Saturday, 22 June 2013

மலக்குழியைப் பற்றிய ஒரு கன்னடச் சிறுகதை

கன்னடத்தில் மொஹள்ளி கணேக்ஷ் எழுதி தமிழில் பாவண்ணால் மொழிபெயர்க்கப் பட்ட ’பம்பரம்’ என்ற சிறுகதையை சமீபத்தில் படித்தேன்.

கதை சேரியில் வாழும் மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றி விரிகிறது. 

சிக்கண்ணன் தன் வீட்டின் பின்னால் ஒரு மலக்குழியை வெட்டுகிறார்.மலக்குழி என்றால் என்ன தெரிந்து கொள்ளவேண்டும். 

ஒருகாலத்தில் வடிகால் வசதி இல்லாத சமயம், செப்டிக் டேங் முறை இருந்தது.அந்த செப்டிக் டேங்கில் மலம் நிரம்பும் போது அதை வந்து அள்ளி எடுத்து துப்பரவு செய்வார்கள்.செப்டிக் டேங்க் கட்ட வசதியில்லாதவர்கள் ஒரு குழியை வெட்டி அதன் மேல் தகரமோ ஒலையோ வைத்து மூடிவிடுவார்கள்.

சிக்கண்ணன் காரியவாதி.தன்னுடைய தம்பியின் கல்யாணத்திற்காக இது மாதிரியான மலக்குழியை வெட்டுகிறார்.கல்யாணத்திற்கு வரும் போகும் விருந்தினர்களின் கழிவால் மலக்குழி நிரம்புகிறது.

ஆனால் அதை சுத்தம் செய்யாமல் அலட்சியமாக இருக்கிறார்.மலக்குழியின் ஆழம் ஐந்தடி இருக்கும்.ஊரார் எல்லோரும் சிக்கண்ணனை அதை சுத்தம் செய்ய சொன்னாலும் இவர் கண்டுகொள்வதில்லை.

இதற்கு முன்னாடி அந்த குழியில் ஒரு எருமைமாடு விழுந்து செத்திருக்கிறது. எருமை மாட்டின் சொந்தக்காரர் திப்பே கவுடா வந்து சண்டை போட்டபோது கூட “உன் எருமைய கவனமா நீதான் வெச்சிக்கனும்” என்று சொல்லி சண்டைபோட, அவன் எருமையை விட்டு விட்டுப் போக எருமையை கழுவி அதன் கறியை சிக்கண்ணன் எடுத்துக்கொள்கிறார் தன் சொந்தங்களோடு. 

சிக்கண்ணனின் அப்பாவுக்கு கூட தன் குடும்பம் அந்தஸ்த்தில் வளர்ந்தும் கூட பையன் இப்படி  செய்வது கவலையளிக்கிறது.தன் எதிர்ப்பை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இது மாதிரியான சமயத்தில் சிக்கண்ணனின் மகன் சிறுவன் செலுவனின் பம்பரம் அந்த மலக்குழியில் விழுந்து விடுகிறது. செலுவனுக்கு பம்பரம் விடுவது எவ்வளவு ப்ரியமோ  சிக்கண்ணனுக்கு பம்பரம் மேல் வெறுப்பு. 

செலுவன் பம்பரத்தை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துகொண்டிருக்கும் போது, ஒரு நாய்கள் துரத்துலுக்கு பயந்த பன்றி ஒன்று மலக்குழியில் விழுந்து விடுகிறது. 

செலுவன் பன்றி விழுந்ததை போய் தாத்தா, அம்மாவிடம் சொல்கிறான். பன்றியை மீட்க இறங்கும் போது தன் பம்பரத்தையும் எடுத்து தருவார்கள் என்று அவன் கணக்கிடுகிறான்.ஆனால் தாத்தா அம்மா எல்லோரும் அருவருத்து சிக்கண்ணனையும் மலக்குழியையும் திட்டுகிறார்கள். 

சிக்கண்ணன் அதாரி என்பவரின் உதவியை நாடுகிறான். பன்றியை அப்படியே விட்டு விட்டு சாகும் தருவாயில் அதை மீட்டு கொன்று தின்ன சிக்கண்ணனுன் அதாரியும் திட்டம்போடுகிறார்கள்.

மாலை வேளையில் இருவரும் வயிறு முட்டச் சாராயம் குடித்து விட்டு சிக்கண்ணன் மலக்குழியில் இறங்குகிறார்.இறங்கும் போது வழுக்கி உள்ளே விழுந்து உடல் முழுவதும் மலமாகி கிடக்கிறார். 

இதைப்பார்த்த அதாரி மற்றும் எல்லோரும் சிரிக்கிறார்கள். சிக்கண்ணனுக்கு கோபம் வந்து அதாரியையும் மலக்குழியில் இழுத்துவிடுகிறார்.அதாரி கோபமாகி வெளியே வந்து சிக்கண்ணனை ‘தெவ்டியா பயலே’ என்று திட்டி உறவை முறித்து ஊராரிடம் சிக்கண்ணன் மலக்குழியில் பன்றியை எடுத்து வெந்நீரால் கழுவி சாப்பிட முயற்சிக்கிறான் என்று சொல்லிவிடுகிறார். 

முதலில் எருமை மாட்டை மலக்குழியில் தொலைத்த திப்பே கவுடா ஊர் பஞ்சாயத்தை கூட்டுகிறார். ஆனால் சிக்கண்ணன் ஊர் பஞ்சாயத்தை மதிக்காமல் போக, திப்பே கவுடா சிக்கண்ணனை பற்றி போலீஸ் கம்பிளையிண்ட் கொடுக்கிறார். 

போலீஸுக்கு அது விநோதமான கேஸாக இருக்கிறது. 

சிக்கண்ணன் அதாரி இருவரையும் விசாரிக்க கூப்பிட்டு இன்ஸ்பெக்டர் அய்யா விழுந்து விழுந்து சிரிக்கிறார். தன்னுடைய போலீஸ் ஸ்டேசன் செப்டிக் டேங் கூட நிரம்பி நாறுகிறதென்றும் சிக்கண்ணன் அதாரி இருவரும் அதை சுத்தம் செய்யுமாறும் அதிகாரம் செய்கிறார். அந்த தொழிலை விட்டு பலநாளாகிறது என்று இருவரும் சொன்னாலும் கூட “ஏன் அந்த தொழில செய்ஞ்சு வந்த ஜாதிதான நீங்க. ஒழுங்க செய்ங்க. இல்லன்னா ஜெயில்ல தள்ளிருவேன் “ என்று மிரட்டலுக்கு பயந்து இருவரும் போலீஸ் ஸ்டேசனின் மலக்குழியிலிருந்து மலங்களை கூடைகளை வைத்து அன்று முழுவது அள்ளி வீடு வருகின்றனர். 

சிக்கண்ணனுக்கு கோபம். குடித்து விட்டு வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார்.

செலுவன் பயத்தில் சுவற்றோடு சுவராக நிற்கிறான். அவனுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிகிறது. சிக்கண்ணன் ஒரு பானையை உடைக்கும் போது எப்போதோ செலுவனின் அம்மா மறைத்து வைத்திருந்த பம்பரம் தெரிகிறது. 

கதையின் ஆரம்பத்தில் இருந்து என்ன விசயம் நடந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய பம்பரத்தைப் பற்றிக் கவலைப்படும் செலுவனுக்கு அந்த பம்பரத்தைப் பார்த்த பிறகு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை. பம்பரத்தை எடுத்து சட்டென்று தூர வீசியெறிகிறான் செலுவன்.

கண்ணீரோடு தன் அமமாவின் கைகளைப் பிடித்து “என்ன உன் வயித்துக்குள்ளவே மறுபடியும் வெச்சிக்கம்மா” என்று அழுகிறான்.

இந்த கதையில் ஆசிரியர் எந்த இடத்திலும் தத்துவத்தையோ தன்னுடைய பார்வையையோ சொல்லவில்லை.கதை மட்டும் சொல்லிப் போய்விடுகிறார்.

பார்வையை வாசகரிடம் விட்டு விடுகிறார். எந்த இடத்திலும் மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஆசிரியர் உருக உருக நெகிழ்ச்சியை இட்டுக்கட்டவில்லை. ஆனால் கதையை வாசித்து முடிக்கும் போது நமக்கு அதன் தாக்கம் வருகிறது.

ஒரு ஹோட்டல் வைக்கும் அளவுக்கு முன்னேறின சிக்கண்ணன் ஏன் மலக்குழியை முடாமல் வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கிறான்.அதில் விழும் எருமைபன்றிகள் எல்லாவற்றையும் எடுத்துகொள்வதற்காகவா?

அதற்காக அப்படி ஒரு நாற்றத்தையா தாங்கிக்கொள்வான்.?

ஏன் ஊரார் சிக்கண்ணனின் மலக்குழியை மூடச்சொன்னார்கள்.நாற்றம் மட்டும்தான் காரணமா? அல்லது சிக்கண்ணன் மேல் எதாவது பொறமையா?

பம்பரத்திற்காக ஆசைப்பட்ட செலுவன் ஏன் திடீரென்று பம்பரத்தை வெறுக்கிறான்? தூக்கி எறிகிறான்?

விசாரணைக்காக கூட்டி வந்து தன் போலீஸ் ஸ்டேசன் பீயை அள்ள வைக்கும் இன்ஸ்பெக்டரின் சமய சாதூர்யம் பற்றின கேள்விகள்.

ஜெயிலில் போடாமல் இன்ஸ்பெக்டர் விட்டும் கூட சிக்கண்ணன் ஏன் எல்லோர் மீதும் கோபப்படுகிறான்.?

நாம் கதை படித்து முடித்த பிறகு,இது மாதிரி பல கேள்விகளுக்கு  பொறுமையாக மாடு அசைபோடுவதைப்போல அசைபோட்டு யோசிக்கும் போது கிடைக்கும் பல்தரப்பிலான பதில்கள்,இந்தச் சிறுகதையை இலக்கியமாகிவிடுகிறது.

அது மனதை தொட்ட எழுத்துக்களும் ஆகிவிடுகிறது.  

1 comment:

  1. வித்தியாசமான கதை; படிக்க வேண்டுமென்ற உந்துதலைத் தவிர்க்க முடியவில்லை; லிங்க் இருக்கா விஜய்?

    ReplyDelete