Monday 7 March 2016

கறாரான பெண்கள்...

சில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.
மத்திமமாக அமர்ந்து கொள்வார்கள்.
அன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான்.
பொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின் கண்களும் லாக் ஆகிவிடும்.
இவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.
அவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.
அதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.
ஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.
என்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.
சிரிக்கவில்லை. இறுக்கமாய் இருந்தார்.
நல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.
இப்படி சமூகம் நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.
அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.
அன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.
பள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.
அந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.
அங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.
சிறுமி போகாமல் நிற்க
பாட்டி "பராவயில்லை உக்காரும்மா" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் பேத்தி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.
அன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.
மறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.
விசாரிக்கும் பொது "பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.
அந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.
அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி இருக்கிறாள்.
"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா " என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.
"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார்த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால் வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்"
என்ற விவரிப்பை ஒரு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.
பத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.
அதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய் இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment