Saturday, 6 October 2012

கதை போல ஒன்று - 54


கதை போல ஒன்று - 54 

கல்யாணம் ஆன முதல் வாரமே மனைவிடன்ஹைதிராபாத் வந்து விட்டேன்.

பெரிவர்கள் சொந்தங்கள் தொந்தரவு இல்லாத புதிய திருமண ஜோடி.

ஜாலியாய் போனது வாழ்க்கை.

ஆபீஸ் கிளம்பும் போது ஒரே ஒரு துளி மழைவிழுந்தாலும் லீவுதான்.

சினிமாதான், ஹோட்டல்தான், அன்புதான், கொஞ்சல்தான்.

கிட்டத்தட்ட இருபது நாட்கள் போனது இப்படியே.

ஆபிஸ் விட்டு வரும் போது மனைவி ட்ல்லாய் இருந்தாள்.

ஏன் டல்லாயிருக்க?

ஓண்ணுமில்லையே?

இல்ல டல்லாத்தான் இருக்க. நான் எதாவது மனச கஸ்டபடுத்திரது மாதிரி பேசிட்டேனா?

இல்லையே? அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல. நா நார்மலா இருக்கேன்பா என்று சமாளித்தாள்.

குழப்பத்துடன் இரவு பத்து மணிக்கு படுக்கும் போது சரிவர அன்னியோன்யம் இல்லாமலே படுத்தாள்.

நானும் தொந்தரவு செய்ய வில்லை.

இரவு சரியாக பதினோரு மணிக்கு என்னை எழுப்பினாள்.

என்னங்க எனக்கு “ஸ்டமக் பெயின்” ரொம்ப இருக்கு என்று கலங்கினாள்.

என்னாச்சு எதாவது அஜீரணமா என்றேன்.

’உங்க தலை’ என்று சட்டென்று எரிந்து விழுந்தாள்.

பாத்ரூமுக்கு சென்று திரும்பி மறுபடு சுருண்டு படுத்து கொண்டாள்.

அப்போதுதான் புரிந்தது.

மென்சஸ் ஆ என்றேன்.

ஆம் என்று தலையசைத்தாள்.

’ரொம்ப வலிக்குதுப்பா ’என்றாள்.

பதட்டமானேன். 

காய்ச்சல், தலைவலி, வெட்டுகாயம் பத்தி எனக்கு தெரியும்.

குரோசின் சாப்பிடனும், நார்ஃபிளாக்ஸ் டி. இசட் சாப்பிடனும் என்பது மாதிரி தெரிந்து வைத்திருப்பேன். 

மென்சஸ் வலிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.

மாதவிலக்கு,வெள்ளை படுதல், வாடகைத்தாய் போன்ற சமாச்சாரங்களை நன்றாக சொல்லும் அணுராதா ரமணன் கூட அதற்கு எந்த மாத்திரை குடுக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை.

வழக்கமா என்ன செய்வ இதுமாதிரி வந்தா ? கேட்டேன்.

பதிலில்லை.

சொல்லுப்பா நார்மலா என்ன செய்வ மென்சஸ் வந்தா?

பதிலில்லை.

’சொல்லேம்பா. என்ன செய்வ ஏன் இப்படி மொக்க போடுற. நைட் பதினோரு மணிக்கு ஏன் இந்த டிராமா’ என்றேன்.

“ஆமா டிராமாவா. மனசாட்சியோட பேசுங்க.பொண்டாட்டின்னா ஜாலியா இருக்கத்தானா. அவ வலி புரிய வேண்டாமா?
நடுக்கத்தோடு சத்தமாய் கத்தினாள்.

எனக்கு பெண்கள் உலகமே தெரியாது.

தெரிந்த பெண் அம்மா மட்டும்தான்.

அம்மாவின் மாதாந்திர பிரச்சனைகள் என் கவனதிற்கு வந்ததே இல்லை. 

ஒரு முறை சித்தி துண்டு பேப்பரில் ஒன்றை எழுதி இதை வாங்கி வா என்றார்.படித்து பார்த்ததில் “கேர் ஃபிரீ” என்று எழுதியிருந்தது. அது பற்றி வாசித்திருந்ததால் புரிந்தது. 

பெண்ணின் கருப்பையில் இருக்கும் சினைமுட்டைகள் தங்களுக்கு வேலை இல்லை என்பதால் கழிவாகி வெளியே வரும் மாத நிகழ்வுதான் மென்சஸ்.

அந்த சமயத்தில் பலருக்கு அடிவயிற்றில் வலியும், மனதளவில் அயர்ச்சியும் எரிச்சலும் கோபமும் இருக்கும்.

இதுவரை தெரியும். ஆனால் இரவு பதினோரு மணிக்கு மனைவி கோழிகுஞ்சு மாதிரி சுருண்டு அழ அதற்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. 

அதை பற்றி தெரிந்த அவளாவது எதாவது சொல்லலாம் இல்லையா. அவளும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.

தண்ணி எடுத்து கொடுத்தேன். வாங்கி குடித்தாள்.குளுக்கோஸ் ஒரு ஸ்பூனில் எடுத்து சாப்பிட வைத்தேன்.அவளை என் மேல் கொஞ்சம் சாய்த்து கொண்டேன். 

“சொல்லுப்பா வழக்கமா என்ன பண்ணுவ. அது தெரிஞ்சாதான என்னால எதாவது செய்ய முடியும்”

பேசினாள்.

”ஒண்ணுமே செய்ய மாட்டேன். வலியை தாங்கிப்பேன். அம்மா கிட்ட படுத்துப்பேன். ஒரே ஒரு தடவை வலி பொறுக்க முடியாமல் ஊசி போட்டிருக்கேன்.”

மறுபடி சுருண்டு கொண்டு அம்மா அம்மா என்று அழுதாள்.

நெகிழ்ந்து விட்டேன். அம்மாவை தேடுகிறாள்.

வெறு வழியே இல்லை. 

அண்ணனுக்கு போன்  போட்டேன். அண்ணன் டாக்டராக இருக்கிறார்.

 ரிங் போகிறது எடுக்கவில்லை. பதினொன்னரை மணிக்கு தூங்கியிருக்கலாம். 

இன்னொரு தங்கையும் டாக்டர்தான். அவளுக்கு போன் போட்டேன் தயக்கத்துடன். 

அதிர்க்ஷ்டம் .

எடுத்தாள். விசயத்தை சொன்ன போது  சிரித்தாள். ”இதுக்கு எதுக்கு இப்படி பதட்டமா பேசுறீங்க உங்க குரல் எல்லாம் நடுங்குதுண்ணா”

“சரி அத விடுப்பா. சொல்லு என்ன பண்ணனும்”

“பெயின் கில்லர் குடுங்க போதும், ஃபுருபென்னும், ராண்டெக்கும் குடுங்க” சரியாயிடும்.

“பெயின் கில்லர் கொடுத்தா சைடு எபக்ட் வராதா”

“அது வலியினால நைட்டு தூங்காம இருக்கும் சைட் எஃபெக்ட விட கம்மிதான்” என்று போனை வைத்தாள்.

சரி விடை கிடைத்தது பிரச்சனைக்கு. மாத்திரை டப்பாவை துழாவினால் ஒரு ஃபுருபென்னும் இல்லை.

மணி பண்ணிரெண்டு ஆகப்போகிறது. 

யாருமே தெரியாத மொழி தெரியாத அந்நியமான ஹைதிராபாத். 

வண்டியும் கிடையாது. 

நடந்தே போக வேண்டும். 

கால் மணி நேரம் நடந்தால் இருபத்திநாலு மணி நேரம் திறந்திருக்கும் அப்பல்லோ மெடிக்கல்ஸை அடையலாம்.

லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறி, டீ போட்டு கொடுத்து விட்டு, கொஞ்சம் பொறுத்துக்கோ என்று சொல்லி கிளம்பினேன்.

மஞ்சள் சோடியம் விளக்கில், ஆளில்லாத தெருவில் நடக்க நடக்க நான் நண்பனுடன் செய்யும் விளையாட்டு நினைவுக்கு வந்தது.

கூட படிக்கும் பெண்களின் மாதாந்திர தூர நாளை கண்டுபிடிப்பததுதான் எங்கள் விளையாட்டு

சோர்ந்திருப்பார்கள், எரிந்து விழுவார்கள், அந்த நாள் விபூதி சந்தனம் கோவிலை தவிர்ப்பார்கள்.

பழைய டிரஸ்ஸை போட்டு வருவார்கள். “மச்சி இந்த தீபாவ பாரேன். இருபதில் இருந்து இருபத்தி ஐந்து தேதிக்குள் அந்த பழைய ஆரஞ்சு கலர் சுடிய போட்டுட்டு வருவா பாரு” என்பேன்.

அதுமாதிரி அவள் வர, நண்பன் “மச்சி சைக்காலஜில நீ மேதடா “ என்பான் ஜிவ்வென்று இருக்கும்.

இதுமாதிரி பல விசயங்களை வைத்து இவளுக்கு ஐந்தாம் தேதி, இவளுக்கு பதினேழு, இவளுக்கு சரியா சொல்ல முடியாது. என்பது மாதிரி ஆராய்ச்சி முடிவகள் வைத்திருப்போம்.

என் மனைவியின் தேதியை கூட அவளின் நண்பர்கள் குறித்திருப்பார்களோ.

கடை வந்தது. மாத்திரை வாங்கி. போன் போட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி, வேகமாக நடையை கட்டினேன்.

ஹைதர் நகரில் இருந்து வசந்த் நகர் ஆர்ச் அருகில் வரும்  போது மூன்று திருநங்கைகள் என்னை பிடித்து கொண்டனர். 

ஹைதிராபாத்தில் அவர்கள் தொல்லை அதிகம்.

ஒரு மூட் வந்தால் காசு கொடுப்பேன். இல்லையென்றாக் இல்லை. 

இரவு பண்ணிரண்டு மணிக்கு பயமாய் மாத்திரை வாங்கி போகும் போது இப்படி சூழ்ந்து கொண்டால் வெறிதானே வரும். தள்ளு! தள்ளு! தமிழிலேயே கத்துகிறேன். 

அவர்கள் தெலுகிலும் ஹிந்தியுலமாய் பேசுகிறார்கள். 

பத்து ரூபாய் கொடுத்தேன். அம்பது ரூபாய் வேண்டுமாம். 

வெறி வந்தது. கையை பந்தாக்கி இரண்டு வீசு விசினேன். இரண்டுபேர் மேல் பட்டது. அக்ரோசத்தை எதிர்ப்பார்க்கவில்லை.

தங்கள் சூழ்ந்துள்ள வட்டத்தை விலக்கினர்.

வெளியே குதித்து ஒடினேன். பின்னால் என்னை திட்டும் சொற்கள் தெளிவாய் கேட்டது. 

விட்டுக்கு வந்தால அழுத்து கொண்டிருதாள் மனைவி. மாத்திரை கொடுத்து ஒரு மணி நேரம் ஆன பிறகு வலி விட்டது. 

குழந்தையாய் தூங்கினாள்
.
கல்யாணமாகி முதன் முதலில் மனைவிடம் கடுமையான திட்டு வாங்கியது, 

என் கல்லூரி கால விளையாட்டு, 

மஞ்சள் கலர் சோடியம் வேப்பர் வெளிச்சம், 

என்னை சூழ்ந்த திருமங்கைகள், 

அவர்கள் மேல் பட்டு வலித்த என் வலது கை,

சிகப்பு கலர் ஃபுருபென் மாத்திரை, 

மனைவியின் அழுகை, 

கரிய இரவின் குளிர் 

எல்லாமும் பிம்பங்களாய் சுற்றி சுற்றி வந்து  என் தூக்கத்தை கெடுத்திருந்தன.

என்னை போன்று எத்தனை வாய்சவுடால் இளைஞ்சர்கள் தங்கள் மனைவியின் முதல் மென்சஸஸை எதிர் கொண்டிருப்பார்கள். மக்கு மாதிரி, பேக்கு மாதிரி.

”இதெல்லாடா ஆண்களுக்கு காலேஜ்ல ஒரு பாடமா வெச்சிருக்கனும்” என்று தோண்றியது. 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உண்மைதான் இதைத்தானே பாடமா வைத்திருக்கணும்

    ReplyDelete
  3. ”இதெல்லாடா ஆண்களுக்கு காலேஜ்ல ஒரு பாடமா வெச்சிருக்கனும்” என்று தோண்றியது.

    Well said..

    ReplyDelete
  4. நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ேபேோது இந்த பகுதிையை மட்டும் விலக்கி ைவைத்து விடுவார் அவர் ஒரு ஆசிரிையை மாத விலக்கிற்கும் இந்த பாட விலக்கலுக்கும் என்ன சம்மந்தம் எனத்ெதெரியாமல் குழம்பியிருந்த நாட்கள் இப்ேபேோது நிைனைவில்

    ReplyDelete