சில ஆசிரியர்களின் யுத்திகளை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
1.எனக்கு 'ஆபரேஷன் ரிசர்ச்' பாடம் எடுத்த சார் முக்கியமான கணக்கு எடுக்கும் போது மின்விசிறியை அணைக்க சொல்வார்.
கொஞ்சம் புழுக்கமாய் இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.
ஏன் என்றால் இரவு நேரத்தில் அந்த பேன் சத்தத்தின் அளவுக்குள்ளாக பயல்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள்.
அப்படியே கண கண வென்று பேச்சு வளரும்.
சுத்தம் இல்லாத இடத்தில தைரியமாக குப்பை போடுவோம். இடம் சுத்தமாக இருந்தால் அதில் குப்பை போட யோசிப்போம்.
அதே கதைதான் இங்கும்.
மின்விசிறியின் சத்தம் என்ற சத்தம் இருந்தால் அதை ஒட்டி இன்னும் சத்தம் எழுப்ப தயங்க மாட்டோம்.
ஆனால் மின்விசிறி ஓடாமல் சத்தமே இல்லாமல் இருந்தால் முதல் சத்தம் எழுப்ப தயங்குவோம்.
அந்த மவுனமே அவர் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்க சொல்லும்.
கால் மணி நேரம்தான் மறுபடி காத்தாடியைப் போட சொல்லுவார்.
மற்ற மாணவர்கள் இவ்வுத்தியை கிண்டல் செய்தாலும் என்னளவில் எனக்குப் பிடித்த டெக்னிக் ஆகும்.
2.பத்தாம் வகுப்பில் சவுந்திர ராஜன் என்று ஒரு சார் உண்டு.
அவர் மிக எளிமையான உண்மைகளை நேரடியாக சொல்வார்.
'எல உங்க அப்பா அம்மா எல்லாம் உங்களுக்கு முன்னாடி செத்து போயிருவாவ. அது புரிஞ்ச்சாக்கி நீங்க நல்ல மெனசில இருத்தி படிப்பிய கேட்டியளா" என்பார்.
அப்பா அம்மா மேல் அதிக அன்பாய் இருக்கும் பயல்கள் எல்லாம் முதல் தடவை இதைக் கேட்கும் போது ஆடிப் போயிட்டான்கள்.
ஆனாலும் எப்போதும் உண்மை உரைக்கும் சார் அவர் பேசுவதை விடவே இல்லை.
அவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு யுத்தி செய்வார்.
முக்கியமான ஒரு வகுப்பு எடுப்பதற்கு முன்னால் வரிசையாக எங்களிடம் கேள்வி கேட்பார்.
கையில் பிரம்பு இருக்கும்.
நிச்சயமாக பலருக்கு தெரியாது.
தெரியாதவர்களை எல்லாம் அடிப்பது மாதிரி வருவார். அப்படியே ஐந்து நிமிடம் மிரட்டுவார்.
அவர் மிரட்டுவது கண்டு பயம் வரும்.
ஏனென்றால் அவர் எப்போது அடிக்கிறார் என்று தெரியாது.
சில மூட் வந்தால் அடிப்பார். சில மூட் வந்தால் அடிக்க மாட்டார்.
ஆனால் முக்கியமான பாடம் எடுக்க இருந்தார் என்றால் அடிக்கவே மாட்டார்.
அனால் அடிப்பது மாதிரி மிரட்டி நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவார்.
அதன் பிறகு எங்கள் மனம் சும்மா ரெண்டு கிமி வேகமாக ஓடி வந்தாற்போல சுறு சுறுப்பாய் இருக்கும்.
பாடத்தை சோர்வில்லாமல் முழு மனதையும் குவித்து கேட்போம்.
தூக்கமே வராதுங்குறேன்
No comments:
Post a Comment