Monday, 7 March 2016

முனைவர் ரகுபதி பேசியது...

புதிய தமிழ் ஆய்வு சார்பாக நடந்த கூட்டத்தில் “பொதுகளத்தின் முரணான முகங்கள்” என்ற தலைப்பில் முனைவர் கே.ரகுபதி பேசியது வருமாறு.
-இந்திய சமூகத்தை ஒரு பண்பட்ட சமூகமாக நான் நினைக்கவில்லை. அது எப்போதும் ஜாதிய அடிப்படையிலேயே இயங்கியது. இயங்கிக் கொண்டிருக்கிறது.
-ஜாதி , செய்யும் வேலை, வசிப்படம் என்று பல விஷயங்களை திணிக்கிறது. ஒரு மனிதன் எந்த எல்லை வரை போகலாம் போகக்கூடாது என்று ஜாதி தீர்மானிக்கிறது.
-இந்த ஜாதியை எதிர்ப்பதான நிலையில் இந்திய அரசியல் சட்டம் அனைத்து ஜாதியனருக்கும் உரிமை என்று சொல்கிறது. இப்போது அனைவரும் ஒரே அறையில் கல்வி கற்றாக வேண்டிய சூழ்நிலை. ஒரே சேவையை பெற்றாக வேண்டிய சூழ்நிலை. அப்போதும் ஏதோ ஒன்று செய்து தாழ்த்தபட்டவர்களை வரவிடாமல் செய்யும் தந்திரம் நடக்கிறது.
ஒரு ஊரில் போஸ்ட் ஆபீஸை அக்ஹரஹாரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அங்கே வேறு யாரும் செல்ல மாட்டார்கள். முடியாது. அந்த போஸ்ட் ஆபீஸ் சேவை என்பதே குறிபிட்ட சமூகத்தாருக்கு மட்டும்தான் போய் சேர்கிறது. நான் சொல்வது ஒரு உதாரணமாக இருந்தாலும் இப்போதும் இதே நிலை வெவ்வேறு வடிவமாக தொடர்கிறது. கலை,பண்பாடு, கல்வி என்ற அனைத்து நிலைகளிலும் எதை செய்தால் தாழ்த்தப்பட்டவன் ஒதுங்குவான் என்று ஆதிக்க சாதியினருக்குத் தெரிந்திருக்கிறது. அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
-இம்மாதிரியான விஷயங்களை எதிர்த்து போராடுவதற்கு முன்னர் ஒரு உரையாடலுக்கான களம் தேவைப்படுகிறது. அவ்வுரையாடலை ஒன்றிணைக்க நல்ல நோக்கம் கொண்டவர்கள் வர வேண்டியதாக இருக்கிறது. பெரியார் அதைச் செய்தார். பெரியார் குடியரசு இதழை நடத்திக் கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டில் 300 க்கும் மேலான சிறுபத்திரிக்கைகள் ஜாதியின் அடிப்படையில் இயங்கி வந்தன. அவைகளை ஜாதி வெறி இயக்க இதழ்கள் என்று சொல்லக் கூடாது.
பிராமணர் அல்லாதோரின் உரிமைகள் சுமார் 5000 ஆண்டுகள் மறுக்கப்பட்ட பின் புலத்தைப் பார்க்க வேண்டும். தத்தம் ஜாதியினரின் எதிர்ப்பு நிலையை அந்த ஜாதி இதழ்கள் பதிவும் செய்தனவே தவிர சக ஜாதியினரை இழிவுபடுத்தவில்லை. தன் ஜாதி ஆளும் ஜாதியாக வரவேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்கு இல்லை. இவை அனைத்தையும் பெரியார் ஒன்றிணைத்தார்.ஒவ்வொரு முறை குடியரசு இதழ் வரும் போதும் ஏதாவது புது இதழ்களை அறிமுகம் செய்வார். இதன் மூலம் அவர் தமிழ்நாட்டின் மொத்த ஆதிக்க ஜாதி எதிர்நிலையில் இருப்பவர்களையும் பெரியார் ஒன்று சேர்த்தார். இது பெரும் பயனைக் கொடுத்தது.
- பிற்காலத்தில் இந்த ஜாதிகள் அனைத்தும் அவர்கள் ஜாதியை இறுக்கமாக கட்டமைக்க முயன்றார்கள். அப்படி கட்டமைக்க அவர்கள் எடுத்துக் கொண்ட அடையாளம் இந்துமதம்தான். அவர்களே மற்றவர்களை விட உயர்வு என்ற ரீதிலிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.
கீழிலிருந்து மேல் வரும் போது ஜாதியை உடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஜாதி அமைப்புகள் அதே ஜாதியை தக்க வைக்கும் அமைப்புகளாயின.
-Public sphere எனப்படும் அரசியல் நிலவரங்களை விவாதிக்கும் இடங்கள் இப்போதெல்லாம் காணமல் போய்விட்டன. சலூன் கடைகளில் அரசியல் விவாதிக்காதீர்கள் என்கிறார்கள்.
கல்லூரிகளில் விவாதிப்பதை பொதுமக்களாகிய நாமே குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். கல்லூரியில் ஒருவன் நாட்டின் அரசியலை பேசாமல் வேறு எங்கு பேசுவான் என்று தெரியவில்லை. சலூன்களில் இப்போது மெதுவாக கண்ணியமாக பேசுகிறார்கள். திராவிட அரசியல் விழிப்புணர்ச்சி என்பது சலூன்களில் டீக்கடையில் பேசிப் பேசிதான் மக்களுக்கு நல்லதை செய்தது.
-பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்த என்பதாகிவிட்டது. அனைத்து இதழ்களிலும் ஏரியை ஆக்கிரமித்த வீடுகளின் விளம்பரம் வருகிறது. மழை வெள்ளம் வந்ததும் அதே இதழ்கள் ஏரிகள் ஆக்கிரமிப்பு பற்றி பக்கம் பக்கமாக எழுதவும் செய்கின்றன.
ஒரு பக்கம் சுற்று சூழல் என்று கத்துகின்றன. இன்னொரு பக்கம் கார் வாங்காவிட்டால் நீ வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்கிறாய் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.
உலகமயமாக்கல் பற்றி ஏதாவது இதழளோ, புகழ் பெற்ற அமைப்போ பேசுவதை பார்த்திருக்கிறீர்களா? அப்படியானால் உலகமயமாக்கல் என்பதால் பிரச்சனையே இல்லையா? எந்த புள்ளியில் இவர்கள் மாறுகிறார்கள். அவர்கள் பின்னால் இருக்கும் முதலாளிகளின் இயக்கத்தால் இவையெல்லாம் எந்த இதழும் பேசுவதில்லை.
-ஊடகங்கள் எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். எல்லோருக்கும் ஆச்சி இருக்கிறார்கள். அவர்கள் இறந்தால் வருத்தம்தான். ஆனால் ஆச்சி மனோரமா இறந்த போது ஐந்து பக்கங்களுக்கு அது பற்றி கட்டுரை போடுகிறார்கள். ஆச்சி எதாவது சமூகத்திற்கு செய்து விட்டாரா?
ஏன் சினிமாக்காரர்கள் இவ்வளவு முன்னிறுத்தப்படுகிறார்கள் என்ற கேள்வியை ஊடகத்தில் உள்ளவர்கள் கேட்டு அதற்கு எதிரான நிலையை மக்களிடையே பரப்ப வேண்டும். ஆனால் இங்கு அவர்களே சினிமாக்காரர்களை தெய்வமாக்கி விடுகின்றனர். மிக மோசமான செய்தி அரசியல் இங்கே இருக்கிறது.
-சமூகத்திற்கு எது நன்மையோ அதை பத்திரிக்கைகள் பேசுவதே இல்லை. பகுத்தறிவுவாதம் அறிவியல் பார்வை சமுகத்திற்கு நல்ல விஷயம் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் நம் இதழ்கள் ஏதாவது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா?
கொடுக்க மாட்டார்கள். மாறாக நிறைய பக்தி சமாச்சாரங்களை அள்ளிக் கொடுப்பார்கள். அதற்கென்று தனியே பக்கம் ஒதுக்குவார்கள். அதில் கிறிஸ்தவ இந்து முஸ்லிம் மத விஷயங்களை சமமாக கொடுத்து அவர்கள் மதச்சார்பின்மையை நிருபிப்பார்கள். இவை அனைத்தையும் விட சமூகத்திற்கு தேவையான பகுத்தறிவை போற்றவே மாட்டார்கள்.
-யார் இதை கேட்பது. ஊடகத்தை விமர்சிக்க இங்கு யாரவாது இருக்கிறார்களா? பெரிய அளவில் போராட்டம் செய்பவர்கள் கூட தங்கள் போராட்டம் கவனம் பெற்றால் போதும் என்ற அளவில் அந்த இதழ்களிடம் அனுசரித்தே செல்கிறார்கள். அவர்கள் ஊடகத்தை விமர்சிக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் தெளிவின்மையும் தன்னம்பிக்கையும் நம்மிடையே இருக்கிறது.
ஊடகத்தை விமர்சனம் செய்யும் இயக்கங்கள் தனியே வளர்தெடுக்கப் படவேண்டும். எவ்விதமான ஊடக பயனையும் பெறாமல் தனித்தன்மையாக இயங்க வேண்டும்.
-ஊடகத்தின் சமீபத்திய மிக மோசமான அசிங்கமான முகத்தை நான் எப்படி பார்த்தேன் என்றால் அரசு ஊழியர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்திய விதம் கண்டுதான். அதிமுக பிரச்சாரத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தார்கள். அந்த பென்ஷன் முறை எங்களுக்கு வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராடுவது ஒரு குற்றமா? அது தவறா? இது மாதிரியான போரட்டங்கள்தானே நாம் ஜனநாயகம் நாட்டில் இருக்கிறோம் என்பதற்கான சாட்சிகள்.
அதை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினோம். ”அரசு ஊழியர்களுக்கு எதுவுமே பத்தாதாம் இன்னும் வேண்டுமாம்” என்ற கருத்தை மக்களிடையே ஊடகங்கள் மிக வேகமாக பரப்பின. அரசு ஊழியர்கள் சலுகை பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்றுதான் முதல்வர் சொன்னார். ஆனால் உடகங்கள் அனைத்து சலுகைகளையும் கொடுத்துவிட்டதாக சொல்லி பிரச்சாரம் செய்கின்றன. ஊடகத்தின் மோசமான குணமாக இதைப் பார்க்கிறேன். அனைத்து விதமான போராட்டங்களையும் நக்கலாக பார்க்கும் மேல்தட்டு வர்க்கத்தின் மனநிலையை ஊடகங்களும் கொண்டிருப்பது அயர்ச்சியைக் கொடுக்கிறது.
-இப்படியாக பொதுவெளி உரையாடலுக்கான தளம் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில்தாம் நாமிருக்கிறோம்.
இப்படியாக ரகுபதி பேசினார். அதற்கு முன்பாக எழுத்தாளர் வளர்மதி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசும் போது
Public sphereக்கான அவசியத்தை சமீபத்தில் பா.ஜ.க செய்யும் ”குற்றம்சாட்டி வளர்க்கும் ஜனநாயகத்தை” குறிப்பிட்டு பேசினார். யாரெல்லாம் இந்து அரசியலை எதிர்க்கிறார்களோ அவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று மதவாத சக்திகள் குறிப்பிடுவது ஃபாசிசத்தை நோக்கி நாம் வேகமாக போகிறோம் என்பதற்கு அடையாளம்.இதை முறியடிக்க விரிவான விவாததளம் தேவைப்படுகிறது என்றார்.
ரகுபதி பேசியதும் நான் “நீங்கள் ஏன் இணையத்தை இந்த Public sphere யில் பேசவில்லை. முகநூல் நல்ல பொதுவெளிதான் என்று சொன்னேன்.
அதற்கு ரகுபதி “முகநூல் என்பது போராட்ட குணத்தை மழுங்கடிக்கும் விதமாகத்தான் பார்க்கிறேன். மக்களை தொந்தரவு செய்யாமல் போராடலாம் என்ற தேவையில்லாத எண்ணத்தை வசதியை அது கொடுக்கிறது. வசதியாக ஒரு போராட்டத்தை செய்ய முடியாது.நான் முகநூலில் கொஞ்ச நாள் இருந்து பார்த்தேன். அளவுக்கதிகமான சுயபுராணங்கள் அங்கு இருப்பது எரிச்சலை கொடுத்தது. அதனால் அதை விட்டு சென்று விட்டேன்” என்றார்.
அதற்கு நான் “இல்லை முகநூலில் பிரச்சாரம் செய்யலாம். அனைவரும் ஆவேசமாக செய்ய வேண்டும் என்று இல்லை. புரிய வைப்பது முக்கியம்.
அது தவிர்க்க முடியாத டெக்னாலஜி. அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்றுதான் உங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவேண்டுமே தவிர, அதை விட்டு விலகுதல் கூடாது. சமூக நீதியை பிரச்சாரம் செய்வதற்கு அதிகமான கருத்து வெளி நம்மிடையே இருக்கிறது. ஆனால் ஒரு மதவெறி கருத்தாளருக்கு அந்த கருத்து வெளி இல்லை. இந்த வசதியை நாம் முடிந்த மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றேன்.
நிகழ்ச்சியின் சிறப்பாக ஒரு இலங்கையைச் சேர்ந்த ஃபிரான்சில் பிறந்து வளர்ந்த் இளைஞரின் விவாதப் பேச்சு இருந்தது.
கஷ்டப்பட்ட தமிழில் தட்டுத்தடுமாறி அழகாக பேசினார். “இங்கே புத்தகங்களே முதலில் இல்லை. புத்தக கண்காட்சியில் அதிகமாக மத புத்தகங்கள் பார்த்து அதிர்ந்தேன். எப்படி பிரான்ஸ் அல்ஜீரியாவை கைக்குள் வைத்து ஜனநாயகம் என்று ஏமாற்றியதோ. அப்படித்தானே இந்திய அரசும் பிராந்திய உணர்வை மழுங்கடித்து ஒரு விதமான காலனி ஆட்சியை செய்கிறது என்று நினைக்கிறேன். உங்கள் அரசியல் சட்டத்தில் மாநிலத்துக்கான உரிமைகள் என்பது ஒப்புக்குத்தானே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவ்வுரிமைகள் பாதிக்கபடும் என்பது பற்றியெல்லாம் இங்குள்ள ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மக்களுக்கு தெரிகிறதா? என்று ஒரே போடாய் போட்டார்.
இவ்வாறாக சிந்தனைக்கு நிறைவான நிகழ்ச்சியாக இது அமைந்தது.
இந்த புதிய தமிழ் ஆய்வு நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தும் வளர்மதியிடம் இன்னும் நட்பாக பழக முடிந்தது மகிழ்ச்சி.
அதற்கு காரணம் மாற்று சிந்தனை மேல் அவருக்கு இருக்கும் உண்மையான அக்கறைதான்.
அடுத்த நிகழ்ச்சி அடுத்த மாதம் மூன்றாம் சனிக்கிழமை நடக்கிறது. தலைப்பு பின்னர் அறிவிப்பார்கள். மாற்று சிந்தனைகள் வேண்டும் நண்பர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
நேற்றைய நிகழ்ச்சி பனுவல் புத்தகக்கடையில் நடந்தது.

No comments:

Post a Comment