Tuesday 26 June 2012

கருப்பட்டி காப்பி

கருப்பட்டி காப்பி குடித்திருக்கிறீர்களா ?
அடுப்புல தண்ணி வச்சு, அது கொஞ்சம் சூடானதும் , கருப்பட்டிய உடச்சு தண்ணிக்குள்ள போடனும்.

கருப்பட்டி கொதிக்கும் கேட்டியா!

அப்போ நரசூஸ் காப்பித்தூள ரெண்டு மூணு ஸ்பூன் உள்ள போட்டா கொதிச்சு பொங்கி மேல வரும் பாத்துக்க. 

அப்போம் கொஞ்ச தண்ணி ஊத்தி.(ரொம்ப கொஞ்சம்) அடுப்ப அணைச்சுரனும்.

பால தேவைக்கு , நிறம் மாத்துரத்துக்கு மட்டுமே ஊத்தனும். 

நிறய ஊத்தினா டேஸ்ட் போயிரும்.பால் ஊத்தாத காப்பி பேரு கடுங்காப்பி.

சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டுல கடுங்காப்பியும், அவிச்ச சிறுபயிரோ இல்ல பனகிழங்கோ நீ சாப்பிட்டன்னு வெச்சுக்க!அப்படியே பிளாட் ஆயிருவ பாத்துக்க. அப்படி ஒரு ருசிடே !

ஒ.கே .

பிறக்கும் போதே உயர்தர நெல் வகை நடுவே பிறந்து, நயம் பருப்பு வகைகளை சாப்பிட்டு, காவேரி தண்ணீரை குடித்து,கர்நாடக இசை கேட்டு , மிஞ்சிய நேரத்தில் ஊரில் உள்ள எல்லா கோவிலையும் தரிசனம் செய்யும் உயரிய பண்பாடு உள்ள ,ஸ்டிராங் டிகிரி காப்பி மட்டுமே குடிக்கும் கும்பகோணத்து தோழி ஒருமுறை என்னிடம் சொன்னார் .

“என்னை, தண்டிக்க வேண்டுமானால், ஒரு மோசமான காப்பியை எனக்கு கொடுத்தால் போதும் என்றார்”

எனக்கு கருப்பட்டி காப்பி ஞாபகம் வந்தது.

அன்றிரவு தோழி தன் குடும்பத்துடன் சாத்தான்குளம் வருவது மாதிரியும், வேறு வழியில்லாமல் கருப்பட்டி காப்பியை கொடுப்பது மாதிரியும் கொடுங்கனவு கண்டேன் :)

No comments:

Post a Comment