Monday, 7 March 2016

காலில் விழுவது சரியா ?

ஒருமுறை அப்பா அம்மாவோடு சித்தி வீட்டுக்குப் போயிருந்தேன்.
அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.
அங்கே சித்தி பையனான என் தம்பிக்கு அன்றுதான் பிறந்த நாளாம்.
பிறந்த நாள் புது உடையை உடுத்தி தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா ஒவ்வொருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தான், நாங்கள் திடீரென்று போனதால் எங்களைக் கண்டு வெட்கமடைந்தவன் எதுவும் சொல்லாமல் நின்று விட்டான்.
அவனுக்கு வயது எட்டு தான்.
அதற்கிடையில் அவன் தாத்தா, பாட்டி, அத்தை, அப்பா எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள்.
“பெரியம்மா பெரியப்பா வந்திருக்காங்க நீ வாங்கன்னு சொன்னீயா. அவுங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு. போ” என்றார்கள்.
அவன் வெட்கத்தில் எதுவும் சொல்லாமல் நின்றிருந்தான். சொன்னதை செய்யாமல் இருந்ததால் மேலும் மேலும் திட்டு அதிகமாகியது.
திட்டு விழ விழ அவன் மேலும் தயங்கினான்.
அப்போது அப்பா “அதெல்லாம் வேண்டாம் நீ வாப்பா. இப்ப என்ன படிக்கிற” என்று அவனை இழுத்துக் கொண்டார்.
இருந்தாலும் நாங்கள் அன்று மாலை வீட்டை விட்டு போகும் வரை அவனை திட்டிக் கொண்டே இருந்தார்கள்.
பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற விஷயத்தை அவனுக்குள் திணிக்க ஆர்வமாய் இருந்தார்கள்.
இவ்வளவு சென்சிட்டிவாக இருப்பவர்கள் வீட்டில் என் சித்தி முதுகு ஒடிய தினமும் மூன்று கிலோ மாவை சப்பாத்தி தட்டி போட்டுக் கொடுப்பது பற்றி இன்சென்சிட்டிவாக இருப்பார்கள். அது பற்றி கவலையே படமாட்டார்கள்.
என் அம்மாவோ அப்பாவோ எனக்கு காலில் விழ கற்று கொடுத்ததே இல்லை.
வாழ்க்கையில் கல்யாணம் செய்து மற்றவர்கள் கட்டாயத்துக்காக முதன் முதலில் அப்பா அம்மா காலில்தான் விழுந்திருக்கிறேன்.
நண்பர் ஒருவர் அவர் அம்மா அப்பாவின் அறுபதாம் கல்யாணத்துக்கு அழைத்திருந்தார்.
நானும் போக ஆர்வம் காட்டினேன். போகும் போதுதான் அந்த விஷயம் கேள்விப்பட்டேன். அறுபதாம் கல்யாண ஜோடிகளின் காலில் விழுந்து அனைவரும் ஆசி வாங்குவார்களாம்.
அதைக் கேள்விப்பட்டதும் நடுங்கிவிட்டேன். கல்யாணத்துகு போவதையே நிறுத்திக் கொண்டேன்.
சம்பிரதாய பணிவு என்பது கிடையவே கிடையாது.
ஆனால் வேறு சில மதித்தலை அப்பா சொல்லிக்கொடுப்பார்.
சொல்லாமல் சொல்லிக் கொடுப்பார்.
சிறுவனாய் இருக்கும் போது கடைக்கு வந்த வயதான பாட்டி அப்பாவிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்
பாட்டி ஊரில் ஒரு மரம் பட்டுப் போய் இருக்குமாம். கோவில் கொடையில் சாமிக்கு பாயசம் வைச்சதும் அப்படியே பூப்பூவாய் பூத்து கொட்டுமாம். பாக்குறதுக்கு அழகா இருக்கும்” என்று அடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.
அப்பாவும் “ஆங் அப்படியா” என்று ஆச்சர்ய பாவனை காட்டி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பாட்டி போனதும் நான் அப்பாவிடம் பொங்கினேன்.
அது பொய் சொல்வதாகவும் அது சொல்வதை ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று கேட்டேன்.
“வயசானவங்க. அவங்க சொல்றத அவுங்க வீட்ல யாரும் கேக்க மாட்டாங்க. ஏதோ ஒரு ஆசைக்கு பேசுறாங்க. முறிச்சி பேசக் கூடாது. இப்ப அப்பா கேட்டேன்னா அந்த பாட்டிக்கு மனசுக்கு இதம்மாதான இருக்கும்” என்பார்.
சென்னை வந்த புதிதில் 18 வயதில் கொளத்தூரில் வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்பா முன்னால் ஏதோ ஒரு செடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே ஒரு வயதானவர். அதிக வயதான பெரியவர் வந்தார்.
எங்கள் தெரு முக்கில் ஒரு இரும்பு டேங்க் உண்டு. அது குடிநீர் தொட்டிதான்.ஆனால் அதில் தண்ணீரே இருக்காது.
அந்த தாத்தா அந்தத் தொட்டியைக் காட்டி “ இது எதுக்கு?” என்றார்.
நான் தெரியாமல்தான் கேட்கிறார் என்று நினைத்து “இது தண்ணி தொட்டி?” என்றேன்.
“அதான் இது எதுக்கு” என்றார்.
“இது தண்ணி கொட்றதுக்கு. தண்ணி ஊத்திட்டு போயிருவாங்க”
“அதான் இங்க எதுக்கு” என்றார்.
தாத்தா என்ன சொல்ல வந்திருக்கிறார் என்றால் இந்த தண்ணித்தொட்டியில் தண்ணீரே இல்லையே.இது இங்க இருந்து எதுக்கு. இத தூக்கி போட்ரலாமே” என்று சொல்ல வந்திருக்கிறார்.
தான் சொல்ல வந்தததை தெளிவாக சொல்லாமல் விரக்தியின் உச்சத்தில் ஒற்றை இரட்டை வார்த்தை வாக்கியமாக சொல்லியிருகிறார்.
ஆனால் அவர் சும்மா என்னை கிண்டல் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு குரலை உயர்த்தி
“உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்டுவிட்டேன். காயப்பட்ட முகத்தோடு பெரியவர் போய்விட்டார்.
அதை கவனித்த அப்பா நான் வீட்டுக்குள் நுழைந்ததும் பின்னாலே வந்தார்.
“ஏன் நீ அந்த தாத்தாக்கிட்ட சத்தமா பேசுன?’
“இல்ல அவரு சும்மா கடுப்பேத்துராரு”
“ஏ அவரு வயசென்ன உன் வயசென்ன அவரு ஆயிரம் கேள்வி கேட்டாலும் நீ பதில் சொல்லிதான் ஆகனும். இல்லன்னா பொறுமையா சொல்லி புரிய வெச்சிட்டு வரனும். நீ இப்படி கத்துனது அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல” என்று சர்ரென்று அந்த இடத்தை விட்டு போய்விட்டார்.
எனக்கும் அப்பாவுக்குமான உரையாடலின் தீவிரத்தில் அப்பாவை பலமுறை திட்டியிருக்கிறேன்.
நீங்க ஒரு முட்டாள், நீங்க ஒரு கிணற்றுத் தவளை, நீங்க ஒரு ஆணாதிக்கவாதி, நீங்க உண்மைய சந்திக்க பயப்படுற கோழை இப்படியாக பலதும் பேசிவிடுவேன்.
அப்பா கோபமே படமாட்டார். விவாதத்தில் அது சகஜம் என்பது அப்பா கொள்கை.
ஆனால் ஏதோ ஒரு வயதானவருக்கு தன் பையன் மரியாதை தராதது அவர் மனதை பாதிக்கிறது.
இப்போதெல்லாம் குழந்தைகள் இந்த மாதிரி காலில் விழுவது,
பள்ளிகளின் ஆசிரியரின் பாதத்தைக் கழுவி குரு பூஜை செய்வது என்று பல போலி மரியாதைகளை செய்ய பணிக்கப்படுகின்றனர்.
அப்படி செய்வதால் என்ன பணிவை கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று யோசிப்பேன்.
ஒன்றுமே நடக்காது. அது செத்துப் போன சடங்கு.
உயிர்ப்பாக பெரியவர்களை மதிக்க சொல்லிக் கொடுப்பது முக்கியமானது.
எதிரே இருப்பவர் பேசிக் கொண்டிருக்கும் போது அதை கவனிக்காமல் கண்களை அவர் கண்களை விட்டு எடுப்பது அநாகரீகம் என்றுதான் ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
காலில் விழுவதையோ, காலை கழுவி சந்தனம் பூசுவதையோ, அதிகப்படியான அடிமை உடல் மொழியையோ இல்லை.
எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு காலில் விழ மட்டும் கற்றுக் கொடுக்கவே கொடுக்காதீர்கள்.

No comments:

Post a Comment