Friday, 7 August 2015

ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘புலி எனது நண்பன்’

ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘புலி எனது நண்பன்’ என்ற சிறுவர் கதையின் மிகச்சிறிய சுருக்கம்.
அந்த காட்டை இரண்டாகப் பிரிப்பது ஒரு ஆறு. ஆற்றின் அந்தப் பக்கம் அடர் காடு. இந்தப் பக்கம் காடும் மனிதர்கள் குடியிருப்பும் இருக்கின்றன.
இந்தப் பக்க காட்டில் மொத்தம் 40 புலிகள் இருக்கின்றன. அதில் 39 புலிகளை பணக்கார வேட்டைக்காரர்கள் பெருமைக்காக வேட்டையாடி கொன்று விடுகின்றனர்.
ஒரே ஒரு வயதான புலி எஞ்சி இருக்கிறது.
அந்தப் புலி மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கிறது.
காட்டின் புல்வெளியில் சோட்டுவும் நந்துவும் எருமைமாடுகளை மேய்ப்பார்கள்.அவர்கள் மேய்க்கும் எருமைமாடுகளை அப்புலி ஒன்றும் செய்யாது. எருமை மாடுகள் கிராமத்தாரின் வாழ்வியல் ஆதாரம் அதை தொந்தரவு செய்தால் தனக்கு தொந்தரவு வரும் என்று புலிக்குத் தெரியும்.
அதனால் அது எருமைகளையோ மனிதர்களையோ எதுவும் செய்யாது. ஒதுங்கிப் போய்விடும்.
ஒருநாள் அக்காட்டுக்கு வேட்டையாட பணக்கார வேட்டைக்காரர்கள் வருகிறார்கள்.
”இக்காட்டில் ஒரே ஒரு புலி இருக்கிறதாமே. குரல் கேட்டதாக கேள்விப்பட்டு வந்திருக்கிறோம்” என்று வருகிறார்கள். கிராமத்தாருக்கு நிறைய பணம் கொடுக்கிறார்கள்.
சோட்டு நந்துவின் அப்பாவும் மாமாவும் காட்டுமரத்தில் வேட்டையாடுபவர்களுக்கு மரத்திலான தளம் அமைத்துக் கொடுக்கச் சொல்கிறார்கள். நந்துவும் சோட்டுவும் அப்படியே செய்கிறார்கள்.
ஆனால் நந்து என்ன செய்கிறான் மரத்தின் மேல் அவர்கள் அமைக்கும் மரமேடையைச் சுற்றியுள்ள மரங்களில் எல்லாம் பழையத் துணிகளை கட்டிவிடுகிறான்.
புலி அந்தத் துணியை வைத்து மனிதர்கள் நடமாடும் இடம் என்று இனம் கண்டு வராமல் இருக்கிறது. வேட்டைக்காரர்களுக்கு ஏமாற்றம். போய்விடுகிறார்கள்.
ஆனால் புலிக்கு சோதனை வேறு விதமாக் ஆரம்பமாகிறது. காட்டில் வறட்சி வருகிறது. மான்கள் வேறு இடங்களுக்கு போய்விடுகின்றன.
காட்டுத்தீயால் காட்டின் மரங்கள் பல அழிந்து விடுகின்றன.
புலியால் வேறு இடங்களுக்கும் நகர முடியாது. அது பிறந்த வளர்ந்த இடம். சாப்பிட மான்கள் இல்லை. கிழே கிடக்கும் வண்டுகளையும் பூச்சிகளையும் சாப்பிடும் அளவுக்குப் பசி.
அப்போது புலி பயமில்லாமல் நீர் குடிக்கும் எருமை மாட்டைப் பார்க்கிறது. வேறு வழியில்லாமல் அதை அடித்துச் சாப்பிடுகிறது. எருமையின் மிச்ச பாகத்தை காட்டில்விட்டு சென்று விடுகிறது.
எருமை குறைவதாக கவலைப்பட்டு தேடும் சோட்டுவுக்கும் நந்துவுக்கும் அதிர்ச்சி. ஊர்மக்கள் கொதிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பசியின் காரணமாக புலி இன்னொரு ஆண் எருதையும் அடித்துக் கொன்று விட ஊர் மக்கள் கொலைவெறியாகி புலியைப் பிடிக்க துப்பாக்கியோடு வருகிறார்கள்.
ஒரு குழு பெரிய பெரிய டிரம்களை அடித்து புலியை விரட்டுகிறது. புலி பதுங்கி பதுங்கி காட்டின் உள்ளே ஒடுகிறது.
நந்து காட்டைப் பிரிக்கும் ஆற்றைக் கடக்கும் பாலத்தில் துப்பாக்கியை வைத்து புலியை குறிபார்க்கிறான். புலி வேறு வழியில்லாமல் பாலத்தில் ஏறுகிறது.
நந்து சுடுகிறான். துப்பாக்கித் தோட்டா புலியின் உடலை உரச மட்டும்தான் செய்கிறது. புலி பயத்தோடு பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து விட,ஆறு அதை அடித்துச் சென்று விடுகிறது.
புலி ஒய்ந்தது என்று கிராமத்தார் கொண்டாடுகின்றனர்.
எருமைமாடுகளை சுதந்திரமாக மேய விட்டார்கள்.
இந்தப் பக்கக் காட்டில் இருக்கும் ஒரே புலியும் விரட்டப்பட்டதால், புலியின் உறுமல் கேட்காததால் மக்களுக்கு பயம் போய்விடுகிறது. வேகமாக காடுகளை அழிக்கிறார்கள்.
குடியிருப்புகள் பெருகுகின்றன. வளம் குறைகிறது.
ஆற்றில் விழுந்த புலி அந்தப் பக்க காட்டுக்குச் சென்று மற்ற புலிகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறது.
புலி காட்டை பாதுகாத்தது.
காடு புலியை பாதுகாத்தது.
புலி இல்லாமல் காடு அழிந்தது.
காட்டை நம்பிய மனிதர்கள் திணறினார்கள்.
மக்கள் புலியால் நன்மையே அன்றி தீமை அல்ல என்று புரிந்து கொள்ளும் போது புலி அக்காட்டில் இல்லை.

No comments:

Post a Comment