Sunday 7 June 2015

சுவப்னவாஸவதத்தம்

நமக்கு ரொம்ப பிடித்தவர்களை பிரிந்தால் எப்படியிருக்கும்.

பிரிந்த பிறகு அவர்கள் நம்மை நினைப்பார்களா? இல்லை மறந்துவிடுவார்களா? என்று சோதிக்கும்,தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.

நான் இந்த உலகில் இல்லாவிட்டால் இவன்/இவள் நம்மை நினைப்பானா/ளா என்ற குறுகுறுப்பு எல்லோருக்கும் இருக்கும்.

அதுபோன்ற எதிர்பார்ப்பையுடைய மனித உணர்வை பேசுகிறது சமஸ்கிருத நாடகமான “சுவப்னவாஸவதத்தம்”.கிபி முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நாடகத்தை எழுதியவர் “பாஸன்”.பாஸன் ,கவி காளிதாசர் வணங்கும் புலவரும் மூத்தோரும் ஆவார் .

அரசன் உதயணனுக்கு சிக்கல்.அவன் நாட்டின் பெரும்பகுதியை பகைநாட்டு அரசன் ஆக்கிரமித்துக் கொள்கிறான்.

உதயணன் சிறு பகுதியில் தன் அன்பு மனைவி ’வாசுவதத்தை’ யுடன் ஆட்சி செய்து வருகிறான்.

ஆனால் மந்திரி யவ்வனராஜனுக்கு இப்படி சிறிய பகுதியை ஆண்டு சிற்றரசனாய் உதயணன் இருப்பதில் உடன்பாடில்லை.என்ன வழி என்று யோசிக்கிறார்.பக்கத்து நாட்டு மன்னன் தர்சகன் உதவி செய்தால் உதயணனால் அவன் இழந்த பகுதியை மீட்க முடியும் என்று நம்புகிறார்.

ஆனால் தர்சகன் சும்மாவெல்லாம் உதவி செய்துவிட மாட்டார்.அவருடைய அழகிய சகோதரி பேரழகி பத்மாவதியை அரசன் உதயணன் திருமணம் செய்து கொண்டால்,தர்சகனின் ஆதரவு கிட்டுமென்று நினைக்கிறார்.

அரசனிடம் சொல்ல,”முடியாது முடியாது நான் வாசுவதத்தை தவிர எந்த பெண்ணையும் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாது.நான்,இது மாதிரி ஒரு திட்டத்தை முளையிலேயே விரும்பவில்லை ” என்று மனைவி வாசுவதத்தை மேலுள்ள அன்பைச் சொல்கிறான்.மந்திரி கவலையடைகிறார்.

மந்திரி வாசுவதத்தையிடம் சென்று நாட்டின் பிரச்சனையையும் உதயணன் - பத்மாவதி திருமணத்தின் அவசியத்தையும் சொல்கிறார்.மந்திரியாக நினைக்காவிட்டாலும் தான் தன்னை சகோதரனாக நினைத்து தான் சொல்வதை பரிசீலிக்கும்படி கெஞ்சுகிறார்.

வாசுவதத்தையின் மனம் ரணமானாலும் கூட நாட்டின் நன்மைக்காக தியாகத்தை செய்ய முன்வருகிறாள்.

மந்திரியும் வாசுவதத்தையும் தீட்டிய திட்டப்படி,பக்கத்து கிராமத்தில் நடக்கும் தீ வீபத்தில் இருவரும் இறந்துவிட்டதாக மக்களையும் உதயணனையும் நம்பச் செய்கிறார்கள்.அனால் மந்திரி யவ்வனராஜனும் வாசுவதத்தையும் மாறுவேடத்தில் திரிகிறார்கள்.

பத்மாவதியின் ( உதயணனுக்கு திருமணம் செய்து வைக்க மந்திரி முயற்சி செய்துவரும் பக்கத்து நாட்டு இளவரசி) தாயார் தங்கியிருக்கும் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். மந்திரி தன் மதியூகத்தால், வாசுவதத்தையை,தன் அம்மாவைப் பார்க்க வரும் பத்மாவதியிடம் பணிப்பெண்ணாக ஒப்படைக்கிறார்.பத்மாவதிக்கும் வாசுவதத்தையை பிடித்துப் போய் விடுகிறது.அவளுடன் அழைத்துப் போகிறாள்.

பத்மாவதியும் வாசுவதத்தையும் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கே மனைவியை இழந்த அரசன் உதயணன் அடையும் துன்பங்களைப் பற்றிய செய்தி வருகிறது.

உதயணன் மயங்கி விழுந்தான் என்றும், அதன் பிறகு தற்கொலை செய்ய முயற்சித்தான் என்று ஆனால் காப்பாற்றப்பட்டு விட்டான் என்றும் செய்தி கிடைக்கும் போது வாசுவதத்தை மிகுந்த துன்பத்துக்கு ஆளாயிருந்தாலும், அவள் மனதின் ஒரத்தில் “இறந்தாலும் தன்னை காதலிக்கிறான் கணவன்.மறக்கவில்லை” என்ற விசயம் இன்பத்தை கொடுக்கிறதுதான்.

உதயணன் முதல் மனைவி மேல் வைத்திருக்கும் பாசம் பத்மாவதிக்கு பிடித்துப் போய்விடுகிறது.உதயணனை காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள்.உதயணனை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.அண்ணனிடம் சொல்கிறாள்.உதயணன் பத்மாவதி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

உதயணன் - பத்மாவதி திருமணத்துக்கு மணமாலை தொடுப்பவள் வாசுவதத்தைதான்.தன் கணவன் திருமணத்திற்கு தானே தொடுக்கும் மாலை பற்றி வருத்தமென்றாலும் அடிமனதில் அன்பை வைத்தே நல்ல எண்ணத்திலியே மாலையை தொடுக்கிறாள் வாசுவதத்தை.

உதயணன - பத்மாவதி திருமணம் நடக்கிறது.பத்மாவதியின் அண்ணன் துணையுடன் உதயணன் பக்கத்து நாட்டினரை துரத்தி பேரரசனாகிறான்.

ஆனால் வாசுவதத்தை ஏதோ சொல்லமுடியாத வெறுமையை அடைகிறாள்.

இன்னொருநாள் உதயணன் அவன் நண்பனுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை மனைவி பத்மாவதியும் வாசுவதத்தையும் (பணிப்பெண் மாறுவேடத்தில்) ஒட்டுக்கேட்கிறார்கள்.

அதில் உதயணன் இன்னும் வாசுவதத்தையை விரும்பிக்கொண்டுதான் இருக்கிறேன் என்றும், அவனால் அவள் இறப்பை தாங்க முடியவில்லை என்றும் திரும்ப திரும்ப சொல்லி கலங்குகிறான்.வாசுவதத்தையும் உள்ளம் பெருமிதத்தாலும் அன்பாலும் நிரம்புகிறது.

இன்னொருநாள் உதயணன் கட்டிலில் படுத்திருக்க,இருட்டில் பத்மாவதிதான் படுத்திருக்கிறாள் என்று வாசுவதத்தை கட்டிலில் உட்காருகிறாள்.உதயணன் தூக்கத்தில் கனவில் கூட வாசுவதத்தையை நினைத்து புலம்புகிறான்.கனவிலேயே அவளை பிரிந்து வாடுவதை நினைத்து அழுகிறான்.அதை தூக்கத்தில் வெளிப்படுத்தியும் விடுகிறான்.வாசுவதத்தைக்கு உதயணன்மேல் முன் எப்போதும் விட அன்பு அதிகமாகிறது.ஆனால் ஏதும் சொல்லாமல் இடத்தை விட்டு நகர்கிறாள்.

இன்னொரு நாள் வாசுவதத்தையின் வீணையை கட்டிப்பிடித்து உதயணன் அழுவதையும் பார்க்க நேரிடுகிறது.

ஒருநாள் உதயணனுடைய ஒவிய அறைக்கு வந்த பத்மாவதி,அங்குள்ள வாசுவதத்தையின் ஒவியத்தைப் பார்த்து, இதே சாடையில் தன்னிடம் ஒரு பணிப்பெண் வேலை செய்தவாக சொல்கிறாள்.

உதயணன் ஆசையாக அந்தப் பணிப்பெண்ணை கூப்பிடுகிறான்.வாசுவதத்தையின் வேசம் கலைகிறது.மந்திரி யவ்வனராஜன் அப்போது அங்கு தன் வேசத்தையும் கலைத்து மன்னன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

உதயணன் புரிந்து கொண்டான்.வாசுவதத்தையை கட்டிக்கொண்டு சிறுகுழந்தை போல தேம்புகிறான்.எப்போதுமே என்னை மறக்காத உன்னை முன்னை விட நான் அதிகம் நேசிக்கிறேன் என்று வாசுவதத்தை தன் காதலைச் சொல்கிறாள்.பத்மாவதியும் நிலமையை புரிந்து கொண்டு புன்னகைக்கிறாள்.

அன்போடுகிறது கரைபுரண்டு...

இந்த நாடகத்தில் வாசுவதத்தை, தான் இறந்த பிறகும், கணவன் தன்னை நினைத்து அன்பாயிருப்பதை நினைத்து பூரிக்கும் காட்சிகள்தான் சிறப்பு.

காதல்.

No comments:

Post a Comment