ஷேர் ஆட்டோவில்
பின்னால் ஏறினேன்.
பெண்கள் வருகிறார்கள் என்று என்னை முன்னால் வரச்சொன்னதில் சிறிய வருத்தம் இருந்தாலும் வேறு வழி இல்லாததால் ஆட்டோ அண்ணனின் தோளில் கை போட்டு அமர்ந்தேன்.
அண்ணன் வேறு அவசரபடுத்தினார்
"சட் சட்ன்னு ஏறுங்கம்மா சீக்கிரம் கிளம்பலாம்" என்று அதட்டினார்.
ஆட்டோ டுர் டுர் என்று கிளம்பியது. வேகமாக ஒட்டிய அண்ணன் திடீரென்று வண்டிய மெல்லமாக்கி நிறுத்துவது போல செய்தார்.
அப்படி செய்து
"பலூன் பலூன்" என்றார்.
"என்னன்னே பலூனா"
"பலூன்" என்று கண்ணை காட்டினார்.
கிழே பார்த்தால் ஒரு "பலூன் கொத்து" ரோட்டில் கிடந்தது. வெள்ளை பலூன்களும் சிகப்பு பலூன்களும் கலந்து கட்டிய பலூன் கொத்து.
"ஆமா பலூன்" என்றேன்.
"வேணுன்னா எடுத்து வீட்ல குழந்தைக்கு கொடுங்க" இது ஆட்டோ அண்ணன்.
"யண்ணே சும்மா இருங்க எனக்கு எதுக்குன்னே. உங்களுக்கு வேணுமா எடுக்கவா?"
"எனக்கு வேண்டாம். இல்ல பலூன் நல்லா இருந்துச்சி அதான் "
"போங்கண்ணே அது பக்கதுல்லேயே துப்பி போட்டுருக்காங்க நீங்க வேற"
மறுபடி ஆட்டோ அமைத்தாக போக, அவரை காய ப்படுத்தி விட்டோமோ என்று குற்ற உணர்ச்சி வந்தது.
நான் ஆரம்பித்தேன்.
"பலூன் நல்லாத்தான் இருந்துச்சி, இருந்தாலும் ரோட்ல போட்டத எப்படி எடுக்கிறது" என்று சொல்லும் போது ஆட்டோ அண்ணனின் முகத்தை கவனித்தேன்.
பலூன் என்ற வார்த்தையை கேட்கும் போது அவர் முகம் குழந்தை முகம் மாதிரி கனிகிறது.
சிரிக்கிறது.
அவருக்கு பலூன் பிடிக்கும் போல. ஒருவேளை யாரும் இல்லாத சமயமாய் வீட்டில் ஒரு பாகெட் பலூனை ஊதி கூட விளையாடுவாரோ என்ற சந்தேகம் வந்தது.
அண்ணன் பதில் சொன்னார்.
"இல்ல நல்ல இருந்த்துச்சி"
" உங்களுக்கு எத்தனை பசங்க"
" ஒரு பொண்ணு ஒரு பையன்"
"என்ன பண்றாங்க"
"பொண்ணு காலேஜ் போறா பையன் பிளஸ் ஒன்"
அப்படியானால் அவர் பலூன் என்று வியந்தது பரவசமானது எல்லாம் திட்டமிடாமல் எவ்வித சுயநலமும் இல்லாமல் தன்னிச்சையாய் நடந்திருக்கிறது.
அது பற்றி யோசிக்க இனிமையாய் இருந்தது.
உலக திரைப்பட விழா நடக்கும் போது உட்லாண்ட்ஸ் தியேட்டர் எதிரே பாதி கொய்யா பழம் மிளகாய் பொடியோடு தரையில் கிடப்பதை பார்த்தேன்.
ஆரோக்கியமான கொய்யா அது.
ஒரு வினாடி அதை எடுத்து துடைத்து சாப்பிடலாம் போல ஒரு உணர்வு வந்தது.
அதன் பின் அது பற்றி வெட்கப்பட்டேன்.
எனக்கு கொய்யா பழம்.
ஆட்டோ டிரைவருக்கு பலூன்
No comments:
Post a Comment