வியாழக்கிழமை காலை
பாலும் முட்டையும் கலந்த கலவையில் நனைக்கபட்டு வேகவைக்கப்பட்ட பிரட்களில் ஐந்து எண்ணத்தை சாப்பிட்டுவிட்டேன்.
அது வயிற்றில் உப்பிக் கொண்ட உணர்வு.மதியம் சாப்பிட மனசில்லாமல் போயிற்று. சாப்பிடாமல் ஒரு கப் கிஸான் ஆரஞ்சு ஜூஸைப் பருகி பொழுதைப் போக்கினேன்.
ஒரு வித சோம்பலாகவும் எரிச்சலாகவும் இருக்க திடீரென்று எழுந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். வீட்டின் முன்பக்கத்தை கழுவி விட்டேன். பாத்திரத்தை கழுவினேன்.
சூடாக வெந்நீர் போட்டு கொதிக்க கொதிக்க குளித்தேன்.மாலை ஐந்து மணியாகியிருந்தது.
டிரஸ் செய்துவிட்டு “கொஞ்சம் வெளிய ரவுண்ட் அடிச்சிட்டு வர்றேன். காலையில இருந்து வீட்ல இருக்கிறது போரடிக்குது” என்று சொல்லி கிளம்பினேன்.
எங்கே போவதென்று தெரியவில்லை. அடையார் டிப்போவுக்கு ஒரு பஸ் பிடித்து வந்தேன்.
அங்கே ஒரு பாடப்புஸ்தகம் விற்கும் கடையின் வெளியே கொஞ்சம் பொதுபுஸ்தகம் பரப்பி இருந்தார்கள். அதை நின்று வேடிக்கைப் பார்த்தேன்.
அதில் துளிர் ஆசிரியர் ஏற்காடு இளங்கோ எழுதிய சிறுவர்களுக்கான அறிவியல் புஸ்தகங்கள் அருமையானதாக இருந்தன. அதில் குரங்கில் இருந்து மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தான். அதற்கு இடைப்பட்ட குரங்கு வகைகளைப் பற்றிய தொகுப்பு ஒன்று இருந்தது. அதை ரொம்ப நேரம் புரட்டினேன்.
யார் இந்த ஏற்காடு இளங்கோ? இவரிடம் போனில் பேசி நேரில் சந்திக்கலாமே என்று தோன்றிற்று. போன் நம்பர் இருக்கிறதா என்று புஸ்தகத்தைப் பார்த்தேன். இல்லை.
அறுபது ரூபாய் கொடுத்து வாங்கி கையில் வைத்து இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் அங்கே ஒரு பஸ் நிற்கிறது.
பிளாட்பாரத்தை உடைத்தபடி நின்று கொண்டிருக்கிறது. பஸ்ஸைச் சுற்றிலும் போலீஸ் பொதுமக்கள். அந்த பதட்டம் எனக்குள்ளும் வந்தது. என்ன என்று விசாரிக்க “பஸ்ஸ மேல விட்டுட்டான்” என்றார் ஒருவர்.
”என்னாச்சு யாருக்கு அடி. உயிருக்கு” என்று சொல்லும் போதே “ஒரு வயசான பாட்டி ஆள் ஸ்பாட் காலி” என்றார்கள்.
நான் கூட்டத்தை விலக்கிப் பார்க்கும் போது ஒரு உடலின் கைகள் மட்டும் வெளியே நீண்டுக் கிடக்க அதன் தொடர்ச்சியான உடலை நீலக்கலர் பிளாஸ்டிக் பாயை வைத்து மூடியிருந்தார்கள். பயங்கர அதிர்ச்சி எனக்கு. அப்படியே உறைந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்னும் சிலர் மொபைலில் போட்டொ எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றேன். “இன்னும் மூணு நாலு பேருக்கு சீரியஸ்” என்று பேசிக்கொண்டார்கள்.
மனம் படபடப்பாக இருந்தது. அப்படியே வேக வேகமாகச் சென்று பெசண்ட் நகர் செல்லும் சாலையின் தொடக்கத்தில் இருக்கும் கோவை பழமுதிர்சோலையின் அருகே போய் நின்று கொண்டேன்.
உடம்பில் ஏதோ நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்காவது போன் செய்து இதைப் பேசலாமா என்று நினைத்தேன். வேண்டாம் என்று கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அப்படியே நின்றேன். படபடப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது.
“நான் இன்று போஸ்ட்மார்டம் செய்யபோகும் உடலுக்குச் சொந்தக்காரர் யார்?” என்று ஒரு டாக்டர் எழுதுவதாக ஒரு விடலைப் பருவ கவிதை எழுதியிருப்பேன். அது ஞாபகத்துக்கு வந்தது.
காலையில் சாப்பிட்டது. மாலை தாண்டியதால் பசி அதிகமாகியது.
பக்கத்தில் சய்டூன் ரெஸ்டாரண்ட் இருக்க, அதில் நுழையலாமா வேண்டாமா என்று ரொம்ப நேரம் யோசித்தேன். பின் நுழைந்து சாப்பிட உட்கார்ந்தேன்.
என்னைத் தவிர இரண்டு இளம்பெண்கள் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத்து இருக்கையிலும் அமரவில்லை, தள்ளியும் அமரவில்லை நடுவாப்பில் அமர்ந்து கொண்டேன்.
அரை பார்பிகியூ கோழியும், ஒரு லைம் ஜூஸும் ஆர்டர் செய்து விட்டு “ சிக்கன் எப்ப வருதோ அப்பத்தான் ஜூஸும் வரணும். நான் சிக்கன் சாப்பிட்டு சாப்பிட்டு ஜூஸ் குடிக்கனும்” என்று புரியவைத்தேன்.
பொதுவாக எனக்கு பொட்டு வைக்காத பெண் நெற்றிப் பிடிக்காது. ஆனால் அந்த இளம்பெண்களில் ஒரு பொட்டு வைக்காத நெற்றி ஒருவிதமான பளபளப்பாக அழகாக இருந்தது. அவர் அவ்வப்போது முடியை ஒதுக்கி விடும் போது தெரியும் அந்த முழுமையான நெற்றி அழகாய் இருந்தது.
அதிகம் வெறிக்காமல் பரிணாம வளர்ச்சி குழந்தைப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.
சிக்கனும் ஜூஸும் வந்தது. அதைப் தின்றபடி ஜூஸைப் பருகியபடி புஸ்தகத்தையும் வாசித்தேன். எனக்கு பரிமாறிய சர்வருக்கு குரங்கள் படம் பார்க்கப் பிடித்திருந்தது போலும். அவரும் கொஞ்சம் தள்ளி என் புத்தகத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
பொறுமையாக சிக்கனை சாப்பிட்டு முடித்தேன். வீட்டுக்கு தந்தூரி ரொட்டியும், கடாய் பனீரும் பார்சல் வாங்கிக் கொண்டேன்.
ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தேன்.
அங்கே பூ விற்கும் மத்திம வயது பெண் தனியாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று மேல் விவரம் கேட்கலாம் என்று “இங்க ஆக்சிடண்டாமே” என்றேன். அப்பெண் “ஆமாங்க” என்று அழுவது மாதிரி முகத்தை வைத்து பேசத்தொடங்கினார்.
பதினைந்து நிமிடம் அவரிடம் நெகிழ்ச்சியாக வாழ்க்கையின் நிலையாமை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் இடுப்பில் ஏதோ ஒரு நகைக்கடையின் தட்டையான பர்ஸ் ஒன்று சொருகியிருந்ததும் என்னை ஈர்த்தது. எப்படி இப்படி சொருகியிருக்கிறார். ஒருமாதிரி எரிச்சலாய் இருக்காதா? என்றெல்லாம் தோன்றியது.
வீட்டுக்கு வந்து மனைவி சாப்பிட்ட பிறகு விசயத்தைச் சொல்லி வருத்தப்பட்டேன்.
பின் மகளிடம் விளையாடினேன். அவள் வகுப்பு விளையாட்டு விளையாடுவாள். அதில் நான் “ஸார்” ஆக நடித்தேன். அவளுக்கு தூரம், நேரம், வேகம் இம்மூன்றுக்கும் உள்ள தொடர்பு பற்றி எளிமையாக விளக்கினேன். புரிந்து கொண்டாள்.
மனைவியிடம் அதிகம் பேசவில்லை.
தூங்கும் போது மகளுக்கு ரஸ்கின் பாண்ட் எழுதிய கதை ஒன்று சொன்னேன். நான் மனைவி மகள் மூவரும் தூங்கிப் போனோம்.
இரவு இரண்டு மணிக்கு முழிப்பு தட்டியது.
சோடியம் வேப்பர் விளக்கின் மஞ்சள் ஒளி ஜன்னல் கண்ணாடியில் தெறித்தது. பார்த்துக் கொண்டே இருந்தேன். பஸ்ஸ்டாப்பில் பார்த்த வயதானவரின் கை ஞாபகத்துக்கு வந்தது.
அந்தக் கை பிஞ்சாய் இருந்து வளர்ந்து பின் தள்ர்ந்திருக்கும் என்பது போல பல அடுக்கு எண்ணங்கள் என்னைச் சுற்றின.
எனக்கு மூச்சு முட்டியது.
என் மகள் அருகே சென்று அவளை அணைத்துக் கொண்டேன். அவளுக்கு கச்சா முச்சாவென்று புழுக்கம் போலும். என்னைத் தவிர்த்தாள்.
எங்கள் வீட்டில் மனிதர்களை கட்டிக் கொண்டு தூங்குவதை விட தலையணைகளை கட்டிக் கொண்டு தூங்குவதைத்தான் நாங்கள் அனைவரும் விரும்புவோம்.
எனக்கோ மூச்சு முட்டல் அதிமான உணர்வு.
போய் என் மனைவி அருகே படுத்துக் கொண்டேன்.
அவளுக்கு என் முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டேன். “என்னை அணைத்துக் கொள்” என்றேன்.
அவளுக்குப் புரியவில்லை. தவிர்த்தாள். “உன் கையவாவது கொடு “என்றேன்.
கொடுத்தாள்.
அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.
“கொஞ்ச நேரம் கையை எடுக்காத ப்ளீஸ்” என்றேன். அப்படியே கைகளைப் பிடித்துத் தூங்கிப் போனேன்.
தனிமையில் வாழ்வதும்,
தனிமையில் மூச்சு விடுவதும்,
தனிமையில் தத்தளிப்பதும்
மனிதனால் முடிவே முடியாத காரியங்கள்
என்பதை
வாழ்க்கையில் இன்னுமொருமுறை புரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment