Saturday, 29 August 2015

சிக்கல் எண்கள் என்ற Complex numbers...

சிக்கல் எண்கள் என்ற Complex numbers யின் அடிப்படை என்ன என்பது பற்றி புரியாமலேயே படித்திருப்போம்.
-1 என்ற எண்ணுக்கு வர்க்க மூலம் (Square root) என்ன வரும்? என்ற கேள்விக்கான விடையாக ’i’ என்ற ஆங்கில எழுத்தைச் சொல்லி அதைத் தொடர்ந்து
i x i = (-1) என்ற வாய்ப்பாட்டைப் படித்து அப்படியே போய்விடுவோம்.
அந்த ’i’ க்கு அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்று ஆராயாமல் போய்விடுவோம்.
நிச்சயமாக அந்த ’i’ க்கு லாஜிக்கலாக ஒரு தர்க்கமாக ஒரு அர்த்தம் இருக்கிறது. முதன் முதலில் Negative எண்களான -1, -2 எல்லாம் வரும் போது அதை ஆய்லர் போன்ற பெரிய கணித மேதைகளே ஏற்றுக் கொள்ளவில்லை.
மூணு ஆப்பிள்ல இருந்து எப்படிண்ணே நாலு ஆப்பிள எடுக்க முடியும் என்ற ரீதியில் அதை கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது Negative எண்களை தர்க்கமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதுதானே.
ஒரு பல்லி ஒரு மீட்டர் ஏறும் போது கால் மீட்டர் சறுக்குகிறது என்பது மாதிரியான கணக்குகளில் -1, -2 எல்லாம் தேவைப்படுகிறது.
எனக்கு 1000 ரூபாய் கடன் இருக்கிறது என்ற வாக்கியத்தை -1000 என்ற ஒற்றைக் குறியீட்டால் குறிக்க முடிகிறது. அது மாதிரி சிக்கலெண்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
நடைமுறை அர்த்தம் பற்றி பேசும் முன்பு, ஒரு Graph sheet யில் சிக்கலெண்கள் எப்படி எங்கே வருகிறது என்று பார்க்கலாம்.

1.இந்த இந்த நான்கு படங்களிலும் பாருங்கள் சைபர் நடுவில் இருக்க வலது பக்கம் 1,2 என்று இருக்க இடது பக்கம் -1,-2 என்று இருக்கிறது.
1ம் -1ம் ஒன்றுதான். ஒரே மதிப்புதான். அதன் திசைதான் எதிர் எதிரானது. ஆனால் எல்லாம் ஒரே நேர் கோட்டில் இருக்கிறது பாருங்கள்.
2.ஆக 1,-1,0,2,-2 .. எல்லாம் ஒரு நேர் கோட்டில் இருக்கின்றன. நேர் கோடு . அது போல வட்டமான ஒரு வட்டத்தின் அடிப்படையில் வருவதுதான் சிக்கலெண். ஆக சிக்கலெண் என்றால் நினைவுக்கு வர வேண்டியது வட்டம். வட்டம் .வட்டம்.
3. படம் 1 ஐப் பாருங்கள் (-2) x (-2) என்பதை ஒன்றிலிருந்து தொடங்கும் வட்டமாக காட்டியிருக்கிறார்கள். (-2) x (-2) =4 தானே . ஒன்றிலிருந்து -2 வருகிறது, அடுத்து நான்கை அடையும் போது அது முழுமையடையாத வட்ட வடிவமாக போய்விடுகிறது.
4.ஆனால் -1ஐக் கொண்டு எந்த எண்ணைப் பெருக்கினாலும் அது வட்டமாக வருகிறது. -1x-1 எடுத்துக் கொள்ளுங்கள். படம் 2யில் அது கொடுக்கப்பட்டிருக்கிறது.
-1x- 1 =1 ஆகும்.
அதைப் படத்தில் எப்படி சொல்லியிருக்கிறார்கள். 1 யில் புறப்பட்ட வட்டம் -1 க்கு வருகிறது. மறுபடி அதே மாதிரியாக சுழன்றால் 1 க்கு போய்விடுகிறது.
ஆக -1x- 1 =1 என்பதை ஒரு வட்டமாக காட்ட முடிகிறது.
-1 என்பது ஒரு பாதி வட்டம், இன்னொரு -1 என்பது இன்னொரு பாதி வட்டம். அப்படியானால் இங்கே ஒரு ”வட்டத்தின் பாதி” வர்க்க மூலமாகவும் வருகிறது.
-1x- 1 =1 என்பதை வட்டமாக குறித்தால் அதன் வர்க்க மூலமாகிய -1 ஐ அரைவட்டமாக எடுத்துக் கொள்ளலாம்.
5. படம் 3 ஐப் பாருங்கள் அரை வட்டம் -1...
சரியா ... அரைவட்டம் =-1 ...
அப்படியானால் -1 என்பதின் வர்க்க மூலம் என்ன? 1(முழுவட்டம்) யின் வர்க்க மூலம் -1 (அரைவட்டம்) ஆக இருக்கும் போது, -1யின் (அரைவட்டம்) வர்க்க மூலம் ஏன் கால்வட்டமாக இருக்கக்கூடாது என்கிறார் கணித மேதை ஆர்கண்ட்.
ஆக கால்வட்டம் என்பதுதான் -1 யின் வர்க்கமூலம். அதாவது அந்த கால்வட்டம்தான் நான் குறிப்பிடும் ’i’.
6.படம் 4 ஐப் பாருங்கள் i,2i,3i.... என்று தனி அச்சை ஏற்படுத்தி இருக்கின்றன. அவைகளும் உண்மையான ஒன்றுதான்.
ஆனால் -1,0,1,2,3.... என்ற பொது எண்களின் அச்சை விலகி இருப்பதால் அதை கற்பனை எண்கள் என்றார்கள். அதானலேயே அதை சிக்கல் எண்கள் என்று சொல்கிறோம்.
7.இன்னொருமுறை இதை சுருக்கிச் சொல்கிறேன்.
A. -1x- 1 =1 என்பதை ஒரு வட்டமாக நிருபிக்கிறார்கள்
B. அந்த வட்டத்தின் பாதியான அரைவட்டம்தான் அதன் வர்க்கமூலமான -1 என்று நிருபிக்கிறார்கள்.
C.அப்படியானால் அரைவட்டத்தின் பாதியான கால்வட்டம்தானே -1 என்பதின் வர்க்க மூலம் என்று சொல்கிறார்கள்.
D.அந்த கால்வட்டத்தின் உச்சப் புள்ளியை ’i’ என்று குறிக்கிறார்கள்.
E.இப்படியாக i,2i,3i.... என்ற சிக்கல் எண்கள் தனி அச்சை ஏற்படுத்துகின்றன.
இப்படியாக Complex numbers யின் அடிப்படையை புரிந்து கொள்ளலாம்.
இதைப் படித்தால் புரிகிறதா? இல்லையா?
கொஞ்சமாவது கணிதம் மேல்,சிக்கல் எண் மேல் ஒரு Feel ஒரு உணர்வு வருவது மாதிரி எழுதியிருக்கேனா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Friday, 7 August 2015

தாய் அன்பு...

யோவான் எழுதிய சுவிசேஷம்’ என்றொரு புத்தகத்தை பஸ்ஸில் என்னருகில் இருந்தவர் வாசித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் புத்தகம் சிறியதாயிருந்தாலும் நேர்த்தியாய் வடிமைக்கப்பட்டது மாதிரி எனக்குத் தோன்றியது.
அப்படியே மெல்ல நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அவரும் அதை சும்மா புரட்டிதான் கொண்டிருந்தார்.
’இந்தப் புக்க யாராவது உங்களுக்கு கொடுத்தாங்களா” என்று ஆரம்பித்தேன்.
“ஆமாங்க டிரெயின்ல கொடுத்தாங்க. நான் படிப்பேன். எங்க வீட்ல என் வைஃப் கிறிஸ்டியன்தான்” என்று அடுத்தப் பேச்சுக்கு லீட் கொடுத்தார்.
“நீங்க கிறிஸ்டியன் இல்லையா” இது நான்
“இல்ல நான் ஹிந்துதான் ஆனா சர்ச்சுக்கெல்லாம் அப்ப அப்ப போவேன்” என்றார்.
“நானும் சர்ச்சுக்கு அப்பப்ப போவேன். எங்க குடும்பத்துல என் அத்தை ரெண்டு பேரு கிறிஸ்டியனா கன்வர்ட் ஆகிட்டாங்க” என்றேன்.
”சில சமயம் வேற வழியில்ல. எனக்கு கூட இப்ப கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாம போயி ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்தோணியார் கோவில்ல போய் கயிறு ? கட்டின பிறகுதான்
சரியாச்சு” என்றார்.
“ஆமா நமக்கு வர்ற் கஷ்டம்தான் நம்ம நம்பிக்கைய டிசைட் பண்ணுது” என்று பேசிக்கொண்டே இருந்தோம்.
திடீரென்று சொன்னார் “யாரையும் வெளக்குமாறாலோ அல்லது செருப்பாலோ அடிக்கக் கூடாதுன்னு. அடிச்சா அடிச்சவங்கள தோஷம் பிடிக்கும்ன்னு இந்து வேதமந்திரங்கள்ல சொல்லியிருக்கு தெரியுமா? என்றார்.
நான் ஆர்வமானேன் “அப்படீங்களா தெரியலையே? நீங்க அப்படி யாரையாவது அடிச்சிருக்கீங்களா? என்று கேட்டேன்.
”ஆமா ஒருதடவை என் அம்மாவ வெளக்குமாறால அடிச்சுபுட்டேன்.அதான் எனக்கு தோஷம்”என்றார்.
அம்மாவ தொடப்பத்தால அடிச்சிருக்காருன்னா காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.
அப்படி இப்படி சுற்றி சுற்றி வந்தேன். பின் எப்படியோ காரணம் சொல்லிவிட்டார்.
“நா கிறிஸ்டியன் பொண்ண கல்யாணம் பண்ணப் போறேன்னு அம்மாவுக்கு தெரிஞ்ச ஒடன கோவில்லு பூ போட்டு பாத்திருவோம்ன்னு அம்மா சொன்னா. பாத்தா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு வருது. ஆனா பண்ணுவேன்னு நிக்கிறேன்.
அடுத்ததா என் அம்மாக்கு அப்பப்ப சாமி வரும். லைட்டா சாமி ஆடி குறிசொல்லும். அப்படி சாமி வந்தப்போவும் அந்த கிறிஸ்டியன் பொண்ண கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சாமி மாதிரி சொல்லிப் பாத்தா. ஆனா நா அவளத்தான் கட்டுவேன்னு நின்னேன்.
அப்புறம் நேரடியாவே என்ன நா லவ் பொண்ண கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொன்னா.
நா கேக்கல.
ஒடனே என்ன சொன்னா தெரியுமா? நா அந்த கிறிஸ்டியன் பொண்ண கல்யாணம் பண்ணுனா அவ(அம்மா) மொட்ட அடிச்சுப்பாளாம். அப்படின்னு என்கிட்டயும் ஊருக்குள்ளயும் சொல்லியிருக்கா.
அதக் கேக்காம கல்யாணம் செய்துகிட்டேன். ஊருக்குள்ள வந்தா என் அம்மா உண்மையிலேயே மொட்ட அடிச்சிகிட்டுருக்கா.
நா அவளப் பாக்ககூடாதுன்னு நெனச்சாலும் முன்னாடி வரா போறா. செமக் கோவம் வந்துச்சு. வெளக்குமாற வெச்சி நாலு போட்டேன்” என்றார்.
”ம்ம்ம்” இது நான்.
“ஆனா அன்னைக்கு அவள அடிச்சது எனக்கு தோஷமாயிட்டதாம். அது தோஷம்ன்னு வேத மந்திரங்கள்ல இருக்கு”
“அதெப்படி உங்களுக்கு தெரியும்”
”எனக்கு ஒரு ஜோசியர் சொன்னார்”
“ம்ம்ம்ம்”
“அந்த தோஷத்தாலத்தான் அம்மாவ அடிச்சி பதினைச்சு வருஷம் ஆனாலும் எனக்கு ஒரே இருமல் சலி இழுப்புன்னு இப்ப ரெண்டு மாசமா ரொம்ப கஷ்டப்பட்டேன். சரியா தூக்கமில்ல. மனசுல நிம்மதியில்ல. கண்ணுக்கு தெரியாதது எல்லாம் தெரியுறா மாதிரி இருக்கும். அந்தோணியார் கோவிலுக்குப் போய் க்‌ஷ்டப்பட்டு குணமாகி வந்தேன்” என்றார்.
”ம்ம்ம் கஷ்டம்தான். ஆனா அப்பக் கூட நீங்க கிறிஸ்டியனா மாறலையா” என்றேன்.
“இல்ல சர்ச்சுக்கு போவேன் ஆனா மாறமாட்டேன்.அது என் வைஃபுக்கும் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டா.
அதாங்க என்னைக்குமே யாரையுமே வெளக்குமாறாலோ, செருப்பாலோ அடிக்கக் கூடாது. அது தோஷம். அப்படின்னு வேதமந்திரங்கள்ல சொல்லப்படிருக்கு.
கோவம் வருதா. கோவப்படு. வேண்டாங்கல. அடி. வேண்டாங்கல. ஆனா ஒரு கரண்டிய வெச்சி அடி, ஒரு பிரம்ப வெச்சி அடி. ஆனா வெளக்குமாறாலோ, செருப்பாலோ அடிக்கூடாது. அது ஒரு தோஷம். அப்படின்னு நம்ம வேத மந்திரங்கள்ல சொல்லப்பட்டிருக்கு”
அடுத்த முறை அவர் வேத மந்திரங்கள் பற்றி சொல்வதற்கு முன்னரே நான் இறங்கும் ஸ்டாப் வந்துவிட்டது.
நான் அந்த அண்ணனுக்கு அன்போடு டாட்டா காட்டி இறங்கினேன்.
கிழே இறங்கி அந்த அண்ணனின் அம்மாவை நினைக்க நினைக்க எரிச்சல் வந்தது.
எப்பேர்பட்ட சுயநலவாதியாய் இருந்திருக்கிறார்.
வாழ்நாள் எல்லாம் பையனை குற்ற உணர்ச்சியிலேயே வைத்திருக்கும் வேலையை அல்லவா செய்துவிட்டுப் போயிருக்கிறார் என்று தோன்றியது.
இது தாய்மையின் இன்னொரு கொடூரமான அரக்கத்தனமான முகம் என்று நினைத்துக் கொண்டேன்.

பெருமாள் முருகன் விவகாரத்தில்

பெருமாள் முருகன் விவகாரத்தில் அவருக்கு யாரெல்லாம் ஆதரவளிக்கவில்லையென்றால்...
அல்லது அவரை எதிர்த்து
கேலி,கிண்டல் செய்து மறைமுகமாக சாதிக்கு துணைபோனார்கள் என்றால்.
- பெருமாள் முருகனின் இலக்கிய வளர்ச்சி பிடிக்காத அவரது பழைய நண்பர்கள். பழைய எதிரிகள்.
-பெருமாள் முருகனால் பண்டு காலத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த எழுத்தாளர்கள்.
-தங்களுக்கு புலனாய்வு செய்யும் மூளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, பெருமாள் முருகன் பிரச்சனையை ஆராய்ச்சிக்கு நிதி வாங்குவது என்ற விசயத்தோடு முடிச்சிட்டு ரசித்தவர்கள். இவர்களைத்தான் சாதிக்கு துணை போன அயோக்கியர்கள் என்பேன். இவர்கள் வைத்த கருத்துக்களில் உண்மையோ பொய்யோ சாதியவாதிகளை கூர்மையாக எதிர்க்க இருந்த கூட்டத்தையே இரண்டாக உடைத்த அயோக்கியர்கள் இவர்கள்.
-ஃபேஸ்புக் மற்றும் பத்திரிக்கை, டிவிக்களில் பப்ளிசிட்டி அடிப்பதற்காகத்தான் பெருமாள் முருகன் மற்றும் காலச்சுவடு இதை செய்தது என்று நம்பிய அறிவாளி வாசகர்கள், எழுத்தாளர்கள்.
-பெருமாள் முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாதிய சக்திகளின் கொடூரத்தை அறியாதவர்கள். அது பற்றிய தகவல் இல்லாதவர்கள்.
-பெருமாள் முருகனுக்கு எங்கள் ஆதரவு உண்டு. ஆனால் அவர் பயந்துவிட்டாரே. இவன் ஒரு எழுத்தாளனா? என்ற ரீதியில் அவரை தொடர்ச்சியாக கிண்டல் செய்தவர்கள். அந்தக் கிண்டலின் மூலம் தங்களை அறியாமல் பெருமாள் முருகன் பிரச்சனையும், பெருமாள் முருகனையும் காமெடி பீஸாக உலகத்துக்குக் காட்டி “ஏதோ சண்டை” என்ற மற்றவர்கள் நக்கலாக அந்தப் பிரச்சனையை கடக்கும் அலெட்சிய அடிப்படையை உருவாக்கியவர்கள்.
-எவ்வளவுதான் பக்குவப்படவனாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளே இருக்கும் “ஜாதி இந்து வெறி” கொண்ட எழுத்தாளர்கள், வாச்கர்கள், பொதுமக்கள்.
-”அதெப்படி ஒரு கிராமத்து தெரு பேரச் சொல்லி இப்படிச் சொன்னா எல்லாருக்கும் கோவம் வரும்தான்” என்று கருத்து உரிமையை எதிர்த்த எளிய தர்க்கவாதி அப்பாவிகள்.
-காலச்சுவடு பிடிக்காதவர்கள், காலச்சுவடு கண்ணனைப் பிடிக்காதவர்கள், சுந்தர ராமசாமியைப் பிடிக்காதவர்கள்.
-காலச்சுவடு எடிட்டோரியலில் இருப்பவர்களைப் பிடிக்காதவர்கள்.
-மற்றப் பிரச்சனைகளில் காலச்சுவடின் நிலைப்பாடு பிடிக்காதவர்கள்.
இப்படி எத்தனை வகைகளில் பெருமாள்முருகனுக்கான போராட்டத்தை கூர்மை இழக்கச் செய்தார்கள். இவையெல்லாம் சாதிய சக்திகளுக்கு கொண்டாட்டம் என்பதை மேலே சொன்ன முட்டாள்கள் ஒரு விநாடி கூட யோசித்துப் பார்க்கவில்லை.
ராஜன் குறை மட்டும் தொண்டை தண்ணி வத்த பெருமாள் முருகனுக்கு தீவிரஆதரவு நிலை எடுத்துப் பார்த்தார். அவரையும் சுத்தி விட்டான்கள் இணையப் புண்ணியவான்கள்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட வகுப்பில் சகமாணவனை பூச்சி கடித்து விட்டு, வகுப்பிலேசுற்றிக் கொண்டிருந்தால்,
அப்பூச்சியை ஒற்றுமையாக விரட்டுவார்கள்.அல்லது அடித்துக் கொல்வார்கள்.
கடிபட்ட மாணவனின் முற்காலம்,அவனது குணாம்சங்கள் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
முதல் எதிரி பூச்சி.
அந்தப் பூச்சியை ஒற்றுமையாக விரட்டுவோம். விரட்டிய பிறகு கடிவாங்கியவனைப் பற்றி பேசுவோம் என்றிருப்பார்கள்.
அந்த அறிவு கூட தமிழ் இலக்கியச் சூழலில் வரவில்லை என்பதுதான் கொடுமை.

தாய்மொழியில் அறிவியல்.

சரியாகத் திட்டமிட்டால் தாய்மொழியில் அறிவியல் என்பது நிச்சயம் இலகுவாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து.
இணைப்பு சொற்களினால் வரும் குழப்பம் தாய்மொழிக் கல்வியினால் குறையும்.
நான் படித்தது ஆங்கில மீடியத்தில்தான். அதில் ஏழாம் வகுப்பில் இயற்பியலில் ஒரு கேள்வி வரும்.
Define: Kinetic Energy and Potential Energy
-The energy possessed by the body by the virtue of its motion is called Kinetic Energy
-The energy possessed by the body by the virtue of its position is called Potential Energy
மேலே கொடுத்துள்ள விடைகளில் இந்த possessed என்கிற வார்தையும் virtue என்கிற வார்த்தையும் செம குழப்பு குழப்பும்.
அதென்னடா possessed ? அப்படின்னா உடைமை . உடைமையா இதுக்கு பொஸ்சஸே பரவாயில்லையே என்றிருக்கும்.
அடுத்தது virtue. விர்சூன்னா என்னா? நான் ஆன்மா ஆவி என்றுதான் நினைத்து வைத்திருந்தேன். குணம் என்ற அர்த்தமே எனக்குத் தெரியாது.
ஆக possessed யும் தெரியாது, virtue வும் தெரியாது ஆனால் மனப்பாடமாக படித்து இரண்டு மார்க்குகள் எடுத்துவிடுவேன்.
ஒருநாள் அண்ணன் சொன்னான் நீ possessed பதில் Form போட்டுக்க.
virtue வுக்கு பதில் Due to போட்டுக்கோ.
இப்ப படிச்சிப் பாரு உனக்கு அர்த்தம் புரியும் என்றான்.
நானும் அதுபடியே மாற்றிப்போட்டுப் பார்த்தேன்.
-The energy formed by the body due to its motion is called Kinetic Energy
-The energy formed by the body due to its position is called potential Energy.
அண்ணனே தொடர்ந்தான் “இப்போ மேலே ஒரு டாங்க் இருக்கு. அது முழுக்க தண்ணி தழும்ப தழும்ப இருக்கு. அது ஒரு எனர்ஜியக் கொடுக்குது அதுதான் பொட்டென்ஷியல் எனர்ஜி.
அது சும்மா இருக்கும் போதே அங்கே எனர்ஜி இருக்கு.
அதான் due to its position
அந்த தண்ணிய பைப் வழியா வெளியே விட்டா வேகமா வருது, அப்படி வரும் போதும் அது ஒரு எனர்ஜி வடிவம்தாம்.
ஆனா இப்போ தண்ணி சும்மா நிக்கல, வேகமா மூவ் ஆகிட்டு இருக்கு. அப்ப அதுதான் Kinetic Energy.
அதான் due to its motion என்று விளக்கினான்.
”ஆஹா இந்த கொடுமையான ஆங்கில வார்த்தைகளால் புரிதல் இல்லாமல் கெட்டேனே” என்று வருந்தினேன். புரிந்த பிறகு மகிழ்ச்சியாய் இருந்தது.
மிகச் சின்ன வார்த்தை மாற்றம் புரிதலை எளிமைப்படுத்துகிறது.
மறுநாள் வகுப்பில் நண்பர்களுக்கு விளக்கினேன்
“வந்து மக்கா இப்ப ஒண்ணுக்கு வருது. அப்படியே முட்டிட்டு நிக்குது. அது ஒரு எனர்ஜி அதுதான் potential Energy. நிக்கும் போதே எனர்ஜி.
அப்ப இண்டர்வெல் பெல் அடிக்கி பாத்துக்க.
நாம ஒரே ஒட்டமா ஒடி, ஸிப்ப திறந்து மோண்டு ஊத்துறோம். ஹா ஹா ஷபான்னு அனுபவிச்சி ஒண்ணுக்கு இருக்கிறோம்.
அப்போ அது வரைக்கும் நின்னு எனர்ஜி கொடுத்த ஒண்ணுக்கு, இப்போ வெளியே ஒடுது. அப்படி ஒடும் போது கொடுக்கும் எனர்ஜிதான் Kinetic Energy புரியுதால” என்றேன்.
அப்படி வகுப்பில் நான் இட்ட அறிவியல் பதிவுக்கு அன்று செம லைக்ஸ் கிடைத்தது

புதுமையான சிந்தனை...

எங்கள் வீட்டில் கழகத்தமிழ் கையரகாதி என்றொரு புத்தகம் உண்டு.
சிறுவயதில் இருந்தே அவ்வப்போது அதை எடுத்து வாசிப்போம். தமிழுக்கே தமிழில் பல அர்த்தம் இருப்பது பற்றி வியப்பாயிருக்கும்.
அப்பா சில சமயம் அதில் இருந்து எதாவது சொல்லை எடுத்து விளக்கம் சொல்வார். கேட்க நன்றாயிருக்கும்.
அப்படியாக போய்க் கொண்டிருக்கும் போது தம்பி (அப்போது அவனுக்கு பதினோரு வயது இருக்கும்) ஒருநாள் அந்த கையகராதியைப் புரட்டிக் கொண்டே இருந்தான்.
ஏதோ தேடுகிறான் என்று தெரிந்தது. நான் அண்ணன்கள் மூவரும் அவனிடம் ”என்னல தேடுறா? சொல்லேம்ல” என்று கேட்டுக்கொண்டே இருந்தோம்.
ஆனால் அவன் சொல்வானில்லை. ரொம்ப வற்புறுத்திக் கேட்கும் போது சொன்னான் “நா ஒண்ணு கண்டுபிடிச்சிருக்கேன்.அத செக் பண்றேன்” என்றான்.
”என்ன கண்டுபிடிச்சிருக்கால நீ” எங்களுக்கு ஆச்சர்யம். “இவன் தமிழ்ல ஏதோ கண்டுபிடிச்சிருக்கானா? “ என்று என்னது என்னது என்றோம்.
அவன் சொன்னான் “எனக்கு ’தயம்’ அப்படிங்கிற வார்த்தைக்கு அர்த்தம் வேணும். அப்படின்னா ”சதையா”ன்னு தெரிய்னும் என்றான்.
இவனுக்கு எதுக்கு ’தயம்’ அர்த்தம் வேண்டும் என்று தேடினோம். ஒன்றுமேயில்லை.
“அடடா இல்லாமல் போச்சே” என்று தம்பி வருத்தப்பட்டு பின் தொடர்ந்தான்
“இல்ல ஹார்ட் இருக்குல்ல இதயம். அப்படின்னா அது இருதயம்தான. இருதயம்னா இரு கூட்டல் தயம். இருன்னா இரண்டு. தயம்ன்னா சதையா இருக்குமோன்னு நினைச்சேன். அப்படின்னா இரண்டு சதைகள் என்று அர்த்தம் வரும். அது காரணப்பெயர்தானே” என்றான்.
நாங்கள் எல்லோரும் சிரித்தோம்.
அவனை கேலி செய்து கொண்டே இருந்தோம். “பெரிய இவருக் கண்டுபிடிச்சிட்டாரு” என்றோம்.
தம்பி அசடு வழிந்தபடியே இருந்தான்.
அப்பா வந்தார்” அவனாவது புதுசா ஒண்ணு யோசிக்கவாவது செய்தான் நீங்க அது கூட செய்யலியே” என்று தம்பிக்கு சப்போர்ட் செய்தார்.
இப்போது இந்த சம்பவத்தை யோசிக்கும் போது சிரிப்பாகவும் சிந்தனையாகவும் இருக்கும்.
வித்தியாசமான சிந்தனை என்பதாலேயே அதை சரியானது என்று ஒத்துக்கொள்ள முடியாதுதானே.
வித்தியாசத்துக்குள்ள கிரெடிட் வேண்டுமானால் கொடுக்கலாம்
ஆனால் அது செம்மையான சிந்தனை என்று நிருபிக்கப்படாமல் ஒத்துக் கொள்ள முடியாதுதானே.
வித்தியாசமாக மட்டும் சிந்தித்து அதை நிருபிக்க ஆர்வமில்லாமல் இருப்பதும் ஒரு போலி சிந்தனைப்போக்குதான்.
ஆனால் இந்த வித்தியாச சிந்தனை பாவ்லாவை வைத்து எப்பேர்ப்பட்ட கூட்டத்தையும் ஒரு விநாடி மயக்கி விடலாம் என்பது மட்டும் உண்மை

சரியானவற்றை புரியவைத்தல்

நான்கு ’அமுக்குப் பொத்தான்கள்’ கொண்ட இயந்திரம் இருக்கிறது.
ஒவ்வொரு பொத்தானும் ஒவ்வொரு பயன்பாட்டுக்காக.
எந்த எந்த பொத்தான் எந்த செயலுக்காக என்பதை, ஒவ்வொரு பொத்தான்களில் இருந்து மேலே உள்ள இடத்தில் எழுதுவது சிறந்ததா?
அல்லது ஒவ்வொரு பொத்தான்களின் பக்கவாட்டில் எழுதுவது சிறந்ததா? (கற்பனை செய்து பாருங்கள்).
முதல் பொத்தானுக்கு மேலே 'ON' என்று எழுதியிருக்கிறது .
முதல் பொத்தானுக்கு கிழே, இரண்டாவது பொத்தானுக்கு மேலே ‘OFF’ என்று எழுதியிருக்கிறது. அதாவது ‘OFF’ என்ற வார்த்தை முதல் மற்றும் இரண்டாவது ஸ்விட்சுக்கு நடுவே இருக்கிறது.
திடீரென்று ஒரு அவசரம் வருகிறது. ஸ்விட்சை ‘OFF’ செய்ய வேண்டும்.
நாம் குழம்புவோமா ? மாட்டோமா? இந்த ‘OFF’ எந்த பொத்தானுக்கு முதல் பொத்தானுக்கா? அல்லது இரண்டாவது பொத்தானுக்கா? என்ற சின்ன குழப்பம் வருமா? வருமா? வராதா?
அவசரத்தில் மனித மூளை சில சமயம் அப்படியே செயலற்று நின்று விடும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பன் ஒர் சம்பவம் சொன்னான்.
நாகர்கோவிலை அடுத்துள்ள கொட்டாரம் என்ற ஊரில், ஊற வைத்த அரிசியை திரித்து மாவாக்க மாவு மிஷினுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். அந்தக் கடைவீதியில் கொஞ்சம் தள்ளி ஒரு நகைத்திருட்டு ? நடந்து கொண்டிருக்கிறது.
திருட்டின் முடிவில் திருடர்கள் கடையின் முன்னால் நாட்டு வெடிகுண்டை வீசுகிறார்கள். அது டாமென்று வெடிக்க பொதுமக்கள் பயத்தில் ஒடுகிறார்கள்.
நண்பனும் மாவும் மில்லை விட்டு “கொல்லாண்டோ குட்டியப்போ” என்று அலறி ஒடி வந்திருக்கிறான்.
சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து சைக்கிளை ஒட்ட வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்தப் பதட்டத்தில் அவனால் சைக்கிள் ஸ்டாண்டை கால்களால் தட்டிவிட முடியவில்லை.
கால் ஒடவில்லை.
பதட்டம் என்பது சிலசமயம் அப்படி உடல் மற்றும் மூளையை செயல் இல்லாமல் ஆக்கிவிடும்.
அஞ்சாதே திரைப்படத்தில் ஒருவரை கடத்தல்காரர்கள் போனில் மிரட்டுவார்கள். அவர் பதறுவார்.
கடத்தல்காரர்கள் போனை ஸ்பீக்கரில் போடச் சொல்வார்கள்.அவரால் அந்தப் பதட்டத்தில் ஸ்பீக்கரில் போட முடியாது. மூளை வேலைசெய்யாது. பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்பார்.
இது மாதிரியான சூழ்நிலையில் சரியான பொத்தானை அடையாளம் காணும்படியான, எந்த செயல் எந்தப் பொத்தானுக்கு என்று புரியும் படியாக எழுதிவைக்க வேண்டும்.
ஒவ்வொரு பொத்தானின் பக்கவாட்டிலும் எழுதி வைத்தால் குழப்பமே வராது.
’கொயந்தப் பய்யன்’ கூட அதை எளிதாக சரியாக இயக்குவான்.
இதற்கு Ergonomics யில் ஒரு பெயர் உண்டு. தற்சமயம் எவ்வளவு யோசித்தாலும் வரமாட்டேன் என்கிறது.
வாழ்க்கையிலும் இது மாதிரி சரிவர குறிப்பு எழுதாத பொத்தான்களைப் பார்க்கலாம்.
சமீபத்தில் பனுவலில் “பவுத்தமும் அதன் இன்றையப் பொருத்தப்பாடும்” என்றொரு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி மிக உபயோகமுள்ள அர்த்தமான நிகழ்ச்சி. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கொடுத்திருந்த தலைப்பு என்னைப் போன்ற பாமர வாசகனுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
நிகழ்ச்சியில் வகுப்பெடுத்த எழுத்தாளர் கணிதவிலாளர் குடியரசன் “பவுத்தமும் அதன் இன்றையப் பொருத்தப்பாடும்” என்று அந்த இன்றைய பொருத்தப்பாடு என்ற அளவில் அம்பேத்கரின் பவுத்த ஈர்ப்பு பற்றியும் பவுத்தம் சொல்லும் முற்போக்குக் கருத்துக்கள் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
ஆனால் வந்திருந்த சிலர் புத்தர் மற்றும் பவுத்தத்தை ஒரு ஜென் தன்மையோடும், ஒரு ஈசாப் நீதிக்கதைகள் சொல்லும் தன்மையோடும், ஒருவித ஸ்பிரிச்சுவல் ரொமாண்டிக் ஆளாகவும் கருத்தாகவும் எண்ணிக் கொண்டவர்கள்.
அதன் அடிப்படையிலேயே குடியரசனிடம் கேள்வி கேட்டார்கள்.
ஒருவர் “நீங்க புத்தன் சொன்ன மாயா தத்துவம் பற்றி சொல்லுங்கள்” என்று ஒரே அடம் பிடித்தார்.
இன்னும் பலர் பனுவலையே போதிமரமாகவும், அந்த வகுப்பு முடியும் நேரத்தில் தானும் ஞானம் பெற்று புத்தனாகிவிட வேண்டும் என்ற வெறியில் கேள்வி கேட்டார்கள்.
எப்படி நியூட்டனின் மூன்றாம் விதியை எளிமையாய் இருப்பதாலேயே அனைவரும் சொல்கிறார்களோ,
அப்படியே “ஆசையே துன்பத்துக்குக் காரணம்” என்பதையும் சொல்கிறார்கள்.
அந்த எளிமையினாலேயே புத்தர் பவுத்தம் எல்லாம் மக்கள் மத்தில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறார்கள்.
அது மாதிரி மக்களை எல்லாம் அந்தத் தலைப்பு குழப்பிவிட்டது.
அதற்கு பதிலாக “பவுத்தமும் அம்பேத்கரும்” என்று தலைப்பை வைத்திருந்தால் நிறை அன்பர்களின் தேவையில்லாத கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.
விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்வது பிரச்சாரத்துக்கு முக்கியமானதாகும். பொத்தானுக்கு பக்கவாட்டில் எழுதுவது போல.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா...

ஃபிரண்ட்லைன் இதழில் கோகுல்ராஜ் மரணத்தைப் பற்றியக் கட்டுரையில்,
கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் இளம் தலைவர் கோபால் ரமேஷின் பேட்டி இடம் பெற்றிருக்கிறது.
//கேள்வி :
கோகுல்ராஜ் அந்தப் பெண்ணிடம் காதல் வசப்பட்டதில் தவறென்ன? அவர்கள் இருவரும் பெரியவர்கள்தானே?
கோபால் ரமேஷ் :
ஒரு தலித்தாக தன் பிறப்பு சார்ந்த எல்லையை அவர் (கோகுல்ராஜ்) தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நாங்கள் பிற சாதிகளை மதிக்கிறோம்.அதனால் அவைகளில் தலையிட மாட்டோம்.
நாமெல்லோரும் ஒற்றுமையாக வாழ லட்சுமண ரேகை ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும்.
எங்கள் சாதிப் பெண்கள் பற்றி எப்போதும் பெருமையே கொள்வோம்.
எங்கள் சாதிப் பெண்கள் எங்கள் இளவரசிகள். எங்கள் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் அவர்கள் வளர்த்து பாதுகாப்பதால் நாங்கள் அவர்களை வளர்த்து பாதுகாக்கிறோம்.
நாங்கள் அசிங்கப்படுவதை பொறுத்துக் கொள்வோம் என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்? //
எவ்வளவு தைரியமாக பேசியிருக்கிறார் பாருங்கள்.
இந்தியா விடுதலை பெற்ற அன்று,
“இந்த விடுதலை குறிப்பிட்ட இன மக்களுக்கு கிடைத்த விடுதலை. இது அனைவருக்குமான விடுதலை அல்ல. அதனால் இதை துக்க நாளாக கொண்டாடுகிறேன்” என்றாராம் பெரியார்.
இது மாதிரியான ஒரு நாட்டின் கொடியை எரிப்பதை அரவிந்த்சாமி தடுப்பதை கண்ணீர்மல்க உணர்ச்சி பொங்க பார்த்த சிறுவயது காலங்களை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன்.
இந்நாடு
இந்திய நாடு
பாரத மணித் திருநாடு
கோபால் ரமேஷ்களுக்கானது,
கோகுல்ராஜ்களுக்கானது அல்ல...

பறவையில் கூட ஜாதி

முன்குறிப்பு: ஒருவேளை நீங்கள் பிராமணராய் இருந்தால் இது உங்களைச் சீறும் பதிவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பிராமணீயத்தின் அடக்குமுறையைப் பற்றி விளக்கும் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள். சரியான ஸ்பிரிட்டில் நீங்கள் இதைப் படிக்க வேண்டும் என்ற பதட்டம் எனக்கிருக்கிறது.
நண்பர் ஒருவர் அவர் நண்பர் பற்றி சொன்ன விசயம் இது.
நண்பரின் நண்பர் தமிழகத்தின் சிறுநகரத்தில் இருந்து சென்னை வந்து வீடு கட்டி இருக்கிறார்.
நண்பர் கேட்டிருக்கிறார் “டேய் எப்படிடா இருக்கிற’ என்று.
“நல்லாயிருக்கேண்டா இங்க வீடு கட்டியாச்சு. சுத்தி இருக்கிற இடமெல்லாம் பிரச்சனையே இல்லை. சுத்தி முத்தி எல்லாரும் பிராமின்ஸாத்தான் இருக்காங்க. நீட்டா இருக்கு” என்றிருக்கிறார்.
நண்பர் சொன்னார் “தல பாருங்க சுத்தி முத்தி பிராமின்ஸ்ன்னு சொல்லிட்டு, அதையும் சுத்தத்தையும் அவனையறியாமல் ஒப்பிடுறான் பாருங்க.அதுதான் நம்ம சமூகத்துல இருக்கிற ஜாதி உணர்வு” என்றார்.
பிராமணர்கள் என்றால் சுத்தமானவர்கள் என்ற வாக்கியமே மற்றவர்கள் அசுத்தமானவர்கள் அல்லது பிராமணர்கள் அளவுக்கு சுத்தமானவர்கள் அல்ல என்ற மொழியில் மொழியப்படுகிறது.
இது ஒருநாளில் ஏற்றப்பட்ட உணர்வு அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்.
இதற்கு இன்னொரு உதாரணமாக வலசைப் பறவைகள் பற்றிப் பேசும் போது தயாளன் சண்முகாவும், சண்முகானந்தனும் ஒரு தகவல் சொன்னார்கள்.
பருந்து வகைகளிலேயே இந்த ஜாதிப்பெயர்கள் இருக்கிறது என்று.
அதாவது பிராமணப் பருந்து (brahminy kite) மற்றும் பறையப் பருந்து (Pariah kite). இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
அதே மனிதர்களில் இட்டுக் கட்டப்படும் வித்தியாசம்தான்.
பிராமணப்பருந்தின் கழுத்துப் பகுதி வெள்ளையாக இருக்கும். அது சுத்தமான உணவை உண்ணும என்பது போன்றவை.
பறைப்பருந்து எப்படியிருக்கும்.கருபாய் இருக்கும். நீர்நிலைக் கரையோரம் இருக்கும் அழுக்கான விசயங்களை உண்ணும் என்பது போன்றவை.
இப்பெயரை வைத்தவர்கள் நம்மவர்கள் தாம்.
சிறுகுழந்தை எப்படிப் பேசிப்பழகும் அதோ வெள்ளை சுத்த பிரமணப்பருந்து பறக்கிறது. அதோ கறுப்பு அழுக்கு பறையப்பருந்து பறக்கிறது என்றுதான் பேசிப்பழகும்.
பிராமணன் என்றால் சுத்தம். பறையன் என்றால் அசுத்தம். இப்படிப்பட்ட இட்டுக்கட்டலை நாகரிகம் தோன்றியதில் இருந்து சொல்லிவிட்டு
தீடீரென்று ஃபேஸ்புக்கில் “ஏன் நான் ஐயர்ன்னு போடுறது மாதிரி நீயும் பறையன்னு பேருக்குப் பின்னாடி போட்டுக்கயேன். அதில் உனக்கென்ன தாழ்வு மனப்பான்மை என்று பொத்தாம் பொதுவாக பேசுவது அறிவுடமையோ மனிதநேயமோ ஆகாது.
உங்கள் நண்பர்கள் யாராவது பெயர்களுக்கும் பின்னால் ”ஐயர்” என்றோ “ஐயங்கார்” என்றோ எழுதியிருந்தால் அது தவறு என்பதை பக்குவமாக புரிய வையுங்கள்.
அவ்வார்த்தைகள் நாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் அப்பட்டங்கள் உழைப்பினாலோ படிப்பினாலோ வரவில்லை. வெறும் பிறப்பினால் மட்டும் வந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
சாதியின் வேர்கள் உங்களிடத்தில்தான் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
பிராமணர்கள் போற்றும் எழுத்தாளர்கள்,
உதாரணமாக பாலகுமாரன் போன்றவர்கள் அந்த ஐயர் ஐயங்கார் பேர்களை ஃபேஸ்புக் பெயர்களில் சேர்க்காதீர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கலாம்.
அவர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்தால் அதன் ரீச்சே தனி.

மலையாளப் படம் மதுர நாறங்கா...

ஜீவனும் சலீமும் மலையாளத்தில் இருந்து ஷார்ஜாவில் டாக்சி டிரைவர்களாக வேலை பார்ப்பவர்கள்.
ஒருநாள் ஜீவன் தாமரை என்ற இலங்கைத் தமிழ்ப்பெண்ணைப் பார்க்கிறான்.
அப்பெண் இலங்கை உன்நாட்டு யுத்ததில் தன் குடும்பத்தை இழந்தவள்.
தாய்மாமனால் ஷார்ஜாவில் இருக்கும் கிளப்புக்கு விற்கப்பட்டு, அங்குள்ள மேனேஜரை தாக்கிவிட்டு ஒடிவந்தவள்.
ஜீவன் பாவப்பட்டு அவளுக்கு ஒருநாள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறான். பின் அவளையே காதலிக்கிறான். முதலில் சலீம் இதை எதிர்த்தாலும் பின் ஏற்றுக் கொள்கிறான்.
ஜீவனுக்குத் தெரிந்த நண்பனின் கடையில் தாமரை வேலைபார்த்து ரகசியமாக ஜீவன் சலீம் மற்றும் இன்னொரு நண்பனுடம் அவர்கள் வீட்டிலேயே இருக்கிறாள்.
ஒருநாள் ஜீவனுக்கும் அவளுக்கும் இடையே நெருக்கம் வந்துவிடுகிறது.அவள் கர்ப்பமாகிறாள். ஜீவன் தாமரையை திருமணம் செய்து கொள்கிறான்.
பாஸ்போர்ட்டும் இல்லாத விசாவும் இல்லாத தாமரையை வீட்டிலேயே பூட்டி பாதுகாத்து வருகிறார்கள் ஜீவன் மற்றும் அவர்கள் நண்பர்கள். தாமரைக்கு ஒரு டாக்டரை கூட்டி வந்து ரகசியமாக மருத்துவம் பார்க்கிறார்கள்.
ஒருநாள் தாமரைக்கு பிரசவ வலி வரும் போது ஜீவன் தவித்துக் கொண்டிருக்கும் போது வெளியே போலீஸ் வந்து விசாரிக்கிறது. தாமரையும் இருப்பு தெரியக்கூடாது என்று ஜீவன் தாமரையின் பிரசவ வேதனைக் கதறலை கத்த விடாமல் வாய்பொத்தி வைக்கிறான். பின் போலீஸ் போய்விட டாக்டரை அழைத்து வந்து குழந்தை பிறக்கிறது.
குழந்தைக்கு ஒருவயதாக வயதாக இருக்கும் போது ஜீவனுக்கு விபத்து நடக்கிறது. ஜீவனால் பேசமுடியாத படி உணர்வில்லாமல் முகத்தில் கட்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட மூளைச்சாவு மாதிரி என்று நினைக்கிறார்கள்.
தாமரை வந்து கதறுகிறாள்.
ஜீவனுக்கு கொஞ்சம் சரியானதும்,வீட்டுக்கு வந்து குழந்தையை தூங்கச் செய்து வெளியே சென்று காய்கறி வாங்கப் போகும் போது, போலீஸ் தாமரையிடம் பாஸ்போர்ட் விசா இல்லாத காரணத்தைச் சொல்லி கைது செய்கிறது.
அங்கே தாமரையின் குழந்தை அப்பாவும் அம்மாவும் இல்லாமல் அழுது கொண்டிருக்கிறது.
இதற்கிடையே ஜீவனின் குடும்பத்தார் ஜீவனை உணர்வில்லாத ஜீவனை கேரளா எடுத்துச் செல்கிறார்கள்.அவர்களிடம் ஜீவனுக்கு கல்யாணம் ஆன விசயத்தை தெரிவிக்க சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.
சலீம் குழந்தையை எடுத்துக் கொள்கிறான்.
ஒரு வருடம் பின் ஜீவன் தாமரையைத் தேடத் தொடங்குகிறான். இலங்கைக்கு (கைதான தாமரை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறாள்) சலிமோடு வருகிறான்.
தாமரை இருந்த ஊரில் வீட்டில் அவள் இல்லை.
ஷார்ஜாவில் அநாதை ஆசிரமத்தில் வளரும் அவர்கள் பிள்ளையை தத்தெடுக்க இன்னொரு பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள்.அதை தடுக்க வேண்டுமானால் ஜீவன் தாமரையோடு அங்கே ஆஜராக வேண்டும்.
ஆனால் இங்கே தாமரை இல்லை.
ஜீவனும் சலீமும் சோகத்தோடு இந்தியா திரும்ப் போகும் போது அங்கே ஒரு விபத்தில் அடிப்பட்டப் பெண்ணை அவர்கள் செல்லும் டாக்சியில் தூக்கிப் போட்டு வருகிறார்கள்.
ஜீவனுக்கு ஒருவேளை அவள் தாமரையா என்ற குழப்பம் இருக்கிறது அடிபட்டு ரத்தம் ஒழுகுவதால் அவள் முகத்தை பொத்தி வைத்திருக்கிறார்கள்.பார்க்க முடியவில்லை.
ஜீவனுக்கு அது தாமரையாய் இருக்கும் என்று தோன்றுகிறது
எட்டி எட்டிப் பார்க்கிறான். அப்பெண்ணை தூக்கி ஆஸ்பித்திரிக்கு கொண்டு போகிறார்கள்.
ஜீவனும் சலீமும் பின்னாலே செல்கிறார்கள். ஆனால் அப்பெண் தாமரை அல்ல.
சலீம் ஜீவனிடம் வந்து சொல்கிறான்” இனிமேல் தேடி பிரோஜனமில்லை.நாம் போகலாம்” என்று.
ஜீவன் கண்கலங்கியபடியே அங்கே காட்டுகிறான்.
அங்கே அந்த ஆஸ்பித்திரியில் நர்ஸாக தாமரை நிற்கிறாள்.
ஜீவனைப் பார்த்து அவளும் அழுகிறாள். இருவரும் இணைகிறார்கள்.
தங்கள் மகனை ஷார்ஜா சென்று மீட்கிறார்கள்.
மலையாளத் திரைப்படமான ”மதுர நாறங்கா”வின் கதைதான் நான் மேலே சொன்னது.
கண்கலங்காமல் இப்படத்தை பார்க்கவே முடியாதாம்.

காசு பணம் துட்டு மணி மணி

பயணம் செய்த கப்பல் உடைய , ஏதோ ஒரு தீவில் ஒதுங்கி,
மூர்ச்சையற்று ஒதுங்கிக் கிடந்த ஒருவனை,
இன்னொருவன் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்று, பாடு பார்த்துக் காப்பாற்றினான்.
பலநாட்கள் உணவு கொடுத்து, உடை கொடுத்து, தங்க இருப்பிடமும் கொடுத்தான்.
அத்தீவுக்கு இன்னொரு கப்பல் வர,அதில் ஏறி காப்பாற்றியவனுக்கு நன்றி சொல்லிக் கிளம்புகிறான் இந்த ஒருவன்.
கப்பலில் ஒரு வியாபாரிக்கு இவன் நட்பு பிடித்துப் போக விலை உயர்ந்த ’வைர மோதிரத்தை’ பரிசாகக் கொடுத்தார்.
இந்த ஒருவன் வீட்டுக்குப் போனதும், மனைவி மக்கள் ஒடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு விசாரிக்க,
“இதப் பாத்தியா எனக்கு இந்த விலை உயர்ந்த வைர மோதிரத்த பரிசாக கொடுத்தார் ஒரு வியாபாரி. அவரு ரொம்ப அன்பானவரு,நல்லவரு,இரக்கமானவரு “
என்றான் அந்த ஒருவன்.
அந்த ஒருவன் வேறு யாருமல்ல நாம்தான்

அப்துல் கலாம் அஞ்சலி

சும்மா சுமமா காலனைத் திட்டிக் கொண்டிருக்காதீர்கள் ஃபிரெண்ட்ஸ்.
ஏதோ அந்தக் காலன் இருப்பதால்தான் பல வி.ஐ.பிகள் நினைவுக்கே .வருகிறார்கள்.
அப்துல் கலாம் கூட அப்படித்தான் நினைவுக்கு வருகிறார்.
கலாம் சுயக்கட்டுபாட்டை மட்டும் மதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார். மற்றபடி அவருடைய மதமாக அறிவியல்தான் இருந்திருக்க வேண்டும்.
அப்துல் கலாம் மீது உண்மையான பற்று அன்பு இருந்தால் நாமும் அறிவியலையும் பகுத்தறிவையும் மட்டுமே மதமாகக் கொள்ள வேண்டும். அதைத்தான் கலாமும் இந்திய முன்னேற்றத்துகாக நினைத்திருப்பார்.
மனிதநேயம் கலந்த அறிவியல் உணர்ச்சி மற்றும் பகுத்தறிவுவாதம்.
ஒரு பக்கம் கலாம் படத்தை கவர் போட்டோவாக வைத்து அஞ்சலி செலுத்தி இன்னொரு பக்கம் செயின் மோதிரம் மந்திர சக்தியில் கொடுக்கும் சாய்பாபாவை கும்பிட்டு நம்பிக்கைக் கொண்டு மூடநம்பிக்கையில் இருப்பது எல்லாம் முரண்பாட்டின் உச்சம். அப்துல கலாம் அதை விரும்ப மாட்டார்.
எப்படி சாய்பாபா செயின் எடுத்தார்?
எங்க இருந்து ஒரு பொருள காத்துல இருந்து எடுக்க முடியும்?
என்று அறிவியல் கேள்வி கேட்க வேண்டும். அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். இதையெல்லாம் அப்துல் கலாம் வழி நின்று கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளி அறிவியல் புத்தகங்களை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக படித்துப் பார்ப்பது கூட கலாமுக்கு செலுத்தும் நல்ல அஞ்சலியாகும்.
அப்துல கலாம் சிறந்த விஞ்ஞானியாக உழைப்பாளியாக நமக்கு வழிகாட்டுவதைப் போல, எப்படி இருக்கக் கூடாது என்று சில இடங்களில் வழி காட்டுகிறார்.
எனக்கு அப்துல் கலாமைப் பார்த்தால் ” விலங்குப் பண்ணை “ நாவலில் வரும் ’பாக்ஸர்’ என்ற குதிரைதான் ஞாபகத்துக்கு வரும். அந்த பாக்ஸர் என்ற குதிரை விலங்குப் பண்ணையில் நடக்கும் சர்வாதிகாரம் எதையும் தட்டிக் கேட்காது என்பது கூட இல்லை,
அதை கவனத்தில் கொள்ள விரும்பாது “உழைப்பே உயர்வு தரும்” என்று உழைத்துக் கொண்டே இருக்கும்.
இதில் ”கவனத்தில் கொள்ள விரும்பாது” என்பதில் வரும் ”விரும்பாது” என்பது அப்துல் கலாமுக்கு மிகச்சரியாய் பொருந்தும்.
சுரண்டல்காரர்கள் இருக்கும் போது அதிகம் உழைப்பது எப்படித் தீர்வைத்தரும் என்றெல்லாம் பாக்ஸர் நினைக்காது. உழைப்போம் உழைத்தால் அனைத்துப் பிரச்சனையும் அகலும் என்று உழைக்கும்.
கலாம் கூட நாட்டின் பல பிரச்சனைகளை தட்டிக் கேட்க வாய்ப்பிருந்தும், தட்டிக் கேட்காமல் அறிவியல்,உழைப்பு போன்றவையே இந்தியாவை முன்னேற்றும் என்று கடைசிவரை நம்ப ஆசைப்பட்டார். குழந்தைகளிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
ஆனாலும் அப்துல் கலாமுக்குப் பிறகுதான் பொதுமக்கள் மத்தியில் Mission Vision போன்ற வார்த்தைகளும், உழைப்பு, அறிவியல் போன்றவற்றின் மீதும் நம்பிக்கை வந்திருக்கிறது என்பது கொஞ்சம் உண்மைதான்.
அதனாலேயே எனக்கு அவரைப் பிடித்தும் இருக்கிறது என்பதும் கொஞ்சம் உண்மைதான்.

உணர்வில்லாத எழுத்து.

வைரமுத்து அப்துல் கலாமுக்காக எழுதிய இரங்கல் செய்தியைப் படிக்கும் போது “இவர் வார்த்தைக்கும் உணர்வுக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரிப்பவர்” என்று தோன்றியது.
ஒரு வார்த்தையை நீங்கள் எழுதினால் அதை படிப்பவர்கள் உணர வேண்டும்.
ஃபீல் பண்ண வேண்டும். அப்போது மட்டுமே அந்த எழுத்து உண்மையான எழுத்தாகும்.
ஆனால் வைரமுத்து போன்றவர்களின் உரைநடை எந்த உணர்வையும் கொடுக்காமல் தட்டையாக இருக்கிறது.
பழைய இளையராஜா பாடல்களில் அடிக்கடி “பூங்காத்து” என்றொரு வார்த்தை வரும்.
பூங்காத்து என்றால் பூக்களில் இருந்து வரும் வாசம் கலந்த காற்று, பூவைப் போன்ற மென்மையான காற்று இப்படி நிறைய உணரலாம்.
ஆனால் பூங்காற்று என்ற வார்த்தையைக் கேட்கும் போது இப்படி எதையாவது நாம் உணர்ந்திருக்கிறோமா? நிச்சயமாக உணர்ந்திருக்க மாட்டோம்.
அது சவுக்களித்த வார்த்தையாய் சவ சவத்துப் மரத்துப் நம்மைக் கடந்து போகும்.
இது போல வார்த்தைக்கும் யதார்த்ததிற்கும், வார்த்தைக்கும் சிந்தனைக்கும் கூட தொடர்பு இருக்கிறது என்று பல எழுத்தாளர்களுக்கு தெரிவதில்லை.
வார்த்தைக்கும் சிந்தனைக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்து கொண்டது சுந்தரராமசாமி மூலமாகத்தான்.
அதன்பின் பிரமிள் அதன் உச்சமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஒரு வார்த்தையை டெக்ஸ்ட் செய்யும் போது அது உணர்வை, அறிவை தாக்காவிட்டால் அதை எதற்கு எழுத வேண்டும்?
தி.ஜானகிராமன் மரப்பசுவில் கோபாலி என்ற சங்கீதவித்வானை “குளிர்ந்த மாம்பழம்” என்பார்.
சட்டைபோடாத புஷ்டியான சங்கீதம் செய்யும் வியர்வையானஆளை நினைத்துக் கொள்ளுங்கள்.
அவர் குளிர்ந்த மாம்பழம் போலத்தானே இருப்பார் (அவரை அம்மணி அணைத்துக் கொள்வாள்).
அது போல இருக்க வேண்டும் எழுத்து.
ஒரு கூழாங்கல்லை உள்வாங்கிக் கொண்ட குளத்து சலசலப்புப் போல எழுத்தாளன் எறியும் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட வாசக மனம் சலசலக்கவில்லையென்றால் அது எழுத்தே கிடையாது.

எக்ஸ்ரேக்காரர் பெரியார்...

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துக்களை தன்னால் சொல்ல முடியாது என்று பெரியார் சொல்கிறார்.
ஒரு போட்டோக்காரனிடம் சென்று போட்டோ எடுத்தால், அவன் அதை நல்ல வெளிச்சத்தில் எடுத்து நல்ல விதமாக டச் அப் செய்து அழகாக்கிக் கொடுப்பான்.
நிஜ முகத்தை விட போட்டோவின் முகம் அழகாக இருப்பது மாதிரி செய்து கொடுப்பான்.
அது போல நம்மிடம் இருக்கும் பல மூடப்பழக்கங்களை அறிவின்மையை வேறு நல்ல மாதிரியாக சித்தரிப்பதை பலர் செய்கிறார்கள்.
அதை நம் கலாச்சாரமாக கொண்டாடிக் காட்டுகிறார்கள். இது மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் போலியான காரியமாகும்.
ஆனால் ”நான் ஒரு ’எக்ஸ்ரே’காரன்” என்கிறார் பெரியார்.
எப்படி எக்ஸ்ரே எவ்வளவு அழகான உடலுள்ளும் சென்று அதன் பிரச்சனையை பார்க்கிறதோ, மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறதோ அது போலத்தான் தானும் என்கிறார் பெரியார்.
கலாச்சாரப்பழக்கம் என்று கொண்டாடும் உருக்கவாக்கப்பட்ட அழகிய உடலுக்குள் இருக்கும் நோய்க்கூறுகளை எடுத்துக் காட்டும் எக்ஸ்ரேக்காரன் என்கிறார்.
நேரடியாக ஒரு விசயத்தைப் பார்ப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
அது பெரியாருக்கு இருந்தது.

இவன் பார்க்க அவன் சுட்டு...

யாகூப் மேமனின் மனது இப்போது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஒவ்வொரு விநாடியையும் அவர் எப்படி கடப்பார் என்று நினைத்துப் பார்ப்போம். ஒருவேளை மனிதநேயம் நமக்குள் வந்தாலும் வர வாய்ப்பிருக்கிறது.
ஜார்ஜ் ஆர்வல் எழுதிய கட்டுரையொன்றில்
பர்மாவில் தான் நடத்திய யானை வேட்டை ஒன்றை விவரித்திருப்பார்.
அவர் போலீஸ் அதிகாரியாய் இருந்த போது அட்டகாசம் செய்த யானையொன்றை விரட்ட அல்லது அடக்க ஒரு துப்பாக்கியோடு போவார்.
அவர் பின்னால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பர்மியர்கள் செல்வார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் யானை நிற்கும். ஆனால் சாதுவாய் பிரச்சனையில்லாமல் அப்பாவியாய் நிற்கும்.
மாவுத்தன் வரும் வரை அதை கொல்ல வேண்டாம். மாவுத்தன் வந்து அடக்கும் வரை பொறுப்போம் என்று இவர் நின்றிருப்பார்.
ஆனால் இவர் பின்னால் நிற்கும் இரண்டாயிரம் மக்களும் அந்த யானையைக் கொன்றே ஆகவேண்டும் என்று நிற்பார்கள்.
வேறு வழியில்லாமல் மதம் கொள்ளாத அந்த யானையை இவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார். யானை செத்துச் சரியும்.
இந்தியாவில் ஒரு கைதி அரசியல் துருப்புச்சீட்டாக, அரசியல் அடிப்படையிலான ’மக்கள் கவன ஈர்ப்பை’ பெறும் போது இப்படித்தான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஒருவர் பார்க்க இன்னொருவர் சுட்டுக் கொல்கிறார்கள்.
காங்கிரஸ் தூக்கிலிடும் போது இந்துத்துவ சக்திகள் அந்த 2000 பர்மியர்கள் போல கவனித்துக் கொண்டே இருக்கின்றன. “ஐயோ அவன் பாக்குறானே. எதாவது செய்திருவானோ (மக்களிடம் தேசத்துரோக கட்சி என்ற அரசியல் பிரச்சாரம்) என்று பயந்து தூக்கிலிடுகிறது.
பா.ஜ.க தூக்கிலிடும் போது காங்கிரஸ் அந்த 2000 பர்மியர்கள் செய்த வேலையை செய்கிறது. காங்கிரஸ் எங்கே பா.ஜ.க பற்றி தவறாக மக்களிடம் சொல்லிவிடுமோ என்று, பா.ஜ.க தூக்கிலிடுகிறது.
இவன் பார்க்க அவன் சுட்டு,
அவன் பார்க்க இவன் சுட்டு,
தாங்கள் தங்கள் அரசியல் விளையாட்டுக்காக எடுப்பது ஒரு மனித உயரை என்ற மனித நேய உணர்வே இல்லாமல் அந்த இரண்டு கட்சிகளும் செய்யும் மரண விளையாட்டு இன்னும் நாள் செல்ல செல்ல அதிகமாகும் என்றுதான் தெரிகிறது.
இவர்களின் இந்த விளையாட்டுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பொதுமக்களாகிய நம்முடைய அறியாமையும், மேலோட்டக் கருத்துக்களும் தான்.
அது எப்போது மாறும் என்பதும் தெரியவில்லை.
இதையெல்லாம் நினைத்தால் அயர்ச்சியுடன் கூடிய நம்பிக்கையின்மையே வருகிறது.

தூக்குதண்டனை

சிஷ்யன் :
குருவே ! எனக்கு சில விஷயங்கள் உங்களிடம் பேச வேண்டும்.
கழிந்த இரண்டு நாட்களாக என் முகத்தில் கறுப்பு உறையை மூடி தூக்குக் கயிற்றின் முன் நிற்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஒரு சுழற்சியாக என் மனதில் வந்து கொண்டிருக்கிறது.
அந்தத் துணி என் புற உலகை இருண்டதாக்குகிறது.
பயமாயிருக்கிறது.
அடுத்து எப்போது எந்த விநாடி என் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கும் என்று தெரியாது.
அது என் கழுத்தை இறுக்கும் விநாடிவரை நான் மூச்சு விட்டுக்கொள்ளலாம். இதோ மூச்சு விடுகிறேன். ம்ஹூஹ்... மிகுஷ்.. ம்ஹூஹ் ...மிகுஷ் இப்படியே விட்டுக் கொள்ளலாம்.
நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் எந்த மூச்சுக்காற்று என் இறுதி மூச்சுக்காற்று என்று எனக்குத் தெரியாது.
தொண்டையை இறுக்கும் கயிறு அந்த மூச்சுக்காற்றை நிறுத்தும் போது என் கால்கள் எப்படித் திணறும்.
என் நுரையீரல் எப்படித் திணறும்.
என் மல மூத்திரம் துவாரம் வழியே கசியுமா?
அது மாதிரி தொங்கிக்கொண்டு நான் எவ்வளவு நிமிடம் கிடப்பேன்.
அது முடிந்த பிறகு இருட்டுதானா. நான் இல்லையா?
என்னால் ஒரு மலரைப் பார்த்து ரசிக்க முடியாதா?
இரவு உணவாக உப்பு அதிகமுள்ள தோசையை சாப்பிட்டு விட்டு, நள்ளிரவில் தாகம் முட்ட ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிக்கும் போது ஒரு நிம்மதி கிடைக்குமே அதை அனுபவிக்க முடியாதா?
சில சமயம நல்ல இசை மனதுக்குள்ளே கேட்டு மனித உயிரின் இருப்பின் அற்புதத்தை உணர்த்தும் அதை உணர முடியாதா?
என்னுள் இருப்பது ஒன்றிரண்டு உணர்ச்சியல்லவே?
இருப்பது ஒருலட்சம் உணர்வுகள். அந்த ஒரு லட்சம் உணர்வுகளும் இந்த இருட்டிய உயிரின் பின்னால் இருக்கும் பயமுறுத்தும் மவுனத்தில் தொடர்ச்சியாக வரும் தூக்குக் கயிறின் இறுக்கத்தில் போய்விடுமா?
ஏன் என்னை இப்படி திட்டமிட்டு விநாடி விநாடியாக கடக்க வைத்து கொல்ல வேண்டும். இது எப்படி மனித நேயமாகும்.
திட்டமிட்டு என்னை கொலை செய்வது எப்படி மனித நேயமாகும்.
அந்த கறுப்பு உறை அணிந்த நேரத்துக்கும் தூக்கில் தொங்கும் நேரத்துக்குமான இடைவெளி என்னை துன்புறுத்துகிறது குருவே.
தூக்கு தண்டனை செய்தியைக் கேட்கும் போதெல்லாம் இப்படித்தான் தோன்றுகிறது.
இப்படித் தோன்றும் போது எல்லையே இல்லாத வெட்டவெளியில் வெறித்தனமாக கத்திக் கொண்டே ஒட வேண்டும் போல இருக்கிறது.
நேற்றும் இப்படித்தான் தோன்றி என்னைத் துன்புறத்துகிறது.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும் குருவே !
இரண்டு நாட்கள் முன்பு இறந்த நல்லவரின் இறப்பை மற்றவர்கள் கொண்டாடும் விதமே எனக்கு அருவருப்பாக தெரிகிறது.
பிணத்துக்கு மாலை போட்டு,
பிணத்துக்கு பவுடர் அடித்து,
பிணத்தை சலிக்க சலிக்க புகழ்ந்து,
பிணத்தை வணங்கி,
பிணத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கும் இந்த மக்கள்,
புதிதாக இன்று காலையில் துடிக்க துடிக்க ஒரு மனிதன் பிணமாகிவிட்டிருப்பது பற்றிய உணர்வில்லாமல் இருக்கிறார்கள்.
இதனாலேயே எனக்கு அந்த நல்ல பிணம் மீது அர்த்தமற்ற கோபம் வந்துவிடுமோ, வெறுப்பு வந்து விடுமோ என்ற பயம் இருக்கிறது.
நான் மிகுந்த மனநெருக்கடியில் உள்ளேன் குருவே. எதாவது சொல்லுங்கள்.
குரு : சிஷ்யா ! மனித வாழ்க்கையின் இம்மை மறுமை அடிப்படையிலான சிக்கலை பகவத் கீதை எப்படி சொல்கிறது என்றால்?
சிஷ்யன் : குருவே உங்கள் ரத்தம் தெறிக்க உங்கள் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்து விடுவேன். த்தா நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
குரு : இரண்டு நாட்கள் ஃபேஸ்புக் பக்கம் வராதே ! அதிகம் வார்த்தைகளைக் கொட்டாதே. அமைதியாக இருந்து விடு.
சிஷ்யன்: சரி.

மாற்றமில்லாதவர்கள்.

2011 யின் இறுதியில் ஃபேஸ்புக் வந்தேன்.
ஃபேஸ்புக்கில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் சில கேள்விகள்.
- சாதி வேண்டாம்கிறாங்க ஆனா ஸ்கூல்ல மட்டும் சாதி சான்றிதழ் கொடுப்பாங்க கேட்பாங்க.
-இந்து மதத்த மட்டும் திட்டுவாங்க ஆனா மத்த மதத்த திட்ட மாட்டாங்க/ மாட்டாரு இந்த தி.க / பெரியார்.
-காந்தி ஒரு இந்துத்துவ வெறி பிடிச்ச ஆள்
- லேடீஸ் வந்து ஜெண்ட்ஸ் சீட்டுல ’இது பொது இடம்னு உட்காந்துக்கிறாங்க. ஆனா அவுங்களுக்கு மட்டும் லேடீஸ் சீட்டுன்னு இருக்கு.
-பொம்பளைங்க அப்படி இப்படி டிரஸ் பண்ணிட்டு அப்புறம் ஆம்பிள பலாத்காரம் செய்றான்னு கம்பிளைண்ட் செய்தா எப்படி ?
-இடஒதுக்கீடு தப்பு. பணக்காரன் கூட அத பயன்படுத்திகிறான்.என் தெருவுல ஒரு பையன் நல்ல மார்க்கு ஆனா இந்த இடஒதுக்கீட்டால சீட்டு கிடைக்கல.இடஒதுக்கீடுதான் சாதிய வளக்குது
-இடஒதுக்கீட்டால் திறமை குறைந்த டாக்டர்கள் பொறியாளர்கள் வெளியே வர்றாங்க
- ராமர் படத்த செருப்பால அடிச்ச பெரியார் மேல எனக்கு வர்ற கோவம் இருக்கே நற நற நற.
- நான் ஐயர்ன்னு பின்னாடி போட்டா நீ பள்ளன்னு பேருக்குப் பின்னாடி தன்னம்பிக்கையா போடேன். யார் வேண்டாம்னு சொன்னது.
- அரேபியால எல்லாம் நெத்தியில சுட்டுக் கொல்றான். நம்ம நாட்டுல பிரியாணி வாங்கிக் கொடுக்க சொல்லி, தூக்குல போடக்கூடாதுங்குறான் இந்த மனித நேயவாதிகள். இந்த மனித நேயவாதிகளே அரைகுறைகள்தான்.
- அம்பேத்கர் பெரியார் பற்றிய பதிவுகளைப் பார்த்தாலே காத தூரம் தெறித்து ஒடுவது.
நான்கு வருடங்களாகப் பார்க்கிறேன்.
இவர்கள் அணு அளவுக்கு கூட தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.
அப்படியே இருக்கிறார்கள்.
அப்படியே பிடித்து வைத்த சாணி மாதிரி இருக்கிறார்கள்.
மாற்றுப் பார்வை இல்லை.
மாற்றுச் சிந்தனை இல்லை.
இப்படியே இருந்து
வயதாகி
கூன் விழுந்து
பல் விழுந்து
தோல் சுருங்கி
செத்துப் போவார்களோ.

தனிமையும் தவிப்பும்

வியாழக்கிழமை காலை
பாலும் முட்டையும் கலந்த கலவையில் நனைக்கபட்டு வேகவைக்கப்பட்ட பிரட்களில் ஐந்து எண்ணத்தை சாப்பிட்டுவிட்டேன்.
அது வயிற்றில் உப்பிக் கொண்ட உணர்வு.மதியம் சாப்பிட மனசில்லாமல் போயிற்று. சாப்பிடாமல் ஒரு கப் கிஸான் ஆரஞ்சு ஜூஸைப் பருகி பொழுதைப் போக்கினேன்.
ஒரு வித சோம்பலாகவும் எரிச்சலாகவும் இருக்க திடீரென்று எழுந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். வீட்டின் முன்பக்கத்தை கழுவி விட்டேன். பாத்திரத்தை கழுவினேன்.
சூடாக வெந்நீர் போட்டு கொதிக்க கொதிக்க குளித்தேன்.மாலை ஐந்து மணியாகியிருந்தது.
டிரஸ் செய்துவிட்டு “கொஞ்சம் வெளிய ரவுண்ட் அடிச்சிட்டு வர்றேன். காலையில இருந்து வீட்ல இருக்கிறது போரடிக்குது” என்று சொல்லி கிளம்பினேன்.
எங்கே போவதென்று தெரியவில்லை. அடையார் டிப்போவுக்கு ஒரு பஸ் பிடித்து வந்தேன்.
அங்கே ஒரு பாடப்புஸ்தகம் விற்கும் கடையின் வெளியே கொஞ்சம் பொதுபுஸ்தகம் பரப்பி இருந்தார்கள். அதை நின்று வேடிக்கைப் பார்த்தேன்.
அதில் துளிர் ஆசிரியர் ஏற்காடு இளங்கோ எழுதிய சிறுவர்களுக்கான அறிவியல் புஸ்தகங்கள் அருமையானதாக இருந்தன. அதில் குரங்கில் இருந்து மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தான். அதற்கு இடைப்பட்ட குரங்கு வகைகளைப் பற்றிய தொகுப்பு ஒன்று இருந்தது. அதை ரொம்ப நேரம் புரட்டினேன்.
யார் இந்த ஏற்காடு இளங்கோ? இவரிடம் போனில் பேசி நேரில் சந்திக்கலாமே என்று தோன்றிற்று. போன் நம்பர் இருக்கிறதா என்று புஸ்தகத்தைப் பார்த்தேன். இல்லை.
அறுபது ரூபாய் கொடுத்து வாங்கி கையில் வைத்து இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் அங்கே ஒரு பஸ் நிற்கிறது.
பிளாட்பாரத்தை உடைத்தபடி நின்று கொண்டிருக்கிறது. பஸ்ஸைச் சுற்றிலும் போலீஸ் பொதுமக்கள். அந்த பதட்டம் எனக்குள்ளும் வந்தது. என்ன என்று விசாரிக்க “பஸ்ஸ மேல விட்டுட்டான்” என்றார் ஒருவர்.
”என்னாச்சு யாருக்கு அடி. உயிருக்கு” என்று சொல்லும் போதே “ஒரு வயசான பாட்டி ஆள் ஸ்பாட் காலி” என்றார்கள்.
நான் கூட்டத்தை விலக்கிப் பார்க்கும் போது ஒரு உடலின் கைகள் மட்டும் வெளியே நீண்டுக் கிடக்க அதன் தொடர்ச்சியான உடலை நீலக்கலர் பிளாஸ்டிக் பாயை வைத்து மூடியிருந்தார்கள். பயங்கர அதிர்ச்சி எனக்கு. அப்படியே உறைந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்னும் சிலர் மொபைலில் போட்டொ எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றேன். “இன்னும் மூணு நாலு பேருக்கு சீரியஸ்” என்று பேசிக்கொண்டார்கள்.
மனம் படபடப்பாக இருந்தது. அப்படியே வேக வேகமாகச் சென்று பெசண்ட் நகர் செல்லும் சாலையின் தொடக்கத்தில் இருக்கும் கோவை பழமுதிர்சோலையின் அருகே போய் நின்று கொண்டேன்.
உடம்பில் ஏதோ நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்காவது போன் செய்து இதைப் பேசலாமா என்று நினைத்தேன். வேண்டாம் என்று கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அப்படியே நின்றேன். படபடப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது.
“நான் இன்று போஸ்ட்மார்டம் செய்யபோகும் உடலுக்குச் சொந்தக்காரர் யார்?” என்று ஒரு டாக்டர் எழுதுவதாக ஒரு விடலைப் பருவ கவிதை எழுதியிருப்பேன். அது ஞாபகத்துக்கு வந்தது.
காலையில் சாப்பிட்டது. மாலை தாண்டியதால் பசி அதிகமாகியது.
பக்கத்தில் சய்டூன் ரெஸ்டாரண்ட் இருக்க, அதில் நுழையலாமா வேண்டாமா என்று ரொம்ப நேரம் யோசித்தேன். பின் நுழைந்து சாப்பிட உட்கார்ந்தேன்.
என்னைத் தவிர இரண்டு இளம்பெண்கள் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத்து இருக்கையிலும் அமரவில்லை, தள்ளியும் அமரவில்லை நடுவாப்பில் அமர்ந்து கொண்டேன்.
அரை பார்பிகியூ கோழியும், ஒரு லைம் ஜூஸும் ஆர்டர் செய்து விட்டு “ சிக்கன் எப்ப வருதோ அப்பத்தான் ஜூஸும் வரணும். நான் சிக்கன் சாப்பிட்டு சாப்பிட்டு ஜூஸ் குடிக்கனும்” என்று புரியவைத்தேன்.
பொதுவாக எனக்கு பொட்டு வைக்காத பெண் நெற்றிப் பிடிக்காது. ஆனால் அந்த இளம்பெண்களில் ஒரு பொட்டு வைக்காத நெற்றி ஒருவிதமான பளபளப்பாக அழகாக இருந்தது. அவர் அவ்வப்போது முடியை ஒதுக்கி விடும் போது தெரியும் அந்த முழுமையான நெற்றி அழகாய் இருந்தது.
அதிகம் வெறிக்காமல் பரிணாம வளர்ச்சி குழந்தைப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.
சிக்கனும் ஜூஸும் வந்தது. அதைப் தின்றபடி ஜூஸைப் பருகியபடி புஸ்தகத்தையும் வாசித்தேன். எனக்கு பரிமாறிய சர்வருக்கு குரங்கள் படம் பார்க்கப் பிடித்திருந்தது போலும். அவரும் கொஞ்சம் தள்ளி என் புத்தகத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
பொறுமையாக சிக்கனை சாப்பிட்டு முடித்தேன். வீட்டுக்கு தந்தூரி ரொட்டியும், கடாய் பனீரும் பார்சல் வாங்கிக் கொண்டேன்.
ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தேன்.
அங்கே பூ விற்கும் மத்திம வயது பெண் தனியாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று மேல் விவரம் கேட்கலாம் என்று “இங்க ஆக்சிடண்டாமே” என்றேன். அப்பெண் “ஆமாங்க” என்று அழுவது மாதிரி முகத்தை வைத்து பேசத்தொடங்கினார்.
பதினைந்து நிமிடம் அவரிடம் நெகிழ்ச்சியாக வாழ்க்கையின் நிலையாமை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் இடுப்பில் ஏதோ ஒரு நகைக்கடையின் தட்டையான பர்ஸ் ஒன்று சொருகியிருந்ததும் என்னை ஈர்த்தது. எப்படி இப்படி சொருகியிருக்கிறார். ஒருமாதிரி எரிச்சலாய் இருக்காதா? என்றெல்லாம் தோன்றியது.
வீட்டுக்கு வந்து மனைவி சாப்பிட்ட பிறகு விசயத்தைச் சொல்லி வருத்தப்பட்டேன்.
பின் மகளிடம் விளையாடினேன். அவள் வகுப்பு விளையாட்டு விளையாடுவாள். அதில் நான் “ஸார்” ஆக நடித்தேன். அவளுக்கு தூரம், நேரம், வேகம் இம்மூன்றுக்கும் உள்ள தொடர்பு பற்றி எளிமையாக விளக்கினேன். புரிந்து கொண்டாள்.
மனைவியிடம் அதிகம் பேசவில்லை.
தூங்கும் போது மகளுக்கு ரஸ்கின் பாண்ட் எழுதிய கதை ஒன்று சொன்னேன். நான் மனைவி மகள் மூவரும் தூங்கிப் போனோம்.
இரவு இரண்டு மணிக்கு முழிப்பு தட்டியது.
சோடியம் வேப்பர் விளக்கின் மஞ்சள் ஒளி ஜன்னல் கண்ணாடியில் தெறித்தது. பார்த்துக் கொண்டே இருந்தேன். பஸ்ஸ்டாப்பில் பார்த்த வயதானவரின் கை ஞாபகத்துக்கு வந்தது.
அந்தக் கை பிஞ்சாய் இருந்து வளர்ந்து பின் தள்ர்ந்திருக்கும் என்பது போல பல அடுக்கு எண்ணங்கள் என்னைச் சுற்றின.
எனக்கு மூச்சு முட்டியது.
என் மகள் அருகே சென்று அவளை அணைத்துக் கொண்டேன். அவளுக்கு கச்சா முச்சாவென்று புழுக்கம் போலும். என்னைத் தவிர்த்தாள்.
எங்கள் வீட்டில் மனிதர்களை கட்டிக் கொண்டு தூங்குவதை விட தலையணைகளை கட்டிக் கொண்டு தூங்குவதைத்தான் நாங்கள் அனைவரும் விரும்புவோம்.
எனக்கோ மூச்சு முட்டல் அதிமான உணர்வு.
போய் என் மனைவி அருகே படுத்துக் கொண்டேன்.
அவளுக்கு என் முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டேன். “என்னை அணைத்துக் கொள்” என்றேன்.
அவளுக்குப் புரியவில்லை. தவிர்த்தாள். “உன் கையவாவது கொடு “என்றேன்.
கொடுத்தாள்.
அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.
“கொஞ்ச நேரம் கையை எடுக்காத ப்ளீஸ்” என்றேன். அப்படியே கைகளைப் பிடித்துத் தூங்கிப் போனேன்.
தனிமையில் வாழ்வதும்,
தனிமையில் மூச்சு விடுவதும்,
தனிமையில் தத்தளிப்பதும்
மனிதனால் முடிவே முடியாத காரியங்கள்
என்பதை
வாழ்க்கையில் இன்னுமொருமுறை புரிந்து கொண்டேன்.