Sunday, 30 June 2013

வெள்ளை நாரை - அமெரிக்க சிறுகதை...

ஸாரா ஆர்னே ஜீவெட்( 1840 - 1909) என்பவர் எழுதிய ’வெள்ளை நாரை ‘ என்ற பழைய அமெரிக்க சிறுகதையை உள்வாங்கி ரொம்ப சின்னதாக எழுதியிருக்கிறேன்.

எனக்கு பிடித்த கதை இது. நான் படித்தது தமிழ் மொழிபெயர்ப்புதான்.

வெள்ளை நாரை... 

அந்தக் காட்டில் சில்வியாவுக்கு தெரியாத இடமே கிடையாது.

பதின் வயது சிறுமிக்குள்ள துடுக்குத்தனத்தை காட்ட அந்த கிழப்பசுவை கண்டுபிடிக்கும் விளையாட்டுதான் அவளுக்கான வாய்ப்பு. 

அந்தபபசு எங்கயாவது புதரில் மறைந்திருக்கும்.

சில்வியா அதைத்தேடி தேடி குரல் கொடுப்பாள். சில சமயம் பசு இருக்கும் இடம் தெரிந்தாலும் கூட தெரியாதது மாதிரியே நடப்பாள். அது மாதிரி சமயத்தில் பசு சலித்து அதுவே வெளியே வந்து விடும். 

பசுவோடு வீட்டிற்கு திரும்பினால் பாட்டி கோபமாக, சில்வியா,பசு இருவரையுமே திட்டுவாள். 

சில்வியாவுக்கு அப்பா அம்மா கிடையாது. அவர்களை இழந்துவிட்டு பாட்டியுடன் வசிக்கிறாள். பாட்டி மற்றும் நியூஇங்கிலாந்திலுள்ள அந்த காடுதான் சில்வியாவின் உலகம்.

அன்றொருநாள் சில்வியா, மாலை அந்த நீரோட்டத்தில் கால்களை நனைத்து விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு வெள்ளை நாரையைப் பார்த்தாள்.

நீண்ட அலகோடு நாரை நடக்கும் நளினம் அவள் உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்தியது. திடீரென்று அந்த வெள்ளை நாரை படபடவென்று இறக்கைகளை அடித்து பறந்து சென்றது. 

அது போய் ஐந்து நிமிடத்தில் சீட்டியடிக்கும் ஒசைக் கேட்டு திரும்பினாள். அங்கே நின்று கொண்டிருந்தது அழகான இளைஞன். 

கையில் துப்பாக்கியும், தலையில் தொப்பியும் அணிந்திருந்தான்.பணக்காரத்தனம் அவன் சகலங்களிலும் வழிந்து கொண்டிருந்தது. 

“என்னால் குளிரை தாங்கமுடியவில்லை பெண்ணே. உன் வீட்டிற்கு கூட்டிப்போ” என்று கெஞ்சினவனைப் பார்த்து பாவப்பட்டு வீட்டிற்கு கூட்டி வந்தாள். 

வழக்கமாய் சில்வியாவும் பசுவையுமே மாலை வீடுதிரும்புவதை பார்த்து பழகிய பாட்டிக்கு, அவர்களுடன் வரும் வாலிபனைப் பார்த்து ஆச்சர்யம். பாட்டி பேசுவதற்கு முன் வாலிபன் பேசினான். 

”எனக்கு பால் மட்டுமாது கொடுங்கள்.தங்க கொஞ்சம் இடமும் வேண்டும்.நிற்க முடியவில்லை மயக்கமாக வருகிறது” என்றான்.

பாட்டி அவனுக்கு இனிப்பு கலந்த பாலையும், ரொட்டிகளையும் கொடுத்தார். சூடான கதகதப்பு அடுப்பின் முன் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 

அவன் பணக்காரன். அவனுடைய பொழுது போக்கு பறவைகளை வேட்டையாடி அவற்றை பாடம் செய்து சேகரித்து வைப்பது. பல அரிய வகை பறவைகளை அது போல சேகரித்து வைத்திருப்பதாக சொன்னான். 

ஒரே ஒரு வெள்ளை நாரையை அவன் அந்தக் காட்டில் பார்த்ததாகவும், அது கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் சொன்னான். 

சில்வியாவுக்கு அவன் சொன்ன வெள்ளை நாரையை முந்தின நாள் மாலையில் பார்த்த ஞாபகம் இருந்தது. இருந்தும் அவன் கேட்ட போது தான் அது மாதிரியான வெள்ளை நாரையை இதுவரைப் பார்த்ததே இல்லை என்று பொய் சொல்லிவிடுகிறாள்.

ஆனால் அந்த இளைஞனின் குறுகிய கால லட்சியமாக இருப்பது அந்த வெள்ளை நாரையை பிடிப்பதுதான் என்பதை தெரிந்து வைத்திருக்கிறாள். அதை அடிக்கடி சில்வியாவிடமும் பாட்டியிடமும் சொல்லிவருகிறான். 

அவன் மிக நல்லவனாகவும் இருக்கிறான். அழகானவனாகவும் இருக்கிறான்.

அந்த வெள்ளை நாரை கிடைக்க உதவி செய்பவர்களுக்கு பணம் தருவதாக சொல்லுகிறான். 

அந்த இளைஞனிடம் ஏற்பட்ட கவர்ச்சி, காதல், பணம் மேலுள்ள ஆசை என்று கலவையான உணர்வுகளால் ஊந்தப்பட்ட சில்வியா வெள்ளை நாரயை கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். 

காட்டின் மிக உயரமான பைன் மரத்தில் ஏறினால் காட்டையே பார்க்க முடியும். அப்போது நாரை இருப்பதையும் பார்த்து விடலாம் என்று நினைத்து பைன் மரத்தில் ஏற முடிவு செய்கிறாள். 

பைன் மரத்தில் நேரடியாக ஏறமுடியாது. அதனால் பைன் மரத்தின் பக்கத்தில் வளர்ந்திருந்த ஒக் மரத்தில் ஏறி பின் பைன் மரத்திற்கு தாவுகிறாள். 

பைன் மரம் வழுக்க வழுக்க தன் உயிரையும் பொருட்படுத்தாது உச்சியை அடைகிறாள். அந்த சிறுமியின் தைரியம் கண்டு பைன் மரமே ஆடாது அசையாது அவளுக்கு உதவி செய்த காட்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. 

பைன் மரத்தின் உச்சியை அடைந்த சில்வியா முதன் முதலில் மேலிருந்து கீழாக பருந்து பறப்பதை பார்க்கிறாள். காட்டை ரசிக்கிறாள்.

முடிவில் நாரை இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுகிறாள். அதை இளைஞனிடம் சொல்லிவிடலாம் என்று மரத்தை விட்டு கீழே இறங்குகிறாள்.

இறங்க இறங்க காட்டைப் பார்க்கிறாள். 

காட்டிலுள்ள ஜீவராசிகள் ஒவ்வொன்றாய் பார்க்கிறாள். 
மனதை ஏதோ செய்கிறது. 

கீழே இறங்கும் போது அவளுக்கு இளைஞன் மேலுள்ள ஈர்ப்பு போய்விட்டிருந்தது. அந்த வெள்ளை நாரை அவள் மனதை ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

வீட்டிற்கு வருகிறாள். அவன் அவளைப் பார்க்கிறான். “என்ன எதாவது தெரிந்ததா? “ என்கிறான்.

“இல்லை எனக்கொன்றும் தெரியாது “ என்று சில்வியா சொல்லிவிடுகிறாள். 

அவள் மனது மெலிதாய் பூவாக காற்றில் பறக்கிறது.

இதோ காட்டின் ஜீவராசிகளே! 

உங்கள் சில்வியா உங்களை நோக்கி வருகிறாள். அவளிடம் உங்கள் ரகசியங்களை சொல்லுங்கள். 

அவளுக்கு உணவு கொடுங்கள். அவள் தாகத்துக்கு தேவையான நீரையும் நீங்களே கொடுத்து விடுங்கள். காட்டின் ஜீவன்களே ! அவள் உங்களுக்கானவள்.”

2 comments:

  1. இதே சாயலில் ரஷ்யச் சிறுகதை ஒன்று சிறுவயதில் படித்த ஞாபகம்... காடுகளும் அவற்றின் நேர்மையும் நம் உறவுகள்,உணர்வுகள், நட்புகள் அனைத்தையும் மறக்கடித்து மிகப் பரவசமான இறை உணர்வை அளிக்க வல்லவை…!

    ReplyDelete
  2. The climax in the story is quite common one and later become a famous themes in movies.May be story is the pioneer thought.

    ReplyDelete