Monday 7 March 2016

கேசரி பருப்பு...

ஒரு கிலோ துவரம் பருப்பு 180 ரூபாய்.
ஒரு கிலோ கேசரி பருப்பு 34 ரூபாய்.
இந்த கேசரி பருப்பு சாப்பிட்டால் Neurolathyrism அப்படிங்கிற நரம்பு சம்பந்தபட்ட கொடூரமான நோய்கள் வந்திரும்ன்னு 1961 ல இந்திய அரசு அத தடை பண்ணியாச்சு.
அப்புறம் 2008 ல மகாராஷ்டிர அரசு அவுங்க மாநிலத்துல அந்த தடைய நீக்குறாங்க.
2012 இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் என்ன சொல்லுதுன்னா கொஞ்சமா கேசரி பருப்பு எடுத்துகிட்டா ஒண்ணும் பிரச்சனை இல்ல அப்படின்னு சொல்லுது.
ஒருநாளைக்கு கால் கிலோ கேசரி பருப்பு வைத்து ஆறுமாசம் சாப்பிட்டா நரம்பு நோய்கள் வருமாம். ஆனா அதுக்கு கீழ எடுத்துகிட்டா ஒண்ணும் ஆகாதாம்( அது என்ன லாஜிக்குன்னு எனக்கு புரியல).
இன்னொரு பக்கம் கேசரி பருப்புல இருக்கிற பிரச்சனைகுரிய ODAP அளவ குறைச்சு புது வகையான கேசரி பருப்பு வகை வரப்போகுதாம்.அதனால பிரச்சனை இருக்காதுன்னு அரசாங்கம் நம்புது. Ratan, Prateek and Mahateora மூணு பிரச்சனையில்லாத பருப்பு வகைய அறிமுகப்படுத்தி இருக்காம்.
ஆனா இப்ப இருக்கிற மத்திய அரசால துவரம் பருப்பு விலைய கட்டுப்படுத்த முடியல. பிகார் தேர்தல்ல தோற்றுப் போனதுக்கு இந்த துவரம் பருப்பு விலை ஏறினதால மக்கள் அடைந்த அதிருப்திதான் காரணம்ன்னு பா.ஜ.க அரசு நினைக்குது.
அடுத்து வர்ற 2017 உத்திரபிரதேச தேர்தலுக்குள்ள இந்த கேசரி பருப்பு தடைய நீக்கி உள்ள கொண்டு வந்தா, பருப்பு தாராளமா அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும். அதன் மூலமா மக்கள் கோபத்துல இருந்து தப்பலாம்ன்னு மோடி நினைக்கிறார்.
இப்படி குழப்பத்துல இருக்கிறதால ’இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ ஒரு சோதனை செய்து பாத்துச்சாம். 60 ஆடுகள் எடுத்துகிட்டு அதுகளுக்கு நாலு மாசம் கேசரி பருப்பு மட்டும் கொடுத்து பாத்துச்சாம். நாலு மாசத்துக்குள்ளாரவே அதுல முப்பது சதவிகிதம் ஆடுகள் செத்து போச்சாம். அதெல்லாம் கேசரி பருப்புனால செத்து போச்சா இல்லையான்னு இன்னும் பிரச்சனை ஒடிட்டு இருக்கு.
2015 யில இன்னும் கேசரி பருப்புல பிரச்சனை இருக்குன்னு ’இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ சொல்லிருது.
ஆனாலும் பிரச்சனையில்லாத ODAP குறைக்கப்பட்ட பருப்புகளான Ratan, Prateek and Mahateora மீதான தடைய மோடி அரசு ஜனவரி 21, 2016 ஆம் ஆண்டு நீக்கிருது. (ஒரு மாசம் முன்னாடி).
எது ODAP குறைக்கப்பட்ட பருப்பு எது குறைக்கபடாத பருப்புன்னு எப்படி கண்டுபிடிக்கிறது. அதுக்கு எந்த தெளிவான திட்டமும் இல்லை.
ஏற்கனவே துவரம் பருப்பு கூட கேசரி பருப்பை கலப்படம் செய்கிறார்கள். இப்போது தடை நீக்கப்பட்டால் இன்னும் கலப்படம் அதிகமாகும்.
கேசரி பருப்பு தடை நீக்கப்பட்டால் அந்த விலை குறைந்த பருப்பை வாங்கி சாப்பிடுவது தாழ்த்தபட்டவர்களும், பழங்குடியினராகவும்தான் இருக்கும். முதல் பாதிப்பு அவர்களுக்குதான் வரும்.
இவ்வளவு அவசரமாக அரசு இந்த தடையை நீக்க வேண்டிய அவசியமென்ன?
இப்படி ஒரு செய்தியை மைலாப்பூர் தங்கவேல் பாத்திரக் கடைக்கு எதிரே இருக்கும் புத்தகக் கடையில் வாங்கின Down to Earth இதழில் வாசித்தேன்.
நாளையே கேசரி பருப்பு நாடெங்கும் பரவும். நம் நரம்பு மண்டலம் எல்லாம் பீஸாகிப் போகும். யாருக்கு என்ன கவலை. நேரடியாக போட்டுத் தள்ளினால்தான் நம்மை பொறுத்தவரை அது தவறு.
இது பற்றி நம்மைப் போன்ற இந்திய குடிமகன்களுக்கு ஏதாவது தெரியுமா? ஒன்றுமே தெரியாது. நாம என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று யாரோ ஒரு கோஷ்டியினர் ஜனநாயகம் என்ற பெயரில் முடிவெடுத்துவருகின்றனர். அது பற்றிய செய்தி கூட நமக்கு தெரியவில்லை.
இது பற்றியெல்லாம் நாம் யோசித்து விடக்கூடாது என்பதுதான் இப்போதைய மத்திய அரசின் கவனம். நம் கவனம் அனைத்தையும் இந்தியா, இந்திய தேசியக் கொடி, நாடு, பண்பாடு, தேசியம், அது இது என்று திருப்பிக் கொண்டிருக்கிறது.
நாமெல்லோரும் ’ரோஜா அரவிந்த்சாமி’ மாதிரி இந்திய தேசியக் கொடியை அழுது புரண்டு ஆவேசமாக காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது,
அங்கே நம் பிரதமர் இந்தியர்களுக்கு நாட்டுப்பற்றோடு கேசரி பருப்பு ஊட்டி விடுகிறார்.
நாடு என்பதை நிலம் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment