Monday 7 March 2016

ஒண்ணுக்கு..

காலையில்
குளிர்ந்த நீரில் குளித்து, பதினைத்து நிமிடம் நடந்து ,கோவிலுக்கு போவது எனக்கு பிடித்த பொழுது போக்கு.
இன்றும் அப்படியே கிளம்பினேன்.
கோவில் உள்ளும் வெளியும் சாமி கும்பிட்டு வரும் பெண்களின் முகத்தைப் பார்த்தேன்.
அம்சமாகவும் கம்பிரமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.
கோவிலை தவிர வேறு எங்கவாது ஒரு பெண்ணால் இவ்வளவு கம்பிரமாக 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று போய் வரமுடியுமா என்று தெரியவில்லை.
ஏனோ எனக்கு இன்று சாமி எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை.
"கொடுத்தா கொடு கொடுக்காட்டி போயேன்" என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின் அம்மனைக் கும்பிட்டேன். அங்கே எழுதி இருந்த அபிராமி அந்தாதி(?) செய்யுள்களை கொஞ்ச நேரம் வாசித்தேன்.
நல்லா எதுகை மோனை அருமையாகத்தான் இருந்ததது.
இதை எழுதியவர் பத்திரிக்கையாளர்களை,பதிபாளர்களை தன முகநூல் நண்பர்களை மட்டும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கத் தெரிந்தால் நல்ல புகழ் பெறலாம் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.
கோவிலுக்கு போய்விட்டு உடனே கிளம்பக் கூடாது என்று என் மம்மி சின்ன வயசுலேயே சொல்லி தந்திருக்காங்க.அப்படியே வந்து வெளியே அமர்ந்தேன்.
பக்கத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கோவில்களில் நடுக்கும் திருமணங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதில் ரசிக்க யோசிக்க நிறைய இருக்கும்.
அப்போது புதுமண ஜோடி சாமி கும்பிட வந்தது. பெண் நீலமும் பச்சையும் கலந்த சேலை கட்டி இருக்கிறாள். பார்க்க அப்படி ஒரு அம்சம்.
நானும் புதிதாய் கல்யாணமான புதிதில் மனைவியோடு இப்படி வந்திருக்கிறேன்.
பட்டு சேலையும் நகையும் போட்டு கூட ஒரு அழகு பெண் வரும் போது "இவள் என் மனைவி" என்று பெருமிதமாய் இருக்கும்.
அப்படியே அன்பில் அவள் கைகளை கோர்த்துக் கொள்வேன்.
மெத்து மெத்து என்றிருக்கும் அக்கைகளின் அன்பும் அரவணைப்பு அந்த freshness அதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை.
ஆனால் இதோ இப்புது மணப்பெண்ணைப் பார்த்தால் அந்த freshness வருகிறது.
அப்புறம் கல்யாண வீடு வாண்டுகளை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.
அதில் என் மகள் வயதுடைய குட்டிப் பெண் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென அவள் ஆச்சியிடம் வந்தாள் " ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது " என்றாள்.
அந்த ஆயவோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.
"ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது ஆயா". மறுபடியும் அப்ச்சிறுமி சொல்கிறாள். ஆயவோ அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்.
இப்போது சிறுமின் பிரச்னை என் பிரச்னை ஆன உணர்வு ஏற்பட்டது.
அச்சிறுமி வேறு வழி தேட ஆரம்பிக்கிறாள். அப்படியே கோவிலை சுற்றி வருகிறாள்.
எங்காவது நல்ல இடம் கிடைத்தால் சட்டென்று அமர்ந்து விட எதுவாக பாவாடையை கொஞ்சமாக கணுக்கால் அளவு தூக்கிக் கொண்டு இடம் பார்த்தாள். இடம் கிடைக்கவில்லை.
கோவில் உள்ளே அனைவரும் இருக்க, அங்கே இருந்தால் பிரச்னை வரும் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது.
மறுபடி வந்து ஆயாவைப் பார்க்கிறாள்.
ஆயவோ சிறுமியின் பிரச்னை பற்றி எதுவும் தெரியாதவளாய் நடந்து கொண்டிருக்கிறாள்.
எனக்கு தாங்கவில்லை ஏதாவது உதவி செய்யலாம். நானே கூட அசிறுமியை வெளியே அழைத்து செல்லலாமா என்று தோன்றியது.
"வேண்டாம் புள்ள புடிகாரன் என்று நினைத்து விடபோகிறாள். அவளேதான் அவள் பிரச்சனயை தீர்த்து பார்க்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்.
அதன் பிறகு சிறுமி கோவிலின் மினியேச்சர் உருவத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுபடியும் கோவிலைச்சுற்றி பார்த்தாள். அவள் முகம் மாறிக்கொண்டிருந்தது.
அவளுக்கு ஒன்னுக்கு நெருக்கிக் கொண்டிருந்தது எனக்கும் நெருக்கிய உணர்வைக் கொடுத்தது.
திடீரென்று கூட்டதில் காணாமல் போய் விட்டாள்.
எங்கே போனாள் என்று மனம் தேடிற்று. அப்படியே அக்கல்யாணக் கூட்டத்தில் தேடினேன்.
"எங்கம்மா போயிட்ட செல்லம் . ஒன்னுக்கு இருந்தியா ?இல்லையா? உன் வயசுக்கு நீ கோவிலுக்கு உள்ள கூட ஒண்ணுக்கடிக்கலாம்" என்றெல்லாம் வாஞ்சையாக வந்தது.
அப்படியே அந்த பாட்டியை சுவத்தோடு சேர்த்து வைத்து ஒரு அடி அடிக்கணும் போல தோன்றியது.
அச்சிறுமி கண்ணில் பட்டாள்.
அங்கே அமர்ந்து எதோ கல்யாண வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகில் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தாள்.
எப்படி சொன்னால் பெரியவர்கள் நாசூகானவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்பதை அவள் கற்று கொண்டது பற்றி திருப்தி வந்தது.
இவள் இனிமேல் சீக்கிரம் சிறுநீர் கழித்து நிம்மதி அடைவாள் என்ற முடிவோடு, வெளியே விட்டு சென்ற செருப்பு அப்படியே இருக்குமா என்ற கவலையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் மனைவி ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார்
"நம்ம வீடு வாண்டு சைசுல ஒரு வாண்டு. அவ ஒன்னுக்கு இருந்தாளா இல்லையான்னு பாத்துட்டு வரேன். அதான் லேட்ட" என்றேன்.

No comments:

Post a Comment