Monday, 7 March 2016

வெளி...

கணவனுக்கோ காதலுனுக்கோ தங்கள் மெயில் பாஸ்வேர்டை, ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கொடுப்பதன் மூலம் தங்கள் அன்பை, தங்கள் நம்பகத்தன்மையை நிருபிக்க முடியும் என்று பெண்கள் நம்புவது மிகக் கொடுமையான விஷயம்.
முதன்முதலில் எனக்கு ஏ.டி.எம் கார்டு வந்த போது, அது பற்றி சரிவர தெரியாமல் வீட்டில் ”அதை நீயா வைத்துக் கொள்ளப் போகிறாய்” என்றார்கள்.
அதற்கு நான்” ஆமா நா வெச்சிப்பேன்.சம்பளத்துல வீட்டுக்கு எவ்வளவு தேவையோ அத நான்தான் எடுத்துத் தருவேன்” என்றேன்.
இது கொஞ்சம் அதிகப்பிரசங்கிதனமாக இருந்தாலும் எனக்கான வெளியை தெளிவாக சொல்லும் ஒரு வரியாக எனக்குப் பட்டது.
இப்படியாக தன்னம்பிக்கையுடன் வெளியை எடுத்துக் கொள்ளும் போது உங்களின் பார்டனர் மிக அதிகமாக பதட்டமாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது.
பத்து வருடம் முன் என் சீனியர் ஒருவர் எனக்கு அடிக்கடி அட்வைஸ் செய்து கொண்டே இருப்பார்.
ஒவ்வொருமுறை அட்வைஸ் செய்யும் போதும் என் வெளியில் கொஞ்சம் எடுத்துவிட்டிருப்பார்.
ரொம்ப நாள் கழித்து இதை கவனித்தேன். ஒருநாள் அவரிடம் நேரடியாக “அக்கறையில் அட்வைஸ் பண்றது வேற. டாமினேட் பண்றதுக்காக அட்வைஸ் பண்றது வேற” என்றேன்.
அதிகமாக வேதனையடைந்தார்
“உனக்கு எவ்வளவு கெட்டப் புத்திடா” என்றார். இருக்கட்டும் ஒருவேளை அவரை வேதனைப்படுத்தியாதாகவே இருக்கட்டும். அப்படி செய்யாவிட்டால் நான் தினம் தினம் வேதனைப்பட வேண்டியதாக இருக்கும்.
டீன் ஏஜ் முடியில் நான் அப்பரண்டீஸ் வேலை பார்த்து சம்பாதித்த காசில் “மோகமுள்” நாவல் வாங்க எங்கள் வீட்டில் சிறு எதிர்ப்பு வந்தது. அதை வேண்டுமென்றே பூதாகரமாக்கி பயங்கரமாக சண்டை போட்டேன்.
நாவல் வாங்குகிறேன் வாங்கவில்லை என்பது இரண்டாவது பிரச்சனை. ஆனால் சுதந்திரத்துக்குப் பிரச்சனை வருகிறது.அதுதான் முதல் விஷயம்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை முக்கியமான வேலை என்பதாக லீவு போடுவது போல எனக்கென்று ஒருநாள் லீவு அவ்வப்போது எடுத்துக் கொள்வேன்.
நான் மட்டும் தனியே லைப்ரரி செல்வேன். முடிந்த பிறகு ஒரு சினிமா பார்ப்பேன். நல்ல ஹோட்டலில் போய் சாப்பிடுவேன். எதாவது ஒவியக் கண்காட்சி போவேன். சும்மானாலும் எதாவது பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பேன்.
இந்த ஸ்பேஸ் கிடைக்காவிட்டால் என்னால் மற்றவர்களிடமும் அன்பாக இருக்க முடியாது.
திருமணமான புதிதில் ஹைதிராபாத் சென்றிருந்த போது அங்கே பக்கத்து வீட்டில் ஃபர்னிச்சர்களை விற்கப்போவதாக சொன்னார்கள்.
மனைவி அந்தத் தகவலை இன்னொரு தமிழ் குடும்பத்துக்கு சொல்லப் போவதாய் சொன்னார்.
“ஒருவேளை அவுங்களுக்கு எதாவது சாமான் வேணுன்னா வாங்குவாங்க இல்ல”
எனக்குக் கடுப்பு.
“ம்ம்ம். நீ ஏன் இதுல தலையிடுற. அவுங்க வாங்குவாங்க. ஏதாவது உடைஞ்சிருக்கும். அப்புறம் குறை சொல்லுவாங்க”
“அப்படி ஏன் நாம நினைக்கனும்” இது மனைவி.
“தேவையில்லாத டென்சன இழுக்கறதே உன் பொழப்பு” என்ற ரீதியில் திட்ட ஆரம்பிக்கவும் மனைவி குறுக்கிட்டார்.
”ஏனக்கு சொல்லனுன்னு தோனிச்சி. சொல்லுவேன். இது ஒரு சாதரண விஷயம். இதுக்குள்ள இப்படியெல்லாம் உங்கள மாதிரி யோசிக்க தெரியாது. யோசிக்கவும் மாட்டேன். அது என் இஷ்டம். நீங்க ஏன் என்ன ஃபாலோ பண்றீங்க. என்னவும் செய்துட்டு போறேன். அதுல பிரச்சனை வந்துச்சுன்னா எனக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சுதுன்னா பண்ணுங்க. அதுக்காக இப்படி இரு அப்படி இருன்னு சொல்லாதீங்க” என்று பதிலுக்கு கடித்துவிட்டார்.
நான் கோபத்தில் சட்டை எடுத்துப் போட்டு வெளியே கிளம்பிவிட்டேன்.
போய் ஒரு கரும்புச்சாறு குடித்து கொஞ்சம் சமாதானமாய் யோசித்த பிறகு அவர் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டேன்.
ஒரு சேரில் ரிலாக்ஸாக அமர்ந்தால்தான் அடுத்தவர் நலம் பற்றி யோசிக்க மூளை வேலை செய்யும்.
உட்காரும் போதே வெள்ளிக்கிழமை அன்ரிசர்வ்டு ரயில் கம்பார்ட்மெண்டில் அமர்வது போல நெருக்கடியாக உட்கார்ந்தால் அடுத்தவன் மேல் கோபம்தான் வரும்.
தசாவதாரம் கமல் ஒம் நமோ நாராயணன்னு சொன்னது மத அபிமானமா இல்லவே இல்ல. அது அவரு ஸ்பேஸ அடுத்தவன் எடுக்கிறதுக்கான எதிர்ப்பு குரல் கொடுக்கும் விஷயம்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள எல்லாம் விட்ருங்க.
அவுங்க ஸ்பேஸுக்குள்ள போகாதீங்க.
அப்படியே ஜஸ்ட் லைக் தட் விட்டுருங்க.
அது மாதிரி உங்க ஸ்பேஸ யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க.
ஒரே மிதியா மிதிச்சி வெளிய அனுப்பிருங்க..

No comments:

Post a Comment