Saturday, 31 August 2013

தமிழ் எழுத்தாளனும் வறுமையும் - சாருத்துவம்...

பணம் சம்பாதிக்க பலவழிகள் இருக்கிறது.அதில் ஒன்று நெருங்கிய நண்பர்களின் மனசாட்சியை தேர்ந்த வார்த்தைகளால் உலுப்பி எடுப்பது.

சாதுர்யத்தால் கண்ணீர் விட வைப்பது.

அதற்காக பல கதைகளை இட்டுக்கட்டுவது.மயங்கிய சின்ன குழந்தைகளைக் காட்டி குற்ற உணர்வை தூண்டி பணம் கேட்கும் பெண்ணைப் போன்று, வறுமையை பூதக்கண்ணாடியால் பெரிதாக்கி பிறருக்கு காண்பிப்பது.

அப்படிக் காட்டிகொண்டிருக்கும் ஒருவர் எழுதுவது மாதிரி எழுதிப் பார்த்தேன்... இனி அது...

நேற்று எனக்கு நான்கு இட்லிகள் கிடைத்தன.

பக்கத்து தெரு பாம்பாட்டி ஒருவர் அவருக்கு பிச்சையாக கிடைத்த நான்கு இட்லிகளை எனக்கே கொடுத்து விட்டார்.

நான் அன்போடு கேட்டேன் ‘நான்கு இட்லிகளையும் எனக்கே கொடுத்துவிட்டீர்களே.அப்படியானால் நீங்கள் எதைச் சாப்பிடுவீர்கள்” என்று.அதற்கு அவர் உங்கள் புத்தகத்தைப் படித்து பசியாறுவேன் என்றார்.

எனக்கு அன்போடு கிடைத்த நான்கு இட்லிகள் மகிழ்ச்சியைக் கொடுத்தன.ஆனால் நான் பிச்சைக்காரனாய் என்றுமே வாழ்ந்ததில்லை.இட்லி என்று வந்துவிட்டால் ஆறுவகை சட்னி இல்லாமல் சாப்பிட்டதே இல்லை.

மேதைமைக்கு வறுமைக்குமிடையே எப்போதும் கனிந்து கிடக்கும் ரகசிய உறவால் எனக்கு இட்லி மட்டுமே கிடைத்தது.சட்னி கிடைக்கவில்லை.

வெறும் இட்லியை விண்டு சாப்பிட்டேன்.நெஞ்செல்லாம் அடைத்து தலை சுற்றி கிழே விழுந்து விட்டேன்.

நம்புங்கள் ஐயா! கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தேன் சுயநினைவின்றி. என்னை தூக்கி ஒருவாய் தண்ணீர் தர ஆளில்லை.உலகத்திற்கே ஞானத்தை போதிக்கும் எழுத்தாளனுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்.

சும்மாவா சொன்னான் பாரதி “தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. நானே பாரதி.பாரதியே நான்.எனக்குள் பாரதியை ஒவ்வொரு அணுவாக உணர்க்கிறேன்.

கடவுளின் அருளால் இரண்டு நாட்களாகியும் அந்த இட்லி கெட்டுப்போகவில்லை.

சட்னி இல்லாவிட்டால் என்ன? கடையில் இட்லி பொடி வாங்கி வரலாம் என்று காசு தேடினேன்.காசு கிடைக்கவில்லை. வறுமை வறுமை.உள்ளங்கை ரேகையிலே வறுமையை ஒட்டி வைத்த இறைவனை பழிக்க முடியுமா? முடியாது.அவன் பெருங்கருணையுள்ளவன்.

சோபாவின் இடுக்கில் ஈர்க்குச்சியை விட்டு ஆட்டுகிறேன் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் கிடைத்தது.

மிச்ச ரூபாய்க்கு என்ன செய்ய? அழுகை முட்டியது எனக்கு.என் செல்ல நாய் கைகளை பிடித்து இழுத்தது. அது கொண்டு விட்ட இடத்தில் பார்த்தேன் .ஆம் கேஸ் சிலிண்டரின் மறுபக்கம் ஒரு ஐந்து ரூபாய் காயின் கிடைத்தது.

அந்தப் பசியிலும் நாய்க்கு முத்தமிட்டேன். நான் கேட்கிறேன் செய்நன்றி இல்லாதவன் என்ன பிறப்பு அய்யா? அவன் என்ன இருந்தால் என்ன ? செத்தால் என்ன?

கடைக்கு ஒடிப்போய் பத்து ரூபாய் கொடுத்து இட்லிப் பொடிக் கேட்டேன்.பத்து ரூபாய்க்கு கிடைக்காது என்கிறார்.துடித்துப் போய் நிற்கிறேன்.

நினைத்துப் பாருங்கள் தமிழ் எழுத்தாளன் ஒருவன் இட்லிப் பொடிக்காக அண்ணாச்சி கடையில் நிற்கும் கோரக் காட்சியை. நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.நீங்கள் உங்கள் காதலியின் மார்பில் சாய்ந்து எஸ்கேப் அவுன்யூவில் சினிமா பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.தமிழன் என்றாலே பிளாஸ்டிக்கன் தானே.எந்த ஆழமான சிந்த்திப்பும் இல்லாதவன்தானே.

மூன்று மணி நேரம் கடையில் தவமாய் நின்றபிறகு கடைக்காரர் “ஏ ரொம்ப நேரம் நிக்கயில்லா.உங்களப் பார்த்தா பாவமா இருக்கு.ஆனா எங்க ஜாதிக்காரவன்வளுக்கு ஒசில உபகாரம் செய்ஞ்சே பழக்கம் இல்ல கேட்டியலா.ஒரு அரைமணி நேரம் வந்து பொட்டலம் கட்டுனியள்னா.நல்ல இட்லிபொடி பெரிய பாக்கெட்டே தாரேன்.வாரதுன்னா வாங்க” என்றார்.

எனக்கோ பசி.வேறு வழியில்லை.கடையில் பொட்டலம் கட்டும் வேலையை செய்ய ஆரம்பித்தேன்.

வான்காவுக்கு கூட இந்த நிலமை வந்ததில்லை.அவன் தம்பி பணம் அனுப்பிக்கொண்டிருந்தான்.அவன் செக்ஸ் வொர்க்கர் காதலி கிறிஸ்டின் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள்.

ஆனால் எனக்கு .யாருமே இல்லை.

பொட்டலம் கட்டுவதில் முதல் வேலையாக பத்து முட்டைகளை ஒருவர் கேட்க, மடித்துக் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டியது இருந்தது.

எனக்கு எழுதத்தெரியும். முட்டை கட்டத்தெரியுமா? நான் எழுத்தாளன் அய்யா?

ஆர்.கே நாராயணனை உங்கள் வேலை என்னவென்று யார் கேட்டாலும் “என் வேலை எழுதுவது “என்று சொன்னாராம்.

ஆனால் நான் பிறக்கும் போதே ,சாமி பக்தியுள்ள நர்ஸ் என்னை ’புக்கர் புண்ணிவான்’ பிறந்துவிட்டான் என்று சொன்னாராம்.

பிற்காலத்தில் அதே நர்சும் நானும் தோழமையானோம்.

நான் கேட்டேன் எதைவைத்து என்னை பிறக்கும் போதே ‘புக்கர் புண்ணியவான்’ என்று சொன்னீர்கள் என்று .அதற்கு அவர் சொன்ன பதிலை இங்கே தரப்போவதில்லை.அந்தப் பதிலை என் நெஞ்சாங்கூட்டுக்குள்ளே அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

வருகிறேன் விசயத்திற்கு

முட்டை கட்ட முடியவில்லை.சரியாக பேப்பர் மடிக்கவில்லையாதலால் பத்து முட்டைகளும் தரையில் விழுந்து ஒடு உடைந்து ஒழுகியது.

அண்ணாச்சி முறைத்தார்.”யல செத்த மூதி பத்து முட்ட வெல தெரிமால.உனக்கு ஒண்ணுமே தெரியாதால.உனக்கு இட்லிப் பொடியும் கிடையாது ஒண்ணும் கிடையாது.ஒடுல’ என்று விரட்டிவிட்டார்.

வீட்டிற்கு வந்து நான்கு இட்லிகளையும் தண்ணீரைத் தொட்டு தொட்டு தின்றேன்.

வறுமையின் கொடுமையை அனுபவித்தாலே தெரியும்.

எனக்கு அண்ணாச்சி மேல் சுத்தமாக கோபமே கிடையாது.அவருக்கு என்னைத் தெரியாது.அதனால் அப்படிப் பேசிவிட்டார்.

ஆனால் உங்களுக்கு என்னைத் தெரியும். என் எழுத்து தெரியும்.

உங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவலாம்.

இட்லிக்கு இட்லிபொடியைக் கூட பார்சல் செய்து அனுப்பலாம்.

விருப்பம் உடையவர்கள் மட்டும்.

விருப்பமில்லாதவர்கள் என் மெயிலுக்கு மெயில் செய்து திட்டலாம்.

வசையே எனக்கு டானிக்.அதை மற்றவர்களை திட்ட உபயோகித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு எழுத்தாளன்... 

No comments:

Post a Comment