Saturday, 15 June 2013

கதை போல ஒன்று - 98


வாழ்ந்து கெட்டவர்களை பேசச்செய்யும்படியான கேள்விகளை தொடுப்பதின் குரூரமான நுணுக்கத்தை அறிந்திருந்தேன்.

அப்படி என்னிடம் மாட்டியவர் ரெட்டியார் .ரெட்டியார் மாமா என்றழைப்பேன்.

செட்டிக்குளம் ஜங்சனில் மிகப்பெரிய ஹோட்டலை வைத்திருந்தவர்.

அக்கம்பக்கத்தில் அவரை ’மொல்லாளி’ என்ற வார்த்தையால் மட்டுமே அழைப்பார்கள்.தென்தமிழகத்தில் இருக்கும் தெலுகு பேசும் கிராமத்தில் இருந்து வந்து நாகர்கோவிலில் முன்னேறியவர்.

சிறுவனாய் இருக்கையில் ரெட்டியார் மாமா கடைக்கு போனால் “டேய்” என்றொரு கம்பீரக்குரலைக் கொடுப்பார்.அந்த ’டேய்’ யின் அதிகாரம் சுருட்டிவிடும் மனதை.ஒரு தலைவனின் “டேய்” அது.

அப்பாவுடன் மரியாதையாய் பேசுவார்.அப்பா ‘மொதலாளி’ என்று பேசிக்கொண்டிருக்கும் போது, அப்பாவை மிக உரிமையாக நீ வா போ என்று பேசுவார்.

சில சமயம் அப்பாவின் முதுகில் தட்டுவார்.அப்பாவின் முதுகில் யாராவது தட்டி அப்போதுதான் நான் பார்க்கிறேன்.

வாழ்ந்தவர்கள் கெடுவதும் உலகில் ஒரு தேற்றமாகத்தானே நிகழ்கிறது.

ரெட்டியாரின் ஹோட்டல் தனக்குதான் சொந்தம் என்று அவருடைய பங்காளி கோர்ட்டில் கேஸ் போட்டார்.

ரெட்டியாரின் கம்பீரம் தன்மானம் இன்னும் அவருக்கு அவரே வளர்த்துவிட்டதும், சமூகம் கொடுத்த பிம்பங்கள் எல்லாம் சேர்ந்து பங்காளியுடனான சமரசத்தை எதிர்த்தது.

ரெட்டியார் நிறைய செலவழித்து வாதாடினார்.வீட்டை விற்றார்.ஹோட்டல் பக்கத்தில் அதில் கால்வாசி இருக்கும் சிறிய ஹோட்டலை வைத்தார். ஏனோ அது சரியாக போகவில்லை.

அப்போதுதான் அவர் அப்பாவுடன் நிறைய பேச ஆரம்பித்தார்.இரவு பத்து மணிக்கு கடை அடைக்கும்போது வந்துவிடுவார்.பேச்சு புலம்பல் புலம்பல். வீட்டில் போய் தூங்க காத்திருக்கும்போது அவருடன் அப்பா பேசிக்கொண்டிருப்பது ஆத்திரத்தை கொடுக்கும்.

சின்ன ஹோட்டலும் நஸ்டமாகியதும்,பஜ்ஜிக்கடைப் போட்டார்.

‘மொல்லாளி’ என்று அவரிடம் பேசிவயர்கள் எல்லா “யோவ் ரெட்டியாரே” என்றார்கள்.ஆனால் அப்பா ‘மொல்லாளி’ என்ற பதத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை.

ரெட்டியார் மாமா எழுந்து நின்றால் அப்பா எழுந்தே நிற்பார்.அப்படி பஜ்ஜிக்கடையில் ரெட்டியார் மாமா தனியாக இருக்கும் போதுதான் நானும் அடிக்கடிப் போவேன்.அவரிடம் சூட்சமமான கேள்விகளை சொல்லி புலம்ப வைப்பேன்.

“பழைய ஹோட்டல்ல உங்களுக்கு கீழ வேல பாத்தவங்கள்ளெல்லாம் இப்ப என்ன பண்றாங்க மாமா” என்று கேட்டுவிட்டு அப்பாவியாய் அவர் முகத்தைப் பார்ப்பேன்.

“விஜி. அது பெரிய கதைடா” என்று ஆரம்பித்து எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.மேலோட்டமாக அதைப்பார்த்து வருத்தப்படுவது போல காண்பித்தாலும்,ஏனோ அவர் கஸ்டத்தை கேட்பது எனக்கு பிடித்திருந்தது.

சில சமயம் அவருடைய பாலியல் உணர்வு சார்ந்த கேள்விகளை கேட்பேன்.அதற்கு மட்டும் பதில் சொல்லமாட்டார்.எனக்கு அது சவாலாய் இருந்தது.

பஜ்ஜிக்கடையும் சரியாய் போகததால் ரெட்டியார் கடையை மூடிவிட்டு வீட்டில் படுத்து தூங்க ஆரம்பித்தார்.அவர் மனைவி அவரை திட்டுவதாகவும் சில சமயம் அடிப்பாதாகவும் ஜங்சனில் பேசிக்கொண்டார்கள்.

ஒரு மாதம் கழித்து அப்பாவிடம் வந்து “நடராஜா நான் உன் கடையிலேயே நா சம்பளத்துக்கு இருந்துக்கிறேன்ப்பா.வேணான்னு சொல்லிராத” என்று கேட்டாராம்.

அப்பாவால் ஒன்றுமே சொல்ல முடியாமல் சரி என்று சொன்னாராம்.

திடீரென்று ரெட்டியார் மாமா இப்படி இறங்கிவந்தது வருத்தமாய் இருந்தது.கடையில் பொட்டலம் போட ஆரம்பித்தார்.

தேவையில்லாமல் சிரிக்க ஆரம்பித்தார்.

நான் பழைய மாதிரி அவரிடம் பேசுவதை குறைத்து கொண்டிர்ருந்தேன்.அனால் அவர் என்னிடம் பேசுவார். அவர் கண்களை தவிர்ப்பேன்.ஆனாலும் அவர் பேசிக்கொண்டிருப்பார்.

எங்களுக்கு டீ காபி கூட அவரே போய் வாங்கி வர ஆரம்பித்தார்.அப்பா மொல்லாளி என்றே கூப்பிட்டார்.

சில சமயம் அப்பா கடையில் இல்லாத சமயத்தில் மிக அதிகமாய் சிரித்து பேச ஆரம்பிப்பார்.அதற்கு அர்த்தம் இன்னொரு டீ வேண்டும் என்பதுதான்.

ரேசன் கடையில் அன்று சாமான் வாங்க அதிகப் பணம் தேவைப்பட்டால் அனறு முழுவதும் அப்பா சொன்னதற்கெல்லாம் சிரித்து இரவில் பணம் வாங்கிப்போவார்.

கொஞ்சம் கொஞ்சமாக ரெட்டியாரின் பழைய பெருமைகள் மறைந்து விட்டன. அதுகளை பற்றி யாருமே பேசுவதில்லை. அவர் கூட பேசுவதில்லை. அப்பா ‘மொல்லாளி’ என்று கூப்பிடும் பதம் மட்டுமே, பழைய மீட்க கடினமான பெருமைக்கு சாட்சியாய் இருந்தது.

அன்று அப்பாவிடம் கடைக்கு வரும் ”தோசை அம்மச்சி” கோபமாக பேசிக்கொண்டிருந்த போது நான் கடை உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

’தோசை அம்மச்சி’ புன்னைநகரில் சின்ன தோசைக்கடை வைத்து நடத்தும் கேரள பின் புலத்தை சேர்ந்தவர்.வயது நாற்பது இருக்கும்.

“அண்ணாச்சி பாத்தியளா இந்த ரெட்டியார் பண்ணியத”

“என்ன மொல்லாளி ஏசுனாரா உங்கள” இது அப்பா.

“அட ஏசுனா என்ன அண்ணாச்சி .எத்தன நாள் எனக்கு அவர் கடையில தோச சும்மா சாப்பிட கொடுத்திருப்பார்.ஏசல அண்ணாச்சி”

”ம்ம்ம்”

”முந்தா நேத்து என் பிளவுஸ் கொஞ்சம் கிழிஞ்சிருந்துச்சி. கஸ்டமண்ணாச்சி. அதச் சொன்னார் கிழிஞ்சிருக்குன்னு. நான் சேலையால மறைச்சேன். படக்குன்னு ரெண்டுபேரும் கன்னியாகுமரி போகலாம்மான்னு கேட்டார் அண்ணாச்சி”

அப்பா கொஞ்சம் ஆடிப்போனார்.

“உண்மையா சொல்றிய”

“மானத்த கேட்டாருன்னு வெப்ராளத்துல சொல்றேன்.உண்மையான்னு கேக்கிறிய பாத்தியளா.பாண்டிக்காரர்ல்லா நீங்க, சுயநலம் இருக்கத்தானே செய்யும்”

“அம்மச்சி நீங்க சொல்றது மட்டும் பொய்ன்னு தெரிஞ்சுது உங்கள கடப்பக்கம் காணவிடமாட்டேன்”

“நடுக்காட்டு இயக்கியம்மன் சத்தியமண்ணாச்சி’ போய்விட்டார்.

அரைமணி நேரம் பிறகு ரெட்டியார் மாமா சைக்கிளில் கடைக்கு வந்தார்.அப்பா கடைக்குள் வந்ததும் கேட்டார் “மொல்லாளி தோசை அம்மச்சிக்கிட்ட எதாவது தப்பா பேசினியளா”

மவுனம்.

“சொல்லுங்க மொல்லாளி.ஆமான்னா அமா.இல்லன்னா இல்ல”

“ஆமா நடராஜா தெரி... “

“நீருல்லாம ஒரு ஆளாவே.அதுவே மூணு பொம்ளபிள்ளையில வெச்சிகிட்டு தோசச்சுட்டு விக்கிது.அதுகிட்ட போய் படுக்க வான்னு கூப்பிட்டீராக்கும்”

ரெட்டியார் கடையை விட்டு இறங்கி சைக்கிளைப்பிடித்து கொண்டிருந்தார்.

அப்பா முதன் முதலாக அவரை ‘மொல்லாளி’ பதத்தை விட்டு மாற்றிப்பேசுவதை அவரால் தாங்க முடியவில்ல.

சைக்கிளில் சீட்டை பிடித்து கொண்டு கண்களை மூடுகிறார்.கண்ணீர் வந்தாற்போலத்தான் இருந்தது.

மெல்ல அப்பாகிட்ட வந்தார்.
“நடராஜா கடைய விட்டு அனுப்பிராத நடராஜ.செத்துருவேன்.”

“என்ன வேய் கண்ணக்கசக்குதீரு.இனிமே இப்படி நடந்தா பாத்துகிடும்.போரும் கடைக்குள்ள.வேலசெய்யும்”

ரெட்டியார் மாமா கடைக்குள் போய்விட்டார்.

இரண்டுமாதம் பிறகு கடையை விட்டு நின்று விட்டார்.அப்பா சிரித்தபடியே அனுப்பி வைத்தார்.

நாகர்கோவிலை விட்டு அஞ்சுகிராமத்தில் ஹோட்டல் போட்டிருப்பதாக சொன்னார்கள்.கடைக்கு வருவார்.அப்பாவை அஞ்சுகிராமத்துக்கு அழைத்து கொண்டே இருபபார்.

பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னால் நானும் அப்பாவும் அவருடைய புதிய ஹோட்டலுக்கு போயிருந்தோம்.

பெரியதாய் இல்லாவிட்டாலும் வியாபாரம் இருந்தது. ரெட்டியார் மாமா கலகலப்பாய் இருந்தார். எனக்கு குலாப் ஜாமூன் தந்தார்.பின் என்னையும் அப்பாவை பஸ் ஏத்திவிட வந்தார்.என் தோளில் கைப்போட்டுகொண்டபடியே.

“நடராஜா உன் கடைய விட்டு எப்போ நின்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா”

”இல்லையே மொதலாளி”

“அந்த தோசை அம்மச்சி வந்து சொல்லிட்டு போனப்புறம் , நீ என்ன கண்டமானிக்கு திட்ன. எனக்கு அவகிட்ட சபலம்.அதான் அப்படி பேசிட்டேன்.ஆனா அன்னையில இருந்து என்ன நீ மொல்லாளின்னு கூப்பிடுறதே இல்ல. ஞாபகம் இருக்கா”

“இல்லையே மொல்லாளி”

“ஆமா நடராஜா உனக்கு தெரியாமலே நீ என்ன மரியாதையா கூப்பிடல. அதுக்கப்புறம் தோச அம்மச்சிகிட்ட நான் மன்னிப்பு கேட்டதும், அது நம்ம கடைக்கு வந்த பிறகு கூட நீ என்ன ரெட்டியார்ன்னு கூப்பிட்ட.என்னால அத தாங்க முடியல நடராஜா”

“அதனாலத்தான் கடைய விட்டு போனீங்களாக்ளோ”

“இல்ல நடராஜா ஒருநாள் நைட்டு உன்ன அறியாமலே நீ என்ன மொல்லாளின்னு கூப்பிட்ட.அன்னைக்கு ராத்திரி முழூசும் சந்தோசத்துல தூங்கவே முடியல. பரவாயில்லையே இவன் நம்மள மன்னிச்சிட்டானேன்னு”

“ம்ம்ம்”

”அடுத்த நாள் காலையில தோணுச்சி செத்தா சாவோம், இவன் கொடுத்த மரியாதையோட அப்படி பிரிஞ்சிருவோம்.அப்பதான் நல்லதுன்னு உன் கிட்ட இருந்து வந்துதான், அவ நகையை வெச்சி இந்த ஹோட்டல ஆரம்பிச்சேன்.நீ அன்னைக்கு என்ன அப்படி கூப்பிடலன்ன செத்துருப்பேன் நடராஜா”

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.பஸ் வந்ததும் ஏறினோம்.

மொல்லாளி எங்களைப்பார்த்து மகிழ்ச்சியாய் கையசைத்தார்.

1 comment:

  1. அழகிய கதை…காம்ப்ரமைஸ் பண்ணாமல் யாருக்கும் வரும் உடல் பசி மயக்கம் ரெட்டியாருக்கும் வந்ததை அவர் மூலமாகவே சொன்ன விதமும் 'நம்மை மற்றவர்கள் விளிப்பது நம் சமூக அந்தஸ்துக்கு ஏற்றபடியே' என்ற நிதர்சனத்தை அழகாக கையாண்டதும் அட்டகாசம்…!

    ReplyDelete