Saturday, 10 August 2013

இரக்க மனதுடையவனைப் பற்றிய அம்புலிமாமா டைப் கதை...

மரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவிடம் காஞ்சி சில வாக்குறுதிகளை கொடுத்தான்.

“அப்பா நான் அம்மாவுக்கு வீட்டைக் கொடுத்துவிடுவேன்.தம்பிக்கு நிலத்தை கொடுத்து விடுவேன்”

“நீ என்ன செய்வாய் காஞ்சி” 

“நான் எங்காவது பட்டணத்துக்கு போய் பிழைத்துக்கொள்வேன் அப்பா”

அப்பா நெகிழ்ந்து ஒரு பணமுடிப்பை கொடுத்து,அவசியம் வந்தால் இதை செலவு செய்.பேராசைக்காக இதை உபயோகிக்காதே என்று மண்ணுலகை விட்டு செல்கிறார்.

காஞ்சி ராஜாவின் கோட்டையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.இரண்டு நாட்கள் நடந்ததும் தூக்க கண்களை சுழற்ற தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனை கொள்ளையர்கள் மூவர் தாக்குகின்றனர்.எதிர்ப்பாராவிதமாக அங்குவந்த தெருநாய் ஒன்று கொள்ளையர்களை கடித்து விரட்டி காஞ்சியை காப்பாற்ற, காஞ்சியும் நாயும் தோழர்களாகின்றனர்.

கோட்டைக்கு வெளியே ஒரே விழா ஆரவாரம்.மறுநாள் இளவரசிக்கு சுயம்வரமாம். காஞ்சி கோட்டை வாசல்காரனிடம் உள்ளே வேலை கிடைக்குமா என்று கேட்க,கோட்டைக் காவலாளி “இளவரசிக்கு திருமணம்.வேலையில்லாமல் இருக்குமா.உள்ளே போ.ஆனால் இந்த அசிங்கம் பிடித்த நாயை வெளியே விட்டு கோட்டைக்குள் போ” என்று சொல்கிறான்.

அதைக் கேட்ட காஞ்சி கடுமையாக விவாதிக்கிறான்.நாயில்லாமல் கோட்டைக்குள் போகமுடியாது என்று சொல்லி மறுத்து திரும்ப எத்தனிக்கிறான்.

இதையெல்லாம் தன் அரண்மனையில் இருந்து பார்த்து கொண்டிருந்த இளவரசி,வேலையாளை அழைத்து நடந்ததை அறிந்து கொண்டு வரச்செய்கிறாள்.

வேலையாள் சொன்னதும் “ஒரு நாயிடமே இவ்வளவு அன்புடையவனாக இருக்கிறானே.கட்டிய மனைவியிடமும் எப்படி அன்பை பொழிவான்.இவனே எனது கணவன்” என்று முடிவெடுக்கிறாள்.

காஞ்சிக்கு தன் தோட்டத்தில் வேலை போட்டுக்கொடுக்கிறாள்.காஞ்சி இளவரசியை தற்செயலாக பார்க்க இளவரசியின் அழகில் மயங்கி விடுகிறான்.இளவரசியும் காஞ்சி மீதான தன் விருப்பத்தை சொல்லிவிடுகிறாள்.

இதனால் காஞ்சி மறுநாள் சுயம்வரத்தில் அவனும் கலந்து கொள்ள விருப்பப்படுகிறான்.

ஆனால் பணத்திற்கு என்ன செய்வது? அப்பா கொடுத்த பணமுடிச்சி ஞாபகத்திற்கு வந்தது.அதை அசைக்க ஆரம்பித்தான் பொற்காசு விழுந்தது.இப்படியாக அவன் அசைக்க அசைக்க பல பொற்காசுகள் குவியவே, சந்தைக்கு போய் ஆபரணங்கள்,உடைகள்.குதிரை என்று வாங்கி இளவரசனாக மாறிவிட்டான்.

அவன் சுயம்வரத்திற்கு போவதற்கு நாய் எதிர்ப்பு தெரிவித்தது.அவன் கைகளைப் கவ்வி இழுத்தது.காஞ்சிக்கு கோபம் வந்தது.

நாயை அடித்து விரட்டுகிறான்.ஆனால் அவனை விட்டுபோகவில்லை.அவனை அரண்மனையுனுள் சுயம்வரத்திற்கு அனுப்பிவிட்டு வெளியே அவனுக்கு தெரியாமல் காத்திருந்தது. சுயம்வரத்தில் மாலையை தனக்கு சூட்டுவாள் என்ற காஞ்சியை மறுத்து இளவரசி யாருக்கும் மாலைபோடாம்ல் போய்விடுகிறாள்.

மாலையை எதிர்ப்பார்த்த காஞ்சிக்கு,இளவரசியின் செயல் அவமானமாக தெரிந்ததால் துடித்தான்.அந்த அவமானத்தை அவனால் மறக்கவே முடியவில்லை.

வெளியே வந்தால் அவன் அவமானப்படுத்தி துரத்திய நாய் நிற்கிறது வாலை ஆட்டி.அதைக் கட்டி கொள்கிறான்.கோட்டையை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் அன்று இரவு தூங்கப்போகிறான். நாயும் பக்கத்தில் வாஞ்சையாக படுத்துகொண்டது.

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனை ஒரு கை எழுப்பிகிறது.எழுந்து பார்த்தால் அது அவனுக்கு மாலை போடுவேன் என்று சொல்லி போடாமல் அவமானப்படுத்திய இளவரசிதான்.

பல்லக்கு தூர பல்லக்கு வீரர்களோடு நிற்கிறது.

இளவரசி சொல்கிறாள் “என்னை மன்னித்து விடுங்கள்.அப்பாவி நாய்க்காக கோட்டை வாசல்காரனிடம் வாதாடிய காஞ்சியைத்தான் எனக்கு பிடித்திருந்தது.உங்களை விரும்பினேன்.ஆனால் எப்போது நாயை உதறி உதாசீனப்படுத்தி விட்டு சுயம்வரத்திற்கு தனியாக வந்தீர்களோ, அப்போது உங்களை மணமுடிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது.ஆனால் இப்போது நாயுடன் அன்பாக இருக்கும் பழைய காஞ்சியைப் பார்த்து விட்டேன்”. என்று சொல்லி காஞ்சியின் கழுத்தில் மாலையிடுகிறாள்.

அன்றிலிருந்து காஞ்சி வாழ்க்கை முழுவதும் எளிமையாகவும் அன்பாகவும் கருணையாகவும் அனைவரிடமும் பழகி வந்தான்.

-தவுலத் பாண்டே எழுதிய ’டேல்ஸ் ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் வாசித்தது.

No comments:

Post a Comment