Monday, 7 March 2016

மோர்க்களி

உங்க கடையில எந்த இடத்துல ’மோர்க்களி’ கிடைக்கும். அடையார், திருவான்மியூர்ல கிடைக்குமா? என்றேன்.
எதிர்முனையில் இருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் டோல் ஃப்ரீ அழைப்பில் இருந்த பெண் ”திருவான்மியூர்ல இருக்கும்” என்றார்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் போன் வந்தது. அதே பெண். “சார் தப்பா சொல்லிட்டேன். அங்க கிடைக்காது”
“அப்ப திநகர்ல கிடைக்குமா”
“அங்கயும் கிடைக்கும். ஆனா இன்னைக்கு கலாசேஷத்ரால கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டால் இருக்காம். அங்க இருக்குமாம்”
நன்றி சொல்லிவிட்டு, உடை மாற்றி விட்டு கலாசேஷாத்ரா நோக்கி நடந்தேன்.
போகும் வழியில் எங்கும் டீ குடிக்காமல் போய் கொண்டே இருந்தேன். இருபது நிமிடம் வேகமாக நடந்த பிறகு கலாசேஷாத்ராவை அடைந்தேன்.
அங்குள்ள செக்யூரிட்டியிடம் விசாரித்தேன்.
“அது புராகிராம் நடக்கிற இடத்துல இருக்கும்” என்றார்.
“என்னத்த புரோகிராம். நமக்கு மோர்க்களிதான் முக்கியம்”என்று மனதுக்குள் நினைத்தபடி நடந்தேன்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தேன். அங்கே அப்போதுதா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆட்கள் கடை போடுவதற்கு டேபிள் எல்லாம் அடுக்குகிறார்கள்.
அவர்கள் செட்டில் ஆகும் வரை அப்படியே பராக்கு பார்த்தேன். அங்கே ருக்மணி தேவி விழா நடந்து கொண்டிருந்தது. இன்று என்ன நிகழ்ச்சி என்று பார்த்தேன்.
Astad Deboo என்பவரின் மணிப்புரி நடன நிகழ்ச்சி என்பதை பார்த்ததும் உற்சாகமானேன். ஏதோ ஒன்று வித்தியாசமாய் இருக்கும் என்று திரும்பி பார்த்தேன். ஸ்டாலில் எல்லாம் எடுத்து வைத்து விட்டார்கள். கூட்டம் வருவதற்கு முன்னால் முந்தி ஒடினேன்.
“ரெண்டு மோர்களி குடுங்க” என்றேன்.
“70 ரூபாய்” என்றார்.
ஒரு தட்டில் நீள் சதுர வடிவான இட்லி மாதிரி எடுத்து வைத்தார்.
குஜராத்தி உணவான டோக்ளா இன்னும் கொஞ்சம் பளிங்கு மாதிரி இருந்தால் எப்படி இருக்கும் .அப்படி இருந்தது மோர்க்களி.
பொறுமையாக ருசித்து சாப்பிட்டேன். உள்ளே கிடக்கும் பருப்புகள் அதன் சுவையை கூட்டியிருந்தன. வந்த காரியம் முடிந்த திருப்தி மனதில் வந்தது.
அப்போது சத்யேந்திரா முகமுழுவதும் தாடியோடு நின்றிருப்பதை பார்த்து கம்பெனி சேர்த்துக் கொண்டேன்.அவரைப் பற்றி நிறைய பெருமையாக பேசிக் கொண்டார்.
கேட்டுக் கொண்டே இருந்தேன். சென்னை உலக திரைப்பட விழா பற்றி கேட்டேன்.
”The 100-Year-Old Man Who Climbed Out the Window” நல்ல படம் அதை மிஸ் பண்ணிட்டேன்” என்றார்.
“நான் பாத்துட்டேன் அது நல்ல படம் இல்லை” என்றேன்.
அவர் என்னை பார்த்தார்.
“ஒருவேளை நீங்க பாத்திருந்தா அதுல இன்னும் நுணுக்க்கத்த பாத்திருப்பீங்க” என்று சமாதானப்படுத்தும் வார்த்தை சொன்னேன்.
அது அவரை இன்னும் நக்கல் செய்வது போல ஆகிவிட்டதா என்னவென்று எனக்கு தெரியாது.
அரங்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஏன் இவ்வளவு சாம்பிராணி போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
கொசுவுக்காக என்று நினைத்துக் கொண்டேன்.வாசனைக்காக என்றால் அது தவறு. கார்பன் மோனாக்ஸைடான புகையை போல ஆபத்தானது மனிதனுக்கு எதுவுமில்லை.
நடன நிகழ்ச்சி ஆரம்பித்தது. மிக மெதுவாய் ஆரம்பித்தது. அடுத்த பதினைந்து நிமிடங்கள் போரடித்தது.
அதன் பிறகு சூடு பிடித்தது. பத்து மணிப்புரி இளைஞர்கள் வந்து நடனமாடினார்கள்.
மிஸ்கின் படத்தில் வித்தியாசமாய் டான்ஸ் ஆடுவார்களே, அது மாதிரி நாம் நினைத்து கூட பார்க்க முடியாத கோணத்தில் வைக்கப்படும் வித்தியாசமான அங்க அசைவுகள்.
சட்டை இல்லாத அந்த ஆரோக்கிய உடல்கள் சீறல்களை அந்த அதிரடி டிரம்ஸ் இசையில் பார்த்து தீரவில்லை.
அவ்வளவு ஆவேசமாக ரசிக்கும்படியாக ஆடினார்கள்.மனித உடலுக்குள் இவ்வளவு ஆவேசமா என்று வியப்பாகிவிட்டது.
இவர்கள் மாதிரி என்னாலும் ஆட முடியுமா? என்ற கற்பனை கூட செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
மிக நல்ல அனுபவமாக ஆகிவிட்டது.
அதில் ஒரு இளைஞனுக்கு 100 டிகிரி காய்ச்சலாம். அதையும் பொருட்படுத்தாது வந்து ஆடிக் கொண்டிருந்தான்.
நிகழ்ச்சி முடித்து வெளிவரும் போது மனம் திருப்தியாய் இருந்தது.
மோர்களியை தேடப்போய் அது இப்படி ஒரு மணிப்புரி நடன நிகழ்ச்சியை பார்க்க வைத்து பரவசப்படுத்தும் என்று நினைக்கவே இல்லை.
வயிற்றைத் தடவி அதற்கு ஒரு நன்றி சொல்லி வீடு வந்து சேர்ந்தேன்

No comments:

Post a Comment