Saturday 10 August 2013

அறிவியல் படிப்பது பற்றி தமிழ் தலைவர்கள்...

இந்தியாவில் சயின்ஸ் படிப்பது பற்றிய விழிப்பில்லாத தன்மை நோக்கி எழும் அலோசனையும் எள்ளலும் ஆதங்கமும் கொண்ட தமிழர்களின் கருத்துக்களை எழுதியிருக்கிறேன் இந்த பத்தியில்.

அதுக்கு முன்னாடி... 

பாரதியார் எழுதிய கட்டுரைகளைப் எல்லாம் கண்டிப்பா படிச்சிருங்க.படிக்க மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.மனிதர் வீரேந்திர சேவாக் மாதிரி எல்லாப் பக்கமும் பேட்டை வீசுகிறார்.

அவர் படித்திருக்கும் ஆங்கில பத்திரிக்கைகளையெல்லாம் தனியாக ஒரு பதிவில் போடுகிறேன்.பல இடங்களில் காந்தியை கண்ணியமாக விமர்சித்திருக்கிறார்.

இசை,ஜாதி,மதம்,விஞ்ஞானம்,பூமி சாஸ்த்திரம்,மானுடவியல் என்று எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். எதைத்தான் அவர் எழுதவில்லை.

அவர் கட்டுரை போரடிக்காமல் இருப்பதற்கு காரணம் அவர் ஆங்காங்கு கொடுக்கும் தகவல்கள்.அவர் எழுதிய பத்திகளில் ஒன்று.விஞ்ஞானம் மக்களிடம் போய் சேரவேண்டிய ஆலோசனைகளை சொல்கிறார்.

< ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது.ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும்.திரும்ப திரும்ப நோக்கிக்கொள்ள வேண்டும்.நமது தேசத்திலே சாஸ்திர(சயின்ஸ்) படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேஷிக்கிறார்கள்.

இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை,இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது.ஊதுகிற போது ஊதினால் விடிகிற போது விடியும்.சாஸ்திர படிப்பு (சயின்ஸ்) முக்கியம்.அதிலேதான் நன்மையெல்லாம் உண்டாகிறது.சயின்ஸ் மனித ஜாதியை உயர்த்தி விடும்.

காசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழி காட்டுவானோ?>

இது மாதிரி சுந்தர ராமசாமி, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா சொன்னதாக சொன்னதும் சுவாரஸ்யம்.

அதை மதத்தின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் மேல் பிடிப்பில்லாமல் இருக்கும் மக்களை ஆக்கப்பூர்வமாக கிண்டல் செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜீவா சிறுவயது சு.ராவிடம் சொன்னாராம் .(சுருக்கியிருக்கிறேன்) “பாத்துக்க தம்பி.சினன் எறும்ப பத்தி நமக்கு என்ன தெரியும்.

ஆனா வெளிநாட்டுக்காரன் புஸ்தகம் எழுதியிருக்கிறான்.வேலைக்கார எறும்புக்கு தடி புக்கு,ராணி எறும்புக்கு தனி புக்கு.கடிக்கிற எறும்புக்கு ஒரு புக்க்கு. கடிக்காத எறும்புக்கு ஒரு புக்கு. இப்படி பிரிச்சி பிரிச்சி பெருசு பெருசா எழுதி அறிவ வளத்துக்கிறான்.

நாம என்ன பண்றோம்ன்னா “ஒம்” என்ற வார்த்தையில உலகமே அடங்கியிருக்குன்னு அறிவியல படிக்காம ஒதுக்கி தள்ளிடுறோம்”

இப்படி சமுதாய அக்கறையுடன் கலாய்க்கிறார் ஜீவா.

அடுத்து அண்ணா...

அண்ணா அதிவிரைவு ரயிலில் போய்கொண்டிருந்த அனுபவத்தை எழுதுகிறார்.(உள்வாங்கியதை எழுதியிருக்கிறேன்)

”என்னுடன் பிராயணம் செய்யும் சக பயணிகள் பேசுவதை கேட்கிறேன்.அனைவரும் ரயில் சென்றடையும் ஊரின் சிறப்பு வாய்ந்த தெய்வத்தையும்,அதற்கு என்ன என்ன செய்தால் நல்ல நேர்ச்சை என்பது பற்றியும், இன்னும் பல தெய்வங்களைப் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் அதில் ஒரு பயணி கூட,இப்படி ரயில் நம் இத்தனை பேரையும் இவ்வளவு வேகத்தில் இழுத்துக் கொண்டு போகிறதே.அது எப்படி அப்படி ஒடுகிறது? என்ன அறிவியல் காரணம்? என்ற கேள்விகளை எழுப்பவே இல்லை...

No comments:

Post a Comment