Monday, 7 March 2016

இட்லி வடகறியுடன் அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்

காலையில் மகளுக்கு இட்லியும் வடகறியும் வைத்து ஊட்டி விட்டு கொண்டிருந்தேன்.
நான் ஊட்டுவது அவளுக்கு இஷ்டம். எந்த கலவையில் ஊட்டினால் சுவையாய் இருக்குமோ அப்படி ஊட்டுவேன்.
மீன் குழம்பு சாதம் என்று எடுத்து கொண்டால் முதலில் சாதத்தை சுட சுட பிசைந்து கொள்வேன்.
அதன் மேல் குழம்பை ஊற்றி, அக்கலவையை கொஞ்சம் எடுத்து,
அதில் குழம்பில் போட்ட மீனை கொஞ்சம் பிய்த்து வைத்து,
அடுத்து பொறித்த மீனை கொஞ்சமாய் பிய்த்து வைத்து, சிறு துண்டு ஆம்லெட்டை வைத்து கொடுப்பேன்.
நான் கொடுப்பதை நம்பி வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும் என்பதுதான் என் கண்டிஷன்.
முள் இருக்காது என்பதற்கு கூட உத்திரவாதம் கொடுப்பேன்.
அப்படி கொடுத்து கொண்டிருக்கும் போது இரண்டு வாய் போனதும் தண்ணீர் குடித்தாள். அடுத்து இரண்டு வாய் போனதும் தண்ணீர குடித்தாள்.
நான் ஆரம்பித்தேன்.
"உனக்கு செம பசி. உன் முன்னாடி நிறைய இட்லி இருக்கு. ஆனா குடிக்க தண்ணி இல்லை"
"ம்ம்ம்"
"உன்னால அந்த இட்லிய சாப்பிட முடியுமா?"
கொஞ்ச நேரம் யோசித்தவள். "சாப்பிடலாம்" என்று அரைகுறையாக இழுத்தாள்.
"அது எப்படி பிள்ள முடியும். இப்ப ரெண்டு வாய் வாங்கிரதுக்குக்கே மூணு தடவ தண்ணி குடிக்கிற. உனக்கு விக்காதா?"
"ஆமா விக்கும்"
"இது மாதிரி ஒரு பையனுக்கு நடந்திருக்கு. இப்ப இல்ல 80 வருஷம் முன்னாடி"
"எப்படி"
"ஒரு பையன் அவன் அண்ணனோட சேர்ந்துகிட்டு அவன் அப்பாவ பார்க்க போனானாம்"
"ம்ம்ம்"
"அவன் அம்மா அவனுக்கு சாப்பிடுறதுக்கு நல்ல சாப்பாடு செய்து கொடுத்தாங்களாம்"
"ம்ம்ம்"
"ஆனா தண்ணி கொடுக்கலியாம். வழியில யார் கிட்டயாவது வாங்கி குடிச்சிக்கன்னு சொல்லிட்டான்ங்களாம்"
"ம்ம்ம்"
"அந்த பையனும் அவன் அண்ணனும் சரி சாப்பிடலாம்ன்னு, குடிக்க தண்ணி வேணும்ன்னு வழியில ஒரு கிராமத்துல கேட்டாங்களாம்"
"ம்ம்ம்"
"அங்க யாரும் தண்ணி கொடுக்கல."
"ஏன்"
"ஏன்னு சொல்றேன். கேளு. சாப்பிட சாப்பாடு இருக்கு. ஆனா குடிக்க தண்ணி கொடுக்க மாட்டேன்குறாங்க. அதனால சாப்பிடவே முடியாம அந்த பையனும் அண்ணனும் நைட் எல்லாம் பசியோட அப்பா கிட்ட போய் சேர்றாங்க"
"ம்ம்ம்"
"நினைச்சு பாரு சாப்பிட சாப்பாடு இருக்கு ஆனா சாப்பிட முடியல. பாவம் இல்ல"
"ஆமா. ம்ம்ம். ஏன் அவருக்கு தண்ணி கொடுக்க மாட்டேங்குறாங்க"
"சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ 'Discrimination ' ன்னு ஒரு வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சிக்கணும். 'Discrimination ' னா 'பாகுபாடு' '
"ம்ம்ம்"
"இப்ப சும்மா சொல்றேன். ஒரு கதைக்கு.உன் கிளாசுல மிஸ் வந்து பையன்களுக்கு எல்லாம் சாக்லேட் கொடுக்குறாங்க. பொண்ணுங்களுக்கு கிடையாதுன்னு சொல்றாங்க. அது என்னது"
"அதெப்படி ரெண்டு பேருக்கும் கொடுக்கணும்"
"அப்படி கொடுக்கலன்னா. அதுதான் பாகுபாடு 'Discrimination '
"ம்ம்ம்"
"இப்ப அமெரிக்காவுல அந்த காலத்துல எல்லாம் கருப்பா இருக்கிறவங்கள வெள்ளையா இருக்கிறவங்க மதிக்க மாட்டாங்க. ட்ரைன்ல கூட ஏற விட மாட்டாங்க . அதாவது வெள்ளையா இருக்கிறவன் உசத்தின்னு பாகுபாடு காட்டுனாங்க"
"ம்ம்ம்"
"அது மாதிரி இந்தியாவுல அந்த காலத்துல உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு பிரிச்சு வைச்சி. தாழ்ந்த ஜாதிகாரங்களுக்கு தண்ணி கூட குடுக்காம அவமான படுத்தினாங்க"
"அந்த பையன் அப்போ தாழ்ந்த ஜாதியா.அதனாலதான் அவனுக்கு தண்ணி கொடுக்கலியா"
"ஆமா"
"அது தப்புதானே"
"ஆமா அது பாகுபாடுதான். அத்தான் அந்த பையன் பின்னால நல்ல படிச்சு பெரிய ஆளா வந்து அப்படி பாகுபாடு தப்புன்னு தட்டி கேட்டார்."
"ம்ம்ம்"
"தட்டி கேட்டு உரிமை வாங்கி கொடுத்தாரு"
"யாரு அது"
"அது நம்ம அம்பேத்கர்தான்"
"ஹா ஹா அம்பேத்கரா. எனக்கு அவர தெரியுமே. நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்களே.நம்மவீட்ல அவர் கேலண்டர் கூட இருக்கே"
"ஆமா அதே அம்பேத்கர்தான்"
இட்லி வடகறியுடன் அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்

1 comment: