Friday, 7 August 2015

ஆத்மார்த்தியின் ஒயிலா சிறுகதை பற்றி...

எழுத்தாளர் ஆத்மார்த்தி எழுதி இந்த மாதம் உயிர்மையில் வெளிவந்திருக்கும் ‘ஒயிலா’ என்ற சிறுகதையைப் படித்தேன்.
தன் அந்தரங்கத்தை பகிர்வதற்கு ஆள் கிடைக்காத பிரபலத்தின் ஆள் மனம், அதற்கான நட்பை எப்படி தயார் செய்கிறது என்பது பற்றிய கேள்வியை அடிப்படையாக கொண்ட சிறுகதை.
எடுத்துக் கொண்ட கரு எனக்கு பிடித்திருக்கிறது.
கதையின் கட்டமைப்பிலும், கதைக்கு அவர் எடுத்துக் கொண்டிருக்கும் மொழிநடையிலும் எனக்கு கொஞ்சம் பிடித்தமில்லை.
சிறுகதைக்கு அவர் எழுதிய ஸ்கிரீன் பிளே சலிப்பூட்டும் விதமாக இருக்கிறது. எந்தக் காட்சியை முதலில் வைக்க வேண்டும். எதை இரண்டாவது வைக்க வேண்டும் என்பதில் குழம்பியிருக்கிறார்.
ஒயிலா என்று கதையின் தலைப்பைச் சொல்லியாகிவிட்டது.
அடுத்தது கதையின் முதலில் ரஞ்சன் என்ற சினிமா நடிகர் கேரக்டரை அறிமுகப்படுத்தியாகிவிட்டது.
ரஞ்சன் ஒயிலாவை நினைத்து உருகி வெடிக்கப் போகிறார் என்று வாசகனுக்கு முதலிலெயே தெரிந்து விடுகிறது. அப்படியானால் ரஞ்சன் ஒயிலாவை நினைத்து உருகும் காட்சியை எப்படி உருக உருக எழுதியிருக்க வேண்டும்.
அப்படியான உருக்கத்தை அந்த இடம் கொடுக்கவில்லை.
டிடியில் முன்பு போடும் செவ்வாய்க் கிழமை நாடகம் போன்று அக்காட்சி அமைந்து விட்டது சிறுகதைக்கு தொய்வாகும்.
அடுத்து ஆத்மார்த்தி இந்தசிறுகதைக்கு எடுத்துக் கொண்ட மொழிநடையில் சுத்தமாக எனக்கு உவப்பில்லை.
ரஞ்சனின் சீரியஸான துன்பமான மனதையும், பரமேஷின் பயத்தையும் வெளிக்கொணர இப்படியான மிக மிக நேரடியான மொழிநடையை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு ஆச்சர்யம்.
சிறுகதையின் நடு நடுவே வரும் ஒஷோத்தனமான, ஃப்ராய்டுத்தனமான, இந்திரா பார்த்தசாரதித்தனமான சிறு நறுக்ஸ்கள் படிக்க சுவாரஸ்யம்.
உதாரணமாக
/ நோயாகவும் மருந்தாகவும் ஒரே சமயத்தில் இருப்பது இசை/
/எந்த விஷயம் பிடிப்பதற்குமே ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்தால் அது அபத்தம். அதி ஏதோ ஒரு அதிமுக்கிய காரணம் மட்டும்தான் நிஜமா இருக்க முடியும்/
/ பயணத்தையும் இசையையும் வைத்து ஆத்மார்த்தி எழுதியிருக்கும் இடங்கள்/
இப்படி சில இடங்களைச் சொல்லலாம்.
கதையின் பாடுபொருள்
கதையின் கட்டமைப்பு
கதையின் மொழித்திறன்
என்ற இம்மூன்றில் கட்டமைப்பும், மொழியும் சுமாராக இருந்தாலும் கதையின் பாடுபொருள் மிக முக்கியமானதாகவும் அர்த்தமானதாகவும் தெரிவதால் மற்ற இரண்டு குறைபாடுகளையும் தாண்டி நல்ல கதையாகவே எனக்கு தெரிகிறது.

No comments:

Post a Comment