பதினோரு வருடங்கள் முன்பு என் சீனியர் ஒருவரை உணவு வேளையில் 'ஓன்று இரண்டு' பேர் வம்பு இழுப்பார்கள்.
மீன் முட்டை போன்றவற்றை எடுத்து அவரிடம் நீட்டி "பாஸ் சாப்பிடுங்க, சாப்பிடுறீங்களா" என்று கேட்பார்கள்.
அவர் சிரித்து கொண்டே "வேண்டாம் பாஸ்" என்பார்.
அவருக்கு அசைவம் சாப்பிடும் பழக்கம் கிடையாது என்று தெரிந்து இருந்தும் அவரை இப்படி செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதற்கு முன் நான் 5 வருடங்கள் சைவமாக இருந்திருக்கிறேன். அப்போது என்னிடம் யாராவது அப்படி பேசினால் எரிச்சலாய் இருக்கும்.
இப்படி கிண்டல் செய்து கொண்டிருபவர்களை நான் எதுவும் சொல்ல முடியாது. அவர்களும் சீனியர்கள்.
சைவவாதி ஒருநாள் பார்த்தார்.
அதுமாதிரி கிண்டல் செய்யும் போது அவர்களைப் பார்த்து
"பாசு தப்ப எடுத்துகாதீங்க. தப்பா மட்டும் எடுத்துகாதீங்க. நீங்க இப்படி கிண்டல் பண்றது மாதிரி வேற யாராவது என்ன கிண்டல் செய்தானன்னு வெச்சுக்கோங்க. செருப்ப கழட்டி அடிப்பேன்." என்றார்.
அவர் அப்படி சொல்லி முடித்ததும் நான் அவருக்கு கை கொடுத்து விட்டேன்.
எனக்கும் அவ்வளவு ஆத்திரம். இப்போதும் சினிமாவில் சைவ உணவு பழக்கம் உடையவர்களை ஒரு மாதிரி நளினமாக மைதா மாவு மாதிரி காட்டுவதை எல்லாம் எதிர்க்கவே செய்வேன்.
சைவ உணவு பழக்கம் உடையவர்கள் பலசாலி இல்லை என்ற நக்கல் மொக்கையானது. முட்டாள்தனமானது
அதிலிருந்து நாலு வருடங்கள் போன பிறகு,
நான் அமெரிக்கா சென்று இருந்தேன்.
அங்கே என் நண்பர் "ரஸ்டி பீசா" என்று ஒரு உணவை அறிமுக படுத்தினார். பெரியதாக இருக்கும் பிசா அது .
அதன் மேல் மாட்டு கறியை பக்குவம் செய்து அழகான சிறு உருண்டைகளாக்கி நிறைய தூவி இருப்பார்கள். சாப்பிட்டால் நாக்கு சுண்டி இழுக்கும்.
ஒரு பிசா வாங்கி நானும் நண்பனும் பிரித்து கொள்வோம். நான் அதில் பாதி சாப்பிட்டு விட்டு குளிர் பெட்டியில் போட்டு விடுவேன்.
மறுநாள் காலை உணவுக்கு சூடு செய்து சாப்பிடுவேன்.
இது என்னுடன் வந்த தோழிக்கு பிடிக்கவில்லை.
என்னை அழைத்து
"நாம இந்து. நாம எப்படி மாட்டு கறி சாப்பிடலாம். நீங்க சாப்பிடாதீங்க விஜய்" என்று உரிமையுடன் சொன்னார்.
எனக்கு தர்ம சங்கடமாகி விட்டது.
ஏனென்றால் அவரை எனக்கு பிடிக்கும். ஆனால் சொன்னது பிடிக்கவில்லை. அதனால் சுற்றி சுற்றி அதன் பின் நேரடியாக அது என் உணவு பழக்கம். நான் என்ன உண்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். மாட்டு கறி உண்பதில் எனக்கு தயக்கம் இருப்பதற்கு காரணம் பழக்கமில்லை என்பதால்தான். கொள்கை அளவில் அதை வரவேற்கிறேன் என்பது மாதிரி சொல்லி அனுப்பி விட்டேன்.
அன்று அண்ணன் போன் செய்து நான் கிருஷ்ணகிரியில் படிக்கும் போது சிக்கன் வாங்கி சாப்பிட காசு இருக்காது. (அப்போது எங்கள் வீட்டில் வறுமை). ஒருநாள் மாட்டு கறி வறுவல் வாங்கி சாப்பிட்டேன். எவ்வளுவு அருமையான சுவை. இதைப் போய் இதனை நாளும் தவறாக நினைத்தேனே என்றெல்லாம் யோசிச்சேன் விஜய். அதுல இருந்து இப்ப வரைக்கும் மாட்டு கறி சாப்பிட்டுதான் இருக்கேன்" என்றான்(ர்).
இப்படியாக அடுத்தவர் உணவு பழக்கத்தை மதிக்கும் வழக்கம் எனக்கு இருந்தது.
ஆனால் இந்த சைவ உணவு உண்பவர்களுக்கு உள்ள கர்வம் அலாதியானது. மிக எளிதாக அடுத்தவர் உணவு பழக்கத்தில் மூக்கை நுழைப்பார்கள்.
"உடல் நலம்" என்ற போர்வையில் வருவார்கள்.
இதில் பிறப்பால் பிறந்துவிட்ட சைவர்கள் செய்யும் "பேரன்பு" மிகவும் கொடுமையானது.
இப்போதும் கூட ஒரு பிறப்பு சைவரோடு உணவகத்துக்கு சென்றால் "எங்கே அசைவம் ஆர்டர் செய்தால் அவருக்கு தர்மசங்கடமாகிவிடுமே என்று சைவம்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவேன்.
இத்தனைக்கும் அசைவ உணவின் அழுத்தமான ஆதரவாளன் நான். அசைவ உணவை ஒரு அருவருப்பு உணவு என்றும் அது உடல் நலத்துக்கு எதிரானது என்றுமான பிரச்சாரம் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் எழுந்து கொண்டு வருகிறது.
வள்ளலார், திருவள்ளுவர் போன்றவர்களின் அரைகுறை கருத்துக்களை இதற்கு எடுத்து காட்டாக சொல்கிறார்கள்.
அன்று இ.சி.ஆர் கோவளம் சென்று மீன் வாங்கும் போது வள்ளலார் மீது கோபம் வந்தது.
அவர் ஒரு பகுதி மீனவர்களையே சைவமாக்கினாராம்.
மீன் என்பது எப்பேர்பட்ட அருமையான உணவு.அது கடவுள் கொடுத்த கொடை.
சாதரணமாக நாகர்கோவில்காரன் குருசடி மீன் சந்தையில் மீன் வாங்கி ஆறுநாளும் மீன் மட்டுமே சாப்பிடுவான். ஏழாம் நாள் மீன் வேண்டாம் என்று சொல்லி விடுவான். அன்று அவன் கருவாடு சாப்பிடுவானாம்.
இந்த அறிவெல்லாம் வள்ளலாருக்கோ வள்ளுவனுகோ இல்லாமல் போனது நம் கஷ்டம் என்று சொல்லலாம்.
பழைய கம்பனியில் ஒரு அதிகாரி உண்டு . முழுக்க முழுக்க சைவ உணவு பழக்கம் கொண்டவர்.
ஆனால் மனிதர்களின் உணர்வை துளி கூட புரிந்து கொள்ள மாட்டார். நான் தினமும் அவரிடம் காரணமே இல்லாமல் திட்டு வாங்குவேன்.
சனிக்கிழமை வேலையே இருக்காது வரசொல்லுவார். சனி மாலை வீடு திரும்பும் போது மட்டும் ஒரே ஒரு சிரிப்பு சிரிப்பார்.
ஆனால் அலுவலகத்தில் எலி மாட்டினால் அதை கொல்ல மாட்டார்.அதை தள்ளி போய் விட்டு வரசொல்லுவார்.
ஒருவேளை சைவ உணவு அருளை கொடுக்கும் என்றால் அவர் வேறு மாதிரி இருந்திருப்பார். அது கொடுக்கவில்லை.
குவைத்தில் இருக்கும் போது ஒரு பாக்கிஸ்தானி டிராப்ஸ்மான் என்னிடம் மிக அன்பாய் இருப்பான்.
ஒரு குழந்தைப் போல உற்சாகமாய் பேசுவான். தினமும் எனக்காக சான்விச்சும் ஜூசும் வாங்கி வருவான்.
அவன் எதாவது நோக்கத்துக்காக அப்படி இருந்தானா என்று பார்ப்பேன்.
இல்லை அன்பாய் இருப்பது அவனுக்கு பிடிக்கும். அதை அவன் எங்காவது கற்று கொண்டானா. இல்லை. இயல்பாகவே அவன் அன்பாகத்தான் இருக்கிறான்.
அவன் அசைவம்தான் உண்பான்.
உணவு பழக்கத்துக்கும் மனிதனின் குணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதே ஒரு செல்லு படியாகாத பேச்சு.
ஒரு தட்டு சமைத்த கீரையும், ஒரூ தட்டு மாட்டுகறியும் ஒரே மதிப்பிலான உணவு. (கருத்து அடிப்படையில் ).
அதில் ஒன்றை விட ஓன்று எப்போதும் புனிதம் கிடையாது, சுத்தம் கிடையாது.
இரண்டும் சம உணவு.
அது ஒரு உணவு.
தீண்டாமை ஒரு பாவசெயல், மனிதத்தன்மையற்ற செயல், பெருங்குற்றம் என்று பாட புத்தகத்தில் அச்சிடபடுவது போல,
அடுத்தவர் உணவு பழக்கத்தை மதிக்க வேண்டும் என்று கூட அச்சடிக்கலாம்.
ஒருவேளை அது மாற்றத்தை உருவாக்கலாம்.
No comments:
Post a Comment