Thursday 21 June 2012

கதை போல ஒன்று - 13

அம்மாவின் சித்தப்பா பையன்.கன்னத்தில் குழி விழும் சிரிப்பாய், என் தலையை செல்லமாக தட்டினார். பார்க்கும் போதே குட்டி மாமாவுடன் நெருக்கம் வந்தது.

மூன்றாம் வகுப்பு படிக்கையில் , சென்னை சென்ற போது, குட்டி மாமாவை முதன் முதலில் பார்க்கிறேன்.

’மிண்ட்’ பக்கத்தில்தான் குட்டிமாமா வீடு. 

என்னை சைக்கிளில் வைத்து சுற்றி கொண்டே இருப்பார். அவர் நண்பர்களிடத்து அறிமுகம் செய்யும் போது அதில் பெருமை இருக்கும்.

மலையாளம் கலந்த தமிழை பழகியிருக்கும் எனக்கு,குட்டிமாமா பேசும் சென்னைத்தமிழ் வித்தியாசமாய் படும்.

எங்களிடையே ஒரு விளையாட்டு நடக்கும், இருவருக்கும் பிடித்த விளையாட்டு.

சைக்கிளில என்னை பின்னாலோ முன்னாலோ ஏற்றிகொண்டு, “விஜய். ஸ்பீடு சொல்லுடாஆ “ என்பார். முதலில் சைக்கிள் என்பேன். மெதுவாக செல்லும்.

அப்புறம் பைக் என்பேன். இப்போது சைக்கிளின் வேகம் அதிகரித்திருக்கும்.

கார்,பஸ்,டிரைன் எல்லாம் சொல்லி ஒருநாள் ஏரொப்பிளைன் என்று சொல்லி தொலைத்துவிட்டேன். ஆவேசம் வந்தவராய் மிதிக்க ஆரம்பித்தார். சைக்கிளுக்கும் தரைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அலற ஆரம்பித்தேன்.

இப்போது “ராக்கட்” என்று அவரே சொல்லி ”நின்று மிதித்து” , மிதித்த முடுக்கத்தை மேலும் முடுக்கி ஆவேசமானாது சைக்கிள்.

மாமாவின் கால்களை பார்க்கிறேன். அது ஒரு உடல் உறுப்பாக தோண்றவில்லை. வேறு ஏதோ அற்புத பொருளாய் தோண்றிற்று.”எப்படி மாமா இவ்ளோ ஸ்பீடு” என்றால். மாமாவுக்கு குதிரை சாப்பிடுற “கொள்ளு” தான் ஆகாரம் தெரியுமில்ல என்பார்.

லீவு முடிந்து நாகர்கோவில் வந்து மூன்றாம் மாதம், குட்டி மாமாவுக்கு “மூளைக்காய்ச்சல்” என்று செய்தி வந்தது.

எப்போது வேண்டுமானாலும் உயிர் போகலாம் என்று ரீதியில் பிழைத்தார் குட்டிமாமா.

காய்ச்சலின் பாதிப்பில் கால் நடக்க முடியாது என்ற செய்தியும் உலுக்கிற்று. அவர் சைக்கிள் ஓட்டுவதை நினைத்து பார்த்தால் ஒரு வித பயம் வந்தது.அழுகை வந்தது.அம்மா தவறாமல் கந்த சஸ்டி கவசம் சொன்னார்கள்.

குட்டி மாமாவின் 'உலகம்' ஒரு கட்டிலும் ,டீவியும் நிறைய தன்னிரக்கமாயும் சுருங்கிற்று. நான்கு வருடம் கழித்து “குட்டி மாமவை பார்க்கும் போது அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை. வெறித்து பார்க்க மட்டுமே முடிந்தது.

அவரை பற்றிய சலிப்பு குடும்பத்தில் பரவி இருந்தது.” ஒருத்தன் வருச கணக்கா, ஒரே இடத்துல இருந்துட்டு மோண்டுட்டும் பேண்டுட்டும் கிடந்த்தா,என்னதான் பண்னுவாங்க அவங்களும்” என்பது போன்ற வசனங்கள் வர ஆரம்பித்து விட்டன.

அந்த வசனங்களை பார்த்தால் திடீரென்று முளைத்த காளானாய் தெரியவில்லை, மெள்ள முளைத்து நிதானமாய் வளர்ந்த தேக்கு மரத்தை போல் இருந்தது.

குட்டி மாமாவுக்கும் ஏன் மூளைக்காய்ச்சல் வரவேண்டும், ஏன் முதுகு தண்டு பாதிக்கபடவேண்டும், ஏன் கால்கள் நடக்கமுடியாமல் வாய் கோணி போக வேண்டும் என்று திருச்செஞ்தூர் முருகனிடம் பல நாள் கேட்டிருக்கிறேன்.பதில் கிடைக்காது.

அடுத்த ஒருவருடத்தில் குட்டிமாமா இறந்த செய்தி கிடைத்தது.நிம்மதியாய் இருந்தது.

திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி சொன்னேன். இனிமேல் என்னால் நிம்மதியாக தூங்க முடியும்.

No comments:

Post a Comment