வடிவேலு காமடியில் பொண்ணு பார்க்க போன இடத்தில் மாப்பிள மொக்கசாமி வந்திருக்காக, மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக வாம்மா மின்னல் என்று சொன்னவுடன் “சல்லென்று” மின்னலாக அந்த பெண் போகும் காட்சி எல்லோருக்கும் தெரிந்ததே.( எப்படி ஜனரஞ்சக்மா தொடங்கினேன் பாத்தீங்களா).
அது போல பாண்டிய மன்னன் போரில் ஜெயித்து ஊருக்குள் யானைமேல் விஜயம் செய்யும் போது, பெண்கள் எல்லோரும் பாண்டிய மன்னனை ரசிக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் ரசிப்பதற்கு முன்னால் மன்னனை சுமந்த பெண் யானை கடந்து விடுகிறது.
உடனே பெண்களுக்கு யானை மீது கோபம் வந்து விடுகிறது. “ஏம்மா யானை கொஞ்சம் ஸ்லோவாத்தான் போயேன்.பொம்பளன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்.இப்படி வேகமா போனா என்ன அர்த்தம்” என்று கோபிக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் ரசிப்பதற்கு முன்னால் மன்னனை சுமந்த பெண் யானை கடந்து விடுகிறது.
உடனே பெண்களுக்கு யானை மீது கோபம் வந்து விடுகிறது. “ஏம்மா யானை கொஞ்சம் ஸ்லோவாத்தான் போயேன்.பொம்பளன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்.இப்படி வேகமா போனா என்ன அர்த்தம்” என்று கோபிக்கிறார்கள்.
இது முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடலில் வருகிறது.
பாடல்:
எலா மடப்பிடியே
எம்கூடல் கோமான்
புலா அல் நெடுநல்வெல்
மாறன்-உலா அங்கால்
பைய நடக்கவும்
தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவது
உடைத்து.
விளக்கம்:
என் தோழியே!
என் அழகிய இளம் பெண் யானையே!
எங்கள் அரசற்பெருந்தகை
பகைவரின் சதையில் பாய்ந்த வேல்தனை,
கொண்டிருக்கும் பாண்டிய மன்னன்
உன் மீதேறி உலா வரும் போது
உனக்கு மெல்ல நடக்கவும் தெரியவில்லையென்றால்,
உன் பெண்மை சந்தேகப்படும் படி உள்ளது.
இந்தப்பாடலில் என்னை கவர்ந்த வார்த்தை பாடலின் முதலில் தொடங்கும் “எலா”. ”எலா” என்றால் என் தோழியே என்று அர்த்தம்.
இருப்பினும் தென்னிந்திய சைவ சிந்தாந்த கழகம் 1971 இல் வெளியிட்ட “கழகத்தமிழ் கையகாராதி” புத்தகத்தை புரட்டி அர்த்தம் பார்த்தேன்.அதில்
/எலா -நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர்./ என்று இருந்தது
நான் இந்த “எலா”என்ற வார்த்தை திருச்செந்தூர் தூத்துகுடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் பக்கத்தில் கேட்டிருக்கிறேன்.என் அம்மா பேசி கேட்டதில்லை.ஆனால் ஆச்சி பேசி கேட்டிருக்கிறேன்.
“எலா இங்க வாலா”
”எலா எங்கனலா ஒழிஞ்சி போயிட்ட.தொவையல் அரைச்சியா இல்லியா.”
அது ரொம்ப லோக்கலான ஒரு மொழி என்று அதை பின் வரும் சந்ததியினர் விட்டுவிட்டனர்.
இது பற்றி அம்மாவிடம் போன் செய்து கேட்டபோது. இந்த “எலா” என்ற வார்த்தையை ஆசாரி (விஸ்வகர்மா) ஜாதியினர் அதிகம் உபயோகிப்பார்கள் ஆறுமுகநேரியில் என்றார்.
ஆக “எலா” என்பது ஒரு சுத்த தமிழ்.இனிப்பான தமிழ்.இது மாதிரி எத்தனை வார்த்தை நம்ம மொழிய விட்டு நம்ம கூச்சத்தால “அப்ஸ்காண்ட்” ஆச்சோ தெரியல.
அது மாதிரி இதில் இருக்கும் இன்னொரு வார்த்தை “பைய”. ”பைய” என்றால் மெதுவாக என்றர்த்தம்.
குமரி மாவட்டத்தில் “பைய” என்றுதான் சொல்வார்கள்.
“யல பைய செய்யேம்ல இல்லனாக்கி ஐயம்மா போயிரும்” ( மெல்லச்செய் இல்லையெனில் கெட்டதாய் போய்விடும்).
No comments:
Post a Comment