Friday 7 August 2015

Listen Carefully

ஒரு பேச்சை கவனித்தல்(Listening) என்பதை பல நேரங்களில் சரிவரச் செய்யாமல் பின்னர் திணறுவோம்.
எதிராளியையும் திணற வைப்போம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த கவனித்தல் பற்றி சொல்லும் போது
“நான் என் மகளிடம் தெளிவாக சொல்லியிருந்தேன்.
நீ உன் தோழி வீட்டுக்கு இன்றிரவு போகலாம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் உன் தோழியை நம் வீட்டுக்கு இரவு கூட்டி வராதே.
இங்கே உறவினர்கள் வருகிறார்கள் அவர்களுக்கே அறை இல்லை. உன் தோழியும் வந்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்று. அதைக் கேட்டுக் கொண்ட என் மகள்,
ஆனால் இரவு ஆனதும் தோழி வீட்டில் இருந்து எனக்கு போன் செய்து தன் தோழி ஷெல்லியின் பெயரைச் சொல்லி தங்க அழைத்து வருவதாகச் சொன்னாள்.
நான் வேறு அங்கு போய் கூட்டி வரவேண்டுமாம். நான் முடியாது முடியாது என்று போனில் கத்தினேன்.
என் மகளை மட்டும் அழைத்து வர என் தோழி வீட்டுக்குச் சென்றேன்.
அங்கே என் மகளின் தோழியின் அம்மா என்னை வரவேற்று “உங்கள் மகள் என் வீட்டில் தங்குவதில் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதா?” என்று கேட்டார்.
நான் ”இல்லையே” என்றேன்.
அப்போது அங்கே வந்த என் மகள் “அப்பா நான் போனில் இங்கே தங்குவதாக சொன்ன போது வேண்டாம் என்று கத்தினீர்கள். இப்போது சரி என்கிறீர்கள்.ஏன்? “ என்றாள்.
நான் குழப்பத்தோடு “இல்லையே உன் தோழிதானே நம் வீட்டுக்கு உன்னோடு வருகிறாள் என்று சொன்னாய். அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்” என்றேன்.
அதற்கு என் மகள் “ அப்பா நான் பேசி முடிக்கும் முன் வேண்டாம் வேண்டாம் என்று கத்துவதற்கு உங்கள் மூளையை தயார் செய்த அளவுக்கு நான் என்ன பேசகிறேன் என்று கேட்க நீங்கள் ஆர்வம் காட்டவில்லை. முதலில் Listening கற்றுக்கொள்ளுங்கள் அப்பா” என்றாள்.
நான் அன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்.
எங்கள் வீட்டில் குடும்பத்தோடு ஒருமுறை மெகாமார்டுக்கு சென்றிருபோது அங்கிருந்த பாடி ஸ்பிரேவை எடுத்து என் மகள்
“அப்பா நா இத எடுத்து விளையாட” என்று வாக்கியம் பாதி சொல்லும் போதே,
நான் மெலிதாக அவள் காதைத் திருகி “ஏ பிள தனியா இருக்கும் போது பாடி ஸ்பிரே கூட விளையாட கூடாதுன்னு எத்தனை நாள் சொல்லியிருக்கேன். திடீருன்னு கண்ணுல பட்டுச்சுன்னா ஆபத்து” என்று கத்தினேன்.
அதற்கு என் மகள் அழும் தொனியில் “நான் விளையாட மாட்டேன்னுதான் சொல்ல வந்தேன்.அதுக்குள்ள திட்றீங்க”
என்றாள்.
எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. வாக்கியத்தை முடிக்கும் முன் என் மனம் முன்முடிவுகளோடு அதுவே வாக்கியத்தை முடித்து தேவையில்லாத தண்டனையும் கொடுக்கத் தயாராகிவிட்டது கண்டு வருந்தினேன்.
பலமுறை அவளிடம் மன்னிப்புக் கேட்டேன்.
அதன் பிறகு ரொம்ப நாள்வரை அவளுக்குத் தோனும் போதெல்லாம் என் அந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி ஒரு அடி அடித்துவிட்டுப் போவாள்.
நான் வாங்கிக் கொள்வேன்
Listen Carefully

No comments:

Post a Comment