாங்கினோம்.அவர்களோடு ஒவ்வொரு படிக்கட்டாய் தத்தி தத்தி ஏறினேன்.

ராஜன் கையில் அந்த பாலித்தீன் கவரை இறுக்க பிடித்திருந்தான்.அதனுள் தேங்காய் பழம் பூ என்று அர்ச்சனை செய்யும் பொருட்கள் இருந்தன.ஒரு விலை உயர்ந்த ஜவ்வாது பாட்டிலும் இருந்தது. அதையும் சாமி முன் வைத்து பூஜை செய்து, அவன் காதலிக்கு கொடுப்பானாம்.காதலி அதை பூசும்போது வரும் நறுமணம் அவனையே ஞாபகபடுத்துமாம்.

அவன் காதல் ஒருதலை காதல் மாதிரி ஆகிவிடாமல் அவள் பக்கமும் இருந்து சம்மந்தம் வேண்டியும்தான் அர்ச்சனைக்கான பொருட்களை பத்திரமாக எடுத்து போகிறான்.

என்னை கார்த்திக் தாங்கி கூட்டிப்போக, ராஜன் பின்னாடி வந்து கொண்டிருந்தான்.

“மாட்டிக்கிட்டேண்டா.இப்ப என்னடா பண்றது “என்ற குரல் கேட்டு நானும் கார்த்திக்கும் திரும்பினோம்.

ஒரு குரங்கு, ராஜன் கையில் வைத்திருந்த தேங்காயை, பாலத்தீன் கவரில் தொங்கிக்கொண்டிருந்த தேங்காயை இறுக்க பற்றிக்கொண்டடிருந்தது.

“அந்த பார்சல அதுகிட்ட கொடுத்திரு.ரிஸ்க எடுக்காத.கடிச்சி வெச்சிரப்போகுதுடா.குரங்கு கடிக்கு மருந்தே கிடையாதுன்னு கம்பு விக்கறவர் சொன்னாரு கேட்டல்ல.” என்றேன்.

ராஜனுக்கு கவரை விட மனதில்லை.ரொம்ப செண்டிமெண்டாக உணர்ந்திருப்பான் போல. கார்த்திக் பதட்டமானான்.

“நாய அத கொடுத்துட்டு வாடா.அவல்லாம் ஒரு ஆளுன்னு செண்டிமெண்ட் போடுற.உங்கள மாதிரி ஆளுங்கதாண்டா மொக்க ஃபிகரெல்லாம் உசுப்பேத்தி விடுறது”

“காதல பத்தி பேசாத. என் மனசுக்குள்ள இருக்குடா” என்று ராஜன் குரங்கிடம் ஆவேசமாய் பையை கொடுத்து விட்டு வந்தான்.

“புடுங்குன காதல்.அதுக்காக குரங்கு கிட்ட கடி வாங்குவானாம்” கார்த்திக் சவுண்டாய் பேச, ராஜன் அமைதியானான்.

கார்த்திக் சென்று ராஜன் தோளில் கையை போட்டுக்கொண்டான்.” இல்லடா நான் படிச்சிருக்கேன். ஒரு அம்மா அப்பா சின்ன பாப்பா மூணுபேரும் சின்ன துடுப்பு போடுற படகுல சவாரி போனாங்களாம். அந்த சின்ன குழந்தயில்ல அது தண்ணிக்குள்ள கைய விட்டு ராவிகிட்டு வரும்போது, முதலை ஒன்று அந்த  சின்னபிள்ள கையை பிடிச்சிட்டாம்.இப்ப அந்த பிள்ளைய தண்ணீல முதலைக்கு போடலைன்னா எல்லோரையும் முதலை கீழ் இழுத்திரும். அந்த அப்பாவும் அம்மாவும் குழந்தையையே தூக்கி ஆத்துல போட்டுட்டு வந்தாங்களாம்.அப்படி போகுது காலம். இவர் என்னடான்னா அர்ச்சனை பூ பழத்த குரங்கு தூக்கிட்டு போயிட்டாம்.”

“இந்த கதைய நிறைய பேர் சொல்றாங்க.உண்மையா பொய்யான்னு தெரிய மாட்டேங்குது. இந்த லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள துணி வெளுக்கிறவன் தெரியாம நுழையும் போது அவன எல்லா லேடிஸும் ராப் பண்ணிருவாங்கன்னு பொதுவா ஒரு கத சொல்லுவாங்கல்ல அது மாதிரிதான கார்த்திக் சொல்ற “ என்றேன்.

”இந்த கதை சொல்லும் உணர்வு நமக்கு புரியுதா அவ்வளவுதான் நமக்கு வேணும்.அந்த கதை உண்மையா பொய்யான்னு ஏன் ஆராய்ச்சி பண்ணனும்.

நான் டாப்பிக்க மாத்தினேன்.” தேங்காய கூட தூக்கிட்டு போயிடுச்சியே” ராஜன் .

“இந்த குரங்க சும்மா விடமாட்டேன்டா” என்றான் ராஜன்.கம்பை கையில் வாங்கி விசுக் விசுகென்று வீசினான்.அவனை பார்க்கும் குரங்குகளை எல்லாம் துரத்தி துரத்தியடித்தான்.அவன் காதலுக்கு செய்ய முடிந்த காணிக்கையாகவே அதை நினைத்தான்.

அந்த குரங்குகள் தேங்காய் பழத்தை எடுத்தது கூட போகட்டும்.ஆனால் பாரிமுனையில் தெரிந்தவரிடம் சொல்லி வைத்து வாங்கின விலை உயர்ந்த ஜவ்வாது பாட்டிலையுமா பாலத்தீன் கவரோடு இந்த குரங்குகள் எடுத்துப்போகும். அந்த ஜவ்வாதை குரங்குகளுக்கு உபயோகப்படுத்த தெரியுமா? அப்படி உபயோகப்ப்டுத்தினாலும் நாற்றம் பிடித்த குரங்குளின் உடலில் அது வாசனையை கொடுக்குமா?

காமன்சென்ஸே இல்லாத குரங்குகளை இப்படி மலைமுழுவதும் நிரப்பி வைத்திருக்கிறாறே லட்சுமி நரசிம்மர்.அவர் வேண்டுமானால் உங்களை மன்னிக்கலாம்.ஆனால் குரங்குகளே இந்த ராஜன் உங்களை மன்னிக்க மாட்டான் என்று  சொல்லிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்து ராஜன் பெரிய குரங்கை அடிக்க வீசும்போதுதான் அது நடந்தது.அந்த குரங்கு சட்டென்று சினந்து பார்த்து ராஜனை தாக்க ஒடிவந்தது.அது ஒடிவரும் வேகத்தைப்பார்ட்த்து மூவரும் ஒடினோம் தரையை நோக்கி.

குரங்கு குதித்து குதித்து பக்கத்தில் ஒடிவருகிறது, கார்த்திக் என்னை இழுத்து குரங்கு முன் விட்டு ஒடுகிறான்,ராஜன் என்னையும் கார்த்திக் இரண்டு பேரையும் இழுத்து விட்டு ஒடுகிறான்.நான் கைகால்கள் ஆட அவர்கள் இரண்டு பேரையும் குரங்கு முன் இழுத்துவிட்டு ஒடுகிறேன்.

இழுப்பென்றால் சாதரண இழுப்பெல்ல. பலம் கொண்ட மட்டும் ஒருவரை ஒருவர் குரங்கின் முன் தள்ளிவிடுகிறோம்.

ராஜனை இழுத்து விட்டதில் அவன் சட்டை பித்தான்கள்  தெறித்து ஒடியது.கார்த்திக் ராஜனை இழுத்துவிட்டதில் ராஜனின் கால்களில் சிராய்ப்பு.

உயிர் காக்கும் போராட்டத்தில் வரும் வெறியை இட்டுக்கட்டி கொண்டு வரவே முடியாது. அது அப்போது மட்டுமே வரும்.

லட்சுமி நரசிம்மர் ஆசீர்வாததித்தினால் இன்னும் நிறைய பேர் வந்து அந்த வெறிபிடித்த குரங்கை விரட்டி விட்டனர்.

குரங்கு போய்விட்டது என்று தெரிந்ததும். நிம்மதியாக தண்ணீரை குடித்தோம்.

நான் ஆரம்பித்தேன்.

“என்னடா சினன் குரங்கு தொரத்துனதுக்கே இப்படி ஒடுறோம்.ஒடுறது கூட முக்கியமில்ல.இப்படி மூணு பேரும் ஒருத்தன ஒருத்தன் இழுத்து விட்டுட்டு ஒடுறோம்.அவ்வளவுதானா ம்ச்சி பிரண்க்ஷிப்.பிரச்சனைன்னு வந்தா இப்படித்தான் சுயநலமா இருப்போம் போல.என்னா பதட்டம் பாத்தியா. நான் நான் நான் , நம்ம உடம்பு.நம்ம கைகால் எல்லாம் நல்லாயிருக்கனும்ங்கிற ஆவேசத்துல அடுத்தவன எப்படி தள்ளி விடுறோம் பாத்தியா. குரங்குக்கு பதிலா புலி துரத்திச்சுன்னா என்ன பண்ணியிருப்போம்டா “ என்றேன்.

”நானே உங்க ரெண்டு பேரையும் தலையில அடிச்சி புலிக்கு போட்டுட்டு,அது உங்கள சாப்பிட்டுடிருக்கும் போது ஒடிவந்திருப்பேன்” என்றான் கார்த்திக்.

அதை அவன் சிரித்து சொல்லவில்லை.புளியங்காய் புளிக்கும் என்று இயல்பை இயல்பாக சொல்வது போல சொன்னான்.

”அவ்வளவுதானாடா நட்பு”  என்றான் ராஜன்.

“அவ்வளவுதான் மச்சி நட்பு” அதுக்கு மேல ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. என்று சொல்லி ராஜனின் தோளில் கைபோட இருவரும் படிகளில் ஏறினார்கள்.

குரங்கு துரத்தினதில் கீழே ஒடிவந்த நூறு படிகளை மறுபடியும் ஏறவேண்டுமே என்ற கவலையில் நான் கால்களை எடுத்து வைத்தேன்.

Saturday, 4 May 2013

கதை போல ஒன்று - 92




விநோத மிருகம் போல்தான் இருந்தது திடுமென பார்க்க.

இன்னும் கொஞ்சம் கண்களை குவித்தாலே மட்டும் அது நாயாகத் தெரிகிறது.

அசைக்க முடியாத உடலை கொண்டு தொடர்ந்து நகர முயற்சிப்பதும், அது முடியாத பட்சத்தில் கழுத்தை மட்டும் மேலே தூக்கி தூக்கி ஒலம் போடுவதும்,வாயில் ஒழுகும் கோளையுடனும் ஒலம் போடுவதைப் பார்க்க அவ்வளவு ரம்மியமானதாய் இல்லை.

கட்டாந்தரை சூரியனை பிரதிபலித்து நெருப்பாகிக்கிடக்க,புவியீர்ப்பினால் ”பாதி உடல் செயலற்ற” நாய் அதில் கிடந்து உருண்டுழல்வது பரிதாபமே.

நாயின் கழுத்தில் கிடக்கும் பட்டை அதை ஏதோ வீட்டுநாய் என்று சொல்லிக்கொண்டிருந்தது.

கிட்டப்போய் பார்த்தேன்.உடல் முழுவதும் புண்கள் கண்களுக்கு தெரிந்தும், வாடை மூக்கைத் துளைத்தும் நாயின் சேதியை சொல்லின.

நண்பர்களிடம் விசாரித்ததில் தெரியவில்லை என்கிறார்கள்.பக்கத்தில் இருக்கும் பழக்கடையிலும் அதே பதில்தான்.

நாயின் தன்மையிலிருந்து விலகி புழுவின் தன்மை கொண்டதாய் அந்த வெயிலில் அது துடித்தது.

சிராஜுதினிடம் கேட்டேன்.

“மச்சி என்ன பண்ணலாம்டா.ரொம்ப பாவமா இருக்கு.சனியன் செத்தும் போக மாட்டேங்குது.பாவமா இருக்கு.அப்படியே க்ஷூவ வெச்சி ஒரு நிமிசம் ஏறி நின்னுருவோமா.செத்துரும்.நிம்மதி”

சிராஜுதின் சீரியஸாக சொன்னான் ”மச்சி தண்ணி கொடுப்போம்”பழக்கடையில் நீர் வாங்கிவந்து உடைந்த பிளாஸ்டிக் தட்டு ஒன்றை கண்டு பிடித்து நாய்க்கு அதில் நீர்விட்டுக்  கொடுத்தான்.கொஞ்சம் நக்கியது.

பழக்கடையின் காலி பிளாஸ்டிக் கூடை இரண்டை கேட்டு வாங்கி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொஞ்சம் நிழல் விழுமாறு செய்தான்.

”சரி இப்ப என்ன பண்றதுடா”

“புளூகிராஸுக்கு போன் பண்ணு” என்றான் சிராஜுதின்.

“எனக்கு நம்பர் தெரியாது”

“ஜஸ்ட் டயலுக்கு போட்டு கேளுடா” நாயின் மீது கண்களை அகற்றாமலே சொன்னான்.

ஜஸ்ட் டயல் போட்டு புளூகிராஸ் நம்பர் வாங்கி அழைத்தேன்.

”எந்த இடத்துல சார் நாய் கிடக்குது”

“மேடம் நுங்கம்பாக்கம் சர்ச் கிட்டக்க,அஞ்சப்பர் பக்கத்துல பழக்கடை இருக்கும்ல அதுமுன்னாடி”

“நீங்க எங்க இருக்கீங்க சார்”

“நானும் ஃபிரண்டும் நாய் பகக்த்திலே நிக்குறோம்.உடனே வாங்க”

“நாய் உயிரோட இருக்கா”

“இருக்கு மேடம்.சீக்கிரம் வாங்க.வெயில்ல கிடந்து துடிக்குது.உடம்புல பாதி வேலை செய்ய மாட்டேங்குது”

“கண்டிப்பா வரோம்”

காத்திருந்தோம்.கொஞ்சம் நிழலும் தண்ணீரும் கிடைத்ததும் நாய் ஆசுவாசித்து படுத்து கிடந்தது.பற்களை நறநறவென்று கடித்து கொண்டிருந்தது, பார்க்க கொஞ்சம் பயத்தையே கொடுத்தது பரிதாபத்தின் தொடர்ச்சியாக.

அரை மணிநேரம் காத்திருந்தோம்.புளூகிராஸ் வரவில்லை.மறுபடி போன் செய்தேன்.

“வரும் சார்.உங்க நம்பருக்கு கால் வரும் “ என்ற பதில் வந்தது.

பழக்கடைக்காரிடம் சொல்லி வந்தோம்.பழக்கடைக்காரருக்கு சலிப்பு.

“ஏம்ப்பா புளூகிராஸ் வந்தா உங்கள கூப்பிடுவாங்கல்ல.என்ன எதும் கேட்பாங்களா.சவம் தூக்கிட்டு போயிட்டா நல்லது.கடைக்க முன்னாடி செத்து கித்து போயிட்டா அப்புற படுத்திறதுக்கு  கஸ்டாமாயிருக்கும்.”

”ண்ணா நாய் பொழச்சிரும்ண்ணா.வாய வெச்சிட்டு சும்மா இருங்க.ஆபீஸ்ல வேல இருக்கு.நாங்க போறோம்.புளுகிராஸ் வரவரைக்கும் பாத்துகிடுங்க.வந்தா கண்டிபா நாங்க வருவோம்.”
சொல்லி லிப்டை பிடித்து மேலே வந்தோம்.

அன்று புது புராஜக்டின் கிக் ஆஃப் மீட்டிங்.

முதலில் வேலையின் முழுத்தன்மையை சொன்னார்கள்.அப்புறம் மெக்கானிக்கல் என்ன செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கோழை ஒழுகிய வெயிலில் துடிக்கும் நாய் ஞாபகம் வந்தது.

மெக்கானிக்கல் முடிந்து எலக்டிரிக்கல் வரும் போது சிராஜுதின் கவனமாக குறிப்பு எடுத்து கொண்டிருக்கும் போது ,எனக்கு போன் வந்தது. மீட்டிங் ஹாலை விட்டு ஒடிச்சென்று எடுத்தேன்.

”புளுகிராஸ்ல இருந்து வரோம்.வண்டி ஸ்டெர்லிங் ரோட்ல நிக்குது.எப்படி வரது”

“நீங்க பாலம் சுத்தி இங்க சர்ச் உள்ள ரோடு போகுமே அதுல இருக்கிற அஞ்சப்பர் பக்கதுல வந்துருங்கண்ணே”

“வரேன் நீங்க நில்லுங்க.நீங்க கண்டிப்பா நாய அடையாள்ம் சொல்லனும்”

“சரி” சொல்லிவிட்டு மீட்டிங்க் ஹாலுக்கு நுழைந்து மன்னிப்பு கேட்டு சிராஜுதினிடம் சொன்னேன்.

“மச்சி நான் மீட்டிங்ல இருக்கேன்.நீ மட்டும் போ.போய் அட்டென்ட் பண்ணு.அவனுக்கு அம்பது ரூபா கொடு என்ன.அப்பதான் நாய நல்லா கவனிப்பான்”

மண்டையை ஆட்டி லிஃப்டை பிடித்து கீழே வந்தேன்.

நாய் என்னை கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்தது.இப்போது அது பல்லையெல்லாம் காட்டவில்லை.சோர்வின் உச்சியிருந்தது.

இயலாமையை ஒத்துக்கொண்டு உடலை அசைக்காமல்  படுத்திருந்தது.

புளூகிராஸ் வரவில்லை.

மறுபடியும் போன்.

”ஆமா சர்ச பக்கதுல வர கிருக்ஷ்ணா ஸ்வீட்ஸ் தொட்டு வருமே அதே ரோடுதான்.வாங்க.அங்கதான் நிக்கேன்.வாங்க.”

பெரிய கூண்டு வண்டி வந்து. வேகமாக கையை நீட்டி வண்டியைத் தடுத்தேன்.வண்டியிலிருந்து இருபது வயதுள்ள பையன் குதித்தான்.
டிரைவர் வண்டியை விட்டு இறங்கவில்லை.

பையன் முகத்தை கனிவாக எல்லாம் வைத்திருக்க விரும்பாததால் அவனை நோக்கி வீசிபட்ட புன்னகை தரை விழுந்து கிடந்தது.

நாயின் முகத்தை தூக்கிப்பார்த்தான்.செல்லமாக ரெண்டு அடி அடித்தான்.நாய் அயர்ச்சியாய் கத்தியது.

“உயிர் இருக்கு “ என்று டிரைவரை நோக்கி கத்தினான்.டிரைவர் தூக்கி உள்ளே போடு என்று ஆக்சன் காட்டினார்.

நாயை பிடித்து தூக்கினான்.நல்ல முரட்டு நாய் அது.அதை அணைத்தபடிதான் தூக்க முடியும்.ஆனால் நாயைப்புரட்டினால், ஒரே இடத்தில் படுத்து கிடந்ததினால் ஒருபக்க வயிற்றில் மஞ்சள் நிறப்புண்ணாகி சீழும் கட்டி உடைந்து வழிந்து கொண்டிருந்தது.

 அதை தூக்கினால் அவன் சட்டை முழுவதும் ஆகிவிடும்.

இரண்டு முறை தூக்க முயற்சிபதும் பிறகு கீழே கிடத்தி விடுவதுமாய் திணறினான்.

கூடிய கூட்டத்தில் யாரும் வரவில்லை.அந்த நாற்றம் சுவாசிப்பதற்கே முடியவில்லை.எப்படி தொட்டுத்தூக்குவார்கள்.

பையன் என்னைப்பார்க்காமலே நான்தான் அவனுக்கு உதவமுடியும் என்று தோண்றிற்று.

வேறு வழியில்லை.நாயின் நிலமை மிக மோசமாக இருக்கிறது.இப்போது எடுத்துப்போனால்தான் எதாவது மருத்துவம் பார்ப்பார்கள்.ஏனோ தெரியவில்லை அந்த நாயை காப்பாற்ற வேண்டும் என்று துடித்தது.சட்டையை மடக்கி விட்டுக்கொண்டேன்.

“பின்னங்கால நான் புடிச்சிக்கிறேன்.முன்னாடி நீ புடிச்சிக்கோ.திடீருன்னு கொளைச்சாலும் நீ சமாளிப்பல்ல.”

“சரி பாஸ் தூக்குங்க”

நாயின் மிக அருகே போனேன்.பின்னங்காலை தொட்டுத்தூக்கினேன்.வாடை நாசியின் உள்ளே போய் கசப்பு சுவையை கொடுத்தது.

நாய் ஹூய் ஹூய் என்று ஒலமிட்டது.இரண்டு காலையும் பிடித்து தூக்கினால்.நாயின் உடலில் வடியும் அழுகிய நீரெல்லாம் என் உள்ளங்கையில் பரவி முழங்கைக்கு வரும் போல தெரிகிறது.அருவருப்பால் கைநடுங்கிறது.

வேகமாக  வண்டியை நோக்கி வருகிறேன்.

முதல் கதவு திறந்திருக்கிறது,ஆனால் வண்டியில் இருக்கும் பெரிய கூண்டுகதவில் ஒரு இரும்பு வளைவு கம்பியை கொண்டு தாளிட்டு வைத்திருக்கிறார்கள்.அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் முழிக்க, புளுகிராஸ் பையன் கத்தினான்.

“சார் உங்கள யாரு கதவுகிட்ட போகச்சொன்னது.நான் சொல்றதுக்கு முன்னாடியே போறீங்க.நீங்க இப்படி வாங்க நான் திறக்கிறேன்.”

அழுகிகொண்டிருக்கும் நாயின் நகம் கைகளில் உரச எனக்கு பதட்டத்தில் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு காலைபிடித்து கொண்டிருந்த கையை விட்டு கூண்டு கொண்டியை திறக்கிறேன். வலி தாங்க முடியாமல் நாய் கத்துகிறது,பையன் கத்துகிறான்.கையெல்லாம் வேலை செய்ய வில்லை.சட்டென்று கூண்டு உள்ளே ஏறமுயன்றேன்.

உள்ளே மேலும் இரண்டு நாய்கள் அரைகுறை மயக்கத்தில் கிடந்தன.

“சார் கூண்டுக்குள்ள போகாதீங்க.நீங்க போகவே கூடாது.இங்க இருந்தே மெல்லமா வைங்க.ஆனா கொஞ்சம் தள்ளிவைங்க”
அவன் லாவகாமாக கொஞ்சம் தள்ளி தாலாட்டுவதுபோல ஆட்டினான்.நானும் நாயை அப்படித்தான் ஆட்டினேன்.ஆனால் நாயின் உடலில் இருந்து தொடர்ச்சியாக சொட்டிய துளிகள் பாதத்தில் பட மூன்றாவது வீச்சை பெரிதாக வீசி நாயை உள்ளே போடுவதற்கு பதிலாக வீசியெறிந்தேன் என்னையறியாமல்.

நாய் உள்ளே விழுந்து” கெள்ள்ள்ள்ள்ள்” என்று ஒரு மரண ஒலத்தோடு விழுந்தது,

பையன் என்னை முறைத்து விட்டு கூண்டை சாத்தி வண்டி கதவை சாத்த டிரைவர் வண்டியை எடுத்துப்போனார்.அவனுக்கு கொடுக்க வைத்திருந்த ஐம்பது ரூபாயைக்கூட கொடுக்க முடியவில்லை.

பழக்கடைக்காருக்கு என் மேல் பரிதாபம்.அவரே கைகழுவ தண்ணீர் ஊற்றினார்.கழுவி விட்டு ஆபீஸ் ரெஸ்ட் ரூமில் சோப் போட்டு கழுவ கழுவ அந்த நாய் தூக்கிப்போடப்படும் போது போட்ட சத்ததை யோசித்து கொண்டே இருக்கிறேன்.

நிச்சயமாக அது நாயின் மரண ஒலம் போலத்தான் இருந்தது.

அருவருப்பினால் அவசரப்பட்டு நாயை வீசிவிட்ட குற்ற உணர்வு பொங்கி பொங்கி வந்தது.

கைகழுவி விட்டு வெளியே வரவும். சிராஜுதின் மீட்டிங் முடிந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மச்சி நாயை நல்ல படியா ஒப்படைச்சிட்டியா.பொழச்சிருமா மச்சி” என்றான்.

“ஆ பொழச்சிரும் போலத்தான் இருந்துச்சி.புளுகிராஸ்ல அத பொழைக்கவெக்க எண்பது சதவிகிதம் சான்ஸ் இருக்கு மாதிரிதான் சொன்னாங்க”

“சூப்பர் மச்சி.தேங்ஸ்டா.கலக்கிட்ட விஜய்”

எனக்கே தெரியாமல் சிராஜுதின் எடுத்த முயற்சியால்,அந்த மாதம் ’கேரர் அண்டு க்ஷேரர்’ அவார்டு எனக்காக கம்பெனியினால் கொடுக்கபட்டிருந்ததை நோட்டீஸ் போர்டு இப்படி சொல்லியது. “கம்பெனி வாசலில் அடிபட்டு கிடந்த நாய்க்கு கருணையோடு முதலுதவி செய்து,புளூகிராஸிடம் ஒப்படைத்து குணமடைய வைத்து நம்மையெல்லாம் பெருமையடைய வைத்த விஜயபாஸ்க்கருக்கு இந்த மாதம் பெஸ்ட் ’கேரர் அண்டு க்ஷேரர்” எம்பிளாயீ அவார்டை கொடுக்கிறோம்.

அதைப்படிக்கும் போது யாருக்கும் கேட்காத நாயின் மரண ஒலம் என் காதிற்கு தெளிவாக கேட்டது.