Monday, 9 September 2013

ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம்...

'எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்று கவிஞர் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தை கடந்த ஞாயிறு பனுவல் புத்தகநிலையம் தடாகம் அரங்கத்தில் பார்த்தேன்.

இந்தப் படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளர் இளையராஜா.வெளி வந்த ஆண்டு 2008.

படம் ஐந்தரை மணிக்கு ஆரம்பித்தது.பிரளயன் முன்னமே வந்திருந்தார்.ருத்ரனும்,ரவிசுப்பிரமணியனும் பின்னால் சேர்ந்து கொண்டார்கள்.

இந்த படம் ஜெயகாந்தனை ஏற்றிக் கூற முயற்சிக்கவில்லை.ஜெயகாந்தன் இப்படி இருக்கிறார் என்பதை காட்டுகிறது.ஜெயகாந்தன் கொண்டிருக்கும் பிற்போக்கு கருத்துக்களைக் கூட அவர் வாயாலே பேசச் செய்து பதிந்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக தீவிர சமுதாயப் பார்வையில் இருப்பவர்கள் இதைப் பார்த்தால் கொதிப்பார்கள்.

அப்படி ஒருவர் கொதித்தார்.அதை கடைசியில் பார்ப்போம்.இப்போது டாக்குமென்டரி பிட்ஸ்... என்னை ஈர்த்ததில் கொஞ்சம்.

-காந்திக்கு லியோ டால்ஸ்டாயை அறிமுகப் படுத்தினது ஒரு தமிழர்

-ஜெயகாந்தனுடைய சபையில் இத்தனை பேர்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.ராணித் தேனீயாக அவர் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.எந்த அளவுக்கு ஆவேசமாக பேசுவாரோ அது போலவே உடனடியாக அமைதியாகவும் பேசுவார்.கருத்துக்கள் தாண்டி, யாரையும் அவமானப்படுத்தி விட வேண்டும் என்று ஜெயகாந்தன் நினைப்பதில்லை.

-”என்னுடைய எழுத்து பிரச்சாரம் என்று விமர்சனம் இருக்கிறது.ஆம் பிரச்சாரம்தான்.எத்தனையோ பிரச்சாரங்கள் நல்ல இலக்கியங்களாக இருந்துள்ளன.இயேசுநாதரின் பிரச்சாரத்தை தாண்டிய நல்ல இலக்கியமில்லை.இங்கு ஏன் பிரச்சாரங்கள் இளக்காரமாய் பார்க்கபடுகிறது என்றால் கலைஞனைத் தவிரவும் நிறைய பேர் பிரச்சாரம் செய்கிறார்கள்.அதனால்தான்” - ஜெயகாந்தன்

-”நான் எழுத வரும் போது முதன் முதலில் அஞ்சியது எதுகை மோனைக்குதான்.அதை தவிர்த்தலே இலக்கியத்திற்கான முதல் படி என்று நினைத்தேன் .நானே பின்னர் “பாதை தெரியுது பார்” திரைப்படத்திற்கு பாட்டு எழுதினேன்.” - ஜே.கே

-மகாபாரதம் தெரியாதவன் அந்தச் சுவைய அறியாதவன் இந்தியன் ஆக மாட்டான் - ஜே.கே

-மயிர் என்பது தூய தமிழ்ச் சொல் அதைச் சொல்வது எப்படி கெட்ட வார்த்தை - ஜே.கே

-இசையில் மிக அதிக நாட்டம் உடையவர்.வீணையெல்லாம் கற்றுக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.

-தமிழ் எழுத்தாளன் சிந்தனையாளனாகவும் இருப்பான் என்பதை எல்லோருக்கும் முதன் முதலில் புரிய வைத்தவர் ஜெயகாந்தன் - அசோகமித்திரன்

-திராவிட கழக வீரமணியும்,ஜெயகாந்தனும் வகுப்புத்தோழர்கள்.சிறுவயதில் வீரமணியின் பெயர் சாரங்கபாணி,ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். ”சிறுவயதில் ஜெயகாந்தன் எனக்கு பீடி சுருட்டிக் கொடுத்து இழுக்கச் சொன்னார்.இழுத்துப் பார்த்தேன்.தலைசுற்றியது.அதன் பின் அந்தப் பக்கம் போவதே இல்லை “ என்று வீரமணி நகைச்சுவையாக சொல்கிறார்.

-”பெரியார் அண்ணா போன்றவர்களை பார்க்காமல் இருந்தான் நான் கம்யூனிஸ்டாக இருந்திருப்பேன் என்று கருணாநிதி சொல்கிறார்.ஆனால் நானோ பெரியார் அண்ணாவைப் பார்த்த பிறகுதான் கம்யூனிஸ்டாக மாறிப்போனேன்.- ஜே.கே

-”தமிழ்நாட்டில் திராவிட மாயையை திராவிட மோகத்தை குறைத்ததில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு முக்கிய பங்கு உண்டு.திருக்குறள் படிக்காமல் மார்க்ஸ் படிக்கும் எந்த கம்யூனிஸ்டும் உருப்பட மாட்டான்.முதலில் தமிழனாக உணர்ந்தாலே நல்ல பொதுவுடைமை சிந்தனையாளாராக முடியும்” என்று ஜீவா சொன்னதாக ஜெயகாந்தன் சொல்கிறார்.

-”எம்.ஜி.ஆர் பார்க்க ஆசைப்பட்டார் என்கிறார்.அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள்.இருந்தாலும் நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை” - ஜெயகாந்தன்.

-”காமராஜர் ஒருமுறை என்னிடம் அது என்னப் பாட்டு என்றார். நான் எது என்றேன். அதான் “யாதும் யாதும்” என்று யோசித்தார்.நான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அந்தப் பாட்டையா சொல்கிறீர்கள் என்றேன். “ஆமா ஆமா அது எழுதினது யாரு” . அதை எழுதியது கணியன் பூங்குண்றனார் என்றேன்.காமராஜருக்கு அந்த அளவுக்கு தமிழ் எல்லாம் தெரியாது.ஆனால் அவர் அதற்கு வெட்கப்பட்டது கிடையாது.அதை வெளிப்படையாகச் சொல்வார். - ஜே.கே

-”கருணாநிதி என்னை மிக அழமான நட்பாக பலவருடம் நினைத்தார்.அதனால் அவரிடம் நடபானேன்” - ஜே.கே

-ஜாதி இருக்கிறது.அது இந்தியாவின் வேர் - ஜே.கே (இதைக் கேட்கும் போது கடும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.)

-பிராமண துவேசம் இனி தேவையில்லை. துவேசித்து என்ன ஆகிவிட்டது.பகைதான் வளரும் -ஜே.கே

-எதிரிகளைத் தேடிக்கொண்டே இருக்காதீர்கள் - ஜே.கே

-நானே பார்க்க விருப்பட்ட ஆளுமை, காஞ்சி மகா பெரியவர்.- ஜே.கே

-”முதாளித்துவம் வேண்டும்.உடனே பதினேழாம் நூற்றாண்டு முதலாளிகளை நினைத்துக் கொள்ள வேண்டாம்.நிர்வாகம் செய்யாமல் எந்த ஒரு இயக்கமும்.நிறுவனமும் முன்னேறாது” - ஜே.கே

-”எனக்கு விருது தந்ததன் மூலம் தமிழ் பல்கலைக் கழகம் தன்னை பெருமைபடுத்திக்கொண்டது” - ஜே.கே

-”ஜெயகாந்தன் நாடகம் நடிக்க சிறுவயதில் எவ்வளவு சிரமப்பட்டார் எனபதை நகைச்சுவையாக விளக்குகிறார். “தாயே இந்தப் பக்கம் வாருங்கள்” என்ற டயலாக்கை நாள் முழுவதும் மனப்பாடம் செய்ததை நகைச்சுவையாக விளக்குகிறார்

-”எனக்கு பிடித்த பெண் ஆளுமைகள் என்றால் அதில் முக்கியமானவர் அவ்வையார்.அவர் எல்லோருக்கும் தாய்.பயமில்லாதவர்” - ஜே.கே

-”பக்கத்து மாநிலக்காரன் உன்னை அடித்தாலும் நீ சட்டத்திற்கு உடப்பட்டுதான் இருக்கனும்.அதுதான் நியாம்.உன் நேர்மையை நியாத்தை எக்காரணம் கொண்டும் ஏன் நீ இழக்க வேண்டும்”- ஜே.கே

- “பிற எழுத்தாளர்கள் படைப்பை படித்து கருத்து சொல்வதில்லை.அது வெற்று “காஸிப்பாக” போய் விடுகிறது “ ஜே-கே

-1959 ஆண்டு திருச்சியில் நடந்த கூட்டத்தில் பெரியாரின் கருத்துக்களை, பெரியார் முன்னாலே எதிர்க்கிறார் ஜெயகாந்தன்.

-சில நேரங்களின் சில மனிதர்களை காட்டும் படக்காட்சிகள் வருகின்றன.

-இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிறைவாகவே படுகிறது எனக்கு - ஜே.கே

-கடலூருக்கு போகிறார் ஜெயகாந்தன் (இன்றைய காலத்தில்).அங்கே ஒரு சிறுவனிடம் என்னைத்தெரிகிறதா என்று கேட்கிறார்.அவன் தெரியல என்கிறான். “என் பெயர் ஜெயகாந்தன். ரஜினிகாந்த பேர ஞாபகம் வெச்சிகிட்டா என் பெயரை ஞாபகம் வெச்சிக்கலாம் “என்று நகைச்சுவையாக சொல்கிறார்.

-படம் முடிவில் பத்துநிமிடம் அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லி முடிக்கிறார்கள்.

படம் முடிந்ததை அடுத்து,

பிரளயன் பேசினார்.”ஜெயகாந்தனின் தர்க்க உலகத்தில் யாரும் லேசில் புகுந்து விட முடியாது.மிகத்தெளிவாக பேசுவார்” என்றார்.ஆவணப்படத்தின் ஒலி பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ருத்ரன் ஜெயகாந்தனுக்கும் தனக்கு இடையே நல்ல நட்பு இருந்ததைச் சொன்னார்.ஒருமுறை தான்( ருத்ரன்) மிகவும் டிப்பிரஸ்டாக இருக்கும் போது ஜெயகாந்தன் “நல்ல டாக்டருய்யா நீ. depressed ஆ இருந்தா எப்படி பிரச்சனைய தீர்ப்ப... concern ஆ இரு என்று இரண்டிற்கும் வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்தாராம். மேலும் “உயிரோடு இருக்கும் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாதே.பிறகு அவர் செய்யும் எல்லா கிறுக்குதனத்திற்கும் நீ தலையாட்ட வேண்டும்” என்று ஜே.கே சொன்னதாக நினைவு கூர்ந்தார்.

இயக்குனர் ரவிசுப்பிரமணியம் பேசுவதற்கு முன்னால் பார்வையாளர்கள் பேசும் படி பரிசல் செந்தில்நாதன் கேட்டுக்கொண்டார்.

அதில் ஒருவர் மிக ஆவேசமாக “ஜெயகாந்தன் ஜாதி வெறி பிடித்த பார்ப்பண ஆதரவாளர்.உடனடியாக ஊருக்குச் சென்று அவர் புத்தகங்களையெல்லாம் தூர எறிந்து விடுகிறேன்.அதை சாக்கடையில் போட்டால் கூட சாக்கடைக்கு கேவலம்” என்றார்.அவர் அப்படி சொன்னது ருத்ரனின் மனதை பாதித்ததை முகபாவனைகளில் இருந்து புரிந்துக் கொள்ள முடிந்தது.

இன்னொரு முதிர்ந்த பத்திரிக்கையாளர் அவர் ஜே.கேவுடன் பழகிய நாட்களை பகிர்ந்து கொண்டார்.

நான் கொஞ்சம் உதறலுடன் மைக்கைப் பிடித்து “ஜெயகாந்தன் பேசுவது சரியாப் புரியல.அவர் பேசுறதுக்கு தமிழ் சப்டைட்டில் போடுங்க என்றேன்”. அதன் பின் “இல்ல தப்பாச் சொல்லல் ரீச் (Reach) தான் குறிக்கொள் அப்படின்னா அதச் செய்யலாம்” என்றேன்.அப்புறம் ஜெயகாந்தனைக் காட்ட இந்த ஆவணப் படத்தில் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலைக் காட்டி விளக்கியதில் எனக்கு உடன்பாடில்லை. என்றேன். அந்த நாவல் கருத்தளவில் பாடாவதியானது.என் மகளுக்கு இன்னும் பத்துவருடம் பிறகு அந்த நாவலைப் பற்றிச் சொன்னாள் அதைப் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.ஆனால் “ரிஷிமூலம்” மாதிரி சிக்கலான பாலியல் கதைகளை ஜெயகாந்தன் ஆராய்ந்திருப்பதுதான் வருங்கால இலக்கியர்களுக்கு உதவும் என்றேன்.அது போன்ற நாவலை முன் வைத்து காட்டியிருக்க வேண்டும் என்றேன்.

முடிவில் ரவிசுப்பிரமணியன் பேசினார் “இந்தப் படம் இரண்டு முறை நின்று விட்டது.காரணம் ஜெயகாந்தன் சொல்லிய கருத்துக்களும்.அவர் காட்டிய ஆவேசமும்தான்.அப்புறம் இளையராஜா என்னைக் கூப்பிட்டு சமரசம் செய்து எடுக்கச் சொன்னார்.ஜெயகாந்தன் அப்படித்தான்.அவர் யாருக்காகவும் அவர் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை.சமரசமே இல்லாதவர் அவர்.இங்கு சிலர் ஜெயகாந்தன் மேல் கோபமாக பேசினார்கள்.ஆவணப்படம் என்பது ஒரு கோட்டுச்சித்திரம்.அதன் மேல் ஒவியத்தை நீங்கள் வரைந்து கொள்ளுங்கள் நீங்கள் புரிந்து கொண்டபடி.

ஜெயகாந்தனிடம் மரணம் உங்களை நெருங்கினால் அதாவது தெருமுனையில் வந்து நின்றால் என்ன செய்வீர்கள் என்றேன்.அதற்கு அவர் கூறிய ஆவேசப் பதிலை படத்தில் வைத்திருந்தேன்.அப்புறம் அதைத்தூக்கிவிட்டேன்.இளையராஜா ஏன் என்று கேட்டார்.”இப்போதே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லை.அதனால் அதை வைக்க விரும்பவில்லை” என்றேன்.இளையராஜாவும் அதை ஏற்ற்குக்கொண்டார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. என்று முடித்தார்

No comments:

Post a Comment