Monday, 7 March 2016

இரும்புக் கொல்லனின் காமம்...

அந்த இரும்புக்கொல்லன் கடுமையான உழைப்பாளி.
அன்றிரவு கடைத்தெருவில் அவளைப் பார்த்தான்.
காமம் தலைக்கேறிற்று. அவளை அடைய பணம் தருவதாக சொன்னான். அவள் காறி உமிழ்ந்து மறுத்தாள்.
அவளைப் பற்றி விசாரித்தான். அவள் இன்னொரு பணக்காரனின் அடிமை என்று தெரிந்து கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று உடலை வருத்தி பணம் சேர்த்து அவளை வாங்கினான்.
மகிழ்ச்சியியோடு அவளை தொட முயன்றான்.
“உனக்கு வேலை எதுவென்றாலும் செய்து தருகிறேன். ஆனால் உடலைத்தர முடியாது” என்று திட்டவட்டமாக சொல்கிறாள்.
அடித்து உதைத்துப் பார்க்கிறான். முடியாது என்கிறாள்.
மண் தின்னும் உடல்தானே, கற்பென்று ஒன்றிருக்கிறதா? என்று தத்துவமாக அணுகிப் பார்த்தான்.
“நானும் கற்பை நம்புவதில்லை. ஆனால் இது அடிபணிதல் பற்றிய பிரச்சனை. என் மன உவப்பின்றி என்னிடம் இருந்து ஒன்றைப் பிடுங்குவது பற்றியப் பிரச்சனை. தரமாட்டேன்” என்கிறாள்.
”அப்படியானால் நீ என் அடிமையாகவும் இருக்கத் தேவையில்லை ஒழிந்து போ” என்று உதைத்து அனுப்புகிறான். அந்த ஊரில் நலிந்தவர்கள் யாரிடமாவது அடிமையாக இருந்தால் மட்டுமே பசியாற்ற முடியும். அதை மனதில் வைத்து அவளைத் துரத்தி விடுகிறான்.
ஊர் மக்களிடம் அவளைப் பற்றி பொல்லாதது சொல்லி யாருக்கும் அடிமையாக முடியாமல் செய்கிறான். எதையாவது தின்று எதையாவது கொண்டு உயிர்வாழ்கிறாள்.
உடல் அழகு மட்டும் கூடுகிறதே அன்றி குறையவில்லை.அப்போதும் கொல்லன் அவள் உடலை சுகிக்க கேட்கிறான். தரமுடியாது என்கிறாள். அவன் கேட்க கேட்க கொடுக்ககூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.
ஊரில் பஞ்சம் வருகிறது. கொடுமையான பஞ்சத்தில் மக்கள் திணறுகிறார்கள். மிருகங்களும் செடிகொடிகளும் காய்ந்து கருகிவிடுகின்றன.கொல்லன் மாதிரி பணக்காரர்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியத்தை வைத்து பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.
கொல்லன் வீட்டுக் கதவை தட்டுகிறாள். “வந்தாயா வழிக்கு. தானியம் தருகிறேன். அவித்து உண்டுவிட்டு. படு” என்கிறான்.
“கொல்லப் பட்டறையில் ஏதாவது வேலை இருந்தால் கொடு. செய்துவிட்டு தானியம் வாங்கிக்கொள்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் பசிக்கிறது. கூலிக்கு உணவு கொடேன்” என்கிறாள்.
“நீ படு என்னை சுகிக்க விடு. இந்த வீட்டின் ராணியாகு” என்கிறான் கொல்லன். முடியாது என்று மறுத்துச் செல்கிறாள்.
அடுத்து இரண்டு நாட்கள் பிறகு மீண்டும் கதவைத்தட்டி கூலிக்கு உணவு கேட்கிறாள். கொல்லன் உடலைக் கேட்க இடத்தை காலி செய்கிறாள்.
மூன்றாம் நாள் பசியினால் நடக்க முடியாமல் கம்பை ஊன்றி கதவைத் தட்டுகிறாள். “நான் தன்மானத்தோடு உயிர் வாழ ஆசைப்படுகிறேன். ஒரே ஒரு கை தானியம் கொடு. நான் பிழைத்துக் கொண்டு அதற்கு மேலான உழைப்பை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று கெஞ்சுகிறாள்.
“நீ எனக்கு காமத்தைக் கொடு. அதற்காக பல வருடங்கள் அலைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக தானியம் தருகிறேன்”
அவள் வெறியாகி கத்துகிறாள் “ பாவி என் குடல் ஒட்டு நூலாகிக் கிடப்பதை இதோ என் வயிற்றைக் கிழித்துக் காட்டவா? உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா? என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா? தேவையே இல்லை.
இன்று நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். பயப்படாதே கல்கண்டை எத்தனை உடைத்தாலும் அது இனிக்கும்தான். என்னால் உனக்கு கெட்ட சாபம் கொடுக்க முடியாது.
நல்ல சாபம் கொடுக்கிறேன். இதோ உன் கைகளில் தீக்காயத்தினால் நிறைய தழும்புகள் இருக்கிறதல்லவா? இனிமேல் அந்தத் தழும்பு உனக்கு வராது.
ஆம் இனிமே தீ உன் கையைத் சுடவே சுடாது. ஒவ்வொருமுறை நீ நெருப்பைப் பார்க்கும் போது இது சுட்டுவிடுமே என்று கவனமாக மூளையில் யோசித்து, கவனமாக வேலை செய்யும் போது அது கைகளை சுடாத முரண்பாடு கண்டு திகைக்க வேண்டும்.
அதுவே நீ எனக்குச் செய்த பாவத்தை உனக்கு ஞாபகப்படுத்தும் தண்டனை.
இது என் சாபம்” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே நடக்க முடியாமல் தெருவில் தவிழ்ந்து சென்றாள்.
இரும்புக் கொல்லன் ஒட்ச்சென்று கைகளை நெருப்பில் வைத்துப் பார்த்தான்.அது சுடவில்லை.
தீக்கங்குகளை நீரை அளைவதுபோல அளைந்துப் பார்த்தான் சுடவே இல்லை. பதறிக்கொண்டு ஒடினான்.
அங்கே அவள் தெருவில் பசியினால் தவிழவும் முடியாமல் உடலை இழுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
அவளிடம் மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு. உன் சாபம் பலிக்கிறது. என் கைகள் நெருப்பில் பொசுங்காமல் கல்மாதிரி இருக்கிறது. எரி உணர்வே இல்லை “என்று கெஞ்சுகிறான்.
அவள் ஆச்சர்யத்துடன்
“அப்படியா நான் மனமுடைந்து சொல்லும் அந்த வார்த்தை பலித்துவிட்டதா? என் வாக்கு பலிக்கும் என்று தெரிந்தால் நான் இவ்வளவு அவமானப்பட்டு உயிரோடு இருந்திருக்க மாட்டேனே.
இதோ இப்போது ஒரு வாக்கு சொல்கிறேன். நான் இப்போதே இறந்துபோக வேண்டும்.
பசித்து துடிக்கும் போதும் கூட என் முலைகளையும் யோனியையும் மட்டும் துரத்தும் இவ்வுலகில் இருந்து விடைபெற வேண்டும் “என்று சொல்லி இறந்து போகிறாள்.
இரும்புக் கொல்லன் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
அந்த ஊரில் பொசுங்காத கைகளைக் கொண்ட கொல்லன் என்று மக்கள் அவனை அதிசயமாக பார்க்கிறார்கள்.
அவன் கைகளை நெருப்பு சுடவில்லை.
ஆனால் சுட்டது.
சுட்டுக் கொண்டிருக்கிறது.
பின்குறிப்பு:
எப்போதோ படித்த என்னை அதிகம் பாதித்த ஒரு Fairy Tales அடிப்படையிலான கதை.

No comments:

Post a Comment