Thursday, 5 September 2013

கல்முகம்

கோயிலுக்கு போகும் போதெல்லாம் அங்குள்ள சிலைகளின் கருணை முகங்களை பார்க்க பார்க்க ஏன் இந்த சிலைகள் வைக்கபட்டிருக்கின்றன.

இதன் பர்பஸ் என்ன? 

எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலில் ‘ஜோதி’ தான் பெருமாள்.அது மாதிரி இருந்து விட வேண்டியதுதானே!என்பது மாதிரி நினைப்பேன்.

ஆனால் சில சாமி உருவங்களை பார்க்கும் போது அந்த வடிவங்கள் ஆழ்மனது வரை சென்று ஏதோ செய்யும்.

பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.

இந்த சிலைகளின் பர்பஸை புரிந்து கொள்வதற்கு ஒரு அமெரிக்க சிறுகதையை உதாரணம் சொல்வேன்.

இதுமட்டும் காரணமில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

நினைவிருந்தவரை கதையை சொல்கிறேன்.

இந்த கதையை எழுதியது ‘நதேனியல் ஹார்த்தர்’( 1804-1864).

கதையின் பெயர் ‘கல்முகம்’ (கிரேட் ஸ்டோன் ஃபேஸ்).

வறண்ட மலைகளுக்கு நடுவே இருக்கும் அந்த கிராமத்தில் சிறப்பு, அந்த பெரிய கல்முகம்தான்.

இயற்கையிலேயே மலையின் முன்முகப்பில் அமைந்திருக்கும் மாபெரும் மனித முகம் போன்ற அமைப்பு பற்றி நிறைய கதைகள் உண்டு.

’எர்னஸ்ட்’ சிறுவனாய் இருக்கும் போது அவன் அம்மா அது பற்றி சொன்னாள்.

’அந்த கல்முகம் ஒரு மாமனிதன். உலகின் எல்லா சக்தியும் வாய்க்கப்பெற்றவன்.கருணையானவன்.தீமைகளை வெறுப்பவன்.அடுத்தவர் உணர்வை புரிந்து கொண்டவன். அவன் பிறந்து மனிதனாக நம் கிராமத்துக்கு கட்டாயம் வருவான். நீயும் நானும் ,இந்த கிராமமும் அதற்கு காத்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்.’ என்றாள். 

எர்னஸ்ட் மனதில் அம்மா சொன்னது உறைந்து விட்டது. தினமும் அந்த கல்முகத்தை பார்த்து கொண்டே இருப்பான்.

கடுமையான உழைப்பு முடிந்து ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த கல்முகத்தை பார்த்து கொண்டிருக்க ஆரம்பித்தான். 

ஒருநாள் அந்த ஊருக்கு, ஊரில் பிறந்து வெளியூருக்கு போய் பணக்காரனாகிய கணவான் திரும்பி வந்தான். எல்லோருக்கும் பணமாய் இறைத்தான். வாரி வழங்கினான். ஊர் மக்கள் எல்லோரும் அந்த பணக்காரனின் முகம் ‘கல்முகம்’ முகம் மாதிரி இருப்பதாக பேசிக்கொண்டார்கள். 

சிறுவன் எர்னஸ்ட் ஒடி வந்து பணக்காரனை பார்த்தான். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.பணக்காரனின் முகம் கல்முகம் மாதிரி கருணையானதாக இல்லை.

எர்னஸ்ட் மனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பின் எர்ன்ஸ்ட் வளர்ந்து இளைஞனான்.தினமும் கல்முகத்தை பார்த்து அந்த கல்முகத்தின் நல்குணங்களாக பலவற்றை நினைத்து கொண்டான்.கற்பனை செய்து கொண்டான்.அந்த குணங்களை எல்லாம் தானே செய்ய ஆரம்பித்தான்.பிறருக்கு உதவி செய்வதை செய்து கொண்டே இருந்தான்.

அப்போது ஊருக்கு திரும்பிய ’வீரன்’ ஒருவனின் முகம் ‘கல்முகம்’’ மாதிரியே இருப்பதாக சொன்னார்கள். எர்னஸ்ட் போய் பார்த்தான் அவனுக்கு திருப்தி இல்லை. 

எர்னஸ்ட் இப்போது கல்முகத்தின் உதவியால் இன்னும் பக்குவமானவனாய் ஆகியிருந்தான். மக்களுக்கு நிறைய போதித்தான்.வயதும் ஆகிவிட்டிருந்தது. கல்முகம் பார்த்து அவன் மனம் கனித்து விட்டிருந்தது. 

அப்போது ஊருக்கு ஒரு கவிஞன் வந்தான். அறிவை பொழிந்தான்.

மக்கள் அந்த கவிஞனைப் பார்த்து இவன் முகம் கல்முகத்தை ஒத்து இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள்.

எர்னஸ்ட்டுக்கு கொஞ்சம் பிடித்து இருந்தாலும், முழு திருப்தி இல்லை. கவிஞரை உபசரித்து கவனித்தார்.

கவிஞர் எர்னஸ்டிடம் மனம் விட்டு நிறைய பேசிக்கொண்டே இருந்தார். பின் திடீரென்று எர்னஸ்ட்டின் முகத்தை கூர்ந்து பார்த்தார்.

“எர்னஸ்ட் நான் கண்டிபிடித்து விட்டேன்.உங்கள் முகம்தான் அந்த ‘கல்முகம்’. நீங்கள் தான் ஊரார் எதிர்பார்த்த மகான். நிச்சயமாக சொல்கிறேன்” என்றார்.

ஊராரும் அதை மனமொத்து ஆமோதித்தார்.

ஆனால் எர்னஸ்ட் அதை ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக போய்விடுகிறார்.கதை முடிகிறது.

இந்த கதையை முழுவதுமாக படிக்கும் போது மிகநன்றாய் இருந்தது எனக்கு. 

கதையில் உள்ளதைப்போல உயரிய நோக்குள்ள கதைகளால் அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகளை அடிக்கடி போய் பார்க்கும் போது, அதன் சாரம் நம் மனதிலும் இறங்கிவிடுமோ என்னவோ.

அதற்காகத்தான் கோயில்களை கட்டிவைத்து, சாமி கும்பிடச்சொல்கிறார்களோ என்னவோ?

எர்னஸ்ட்டின் கண்களும் மனதும் இனிமேல் எனக்கும் சாமி சிலைகளை பார்க்கும் போது வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

No comments:

Post a Comment