Saturday, 17 August 2013

பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்தவர்கள்...

’இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கால்நடையாகவே நடந்து வந்தேன்’  என்று வயதானவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

என் ஆச்சியின் தாய்மாமா இது மாதிரி வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.அது அப்போது எனக்கு ஒரு செய்தி மட்டுமே.

டி.எஸ் பசுபதி என்பவர் தன்னுடயை நடை அனுபவத்தை ‘பர்மாவிலிருந்து நடையாய் நடந்து’ என்று புத்தகமாக எழுதியிருக்கிறார்.அதை முன் வைத்து இதை எழுதுகிறேன்.

டி.எஸ் பசுபதி 1941 யில் தன்னுடைய மூத்த மகனை தந்தையிடம் விட்டு,மனைவியையும்,மிச்ச நான்கு பிள்ளைகளையும்  அழைத்துக்கொண்டு பர்மா போகும் போது,அவர் தந்தை ”ஜாதகப்படி நீ உன் குடும்பத்தை அழைத்துப் போகத்தேவையில்லை அதனால் சிரமம் ஏற்படும் ”என்று எச்சரிக்கிறார்.

பசுபதி அதை அலட்சியப்படுத்தி குடும்பத்தையும் குழந்தைகளையும்,பர்மாவின் டவுஞ்சி(Taunggi)என்ற நகரத்திற்கு அழைத்துப் போகிறார்.

அஙகே போய் ஒருவருடத்தில்,இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மா மீது கடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது. ஜப்பான் டவுஞ்சி நகரை நெருங்கும் முன்னரே நிறைய மக்கள் கப்பல் வழியே நகரை விட்டு வெளியேறுகின்றனர்.நகரில் அடிக்கடி ஜப்பானின் விமானப்படைகள் குண்டுகளை வீச தொடங்கிவிட்டன.

பசுபதி உயர் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்.அவருடைய மேலதிகாரி பசுபதியை ‘நீ மலேசியாவுக்கு கேப்டனாக போய்விடு’ உனக்கு நிறைய சம்பளம் தருகிறேன்.உன் குடும்பத்தை இந்தியாவுக்கு விமானம் மூலம் நானே அனுப்பி வைக்கிறேன்’ என்று கேட்கிறார்.அந்த வாய்ப்பை பசுபதி மறுக்கிறார்.மேலதிகாரி பலமுறை கெஞ்சுகிறார்.பின் விட்டுவிடுகிறார்.

பசுபதி தனக்கும் குடும்பத்திற்கும் இந்தியா போக விமான ஏற்பாடு வேண்டும் என்று கேட்கிறார்.இங்கே மேலதிகாரிக்கும் பசுபதிக்கும் நடுவே உள்ள இடைஅதிகாரி ஈகோ காரணமாக அந்த வாய்ப்பை பசுபதிக்கு தர மறுக்கிறார்.

டவுஞ்சி நகரை ஜப்பான் நேரடியாகவே தாக்க ஆரம்பித்துவிட்டது.

பசுபதி அலுவகம் மீதே குண்டுகளை போட அதிலிருந்து பசுபதி தப்பித்து வீட்டை நோக்கி ஒட ஒட அவர் பக்கம் வரை குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.ஒடிப்போய் வீட்டைப் பார்த்தால் வீடு தரைமட்டமாக இருக்கின்றது.

பயத்தில் தேட,நல்லவேளையாக மனைவியும் நான்கு குழந்தைகளும் சாகவில்லை.கப்பலில் போகலாம் என்று பார்த்தால் கப்பல் போக்குவரத்தையே போரின் காரணமாக நிறுத்திவிட்டார்கள். நிச்சயமாக டவுஞ்சி நகரைவிட்டு வெளியேறியே ஆகவேண்டும்.ஜப்பான் ராணுவத்தினர் மிக நெருங்கி வந்துவிட்டார்கள் என்று தகவல்கள் கிடைத்தன.

மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு லாரிகளில் பின்பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரம் அமைப்பில் ஏறிக்கொண்டு பிராயணம் செய்கிறார்.அதுவரை அவருக்கு பல இடங்களில் துணையாக நின்ற அவருடைய செல்ல நாய் கூட வருகிறது.வண்டியில் இடமில்லாததால் நாயை குண்டுகட்டாக தூக்கி கிழேப் போடுகிறார்.நாயை பின்னாலே ஒடிவந்து களைத்து நிற்க வண்டி போய் கொண்டே இருக்கிறது.

பசுபதியையும் அவர் குடும்பத்தினரையும் சுமந்து கொண்டு 12 மணி நேரம் பிராயாணம் செய்து மேகாங்கை அடைகிறது.பின் அங்கிருந்து ஒவ்வொரு நகரமாக ரங்கூன் செல்கின்றனர்.

வழியில் பசுபதியை சந்திக்கும் தயானந்த் என்ற நண்பன் ”இங்கிருந்து இனிமேல் இரண்டு வழியாக நடந்து போகலாம்.ரோட்டின் வழி போனால் நிச்சயம் ஜப்பான் ராணுவத்திடம் சிதையுண்டு அழிந்து போவீர்கள்.ஆகையால் காட்டின் வழியே தான் போகவேண்டும்.அதுவும் சீக்கிரம் போகவேண்டும்.இல்லாவிட்டால் பருவமழை தொடங்கிவிடும்.காட்டைக் கடந்து மலைகளையெல்லாம் ஏறி இறங்குவது,அதுவும் நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏறி இறங்குவது என்பது மிக ஆபத்தானது ”என்று எச்சரிக்கிறார்.

பசுபதிக்கும் அவர் மனைவி பிச்சம்மாவும் அந்த பயணத்தை எதிர்கொள்ள தயாராகி காட்டிற்குள் செல்கின்றனர்.

-காட்டில் போகும் போது புலியொன்று தாக்க,பசுபதி கூட்டத்தினருடன் வந்த ராவ் என்பவன் துப்பாக்கியை எடுத்து புலியை சுட்டு விரட்டுகிறான்.

-காட்டில் நடக்க நடக்க நிறைமாத  கட்டத்தில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கின்றது.சரியான மருத்துவ வசதி இல்லாததால் சில குழந்தைகள இறந்தும்.சில தாய்கள் இறக்கவும் செய்கின்றனர்.பசுபதியுடன் வந்த ஒரியப் பெண் பிரசவத்த இரண்டாம் நாள் இறக்கிறாள்.அவள் கணவன் ‘இந்தக்குழந்தைக்கு எப்படி பால் செய்துகொடுப்பேன்’ என்று அழுது கொண்டே இருக்கும் போதே அந்தக்குழந்தையும் இறக்கிறது.

-பிரம்புகூடைகளை ஆதிவாசிகளிடம் இருந்து வாங்கி அதில் குழந்தைகளைப் போட்டுக்கொண்டு நடக்கின்றனர்.

-உயரமான மலைச்சரிவுகளில் உயிரை பணயம் வைத்து தங்குகின்றனர்.ஏறி இறங்குகின்றனர்.

-சில இடங்களில் ஒரு டின் தண்ணீரை ரூபாய் ஐம்பது கொடுத்து ( அந்த காலகட்டத்தில் சவரன் தங்கம்  45 ரூபாய்) வாங்கும் நிலமை வருகிறது.

-பசுபதியிடம் பகதூர்,சந்தோஷ் என்ற இரு நேபாளி வாலிபர்கள் கூட்டத்தில் சேர்க்கச் சொல்லி கெஞ்சுகின்றனர்.பரிதாபப்பட்டு பசுபதி சேர்க்கிறார்.பின்னால் சந்தோஷ் பசுபதியின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்கிறான்.பகதூர் பிற்பாடு பணத்தை கொள்ளையடிக்க முயற்சிசெய்து பின் பிடிபட்டு அடிவாங்கிப் போகிறான்.

-பசுபதிக்கு விமானச்சலுகையை மறுத்த இடையதிகாரியும் அகதியாக கால்நடையாக வருவதைப் பார்க்கிறார் பசுபதி.

-பசுபதி அவசரத்திற்கு நெருப்பு கேட்டபோது கொடுக்க மாட்டேன் என்று எரிந்து விழுந்த நேபாளி, நடைப் பயணத்தில் தன் குடும்பத்தை இழந்து, அதை பசுபதியிடம் சொல்லி அழுகிறார்.

-கொக்கைன் மாத்திரைகளும், பொட்டாசியம் பர்மாங்குனேட்களும் பசுபதி குடும்பத்தை பல இடக்களில் காப்பாற்றுகின்றன.

-பல இடங்களைலில் பிணங்கள் மிதக்கும் குட்டைகளில் இருந்து நீர் எடுக்கின்றனர்.

-ஒரு இடத்தில் ஆதிவாசியினர் உணவுக்கு பதிலாக பணத்தை மறுக்கிறார்கள்.ஆனால் நாணயங்களை விரும்புகிறார்கள்.காரணம் நாணயங்களை கோர்த்து கழுத்தில் போட்டு ரசிக்கிறார்கள்.பணம் என்பதற்கு மதிப்பே இல்லாமல்போய்விட்டது.அவர்களுடன் நடந்த நகைவியாபாரி ஒரு கைப்பிடி ரங்கூன் வைரத்தை கொடுத்து மாவு வாங்க முயற்சிக்கிறார்.

-பசுபதி கூட்டத்தில் வரும் ராஜா என்ற நண்பர் குழந்தையுடன் மலையில் ஏறும் போது சறுக்கி குழந்தைக்கும் அவருக்கும் அடிபட்டு விடுகிறது.ராஜா பசுபதியைப் பார்த்து, ’என் மனைவியை அழைத்து முன்னால் செல்.நான் வந்து சேர்ந்து கொள்கிறேன்’ என்கிறார்.பின் பல மணி நேரம் கழித்து ராஜா மட்டும் தனியே வந்தார் .’குழந்தை எங்கே?” என்ற கேள்விக்கு குழந்தை இறந்துவிட்டது.விட்டு விட்டு வந்துவிட்டேன்’ என்கிறார்.

-இரண்டு நாட்களில் பசுபதின் நான்கு வயது குழந்தை காய்ச்சல் கொண்டு இறந்துவிடுகிறது.

-இன்னும் போகப் போக மிகச்சோர்வாகின்றனர்.பசுபதியிடம் ஒருபடி புழுத்த அரிசி மட்டுமே இருக்கின்றது.அதை குழந்தைகளுக்கு கொடுத்து சமாளித்து போகின்றனர்.வழியில் பல இடங்களில் அட்டைகள் வேறு ரத்தம் உறிஞ்சி துன்பம் கொடுத்தன.பசுபதியே சில சமயம் தன் பொறுமை குணத்தை விட்டு கோபத்தில் மனைவி குழந்தைகளை அடிப்பதும்.பின் தன் செயலுக்கு வெட்கமடைவதுமாய் மனசமநிலையை இழக்கிறார்.

-ஒரு மலைச்சரிவில் ஏறும் போது அங்கே வெள்ளைக்காரர்கள் கூடாரத்தைப் பார்க்கிறார்கள்.உதவி கேட்கிறார் பசுபதி.அதில் ஒரு வெள்ளைககாரர் அன்று பசுபதி நடக்கும் இடத்திற்கு வந்து பால் டின்கள், அரிசி எல்லாம் குடுத்துவிட்டு, பசுபதியிடம் ஒரு அட்டையையும் கொடுக்கிறார்.” இதில் என் இங்கிலாந்து விலாசம் இருக்கிறது. ஒருவேளை நான் இறந்த செய்தி உனக்கு கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்திற்கு செய்தி சொல்லி விடு. அது கொஞ்சமாவது என் குடும்பத்தினருக்கு ஆறுதலாய் இருக்கும்” என்கிறார்.

-பசுபதியின் முதல் பெண்ணும் நோயினால் இறக்கிறாள்.பசுபதியும் பிச்சமாவும் கதறுகிறார்கள்.

-இதற்கிடையில் இறந்த நண்பர் ராஜாவின் மனைவி தன் குழந்தையுடன்,வேறு ஒரு குழுவோடு செல்கிறார்.பசுபதிக்கு அந்தக் குழுவின் இரக்கம் பற்றி சந்தேகம் வருகிறது. நண்பனின் மனைவியிடம் அங்கே போகாதே என்று சொல்லச் சொல்லக்கேட்காமல் போய்,அவர்கள் உணவு கொடுக்காமல் போக,குழந்தையுடன் செத்துப் போகிறாள்.

-போகும் வழியில் நதியொன்று குறுக்கிடுகிறது.மழை பொழிவதால் நதியில் வெள்ளம் உயரம் அதிகரிக்க,பதினைந்து நாள் நதிக்கரையில் தங்குகின்றனர்.

-இப்படி தங்கியிருக்கும் போது பசுபதியின் எஞ்சியிருக்கும் இரண்டு பெண்களில் ஒரு பெண் இருந்து விடுகிறாள்.

-நதி நீர் குறைந்த  பிறகு பசுபதி மற்றும் பலகுழுவினர் மூங்கில் கம்புகளை ஊன்றி போகிறார்கள்.அப்போது திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளம் பத்து பேரை பசுபதி கண்முன்னாலே அடித்துச் செல்கிறது.

-பசுபதியின் மனைவி பிச்சம்மா ஆற்றைக் கடக்கும் போது அவள் நெஞ்சளவிற்கு நீர் இருக்கிறது.ஆற்றின் அற்றம் வந்தும் கூட பிச்சம்மா வெளியே வராமல் இருக்கிறார்.”என்னால் வரமுடியாது.நான் இடுப்பில் கட்டியிருந்த துணி ஆற்றின் வெள்ளத்தில் போய் விட்டது.துணி கொடுங்கள்” என்று கேட்க பசுபதி வேறுவழியில்லாமல் செத்த பிணத்தின் சட்டை ஒன்றை எடுத்து மனைவிக்கு வீச, அதை எடுத்து  பிச்சம்மா தன் மானத்தை மறைத்து வெளியே வருகிறார்.

-இன்னும் போகப் போக பசிபொறுக்காமல் பிச்சமாவின் கல்யாணப்புடவையை ஆதிவாசிகளிடம் கொடுத்து பத்து சோளக்கதிர்களும்,பத்து காராமணி பொட்டலங்களும் வாங்குகிறார் பசுபதி.

-நதியை கடந்து ஒரிரு நாட்களில் அவர்களி எஞ்சியிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறாள்.முதலில் பசுபதி ’தனியே குழந்தைகளை அழைத்து இந்தியா செல் என்று சொன்னதை தான் மறுத்ததால்தானே எல்லாக் குழந்தைகளும் இறந்துவிட்டன என்று ஏங்கி ஏங்கியே உடல் பலம் குறைகிறாள். “நம் முதல் மகன் இந்தியாவில் அப்பாவுடன் இருக்கிறான்.அவனைப் பார்க்கவாது நீ உயிரோடு இருப்பாய் “என்று பசுபதி பிச்சம்மாவை தேற்றுகிறார்.

-இன்னும் பிராயணத்தில் மூன்று யானைப்பாகன்கள் வந்து இந்தியா இன்னும் 100 மைல் தொலைவுதான்.காசு கொடுத்தால் நாங்களே கொண்டுப் போய் விடுகிறோம் என்று சொல்லி பசுபதியிடம் இருக்கும் 3000 ரூபாயை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள்.
பசுபதி குழுவில் இருக்கும் ராவ்  துப்பாக்கியால் இரண்ட்டு யானைப் பாகன்களை கொல்கிறான்.மூன்றாமவன் கும்பிட்டு ஒடிபோகிறான்.

-பிரயாணம் செய்யச் செய்ய பசி தாங்க முடியவில்லை.ராவ் பசி பொறுக்க மாட்டாமல் கண்ணில் கண்ட காட்டுஇலைகளையும் சில சமயம் கற்களையும் உண்கிறான்.”கற்களை ஏன் உண்கிறாய்? “ என்று கேட்டால் “ஒருவேளை அது உணவாக இருக்காதா என்ற நப்பாசைதான்” என்கிறான்.பின் ராவ் பசி பொறுக்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்ளப் போகிறான்.பிச்சம்மா துப்பாக்கியை ராவுக்கு தெரியாமல் ஆற்றில் எறிகிறாள்.

-விஷ காய்களை உணவு என்று நினைத்து சாப்பிட்டு வயிறு குடல் எல்லாம் கடுப்பாகி காந்தலாகி பரிதாபமாய் இறந்து போகிறான் பசுபதி குடும்பத்தை புலியிடமும்,யானைபாகர்களிடம் இருந்தும் காப்பாற்றிய ராவ்.

-இப்போது பசுபதி குழுவில் பசுபதியும் அவர் மனைவி பிச்சம்மா மட்டுமே இருக்கிறார்கள்.பசுபதிக்கு பிச்சம்மா தனக்கு முன் இறந்தால்,அவர் இல்லாமல் எப்படி வாழ்வது என்று கவலை.ஒருவேளை தான் இறந்தால் தான் இல்லாமல் பிச்சம்மா எப்படி இருப்பார் என்ற கவலை வருகிறது.பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிறார்.

-இதற்கிடையில் பிச்சாமவுக்கு ஜூரம் வருகிறது.சரியாகிறது.பசுபதிக்கும் வருகிறது சரியாகிறது.

-இது மாதிரி அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு தாய் தன் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருக்கிறாள் அனாதையாக.பசுபதியும் பிச்சம்மாவும் விசாரிக்க, அவள் கூட நடந்து வந்த கணவன் இறந்துவிட்டார் என்று அழுகிறார்.ஆனால் பசுபதியின் மனதிற்கு பிறருக்கு உதவி செய்து செய்து மரத்து விட்டது. உதவ முடியாது என்று மறுக்கிறார்.அந்தத் தாய் அன்று இரவு மட்டுமாவது தங்கி தைரியம் சொல்லி போகும் படி கேட்க பசுபதியும் பிச்சம்மாவும் தங்குகின்றனர்.மறுநாள் விடிகாலையில் அந்தத் தாய் இறந்து கிடக்க பக்கத்தில் இரண்டு வயது குழந்தை அழுதுகொண்டிருக்க,நான்கு வயது குழந்தை ‘அம்மா எழும்பு’ என்று எழுப்பிக்கொண்டிருக்கிறது” இதைப் பார்த்த அதிர்ச்சியில் பசுபதி உடனே பிச்சமாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார்.அந்தக் குழந்தைகளை இழுத்து நடந்தால் நிச்சயமாக ஊர் போய் சேர முடியாது என்று பசுபதி நம்பினார்.அவ்வளவு பசி.அவ்வளவு இயலாமை அவரிடம் இருந்தது.இருப்பினும் இரண்டும்,நான்கும் வயதுடையை குழந்தைகளை தனியாக காட்டில் விட்டுச்செல்லும் கொடூரமான மனம் எப்படி வந்தது என்று அதை நினைத்து நினைத்து பசுபதி வாழ்கை இறுதி வரை மனம் குமைகிறார்.

-பிச்சம்மாவுக்கு வாழ்க்கையின் மீதுள்ள பற்றே போய்விட்டது.கொஞ்சம் கொஞ்சமாக நோய் அவரைத்தாக்குகிறது. கண்மூடுகிறார்.பசுபதி பிச்சம்மாவை எழுப்பிப் பார்க்கிறார்.மூச்சில்லை.திரும்ப திரும்ப எதாவது சொல்லி பேசுகிறார்.பிச்சமாவிடம் சத்தமில்லை.பின் பிச்சம்மா ஒருவேளை கண்முழித்தால் அவருக்கு டப்பாவில் தண்ணீரை தலைபக்கத்தில் வைக்கிறார்.துணியை எடுத்து பிச்சம்மா முகத்தை மூடுகிறார்.திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார்.பின் ஒருவேளை உயிர்பிழைத்து வரமாட்டாரா மனைவி என்று திரும்பவம் வந்துப் பார்க்கிறார்.அழுகிறார்.அவரை கடமையும் வாழ்க்கையும் அழைக்கிறது. திரும்பாமல் நடந்துப் போகிறார் பிச்சமாவை விட்டு... விலகி...

-அதன் பிறகு ஐந்துநாட்கள் விடாமல் நடக்கிறார்.இந்தியா இன்னும் ஐம்பது மைல் தூரத்தில் தான் இருக்கிறது என்று அறிகிறார்.

-நடக்கிறார் வெறி கொண்டவராய்

-வழியியில் அகதிகள் தற்காலிகமாக தங்கும் கேம்ப்பைப் பார்க்கிறார்.அங்கு சென்று அரிசி வாங்கி கஞ்சிக் காய்ச்சி வயிற்றுக்கு குடிக்கிறார்.அவருக்கு உடல் ஜுரம் கண்டிருக்கிறது.கேம்பில் உள்ள சிறுவயது டாக்டர் அவருக்கு நிமோனியா வந்திருக்கிறது என்று சொல்லி இன்னும் பத்து மைல் தூரம் போனால் இந்தியா வந்து விடும்.அங்கு நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்கிறார்.அதைக் கேட்டு பசுபதிக்கு சொல்ல முடியாத சோர்வு வருகிறது.இருப்பினும் மருத்துவரின் கண்டிப்பு மட்டுமே அவருக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது.

-இன்னும் பத்து மைல் நடக்கிறார்.

-நடந்து 26-7- 1942 ஆம் ஆண்டு அஸாம் மாநிலத்தை சேர்ந்த டிப்பங் என்ற ஊரைச் சென்றடைகிறார்.கிட்டத்தட்ட நூறு நாட்கள் நடந்து இந்தியாவை அடைந்திருக்கிறார்.உணர்ச்சியில் இந்திய மண்ணை எடுத்து தன் உடம்பெல்லாம் பூசிக்கொள்கிறார்.

-அங்கே அவருக்கு நோய்க்கான சிகிச்சை கொடுத்தனர்

-சாப்பிடுவதற்கு சப்பாத்தியும் வேகவைத்த பருப்பும் கொடுத்தனர்.நல்ல உணவை பசுபதி, மூன்று மாததிற்கு பின் அன்றே உண்கிறார்.

இப்படியாக பசுபதி குடுமத்தோடு பர்மாவில் இருந்து கிளம்பியவர் தன் குழந்தைகள் எல்லாவற்றையும் இழந்து,மனைவியையும் இழந்து தனியாளாக இந்தியா வருகிறார்.

பசுபதி தன் பயணத்தை வெறுமே மேற்கொள்ளவில்லை.தன்னுடன் வந்தக் குழுக்களுக்கெல்லாம் எவ்வளவு உதவி செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுதான் வந்திருக்கிறார்.

இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும்.பசுபதி நோய்தீர்க்கும் கொக்கய்ன் மாத்திரைகளையும்.,தண்ணீரை சுத்தப் படுத்து பொட்டாசியம் பெர்மாக்குனைட்டையும் வைத்திருந்தார்.கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.அவருக்கே இந்த கதியென்றால்.ஒன்றுமே தெரியாமல் ஒன்றுமே கிடைக்காமல் ஒன்றுமே இல்லாமல் வந்திருக்கும் ஏழை மக்களின் நிலை என்னவாயிருந்திருக்கும்.

பதினான்கு கிலோ மீட்டர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நான் என்ன பாடுபட்டேன்.1000 படிகள் சோளிங்கர் மலையில் ஏற என்ன பாடுபட்டேன்.ஆனால் பசுபதியும் பிச்சம்மாவும் எப்படி இவ்வளவு தூரத்தையும்,உயரத்தையும் கடந்தார்கள்.

பசுபதியின் பர்மா இந்திய நடைபயண சம்பவத்தை படிக்கும் போது கடவுள் இல்லாமலுமிருக்கிறார்.இருக்கவும் செய்கிறார் என்பது போன்று, எனக்குள் எழும் உணர்வு நிஜமனது என்பதை நம்புகிறேன்.

1 comment:

  1. good , in BBC Tamil service i heard this story , sad, me to Indian orgin Tamil, bvbut from Sri Lanka, not far away from Tamil Nadu

    ReplyDelete