பழிவாங்கும் உணர்ச்சி என்பது தொடர்ச்சியான நிகழ்வு.
முடிவு பெறாத நிகழ்வு.
யாராவது ஒருவர் தன் தரப்பில் எதிராளியை மன்னித்து முடித்து வைப்பதைத் தவிர அதற்கு எந்தத் தீர்வும் கிடையாது.
அப்படி மன்னித்து முடித்து வைப்பது என்பது மனித ஈகோவுக்கு எளிதான காரியம் அல்ல.
பழிஉணர்ச்சி பற்றி எழுத்தாளர் பிரேம்சந்த் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
ஜிங்குர் என்பவன் கொஞ்சம் வசதியான தற்பெருமை கொண்ட விவசாயி. அவன் தன் அவ்வருடம் மிகப்பெரிய அளவில் கரும்பு சாகுபடி செய்யக் காத்திருந்தான்.
அப்போது அவ்வழியே கூட்டமாக ஆடுகள் மேய்ந்து செல்கின்றன. ஆடுகள் ஒருவேளை தன் கரும்புத்தோட்டத்தில் இறங்கிவிட்டால் தோட்டம் நாசமாகிவிடுமே என்று ஜிங்குர் பயப்படுகிறான்.
ஆட்டின் சொந்தக்காரனான புத்துவிடம் சொல்கிறான்.
புத்து ஆடுகள் உன் தோட்டம் அருகேதான் மேய்ந்து போகின்றன. உன் தோட்டத்துக்குள் வராது என்கிறான்.
புத்து ஆடுகள் உன் தோட்டம் அருகேதான் மேய்ந்து போகின்றன. உன் தோட்டத்துக்குள் வராது என்கிறான்.
ஆனால் ஜிங்குர் அதைக் கேட்காமல் கம்பை வைத்து ஆடுகளை விளாசுகிறான்.
சில ஆடுகள் மேல் காயம், சில ஆடுகளின் எலும்புகள் உடைகின்றன, சில ஆடுகள் இறந்து போகின்றன. புத்து அதைப் பார்த்து அமைதியாகப் போய்விடுகிறான்.
ஆனால் ஊர்மக்கள் ஜிங்குரை எச்சரிக்கிறார்கள் “புத்து மோசமானவன் அவன் உன்னை திரும்ப அடிப்பான்” என்கிறார்கள். ஜிங்குர் இதனால அச்சப்பட்டு புத்துவிடம் மன்னிப்புக் கேட்க அன்றிரவு புத்து வீட்டுக்குச் செல்கிறான்.
போகும் வழியிலேயே தன் கரும்புத்தோட்டம் தீப்பிடித்து எரிவதைப் பார்க்கிறான் ஜிங்குர். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒடிப் பார்க்கையில் சாம்பல் மட்டுமே எஞ்சுகிறது.
ஊர்மக்கள் இது புத்து வேலைதான் என்கிறார்கள்.ஆனால் ஆதாரம் இல்லை.
ஜிங்குர் ஒரு கன்றுக்குட்டியை வைத்து விவசாயத்தை சிறிய அளவில் செய்யும் அளவுக்கு ஏழையாகிறான்.
அவ்வப்போது காசில்லாமல் புத்துவிடம் வாங்கினாலும், புத்து மேல் அவனுக்கு பழி வெறி இருந்து கொண்டே இருக்கிறது.
புத்து நிறைய ஆடுகள் வளர்த்து பணக்காரனாகி பெரிய பூஜை செய்து ஊர்மக்களுக்கு விருந்து வைக்க விரும்புகிறான்.
விருந்துக்கு சில நாட்கள் முன்னர் புத்துவிடம் வரும் ஜிங்குர் “என் கன்றுக்குட்டியை உன் ஆட்டோடு வைத்து மேய்த்துக் கொள்.நான் வேறு வேலைக்கு போகிறேன்” என்று சொல்கிறான்.
புத்துவும் சம்மதிக்கிறான்.
புத்து விருந்து கொடுக்க நினைக்கும் போது புத்து வளர்க்கும் ஜிங்குரின் கன்றுக்குட்டியை யாரோ கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டதாக ஊர் பரபரப்பாகிறது.
அப்போது அங்கே வந்த ஜிங்குரின் நண்பன் ஹரிஹர் என்பவன், தான் புத்து கன்றுக்குட்டியை கயிறால் கொன்றதை கண்ணால் பார்த்ததாக பொய் சாட்சி சொல்கிறான்.
பசு வதை கொடிய குற்றமாக உள்ள அவ்வூரில் புத்துவுக்கு கடும் தண்டனைக் கொடுக்கிறார்கள்.
பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். ஏழு திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும். நிறைய அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஊர்மக்கள் கொடுத்த தண்டனையை செய்து முடிக்கும் போது காசில்லாமல் அவனிடம் இருக்கும் ஆடுகளையெல்லாம் விற்றான் புத்து. ஏழையாகிப் போகிறான்.
ஜிங்குர் வைத்திருந்த ஒரே கன்றுக்குட்டியும் இறந்துவிட்டது.
ஜிங்குருக்கும் கையில் காசில்லை.
புத்துவுக்கும் கையில் காசில்லை.
புத்துவுக்கும் கையில் காசில்லை.
ஜிங்குரும் புத்துவும் கூலியாளாக ஒரு சிமெண்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறார்கள்.
நாளெல்லாம் கடுமையாக உழைத்து கவலையோடு தூங்கப் போகும் போது
புத்து “என்னை மன்னித்து விடு ஜிங்குர்.நான் தான் உன் கரும்புத்தோட்டத்தை எரித்தேன்” என்றான்.
“எனக்கு அது தெரியும். அதனால்தான் நானும் ஹரிஹரை வைத்து என் கன்றைக் கொல்ல சொல்லிவிட்டு உன் மேல் பழியைப் போட்டேன். என்னை நீ மன்னித்து விடு” என்கிறான் ஜிங்குர்.
“எனக்கு அது தெரியும்” என்கிறான் புத்து.
இப்போது இருவரும் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் தூங்கிப் போகிறார்கள்.
பழி உணர்ச்சி எதையும் கொடுக்காது. நஷ்டத்தைத் தவிர.
என்கிறார் ஆசான் பிரேம்சந்த்..
No comments:
Post a Comment