Monday, 7 March 2016

’க்ரீம் பன்’ வாங்கினேன்...

’க்ரீம் பன்’ வாங்கினேன்.
முக்கோண ரொட்டியை பிளந்து உள்ளே வெண்ணெயும் சீனியும் தேங்காயும் வைத்திருக்கிறார்கள்.
மேலே பப்பாளிக் காயை பதப்படுத்தி சீனிப்பாகில் முக்கி வெட்டப்பட்ட சிறு சிறு கலர் துண்டங்களை தூவியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பன்னையும் தனிதனி கவரில் அடைத்திருக்கிறார்கள்.
நேற்று மாலை அதில் ஒரு கவரைப் பிரித்து ஆளுக்கு பாதியாக பிய்த்து சாப்பிட்டோம்.
பன் காய்ந்திருந்தது. கெட்டுப் போகவில்லை. ஆனால் அதிகமாக வறண்டிருந்தது.
எனக்கு பன் மிக சாஃப்டாக இருந்தால் மட்டுமே பிடிக்கும்.
அப்படி சாப்பிடும் போது சிறுவயதில் படித்த Hot cross buns ரைம்ஸ் நினைவுக்கு வரும்.
எல்.கே.ஜியில் அந்த ரைம்ஸ் படிக்கும் போது புத்தகத்தில் இருக்கும் படத்தை பார்த்துக் கொண்டே இருப்பேன்.
அந்த ரொட்டி என்னவோ லண்டனில் தயாராகி கொண்டிருக்கலாம்.
ஆனால் நாகர்கோவிலில் இருந்து அந்த மென்மையை என்னால் நாலு வயதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அந்த மிருதுவான சூடான பன்னை தொட்டுப் பிய்த்து வாய்க்குள் போட்டு சுவைக்க முடிந்தது.
பிரேக்ஸ் இந்தியாவில் அப்பரண்டீஸாக இருக்கும் போது உணவு இடைவேளைக்கு பிறகு தினமும் ஒரு ஸ்னாக்ஸ் கொடுப்பார்கள்.
அப்படி ஒருநாள் நான்கு பன்கள் கொடுப்பார்கள். அம்மாவுக்கு அந்த பன் பிடிக்கும் என்பதால் அதை அன்பாக எடுத்து வந்து கொடுப்பேன்.
ஒருநாள் நானும் என் நண்பர் 54 வயது சூப்பர்வைஸரும் பேசிக்கொண்டிருந்த போது. அந்த பன்னைப் பற்றி பேசும் போது, அவர் ஏதோ சொல்ல வரும் போது நான் குறுக்கிட்டு ”என் அம்மாவுக்கு இந்த பன் ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னேன்.
அவர் சொல்ல வருவதை நிறுத்திக் கொண்டார்.
அவரை அதிகம் வற்புறுத்தி பேச வைத்த போது அவர் வீட்டு நாய்க்கு அந்த் ரொட்டியை கொடுப்பேன் என்றார். பின் இருவரும் சிரித்தோம். அம்மாவிடம் சொன்ன போது அம்மாவும் சிரித்தார்.
இதையெல்லாம் சொல்லிக் கொண்டே என் மனைவிக்கு அந்த பன்னை பிய்த்துக் கொடுத்தேன். ஒரு கடி கடித்து விட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்தார். நான் சாப்பிட்டேன். எனக்கும் தொண்டையில் தட்டியது.
”இதல்லாம் பாத்து வாங்க மாட்டீங்களா. ச்சாய்”
நான் செவன் ஜி ரெயின் போ காலனி நாயகன் மாதிரி பேசினேன்.
“ஹான் நான் பாத்துதான் வாங்குனேன். அந்த கடைக்காரங்கிட்ட கூட கேட்டேனே. இது நல்ல பன்னான்னு. அவன் நல்ல பன்னுன்னு சொன்னான்.அதான் வாங்கினேன்”
“கடைக்காரன்கிட்ட அவன் விக்குற பன் நல்ல பன்னான்னு கேட்டா நல்ல பன்னுதான் சொல்லுவான்.”
எனக்கு கோபம் வந்தது. ”அப்ப கவர கிழிச்சா பாக்க முடியும்?”
“அதத்தாண்டி அது ஒரு உள்ளுணர்வு இருக்கு. உங்களுக்கு அது வரவே வராது” என்றார் மனைவி.
இப்போது இரண்டரை பன் முன்னால் இருக்கிறது. இதை தூரப் போடாகூடாது.
ஏனென்றால் உணவை வீணாக்கக் கூடாதென்று அம்மா சிறுவயதிலேயே சொல்லி கொடுத்திருக்கிறார்.
அம்மா சொன்ன கதை வருமாறு
“ஒரு பையன் அவன் அம்மா கொடுத்த சாப்பாடு சரியில்லுன்னு சாப்பாடு தட்ட தட்டிவிட்டு வீட்ட விட்டு பாம்பேக்கு ஒடிப்போனானாம். பாம்பேல ஒரு ஹோட்டல் பின் பக்கம் வர்ற அழுக்குதண்னியில் இருக்கிற சோத்த அரிச்சி நல்ல தண்ணியில கழுவி அத கஞ்சி காய்ச்சி ஒரு பகுதி மக்கள் சாப்பிடுறத பாத்தானாம். அதப் பாத்து மனம் மாறி அம்மா கொடுத்த ரசம் சாதம் அமுதம்ன்னு அம்மா கால்ல விழுந்தானாம்”.
அந்தக் கதை மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டதால உணவுப் பொருள் மேல் எப்போதும் கவனம் இருக்கும்.
இரண்டரை பன்னில் அரை பன்னை அப்படியே மெல்லமாக கடித்து சாப்பிட்டேன்.
மின்னலே படத்தில் மாதவன் காதலி முன் கஷ்டப்பட்டு சிக்கன் சாப்பிடுவாரே அது மாதிரி.
அதன் பின் மற்ற வேலையை செய்ய செய்ய “எப்படிடா அந்த ரெண்டு பன்னையும் சாப்பிட” என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். திடீரென அந்த யோசனை வந்தது.
ஆம் அதிரடியாக இறங்க முடிவு செய்தேன்.
ஜி.டி நாயுடு என்ன செய்தாராம்.
அவருக்கு அப்பளமே பிடிக்காதாம். அதை சுகாதாரம் இல்லாத உணவு என்று நினைப்பாராம்.
அவர் வீட்டு விசேஷத்தில் சட்டி நிறைய அப்பளம் பொரித்து வைத்திருப்பதைப் பார்த்து கடுப்பானாராம்.
உடனே அந்த அப்பளங்களை எடுத்து மேலே தண்ணீரை ஊற்றினாராம். அப்பளங்கள் நனைந்து குளுகுளுத்து போயிற்றாம். அந்த கூழை எடுத்து வீட்டு பின் பக்கம் நிற்கும் வாழை மர மூட்டில் புதைத்து வைத்தாராம்.
வாழை அந்த வருடம் நல்ல ஆரோக்கிய காய்களை கொடுத்ததாம்.
அதுதான் அதிரடி.
அது மாதிரி நான் இன்று காலை. அந்த காய்ந்த பன்னை எடுத்து இட்லி தட்டில் நாலாவது தட்டின் மேல் வைத்தேன்.
அதை குக்கரில் வைத்து மூன்று நிமிடங்கள் அவித்து எடுத்தேன்.
பத்து நிமிடம் கழித்து எடுத்து இரண்டு பன்னையும் தட்டில் போட்டேன்.
ஆஹா பஞ்சு மாதிரி இருக்கிறது.
தொட்டால் சூடாய் அமுங்குகிறது.
எல்.கே.ஜியில் படித்த என் கனவு Hot cross buns ஐ கண்டுபிடித்து விட்டேன்.
எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு.
இது ஒரு சாதரண கண்டுபிடிப்பாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கலாம்.
ஆனால் எனக்கு என் புலன்களுக்கு என் மூளைக்கு என் மனதுக்கு இது இன்றுதான் தெரிகிறது. அதை அனுபவிப்பேன்
இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு காலை உணவாக அந்த இரண்டு பன்களையும் சாப்பிட்டேன்.
சுவை அருமை.
இனிமேல் பன்னை எங்கப் பாத்தாலும் அவிச்சி தின்றதுன்னு முடிவு பண்னியிருக்கேன்

No comments:

Post a Comment