நேற்று காலை மூன்று மணி அளவுக்கு மகள் எழுப்பினாள்.
திடீரென்று வாந்தி எடுத்தாள். வயிறும் சரியில்லாமல் பாத்ரூம் போய் விட்டு வந்தாள்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எனக்கு செம கடுப்பு.
ஆனால் அவள் நிலமையைப் பார்க்க பாவமாய் இருந்தது. மனைவியும் நானும் சேர்ந்து அவளை கவனித்துக் கொண்டோம்.
இரண்டு வாந்தியும் இரண்டு வயிற்றுப்போக்கும் ஒரு மனிதனின் அகம்பாவத்தை அழித்துவிடும் என்று பாலகுமாரன் எழுதி படித்த ஞாபகம்.
ஆனால் குழந்தைகள் ஒருமுறை வாந்தி எடுத்தாலே பெற்றோர்களின் அகம்பாவமும் நான் என்ற எண்ணமும் அழிந்து விடும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.
அப்படியே வதங்கிய முட்டைக்கோஸாக கிடந்தாள். மருந்து கொடுத்தோம்.
காலை ஒன்பது வரை சாப்பிட சாப்பிட சாப்பிட்டதெல்லாம் திரும்ப வந்தது.
ஒன்பதரை மணிவாக்கி அசந்து தூங்கிவிட்டாள்.
பதினொரு மணிக்கெல்லாம் எழும்பி கொஞ்சம் சுறுசுறுப்பானாள்.
பதினொரு மணிக்கெல்லாம் எழும்பி கொஞ்சம் சுறுசுறுப்பானாள்.
நிம்மதி அடைந்தோம்.
அதன் பின் அந்த நிம்மதியை கொண்டாடும் விதமாக நானும் மனைவியும் கொஞ்சுவது மாதிரி பேசிக் கொண்டிருந்தோம்.
சமையல் செய்யவே இல்லை.
நான் மகளிடம் சொன்னேன் “என்ன பிள்ள இன்னைக்கு மத்யானம் சிக்கன் பிரியாணி சாப்பிடலாம்ன்னு நினைச்சேன். காலையில உடம்பு சரியில்லாம காரியத்த கெடுத்து விட்டுட்ட. சரியான மொக்கை நீ” என்றேன்.
“நீங்க வாங்கி சாப்பிடுங்கப்பா” என்றாள்.
“அது எப்படி உனக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் போது செண்டிமெண்ட்டா இருக்கும்லா” என்றேன்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ஆர்டர் பண்ணுங்க”
நான் மனைவியைப் பார்த்தேன். ஒருமாதிரி திருட்டு முழிமுழித்தார். முகத்திலேயே சிக்கன் பிரியாணி சாப்பிடும் ஆசை தெரிந்தது.
”ஹோட்டல் நம்பர் ஜஸ்ட் டயல்ல தேடுறேன்” என்று சொல்லி மொபைலை எடுக்கும் முன்னரே இதற்கு முன் சாப்பிட்ட உணவின் காலி டப்பாவை எடுத்து வந்தார் மனைவி.
அதில் நம்பர் இருக்கிறது. “ ஏ பிள நீயெல்லாம் ஒரு தாயா? “ என்றேன்.
மூவரும் சிரித்தோம்.
ஹோட்டலுக்கு போன் செய்து “ ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு பிளேன் பிரியாணி, ஒரு ஆந்திரா சிக்கன் சுக்கா” என்று ஆர்டர் செய்து கொண்டிருக்கும் போது மகளிடம் கேட்டேன்.
“உனக்கு என்ன வேணுமோ கேளு” என்றேன்.
“எனக்கு தயிர்சாதம்” என்றாள்.
ஒரு தயிர்சாதம் என்றேன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் உணவு வரும் முன் கடைக்குச் சென்று ஒரு செவன் அப் வாங்கி வந்தேன். காலையில் இருந்து அழுக்காக இருந்தேன் அல்லவா. சுத்தமாக குளித்து வந்தேன்.
குளித்து தலையை துவட்டும் போதே காலிங் பெல் அடித்தது. உணவு வந்து விட்டது. காசை கொடுத்து வேகமாக உடை மாற்றினேன்.
விருந்துக்கான டேபிளை எடுத்துப் போட்டேன்.
அனைத்து டப்பாக்களையும் திறந்தேன். வாசனை கமகமவென்று வந்தது. தட்டை எடுத்து வைத்தேன்.
மனைவியிடம் மகளிடமும் போய் “நீங்களா ரெண்டு பேரும் சாப்பிட வர்றீங்களா அல்லது இடுப்புல வெச்சி தூக்கிட்டு போகனுமா” என்று கேட்க இருவரும் வந்தார்கள்.
மகளுக்கு தயிர்சாதம் வைத்தேன். அவளோ பிரியாணியைப் பார்த்தாள். “உனக்கு பிரியாணி சாப்பிட மனசு இருக்கா” என்றேன்.
மெல்லமாக தலையாட்டினாள். ரைஸ் மட்டும் கொஞ்சம் வைத்தேன்.
”இப்படி சாப்பிடலாமா? என்றார் மனைவி.
“ஆமா இதுலதான் உலகம் தலையில விழுதாக்கும்” என்றேன்.
அதன் பின் மகள் பிரியாணி சாப்பிட்டு “ இப்பதான் நாக்கு நல்லாயிருக்கு” என்றாள்.
தயிர்சாதமும் சாப்பிட்டாள்.
மூவர் வயிறும் திருப்தியாக நிரம்பியது. செவன் அப்பை எடுத்து குடித்துக் கொண்டே மொபைலை நோண்டும் போது தூக்கம் வந்தது.
அவ்வளவுதான் வாழ்க்கை
ரொம்ப சிம்பிள்.
அப்படியே வாழ வேண்டியதுதான்.
No comments:
Post a Comment