Friday 7 August 2015

ஈயென இரத்தல்

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
பள்ளியில் படித்த இப்பாடலில் அர்த்ததை ஒரு வித்தியாசமான சம்பவத்தில் புரிந்து கொண்டேன்.
ஐந்து வருடம் முன்னர் ஒரு நாள் பாரிமுனையில் பஸ்ஸடாண்டில் வெட்ட வெயிலில் நின்று கொண்டிருந்தேன்.
தாகமாக இருந்தது. பக்கத்துக் கடைக்குச் சென்று டின் ஃபேண்டா ஒன்று வாங்கி வந்து உடைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.
இந்த டின்னில் இருக்கும் குளிர்பானங்களை பலர் பார்க்க உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கும்.
அப்படி ஆத்தலாக உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று என் கையையை யாரோப் பிடித்தார்கள். அந்த டின் ஃபேண்டாவின் அடிப்பகுதியையும் அதைப் பிடித்திருந்த என் கையையும் சேர்த்துப் பிடித்தது ஒரு சிறுவன்.
அழுக்குச் சட்டை, அழுக்கு டிரவுசர் அணிந்த மெலிந்திருந்த சிறுவன். ஆள்தான் பார்க்க சோர்வாய் இருந்தானே தவிர பிடி ரொம்ப அழுத்தமாக இருந்தது.
அந்த ஃபேண்டாவை அவனுக்குக் கொடுத்துவிடும் படி கெஞ்சிக்கொண்டே பிடித்து இழுக்க ஆரம்பித்தான். பஸ் ஸ்டாண்டில் பலர் பார்க்க அவன் அப்படி செய்தது எனக்கு கூச்சமாக இருந்தது.
என்னுடைய கூச்சத்தையே அவன் பயன்படுத்திக் கொள்கிறான் என்று நினைக்கும் போது கோபம் வந்தது. விநாடி நேரத்தில் அவனிடம் இருந்து ஃபேண்டாக் கேனையும் கையையும் திருகி எடுத்துக் கொண்டேன்.
என் வேகம் கண்டு என்னை விட்டுவிட்டான். அந்த வேகத்தில் இரண்டு எட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டேன். நான் ஜெயித்து விட்டேன். அவன் கெஞ்சும் குரலைக் குறைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இப்போது ஜெயித்தாலும் அதிக வெறுமையாக உணர்ந்தேன். என்னடா வாழ்க்கை இது என்று சலிப்பு வந்தது. அந்த ஃபேண்டாக் கேனை அதற்கு மேல் ருசித்துக் குடிக்க முடியும் என்று தோன்றவில்லை.
மறுபடி அதை அந்த ராஸ்கல் சிறுவனிடம் நீட்டினேன். அவன் அதை வாங்கிக் கொண்டு பொறுமையாக உறிஞ்சிக் கொண்டு நடந்து சென்றான்.
- அந்தப் பயலிடம் அப்படியே குளிர்பானத்தை விட்டுக் கொடுத்திருந்தாலும் என் மனம் சமாதானம் ஆகியிருக்காது
- அதைப் பிடிங்கி குடித்தாலும் வெறுமையாய் இருக்கிறது.
- பிடிங்கி மறுபடியும் கொடுத்தால் அதுவும் எரிச்சலாய் இருக்கிறது.
இருந்தாலும் கேட்டு கொடுக்க வில்லை என்றால் அதில் ஒரு இழிவு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்தான்

No comments:

Post a Comment