Monday, 7 March 2016

பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை

அன்று பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை.
ஆனால் சோம்பலாக இருந்தது. காலையில் இருந்தே ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.
மனைவி விளக்கப் போனார்.
“இப்படித்தான் ஆண்களுக்கு திமிர வளக்குறீங்க. அது என் வேலை நான்தான் செய்வேன்” என்று அதை நிறுத்தினேன்.
எப்படியோ இரவு ஏழு மணிக்கு பிறகு ஆரம்பித்தேன்.
மொபைலில் ”ஊட்டி வரை உறவு” படத்தில் வரும் பூமாலையில் ஒர் மல்லிகை பாடலை வைத்தேன். இப்போது கொஞ்ச மாதங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்.
ஏனோ அதிகம் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் டம்ளர்களைத்தான் விளக்குவேன்.
சதுரங்கத்தில் சிப்பாய்கள் மாதிரி எனக்கு பாத்திரம் கழும் போது டம்ளர்கள் தெரியும். குக்கர் ராணி. டீ போடும் பாத்திரங்கள் யானை. இப்படியெல்லாம் தோன்றும்.
அப்போது பாடலில்
// சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ // வந்தது.
ச்ச என்ன இனிமை... இந்த ஆஆஆ ஹம்மிங் கொடுக்கும் இனிமை இருக்கிறதே... ம்ம்ம் செம...
நானும் அதை கூடவே பாடினேன்.இசைதான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் அழிக்க வல்லது.
ஒஷோ கூட இனிமையான இசை கேட்பது காமத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்தானே என்று நினைத்துக் கொண்டேன்.
’ஐயர் தி கிரேட்’ படத்தில் மம்முட்டி மனைவியுடன் கூடும் போது இசையை தவழ விடுவார்.நிச்சயமாக அது சாத்தியமில்லை என்று தோன்றியது.
இசை காமத்துக்கு எதிரானது அல்ல.ஆனால் காமத்தை விட அதிக இன்பம் கொடுப்பதாக இருக்கிறது.இப்படியாக யோசிக்கும் போது
“அந்தப் புத்தகம் எங்க இருக்கு” என்றொரு குரல் மனதில் கேட்டது.
ஆமா எங்க வெச்சேன். எங்கதான் வெச்சேன். என்று யோசிக்க பதட்டம் கூடியது.
பாத்திரம் கழுவுவதை பாதியில் விட்டுவிட்டு ஹாலுக்கு வந்து தேடினேன்.
மனைவி கேட்டார் “ என்ன தேடுறீங்க”
“இல்ல ஒரு புக்கு ’ஆடி மாதமும் வயலின் இசையும்’ ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு”
“சரி பாத்திரம் கழுவிட்டு வந்து பாருங்க என்ன இப்போ”
“லூசு மாதிரி பேசாத. அதப்பத்தி ஞாயித்துக் கிழம பேசனும்”
“படிக்கலையா என்ன?”
“படிச்சிட்டேன். இருந்தாலும் இன்னும் அதுல இன்னும் நிறைய பாக்கனுமில்ல. உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் இப்ப வீட்ட க்ளீன் செஞ்ச. நீதான் சுத்த வெறி புடிச்சி அலைவ. நீதான் அந்த புக்க எங்கயாவது தூக்கி வெச்சிருக்கனும்”
“இல்ல நான் வைக்கலியே. நா ஒரு புக்கு கூட இப்ப எடுக்கல”
“இல்ல எப்பெல்லாம் ஒரு புக்கு எனக்குத் தேவைப்படுதோ. அப்பெல்லாம் அது கிடைக்காது. அதுக்கு நீதான் காரணம். நீ உன்ன அறியாம எதோ செய்து வெச்சிர்ர”
“இதென்ன உளறலா இருக்கு”
“ஆமா உளறல்தான். எல்லாத்தையும் விளக்க முடியாது” என்று கத்தினேன்.
மறுபடியும் பாத்திரம் விளக்க வந்தேன்.
அங்கே பூமாலையில் மூன்றாம் முறையாக ஒடிக்கொண்டிருந்தது.
கேட்கவே எரிச்சலாய் இருந்தது. பாட்டும் மயிரும் என்று அணைத்து வைத்தேன். இப்போது பாத்திரங்கள் மேல் ஆத்திரம் வந்தது.
“டீத்தூள அரிச்சிட்டு அரிப்ப உடன கழுவி வையின்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏன் அதப் பண்ணல”
“மறந்துட்டேன்” என்று சிரிப்பாக ஒரு குரல் ஹாலில் கேட்டது.
கூடவே சேர்ந்து என் மகளும் சிரிப்பது கேட்டது.
என் மகள் ஒரு மாதிரியாக ஜால்ரா போட்டு அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவாள். ஏனென்றால் பாடம் சொல்லிக் கொடுப்பது என் மனைவிதான்.
அதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரம் இல்லாதவர்கள் காட்டும் பணிவு அது.
அடிமைகள் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.
அப்போது பாவைக்காய் பொரியல் பாத்திரத்தில் மிஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.
“ஏம்பா பாவைக்காய எடுத்து குப்பைகவர்ல போட்டு ஸின்க்ல போட வேண்டியதுதான”
அதற்கும் இரண்டு சிரிப்பொலிகள் கேட்டது.
அப்படியே எரிச்சலடைந்து கொண்டே விளக்கி முடித்தேன்.
குளிக்க வெந்நீர் வைத்தேன். அது சூடாகும் முன்னால் வந்து என் புக்கு என் புக்கு என்று வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.
அதிகாரத்தில் இருந்து வேதனைக்கு மாறுவதைப் பார்த்த மனைவியும் மகளும் பரிதாபப்பட்டார்கள். அவர்களும் கூட சேர்ந்து தேடினார்கள்.
ஒருவேளை நீங்கள் பாத்ரூமில் கூட வைத்திருப்பீர்கள் என்று தேடினார்கள். கட்டிலுக்கு அடியில்.டிவி அலமாரியில். பேப்பர் குவியலுக்கு நடுவே. எங்கேயும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு மனைவி அம்பேத்கர் புத்தகங்களுக்குள் தேடினார். அது அவ்வரிசையின் பின்னால் இருந்திருகிறது.
“இதப்பாருங்க இங்க வெச்சிருக்கீங்க. இத நானா வெச்சேன். சரியான மொக்க நீங்க” என்றார்.
புத்தகத்தைப் பார்த்ததும் அப்படியே ஆஃப் ஆகி மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிம்மதியானது.
உற்சாகத்தில் “என் அன்பே எந்தன் ஆருயிரே என்ற பாலிமர் டீவி ’உறவே உயிரே’ சீரியல் பாட்டைப் பாடினேன்.
அப்படியே பாடிக்கொண்டு குளிக்கப் போனேன். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
வெளியே வந்ததும் மகளை அழைத்தேன்.
“ஏ பிள இங்க வா”
“என்ன”
“ நீ ஏன் ப்ரிட்ஜுக்குள்ள வெச்சிருக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜ திறந்து பாத்த. அந்த அளவுக்கா தெரியாம இருக்கேன் நான். நக்கல்தான. நீ அப்படிப் பாக்கும் போது எவ்வளவு கடுப்பா இருந்துச்சி தெரியுமா”
என்று சிரித்தேன்
“ஒரு டவுட்டுதாம்பா” என்று அவளும் சிரித்தாள்

1 comment:

  1. சூழலைப் பொறுத்து மாறும் மனநிலைகள்.. சுவாரசியம்.

    ReplyDelete