Saturday 10 August 2013

பத்து பூரி சாப்பிட்டேன் மச்சி...

-காலேஜில் என்னுடன் படித்த நண்பனுக்கு, சொன்ன சம்பவத்தையே திரும்ப ஒருதடவை சொன்னால் பிடிக்காது.’மச்சி நீ சொல்லிட்டடா’ என்பான்.அப்படி சொல்வது அவனுக்கு அலுப்பை தருவதாக அடிக்கடி சொல்வான்.

-காலேஜில் என்னுடன் படித்த அதே நண்பனுக்கு எதுவுமே சரியாய் அமையவில்லை.

அப்பா மனக்கோணல் உடையவர்.அடுத்தவரை துன்புறுத்தி ரசிக்கும் பழக்கமுடையவர்.அதனால் அம்மாவும் அப்படியே ஆக்கப்பட்டார்.

இதனால் சொந்தங்கள் அவன் குடும்பத்தை கிண்டல் செய்தன.தூற்றின.உன் அப்பா இப்படி? உன் அம்மா இப்படி ?என்று சொல்வதன் மூலம் அவன் தன்னம்பிக்கையை சிதைத்தன.

வீட்டில் பணமும் கிடையாது.நுகர்வு இன்பமும் நண்பனுக்கு கிடையாது.

மொத்தத்தில் வீட்டுக்கு போகவே பயப்படுவான்.எப்போதும் கவலையாகவே இருக்கிறது என்று புலம்புவான்.

அதுமாதிரி இருக்கையில்,அவனுடன் படித்த நார்த் இண்டியன் பெண்ணை அக்காவாக நினைக்க ஆரம்பித்தான்.அக்காவாகவே பழக ஆரம்பித்தான்.

இவன் பத்தாம் வகுப்பு படித்தவன் என்பது அந்தப் பெண் பிளஸ் டூ படித்தவள் என்பதும் கூட காரணம்.ஆனால் இவன் வைத்தது உண்மையான பாசம்.

அந்தப் பெண் பார்க்க இளம் வயது நடிகை கிரண் மாதிரியே இருப்பார்.சொந்த மாநிலம் அருணாச்சல் பிரதேசம்.

நான் நண்பனிடம் சொல்வே ‘மச்சி இப்படி பால் போளி மாதிரி இருக்கா.இவ கிட்ட எப்படி மச்சி அக்கான்னு பழகுற.’ என்று சொன்னால் கோபப்படுவான்.ரக்சா பந்தன் கயிறு, ஒன்றாய் உட்கார்ந்து படித்தல் என்று அவர்கள் உறவு மிக நன்றாய் வளர்ந்தது.

அவனுக்கு சிக்மெண்ட் பிராய்ட் பற்றி சொல்வேன்.ஈடிபஸ் காம்பளக்ஸ்,எலக்கிடிரா காம்பிளக்ஸ் இதையெல்லாம் சொல்லுவேன்.

நண்பன் என்னை திட்டுவான். ‘தியரி சொல்லி சொல்லி செத்துராத மச்சி.கொஞ்சம் ஃபீலிங்ஸா இரு. எனக்கு உண்மையிலே அவங்கள பாத்தா அக்காவா தோணுது என்பான்.

படிப்பு முடியும் வரை தன் எல்லா துன்பங்களையும் அக்காவுடன் பழகுவதில் கரைத்து விட்டிருந்தான்.

கல்லூரி முடிந்து அந்த பெண் டில்லி போய்விட இவன் மறுபடியும் சோர்ந்தான்.ஒன்றுமே ஒடவில்லை இவனுக்கு.’மச்சி நீ துடிக்கிற அளவுக்கெல்லாம் அந்தப் பொண்ணு துடிக்காது மச்சி.உன் பாசத்தால அதுக்கு தொல்ல பண்ணாத’ என்றேன்.

அதைகேட்டு தலையை தலையை ஆட்டிவைத்தான்.

கிட்டதட்ட வாரா வாரம் வீட்டுக்கு வரும் அவன் ஒருமாதமாக வரவில்லை.ஒருமாதம் கழித்து வந்தான்.முகமெல்லாம் மலர்ந்திருந்தது.

“என்ன மச்சி ஜாலியா இருக்க ‘ என்றேன்.

‘மச்சி நான் டில்லிக்கு போனேண்டா ‘

‘இது எப்போ’

‘போன வாரம்தான் போனேன்.அக்காகிட்ட எதுவுமே சொல்லல.நேரப் போயிட்டேண்டா.’

‘அடப்பாவி இத விட ஒரு பொண்ண கொடும படுத்தவே முடியாது.அவ அப்பா அம்மா எல்லாரும் இருக்கும் போது சொல்லாம கொள்ளாம் போன அவளுக்கு எவ்வளவு தர்ம சங்கடமாயிருக்கு மச்சி’

‘சரி அத விடு.முதல்ல அக்கா கொஞ்சம் ஷாக் ஆனாங்க.ஆனா வீட்ல எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வைச்சாங்க. எனக்கு நல்ல பசி.என்ன கிச்சனுக்கு பக்கத்துல உள்ள டைனிங் ரூம் கூட்டிப்போய் பூரி சுட்டுத்தந்தாங்க.நல்லா சாப்பிட்டேன் மச்சி.பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்.”

“பத்து பூரி சாப்பிட்டியா.எங்க வீட்ல எல்லாம் ரெண்டுதான் சாப்பிடுவ டீசண்ட் பாப்ப.”

“மச்சி என் அக்கா சுட்டுப்போடுறாடா.நான் உரிமையோடு சாப்பிடுவேன்,பத்து பண்ணெண்டு பூரி சாப்பிடுவேன்.சாப்பிட்டேன்”

“ம்ம்ம்”

“மச்சி திருப்தியா சாப்பிட்டேண்டா லைஃப்லேயே.பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்.நல்லா கிழங்கு எல்லாம் வைச்சு”

இப்படியே பூரி சாப்பிட்ட சம்பவத்தை இருபது முறைக்கு குறையாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவனுக்கு பொதுவாக யாராவது திரும்ப திரும்ப ஒரே சம்பவத்தை சொன்னால் பிடிக்காது,அவனும் அப்படி சொல்லவே மாட்டான் ,என்பது தெரிந்த எனக்கு மிக ஆச்சர்யமாய் இருந்தது.

எனக்கு குடும்பம் சரியாக அமைந்துவிட்டதால் அவன் துன்பத்தை துல்லியமாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

ஆனால் அவன் “பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்” என்று சொல்லும் போது துல்லியமாக புரிந்து கொண்டேன் அவன் உணர்வுகளை.

No comments:

Post a Comment