Tuesday, 3 September 2013

திருவான்மியூரில் ஒரு புத்தக கடையாம்... அதன் பெயர் பனுவலாம்...

வீட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில் திருவான்மியூர் பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இறங்கி ஜெயந்தி சிக்னலை நோக்கி நடந்தால் இடது பக்க முதல் மாடியில் ‘பனுவல் புத்தகக் கடை’ வந்துவிடுகிறது.

இன்றுதான் அதை தொடங்கியிருக்கிறார்கள்.தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.

நுழைந்ததும் பரிசல் சிவ செந்தில்நாதன் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.கைகளைக் குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

என்னை பனுவல் கடையை நடத்தும் அமுதரசன(?)க்கு அறிமுகப் படுத்தினார்.’தம்பி நல்ல வாசிப்பாளர்.இலக்கிய ஆர்வலர்’ என்று.

அப்புறம் நடிகை ரோகிணிக்காக வெயிட்டிங்.ரோகிணி வந்ததும் குத்துவிளக்கேற்றி திறப்பு நடந்தது.

இந்தப் பனுவல் புத்தகக் கடையை நடத்துவது மூன்று ஐடி புரொபசனல்ஸ்.அமுதரசன்,முகுந்தன்,சரவணன்.

தங்கள் வேலை நேரம் போக ‘வாழை’ என்றொரு அமைப்பையும் தொடங்கி நிறைய கிராமங்களுக்கு சென்று எழுத்தறிவை போதிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

இப்போது திருவான்மியூரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்த புத்தகக் கடையை தொடங்கியிருக்கிறார்கள்.கடை மட்டும் அல்ல கடையினுள்ளேயே ‘தடாகம்’ என்ற சிறிய அரங்கையும் வைத்திருக்கிறார்கள்.அதில் இலக்கிய நிகழ்வுகள் நடக்கும்.

விழாவை பரிசல் சிவ செந்தில்நாதன் தொகுத்து வழங்கினார்.விழாவில் வரிசைப்படி பேசியதை மிகச்சுருக்கமாக எழுதுகிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சன் - இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.முதன் முதலில் இப்படி புத்தகம் வாங்கவும் அமர்ந்து படிக்கவுமான கான்சப்டை செயல் படுத்தியவர் ‘க்ரியா ராமகிருஷ்ணன்’.தற்போது புத்தங்கள் பற்றிய விமர்சனக்கூட்டங்கள் குறைந்து வருவது கவலையளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் எந்த புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற நிலைமை வரவேண்டும்.ஃப்ரான்சில் இரவு லைப்ரரிக்கள் நிறைய் இருக்கின்றன.சைனாவில் ஏடிஎம் மெசினில் பணம் விழுவது போல புத்தகம் விழும் அறிவியலை செயல் படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கி கொடுத்துக் கொண்டே இருங்கள்.என் அப்பா எனக்கு 12 வயதில் ‘அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள்’ புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.அதை நான் படித்து புரிந்து கொண்டது என் நாற்பதாவது வயதில்தான்.அதனால் என்ன புத்தகம் இருந்ததினால்தான் எனக்கு அந்த ஆர்வம் வந்தது.ஆகையால் புத்தகம் கொடுத்துக் கொண்டே இருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு.

கல்வியாளர் கல்யாணி-இப்போதெல்லாம் நான் அதிக புத்தகம் படிப்பதில்லை.ஆனால் வாசிப்பில் வெறியாக இருந்த காலங்கள் இருக்கிறது,அமெரிக்கன் கல்லூரி நூல் நிலையம் முழுவதும் எப்போதும் ரொம்பி இருக்கும் அளவுக்கு முன்னர் படிக்கும் ஆர்வம் நம்மிடையே இருந்தது.

ட்ராஸ்கி மருது - இந்தக் பணிக்கு என்னால் முடிந்த யோசனையை அமுதரனுக்கு சொல்லியிருக்கிறேன்.அடிக்கடி என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்பார்.மிக ஆர்வமுடையவர் அவர்.புத்தகத்தை திருடிக்கூட படிப்போம்.அந்த அளவுக்கு புத்தகத்தின் மேல் காதல் கொண்டிருந்தோம்.

எனக்கு கோணங்கி ஒரு புத்தகம் கொடுத்தார்.அதில் ‘உங்களுக்க்காக இன்னார் நண்பரிடம் இருந்து திருடிய புத்தகம் -இப்படிக்கு கோணங்கி என்று கையெழுத்து போட்டு கொடுத்தார் கோணங்கி என்று சொன்னார் (இதை சொல்லும் போது அனைவரும் சிரித்தோம்)

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் - நான் ஒரு புத்தகம் வேண்டும் என்று பனுவலுக்கு போன் செய்து கேட்டேன்.கேட்டு எட்டு மணி நேரத்தில் கொடுத்தனர்.கொஞ்சம் அதிக பணம் கொடுத்தேன்.இல்லை புத்தகதிற்கான காசு மட்டும் கொடுத்தால் போது என்று வாங்கிச் சென்றார்கள்.

இது போல் நீதிபதி சந்துரு என்னை ஒரு புத்தகம் கேட்டார்.அதையும் பனுவல் எட்டு மணி நேரத்தில் கொடுத்தார்கள்

குழந்தைகள் டிவி மூலமாக சினிமா மூலமாக உலகை தெரிந்து கொள்கிறார்கள்.அவர்கள் வளர வளர புத்தகம் மூலமாக கற்றுக்கொள்ளும் தன்மையை நாம் வளர்க்க வேண்டும்.

பாலகிருஷ்ணன் மாரா என்பவர் புத்தகம் விற்று இப்போது பெரிய பணக்காரராகி இருக்கிறார்.அது போல் இந்தக் கடை இலக்கியம் வளர்ப்பது மட்டுமன்றி வியாபாரத்திலும் மேம்பட வேண்டும்.

நடிகை ரோகிணி - நான் ஐந்து வயதில் தெலுகு படம் ஒன்றில் கிருஷ்ணர் வேடம் போட்டேன்.அதன் பிறகு நான் எங்கு போனாலும் ஆந்திராவில் ஆரத்தி எடுத்தார்கள்.படிக்காமல் இருந்தால் ஆரத்தி எடுப்பார்கள் என்று மகிழ்ந்தேன்.

ஆனால் அதன் பிறகு பள்ளி சென்று படிக்காததில் வருத்தமுண்டு எனக்கு.என்னுடைய மொத்தப் படிப்பே இரண்டு வருடங்கள்தான்.அதன் பிறகு நான் ஸ்கூல் போனதில்லை.

அப்படியான எனக்கு, அறிவு கிடைத்தது புத்தகங்கள் மூலமாகத்தான்.

இந்த விழாவுக்கு லேட்டாக வந்ததுக்கு காரணம் எனக்கு இருக்கும் உடல் பிரச்சனைதான்.நானே டிரைவிங் செய்தால் வாமிட் வரும்.

இந்த விழாவுக்கு ரொம்ப ஆர்வமாக வந்ததன் காரணம் ஃப்ரீ புக்ஸ் கிடைக்கும் என்பதால்தான்.( சிரிப்பு).

என் மகன் யாரும் சொல்லாமல் அவனே படிக்கிறான்.காரணம் வீடு முழுவதும் இருக்கும் புத்தகங்கள் அவனைப் படிக்க வைக்கின்றன.புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகமானால் அதை பெரும் செலவாக நினைக்கிறோம்.அந்தப் போக்கு தவறு. (ரோகிணி மிக அழகாக இருந்தார்.)

இப்படி பேசி முடித்த பிறகு அனைவருக்கும் நவதானிய பொங்கல் பறிமாறப் பட்டது. பின் திணையரிசி பாயசம் கொடுத்தார்கள்.

இரண்டுமே சுவையாய் இருந்தது.

தினை பிளாஸ்டிக் கப்பின் கீழே தங்கிவிட்டது.அதை அப்படியே கவிழ்த்து வாயில் கொட்டப் பார்த்தேன் முடியவில்லை .ஒட்டியிருந்தது.தட்டி தட்டிப் பார்த்தேன்.கிழே விழவில்லை.மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்களோ என்ற வெட்கம் வர, போய் ஸ்பூன் வாங்கி எடுத்துச் சாப்பிட்டேன்.

அதன் பிறகு கிழ்கண்ட புத்தகங்களை வாங்கினேன்.

1.சுவர்கள் திசையெங்கும் கொண்ட கிராமம் -அழகிய பெரியவன்

2.மாற்றுவெளி ஆய்விதழ்;கேரளச் சிறப்பிதழ்

3.வெண்மணியிலிருந்து வாய்மொழி வரலாறு - சொலை சுந்தர பெருமாள்

4.வரலாறும் வக்கிரங்களும்- ரொமிலா தாப்பர்

5.பட்ட விரட்டி- காலித் ஹுசைனி

6.ராஜ ராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - சி.இளங்கோ.

வாங்கி, பரிசல் சிவ செந்தில்நாதனிடம் சொல்லி (அடிக்கடி வாங்க விஜய்.நிறைய நிகழ்வுகள் இங்க நடக்கும்) விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் மோர்குழம்பும் புதினா துவையலும் அவரைக்காய் பொறியலும் வைத்து சாப்பிட்டேன்.

அவ்ளோதான்... 

No comments:

Post a Comment