அன்று அம்பேத்கர் வகுப்பு முடிந்து பெரியார் திடலை விட்டு வெளியே வரும் போது என்னுடன் நடந்து வந்தவருக்கு வயது 60 க்கு மேலே இருக்கலாம்.
அவர் ஒரு உயர்த்தபட்ட ஜாதியை சேர்ந்தவர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த ரிட்டையர்ட் ஹெட்மாஸ்டர்.
“நீங்க இந்த வகுப்பு ஏன் வந்தீங்க” என்பது மாதிரி கேட்டேன்.
அதை மேட்டிமைதனமாக கேட்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும்தானே.
அவர் சொன்னார் “சமூக நீதி பற்றிய உணர்வு மரத்து போகாமல் இருக்க இது மாதிரி வகுப்பு வருகிறேன்.இது மாதிரி விஷயங்களை கேட்கும் போது அது பல விஷயங்களை ஆழமாக யோசிக்க செய்கிறது” என்றார்.
அப்படியே நானும் அவரும் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம்.
காந்தியை கண்மூடித்தனமாக தாக்கி எழுதுவது பேசுவதில் எங்கள் இருவருக்கும் உடன்பாடில்லை என்ற புள்ளியில் இணைந்ததால் இன்னும் நட்பாக பேச முடிந்தது.
“உங்கள பார்த்தா என் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க டீ சாப்பிடலாம்” என்று அழைத்தார்.
டீ சாப்பிட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டேன்.
“உங்களுக்கு இது மாதிரி விஷயங்கள்ல ஒரு உணர்வு எப்படி வந்துச்சி” இதுநான்.
“தஞ்சாவூர் பக்கதுல்ல எங்க ஊர் வந்து ரிசர்வ் தொகுதி. அங்க என் அப்பா கிட்ட வேல பார்த்தவர்தான் அப்போ எம்.எல்.ஏவுக்கு நின்னார். அப்பாவுக்கு அவர பிடிக்கும். அவரு எம்.எல்.ஏ ஆன பிறகு என் வீட்டு வாசல்லேயே நிக்கிறார். உள்ள வரல. அப்பா கூப்பிடுறார். ஆனா அவரு உள்ள வரல. காரணம் ஜாதி. அவர் தாழ்தப்பட்ட ஜாதி, நாங்க உயர்த்தப்பட்டவங்க. அதே எம்.எல்.ஏ சட்டசபையில முதலைமச்சர் பக்கதுல கூட உக்காருவார். ஆனா எங்க வீட்ல நுழைய முடியல. இது என் மனச ரொம்ப பாதிச்சது. அதுல இருந்து இது மாதிரி விஷயங்கள் கூர்ந்து நோக்க ஆரம்பிச்சேன். அப்போதான் நிறைய தெரிய ஆரம்பிச்சது”
”இது மாதிரி விஷயங்கள பாக்குறதுக்குன்னு ஒரு அடிப்படை பார்வை அறிவு தேவைப்படுதுதானே”
“நிச்சயமா. நம்ம கல்வி முறையோட அடிப்படையே இந்த நுண்ணிய சமூகப் பார்வையை இல்லாமல் ஆக்குவதுதான். நான் ஹெட்மாஸ்டரா இருந்திருக்கிறேன். என் கிட்ட வர்ற 99 சதவிகித படித்த பெற்றோர்களுக்கு கூட சமூக பார்வை சுத்தமா இருக்காது”
”சரி நீங்க உங்க வாழ்க்கையில முற்போக்கான சமூக சிந்தனைகள அமல்படுத்த முடிஞ்சதா”
“ரொம்ப கம்மியாதான் செய்தேன். சுத்தி உள்ளவங்கள ஒரளவுக்கு மேல பகைச்சுக்க முடியல. சொந்த வாழ்க்கை கஷ்ட நஷ்டம்ன்னு ஒண்ணு இருக்கே. ஆனா அது கூட ஒரு குற்ற உணர்ச்சிதான். பசங்களுக்கு கூட இதையெல்லாம் சொல்லி கொடுத்துதான் வளத்தேன். ஒருத்தன் கேக்குறான். இன்னொருத்தன் இதே ஜாதி வலையிலதா விழுறான். ரொம்ப கம்பல் பண்ண முடியாதில்லையா?’
“ம்ம்ம்” என்றேன்.
“ஆனா நிச்சயமா இது மாதிரி கிளாஸ்கள் நம்மள இன்னும் யோசிக்க வைக்குதானே. இன்னைக்கு கிளாஸ்ல தேசியம்னா என்னன்னு எப்படி கரெக்டா சொல்றார். சமூக உள்முரண்பாடுகள நீக்கிட்டு இந்தியன்னு கொடிபிடிங்கன்னு அம்பேத்கர் சொல்றார்.ஆனா நாம ஜாதியில பிரிஞ்சி நின்னுகிட்டு இந்தியன்னு சொல்றோம்.” என்றார்.
“Fuel and Spark Theory" படி சமூக நீதி மாதிரி விஷயமெல்லாம் முதல்ல எரிபொருளா எல்லா மக்கள் மண்டையிலும் ஏறனும். அதுதான் எரிபொருள். அதுக்கப்புறம்தான் ஸ்பார்க் பத்திக்கும். நம்ம ஊர்ல எல்லார் மண்டையிலும் தண்ணிதான சார் இருக்கு. கொஞ்சம் கூட எண்ணெய் விட்டுக்க மாட்டேங்குறாங்க. அப்படிப்பாத்தா நீங்க இந்த எரிபொருள நிரப்புற வேலையாவது செய்யதானே செய்றீங்க. நல்ல விஷயம்தான். நான் என்னையும் சேத்துதான் சொல்றேன்” என்றேன்.
இப்படியாக நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தேன்.
அவரை பார்த்தது மனதுக்கு இதமாக இருந்தது. அவருக்கு கூட நான் இதம் கொடுத்திருக்கலாம்.
இந்துதுவா பற்றி சொல்லும் போது சொன்னார்.
“இந்த இத்துத்துவா ஆட்கள் இருக்கிறாங்க பாருங்க. கடவுள் இல்லன்னா கூட சண்டைக்கு வரமாட்டான். ஆனா ஜாதி இல்லன்னு சொன்னா சண்டைக்கு வந்திருவான்.” என்றார்.
அதைக் கேட்டு அதிகமாக சிரித்தேன்.
“அத விட கொடுமை.அந்த ஜாதி அபிமானத்துக்கு அவர்கள் கொடுக்கும் சுற்றி வளைத்த விளக்கங்கள்” என்றேன்.
“நம்ம நாட்லதான் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்றதுக்கு கதை, கட்டுரை, தத்துவம் எல்லாம் இருக்கே” என்றார்.
இருவரும் சிரித்தோம்.
ரோடு கிராஸ் செய்யும் போது என் கையை பிடித்து சின்னப் பையன் போல நடத்தி கிராஸ் செய்து விட்டார்.
அவர் பெயரை நான் கேட்கவில்லை. என் பெயரை அவர் கேட்கவில்லை.
செண்டிரலில் பிரிந்து டாட்டா சொல்லிக் கொண்டோம்.
ஏனோ அவரை பார்த்து பேசியது மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
கங்கை இன்னும் வற்றிவிடவில்லை
No comments:
Post a Comment